Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

பெண்களின் புருவத்துக்கும் ஆண்களின் புருவத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.  மெல்லிய புருவம் இருந்தால் அழகு அதிகம் என்பது, பெண்களின் சாமுத்திரிகா லட்சணத்தின் அம்சம். எனவே, ஏற்கெனவே சன்னமாக இருக்கும் புருவத்தை மேலும் மெல்லியதாக மாற்ற அவர்கள் முயற்சிகள் எடுத்துக்கொள்கிறார்கள். மழித்தல், பிடுங்குதல், வண்ணம் தீட்டுதல் போன்றவற்றின் மூலம் புருவத்தை வில்லைப்போல அமைத்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் ஐந்தாறு வண்ணங்களில் புருவத்தைத் தீட்டும் பென்சில்களை வைத்திருந்தார்கள். பிறகு நூலைப் பயன்படுத்துகிற பழக்கம் வந்தது. புருவத்தை முற்றிலுமாக மழித்துவிட்டு, எலித் தோலில் சன்ன புருவத்தைச் செய்து ஒட்டிக்கொள்வது இங்கிலாந்தில் இருந்தது. இதைப்பற்றி ஜோனதன் ஸ்விஃப்ட் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். புருவத்தை செம்மையாக்குவதற்கு கடுமையான எதிர்ப்பு ஒருகாலத்தில் லண்டனில் தெரிவிக்கப்பட்டது. நர்ஸ்கள் புருவத்தைப் பிடுங்கி அழகுபடுத்துவதை லண்டன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுமதிக்கவில்லை. நர்ஸ்கள் கவர்ச்சியாகக் காட்சியளித்தால்,  நோயாளிகளுக்கு இதயத்துடிப்பு எக்குத்தப்பாக எகிறும் என்பதுதான் காரணம்.  

விழிகளின் மேல் வில்லைப்போல் வளைந்திருக்கும் புருவம் அழகுக்காக மட்டுமல்ல;  உடல்மொழியின் முக்கியமான பொறுப்பை அது ஆற்றுகிறது. தன்னையும் அறியாமல் பலர் புருவத்தின் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்.

சிம்பன்ஸியின் முகத்தைப் பார்த்தால் கண்ணுக்கு மேலே பெரிய புடைப்பு இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் அந்தப் புடைப்பின் மீது புருவம் எதுவும் இருக்காது. அநேகமாக மனிதனைத் தவிர வேறெந்த மிருகத்துக்கும் புருவம் என்பது தெளிவாகத் தெரிவது இல்லை. நமக்கும் அவ்வாறு புடைப்பு இருக்கிறது. கன்னம், தாடை, நெற்றி ஆகிய புடைப்புகள், நம் கண்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கின்றன. மனிதனுக்கு மட்டும்தான் கண்ணுக்கு மேலே ஓர் அகன்ற பகுதி நெற்றியாக இருக்கிறது. அதற்குக் காரணம் நம் மூளையின் அளவு. கண்களுக்கு மேல் இன்னொரு முகம் அளவு பரந்த பிரதேசம் நமக்கு இருக்கிறது. அதுதான் அவ்வளவு பெரிய நெற்றி இருப்பதற்குக் காரணம். எனவே, அப்பகுதியை வேறுபடுத்தும் வரப்புகளாக புருவங்கள் செயல்படுகின்றன.

மனிதன் மாறி விட்டான்!

புருவத்தின் பங்களிப்பு, மழையும் பனியும் வியர்வையும் கண்ணுக்குள் வழிந்துவிடாமல் இருக்கத் தடுப்பு அணையாய் செயல்படுவது என்று கருதப்பட்டது. அதைத்தாண்டி புருவங்​களின் மூலம் பலவிதமான உணர்ச்சிகளை நாம் வெளிப்படுத்த முடியும்.  புருவங்கள் இருப்பதனால்தான் நெற்றியைச் சுருக்கி, சுருக்கங்களை ஏற்படுத்தி உணர்ச்சியை வெளிப்படுத்த முடிகிறது. புருவங்கள் நம் உடலில் சிக்னல் செய்யும் உறுப்புகள்.  

புருவங்களைக் கீழே கொண்டுவருவது ஒருவகை குறிப்பு. அது சில நேரங்களில் உக்கிரத்தையும், சில நேரங்களில் ஒன்றை விரும்பாதபோது தன் இருத்தலை உறுதியாக நிலைநிறுத்தும்போதும், வெறுப்படைந்ததை உணர்த்தும்போதும் அவ்வாறு புருவத்தை கீழே கொண்டுவருவது நடக்கிறது. எத்தனைச் சுருக்கங்கள் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. சில நேரங்களில் புருவத்தைத் தாழ்த்துவது முக்கியமான பிரச்னைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கும் உதவுகிறது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணங்கள் ஏற்படும்போது, நாம் புருவத்தைக் குறுக்குவது உண்டு. எரிச்சலையும் வன்மத்தையும்கூட அது வெளிப்படுத்துகிறது.    

புருவத்தை உயர்த்துவது இன்னோர் உடல்மொழி. அப்படிச் செய்கிறபோது முழு நெற்றியும் சுருங்குகிறது, அதனால் அதிக அளவு சுருக்கங்கள் வருகின்றன. சுருக்கங்கள் சிலருக்கு மூன்றுதான் இருக்கும். சிலருக்கோ பத்துக்கும் மேல் இருக்கும். சிலருக்கு வாய்க்கால் மாதிரி சுருக்கங்கள் உண்டு. அவர்கள் அதிகம் கவலைப்படுபவர்களாக இருப்பார்கள். புருவத்தை உயர்த்துவது, சில நேரங்களில் வியப்பையும் மகிழ்ச்சியையும் உணர்த்துகிறது. குரங்கினங்களில் புருவத்தை உயர்த்துவது, பார்வையை கூர்மையாக்குவது. ஆபத்து வருகிறபோது அவை அப்படி செய்து அங்கிருந்து  தப்பியோடுகின்றன. மனிதர்களும் புருவத்துக்கு மேல் கைகளை வைத்து தொலைவில் இருக்கும் பொருள்களை உற்றுப்பார்ப்பது உண்டு.  

மனிதர்கள் உக்கிரத்தை அடையும்போது உடனடியாக தாக்குதல் தொடுக்கத் தயாராவார்கள். அது அடிபடும்போதோ, தாக்குதலுக்கு எதிராகத் தடுத்துக்கொள்ளும்போதோ ஏற்படும். அப்போது அவர்கள் புருவத்தை இறக்கி பார்வையின் வீச்சைக் குறைத்துக்கொண்டு கண்களைக் காத்துக்கொள்வார்கள்.    

முகத்தில்  ஏற்படும் சுருக்கங்கள் வயோதிகத்தை உணர்த்துகின்றன. எனவே போட்டக்ஸ் என்கிற புருவ ஊசிகளைப்போட்டு சுருக்கங்களை முடக்குகிற வழக்கம் 1990-ல் ஆரம்பமானது. இது ஒருவித பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து.  மூன்றில் இருந்து ஐந்து மாதங்கள் பலன் அளிக்கும். ஆனால், இந்த சிகிச்சை எந்தவிதமான உணர்வுகளையும் காட்ட முடியாத மாதிரி நெற்றியை ஒட்டவைத்தது மாதிரி ஆக்கிவிடுகிறது.    

ஒரே ஒரு புருவத்தை மட்டும் உயர்த்துவது இன்னொரு வகை உடல்மொழி. இதை எல்லோராலும் செய்ய முடியாது. முகத்தில் ஒரு பகுதியில் கோபத்தையும், மற்றொரு பகுதியில் பயத்தையும் வெளிப்படுத்தும் உணர்வு இது. அவநம்பிக்கையை வெளிப்படுத்தவும் இந்த உடல்மொழி உதவுகிறது. நம் நாட்டில் நடனம் ஆடுகிறபோது கலைஞர்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் நளினத்தை வெளிப்படுத்துவார்கள். பரதநாட்டியம் புருவ அசைவுகளைக்கொண்டு மெருகேற்றும் கலை. நவரசங்களையும் நன்றாக உணர்த்துவதற்கு வளைந்து கொடுக்கும் புருவங்களும், அவற்றைப் பக்குவப் படுத்தும் பயிற்சியும் அவசியம்.  

புருவ நெசவு (Eye Brow Knit) என்பது இரண்டு புருவங்களையும் ஒரே நேரத்தில் உயர்த்தி கீழே இறக்குவது. இது ஒருவித பதற்றத்தையும் வருத்தத்தையும் உணர்த்துகிற ஒன்று. இப்படிப்பட்ட உடல்மொழியை தலைவலி போன்ற விளம்பரங்களில் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். எவ்வளவு மேலே கொண்டுபோகிறார்களோ அவ்வளவு கீழே கொண்டுவருவது இதன் அம்சம்.

புருவ பளிச்சிடுதல்(Eye Brow Flash) மிக வேகமாக புருவங்களை உயர்த்தி சகஜ நிலைக்குக் கொண்டுவருவது அடுத்தவர்களை நலம் விசாரிக்கும் நிகழ்வு. ஐரோப்பாவில் மட்டுமல்ல; மற்ற இடங்களிலும் இதைப்போன்ற உடல்மொழி நட்பு அங்கீகாரத்தை உணர்த்துவதாக இருக்கிறது. தொலைவிலேயே இருக்கும்போது இந்த உடல்மொழியை வெளிப்படுத்துகிறார்கள். பிறகு அருகில் வந்ததும் கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்றவை நிகழ்கின்றன. புன்னகையோடு இருக்கும்போது ஆச்சர்யத்துக்கான அறிகுறியாக இது இருக்கிறது.    

புருவக் குலுக்கல்(Eye Brows Shrug) என்பது கொஞ்ச நேரம் மேலேயே புருவங்களை வைத்துவிட்டு மறுபடி சகஜ நிலைக்கு கொண்டுவருவது. அப்படிச் செய்யும்போது தலை, வாய் அனைத்திலும் வேறுபாடு ஏற்படுவதைப் பார்க்கலாம்.  சிலர் அதைப் பேசுகிறபோது அடிக்கடிப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுவதில் சாராம்சத்தை அழுத்த​மாகச் சொல்வதற்கு அதைக் கையாளு​கிறார்கள்.  

ஒற்றைப் புருவம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி. கண்ணின் இரண்டு புருவங்களும் இணைந்து ஒரே நீள புருவமாக இருப்பதை சிலரிடம் காணலாம். பெண்கள் அவ்வாறு இருந்தால், அரும்பாடுபட்டு தங்களை இரட்டைப் புருவங்கள் உடையவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அந்த நீளமான புருவம் ஆண் தன்மைக்கு அடையாளமாக அவர்களால் கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முடி இருக்கக்கூடாத இடத்தில் இருப்பது இழுக்கு என்ற நம்பிக்கையாலும், எப்போதுமே நிரந்தரமாக கோபக்குறியாகத் தோன்றும் என்பதாலும், பழங்காலத்தில் ஒற்றைப் புருவம் உடையவர்கள் ரத்தக் காட்டேரியாகக் கருதப்பட்டதாலும், அதைத் தவிர்ப்பதில் குறியாக இருந்தார்கள்.  

ஒற்றைப் புருவம் உடையவர்கள் கொஞ்சம் ஆளுமை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதும் மக்களுடைய நம்பிக்கை. ஒற்றைப் புருவம் உள்ள சிலர் அடுத்தவர்களை டாமினேட் செய்வதைப் பார்க்கலாம்.

அரை வட்டத்தில் இருக்கிற புருவம் அழகு என்பதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய 'குளிர்காலக் கதை’ என்ற நாடகத்தில் குறிப்பிடுகிறார். ஆண்களுக்கு அப்படி ஒற்றைப் புருவம் இருந்தால் அவர்கள் ஓநாயைப் போலத் தோன்றுவதாக நினைத்துக்கொண்டு பலர் தவிர்த்ததும் உண்டு. அதே நேரத்தில் சிலரோ அதை விரும்புவார்கள். நம் நாட்டில் 'ஒற்றைப் புருவம் இருந்தால் அப்பா அம்மாவிடம் மகன் கடைசி வரை இருப்பான்’ என்கிற நம்பிக்கை உண்டு.  

ஆண்களுக்குப் பரிணாம வளர்ச்சி தடிமனான புருவத்தைத் தந்ததற்குக் காரணங்கள் இருக்கின்றன. புருவம் அடர்த்தியாய் இருக்கும்போது, கோபம் அடைந்தால் ஆணின் உக்கிரத்தின் அளவு அதிகமாய்த் தோன்றும். வெளியே சென்று போராட வேண்டிய மனிதனுக்கு இயற்கை அதை அளித்தது. அடர்த்தியான புருவம் பெண்களின் அழகில் மென்மையை உருவிவிடும். ஃப்ராங்க் ஆம்ஸ் என்பவர் உலகத்திலேயே நீளமான புருவத்துக்குச் சொந்தக்காரராக இருந்தார். அவருடைய புருவம் 7.6 செ.மீ நீளம். இது கின்னஸ் புத்தகத்தில் சாதனையாகப் பதிவாகியிருக்கிறது.

ஆண்கள் புருவத்தைப் பற்றி கவலைப்படுவது இல்லை. அதை அழகு செய்வதிலும் அக்கறை காட்டுவது இல்லை. பெரிய புருவம் ஆண்மையைக் குறிப்பதாகக் கருதப்பட்டதால், அவர்கள் அப்படியே அதை விட்டுவிட்டார்கள். கண் ஆன்மாவைப் பார்க்கும் ஜன்னல் என்றால், புருவம் அந்த ஜன்னலின் சட்டங்கள்.

ஒரு காலத்தில் சில இளைஞர்கள் புருவத்தின் நடுவில் ஒரு தழும்பை ஏற்படுத்திக்கொண்டு தோற்றமளித்தார்கள். இது 1954-ம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் மார்லன் ப்ராண்டோ அப்படி நடித்ததன் தாக்கம். கத்தியால் கீறப்பட்டதைப்போல தோன்றுவது ஒரு நாயக உருவகமாக நினைக்கப்பட்டது. நம்முடைய பழைய திரைப்படங்களிலும் வில்லன்களுக்குச் செயற்கையாகப் பெரிய புருவத்தை ஒட்ட வைப்பதைப் பார்க்க முடியும். அந்தக் கால கேலிச் சித்திரங்களில் கொள்ளைக்காரர்களும் கொலைகாரர்களும், பெரிய புருவத்தோடும் தடித்த சட்டம் அணிந்த கண்ணாடியோடும் உருவகப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.    

புருவமே ஒருவரை அடையாளப்​படுத்துகிறது. புருவத்தை முற்றிலும் மழித்துவிட்டால் ஒருவரை அடையாளம் காண்பது கடினம். அதனால்தான், புருவம் இல்லாத சில ஆண்களும் மையால் புருவத்தை செயற்கையாக வரைந்துகொள்வதைப் பார்க்கலாம்!

விடை தேடுங்கள்... தொடரின் முடிவில் விடை தருகிறேன்!

1. அரங்கம் அமைக்க விரும்புகிறவர்கள் இருக்கைகளின்  முதல் வரிசையை மேடையி​லிருந்து எவ்வளவு   தொலை​வில் அமைக்க வேண்டும்?

அ) ஐந்து  அடி

ஆ) ஐம்பது அடி

இ) பத்தடி

ஈ) இருபது அடி

2. ஒரு முகம் எந்த விகிதத்தில் இருந்தால், அது வசீகரமாக இருக்கும்?

அ) 2 மடங்கு நீளம்: 1 மடங்கு  அகலம்

ஆ) 3 மடங்கு நீளம் : 1 மடங்கு அகலம்

இ) 1.6 மடங்கு நீளம் : 1 மடங்கு அகலம்

ஈ) 3 மடங்கு நீளம் : 2 மடங்கு அகலம்  

3. ஓர் இயக்கம் மலரக் காரணம்?

அ) அதை முன் வைப்பவர்

ஆ) அவரோடு இணையும்

இரண்டாம் நபர்

இ) கொள்கைகள்

ஈ) சூழல்

- அறிவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு