Published:Updated:

பாலிடெக்னிக் கல்லூரி 1,058 விரிவுரையாளர் தேர்வு! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரி 1,058 விரிவுரையாளர் தேர்வு!  ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு
பாலிடெக்னிக் கல்லூரி 1,058 விரிவுரையாளர் தேர்வு! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

கல்வித் தகுதி பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் 1058 பேரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இணைய வழி விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியது.

பாலிடெக்னிக் (பல்வகைதொழில்நுட்பக்) கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 16.6.17 அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் உள்ள கல்வித் தகுதி குறைகளைச் சுட்டிக்காட்டி, பொறியியல் பட்டதாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 'அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் விதிகள் அடிப்படையில் விரிவுரையாளர் தேர்வை நடத்த வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, புதிய அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 28-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, இன்று இணையவழி விண்ணப்பம் தொடங்கியது. இறுதி நாள் 11.8.17.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பல்வகைதொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு 17.6.17 முதல் 7.7.17 வரை இணையதளம் மூலம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கல்வித் தகுதியை திருத்திய அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்து இருந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்கள் ஏற்கெனவே பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வறிக்கையின் படி எழுத்துத் தேர்வு 16.9.17 அன்று நடைபெறும். இத்தேர்வுக்கு  www.trb.tn.nic.in என்ற இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.