Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

கண்களும் கவிபாடுமே!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

மின்னுகிற கண்கள் கண்ணீரால் நிரம்பிய உணர்ச்சியின் வெளிப்பாடு. அழுகை என்பது சக்தி வாய்ந்த சமூக சமிக்ஞை.  நாம் அழுவதை தண்ணீரில் இருந்து உற்பத்தியான பாரம்பர்யத்திலிருந்து கையகப்படுத்தியாகச் சொல்கிறார்கள்.  சீல் என்கிற கடல்வாழ் இனம் பதற்றமானால் கண்ணீரைச் சிந்தும். அதில் இருந்து வந்த பரம்பரை பழக்கம் இது. சீறுநீரைப்போல கண்ணீரிலும் பல தேவையற்ற பொருட்கள் வெளியேற்றப்படுகின்றது.  எனவே  மனம் கனமாகிறபோது நாம் அழுதால் தேவையற்ற வேதியல் பொருட்கள் வெளியாகி நாம் சகஜமான நிலைக்கு வந்தததைப் போன்ற நிலை ஏற்படுகிறது. அதனால்தான் துக்கம் இருக்கிறபோது அழுதபின் பலர் நிம்மதியடைகிறார்கள். அடுத்தவர்களை அழவைத்து பிறகு நிம்மதியடைகிறவர்கள் பற்றி நாம் இங்கு பேசவில்லை.

வேட்டையாடும் மிருகங்களுக்கு இருந்த பைனாகுலர் பார்வை மனிதனுக்கு பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டது. வேட்டையாடுவதை நிறுத்தி நாகரிக வளர்ச்சி பெற்ற பிறகும் நம் விழிகள் அந்தப் பார்வையை தக்கவைத்துக் கொண்டன. அதனால், இன்னும் குரங்குகளைப்போல நமக்கு கண்களே புலன்களின் உச்சம். நம் உடலில் உணர்ச்சி செல்கள் 70 சதவிகிதம் கண்களிலேயே முகாமிட்டு இருக்கின்றன.

இருட்டு நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆதிகாலத்தில் இருட்டில் வனவிலங்குகள் தாக்குமோ என்றிருந்த அச்சம் இன்னும் ஆழ்மனத்தில் தொடர்வதே இதற்குக் காரணம்.

மனித மூளைக்கு இரண்டு விதமான அடையாளம் அறியும் அமைப்புகள் உள்ளன.  ஒன்று, முகங்களை அறியும் அமைப்பு; இன்னொன்று எழுத்து, சொல், குறியீடு ஆகியவற்றை அறியும் அமைப்பு.

மருத்துவ ஆய்வு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை முன் மொழிந்திருக்கிறது.  சிலருக்கு பார்வை தெரியும்;  ஆனால் அடுத்தவர்களை அடையாளம் காண முடியாது.  அதற்கு ப்ரோஸோ பக்னோசியா என்று பெயர்.  முகப் பார்வையின்மை என்று மொழி பெயர்க்கலாம்.  தெளிவான பார்வையிருந்தாலோ மூளையிலிருக்கிற கோளாறால் எப்படி மக்கள் காட்சியளிக்கிறார்கள் என்பதை அவர்களால் நினைவு  வைத்துக்கொள்ள முடியாது.  அவர்கள் வீட்டு உறுப்பினர்களைக் கூட அவர்களால் அடையாளம் காண முடியாது.        

மனிதன் மாறி விட்டான்!

கண்கள் பலவிதமான உடல்மொழிகளைப் பரிமாறுகின்றன. கண்களைக் கீழே குவிப்பது அடக்கத்தை உணர்த்துகிறது, மேலதிகாரிகளின் முன்பு பணியாளர்கள் அப்படி நிற்பது வழக்கம். கண்களை உயர்த்துவது களங்கமற்ற தன்மையை உணர்த்துவதாக இருக்கிறது.  கண்களை உற்றுப் பார்ப்பதும், மௌனமாக இருப்பதும் குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்த பயன்படுத்தும் உத்தி. பக்கவாட்டில் பார்ப்பது, நேராகப் பார்க்கப் பயப்படுகிறேன் என்பதை உணர்த்துகிறது.  வேறுபக்கம் பார்ப்பது கண்கள் சோர்வடைந்தாலோ எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தாலோ செய்யப்படும் உடல்மொழி.  கண்களை அகலப்படுத்துவது ஆச்சர்யத்துக்கான அறிகுறி.  கண்களை குறுக்குவது கூர்மையாகப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் உடல்மொழி.  

கண்ணடிப்பது என்பது இருவருக்குள்ளான ரகசிய பரிமாற்றத்தை ஏற்படுத்துகிறது. கண்ணடிப்பதை நல்லவிதமாக எடுத்துக்கொள்வதும் கெட்டவிதமாக எடுத்துக்கொள்வதும் சூழலைப் பொறுத்தது.  நகைச்சுவையான தருணத்தில் கண்களை மின்னல் வேகத்தில் மூடித் திறப்பது இயல்பான உடல் மொழியாக கருதப்படுகிறது.  அமைதியான நேரத்தில் குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்து அவ்வாறு செய்வது மோசமான செய்கை.  எல்லோராலும் இயல்பாக கண்ணடிக்க முடியாது.  சிலரால் ஒரு கண்ணை மட்டுமே அப்படி மூடித் திறக்க முடியும்.  பணியிடங்களில் இதுபோன்றவற்றை செய்யாமல் இருப்பதே நல்லது.  

எனக்குத் தெரிந்த ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவருக்கு சில புதிய தகவல்களைச் சொன்னாலோ அல்லது அடுத்தவரை ஊக்கப் படுத்தும் பொருட்டு எதாவது சொன்னாலோ கண்ணடிப்பது வழக்கம்.  நாளடையில் அது அவருடைய மானரிஸமாக ஆகிவிட்டது. ஒரு முறை நாங்கள் இருவரும் ஒரு சிற்றுண்டி விடுதிக்குச் சாப்பிடச் சென்றிருந்தோம்.  'எனக்கு ஒரு மசாலா தோசை’ என்று சொல்லி கண்ணடித்தார்.  அதை ஆர்டர் எடுத்தவர் அவ்வளவாக ரசிக்கவில்லை. எப்போது, எதற்காக கண்ணடிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

கண்களின் மூலம் நாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். விழிகள் சிவந்தால் கோபம் என்பதையும் வெளிறினால் பயம் என்றும் தெரிந்துகொள்கிறோம்.  சோர்வையும் கண்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  உடல் நிலை பாதிக்கப்படும்போதும் கண்களிலிருந்து கண்டுகொள்ளலாம்.  அருகில் இருப்பவர்கள் உணர்வுகளையே அதிகம் கண்களிலிருந்து அறிய முடியும்.  

பார்ப்பதற்கு மட்டுமல்ல, பார்க்காமல் இருப்பதற்கும் கண்களைப் பயன்படுத்துகிறோம்.  நான்கு பேர் இருக்கிறபோது ஒருவரைப் பார்க்காமல் பேசி அவர்களை நாம் புறக்கணிக்கிறோம் என்பதை உணர்த்திவிடுகிறோம்.  ஒருவரைப் பார்க்காமல் பேசும்போது அவர்கள் அருகில் இருந்தாலும் அரை கிலோமீட்டர் தூரத்தில் நம்மால் அவர்களை நிற்க வைக்க முடியும்.  நம்மோடு பேச ஆர்வமாக இருப்பவர்களை அலட்சியப்படுத்தவும் நம்மால் முடியும். வேறு திக்கில் பார்க்கும்போது அது வெளிப்படுகிறது.  

நாம் பேசுவதை ஒருவர் கவனிக்கிறாரா என்பதை அவர்கள் கண்களே காட்டிக்கொடுத்துவிடும்.  ஆர்வம் இருப்பவர்கள் புருவங்களை அசைப்பதன் மூலமும், கண்களில் தீட்சண்யத்தின் மூலமும் வெளிப்படுத்திவிடுவார்கள்.  

ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்குவது விழிகளில்  விழும் விதைகளால்.  பிடித்தவர்கள் கண்கள் உலகமாகி விடுகின்றன.  அதில் நாம் கவிதைகளை வாசிக்கிறோம். ''அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு  எல்லோரும் கவிதைகளோடு வந்திருந்தார்கள். நீ மட்டும் கண்களோடு வந்திருந்தாய்'' என்று கவிதை எழுதுகிறோம்.  ஒருவரைத் தொடர்ந்து மூன்று விநாடிகளுக்குமேல் தொடர்ந்து இடைவிடாமல்  பார்த்தால் அவர்கள் உடனே முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்வார்கள். நாம் பார்க்கும்போது  வேறு இடத்தில் பார்த்துவிட்டு நாம் பார்க்காதபோது நம்மைப் பார்த்தால் அவர்களுக்கு நம் மீது விருப்பம் என்று பெயர். இது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது.  திருவள்ளுவர் அதனால்தான்

'யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்’

- என்று பெண்களின் இயல்பை பெருமைப்படுத்துகிறார்.  கண்களோடு கண்கள் பேசும்போது சொற்கள் பயனற்றவை என்று தெளிவுபடுத்துகிறார். 'காதலில் மட்டும் கண்கள் பேசுகின்றன. உதடுகள் சந்திக்கின்றன’ என்பது ஒரு புதுக்கவிதை.  

   ஒருவர் நாம் பார்க்காதபோது நம்மைப் பார்த்துவிட்டு நாம் பார்க்கும்போது  பார்வையை திருப்பிக்கொண்டு, மறுபடியும் நம்மைப் பார்த்தால் நம்மிடம் பேசத் துடிக்கிறார் என்று பொருள்.  

கண்கள் உணர்ச்சியை கண்ணீரின் மூலமும் தெரியப்படுத்துகிறது.  அதிக பட்ச ஆனந்தத்திலும் கண்ணீர் வருகிறது. காரணம், அழுகை நகைச்சுவையைவிட ஆழமானது.  சோக நாடகங்களே நம்மைச் சொக்க வைக்கின்றன.  சீட்டு விளையாடுபவர்கள் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தால் அவர்களை ஜெயிப்பது சிரமம்.  அவர்கள் கையில் எந்தச் சீட்டு அகப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.  

நெற்றியை மட்டும் பார்த்து விழிகளோடு எல்லை வகுத்துக் கொள்வது வர்த்தகப் பார்வை. அப்படிப் பார்க்கும்போது நாம் காரியத்தை முடிப்பதிலேயே கருத்தாக இருக்கிறோம் என்பதை உரக்கச்சொல்கிறோம்.  ஒருவரை நெற்றியிலிருந்து மேல் உதடு வரை பார்ப்பது சமூகப் பார்வை.  நெஞ்சு வரைப் பார்ப்பது நெருங்கிய பார்வை.  அந்நியர்களை அப்படிப் பார்க்கும்போது அவர்கள் உடனடியாக உடையை இழுத்து சரி செய்துகொள்கிறார்கள் அல்லது முகத்தைச் சுளிக்கிறார்கள். ஆனால், ஒரு நிறுவனத்தில் அனைவரும் ஒரே திக்கில் பார்க்கும்போதுதான் தொலைநோக்குப் பார்வை சாத்தியப்படும்!

- அறிவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு