Published:Updated:

ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு தனிப்பிரிவு! தொடங்கியது மதுரை போலீஸ்

ர.பரத் ராஜ்
ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு தனிப்பிரிவு! தொடங்கியது மதுரை போலீஸ்
ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு தனிப்பிரிவு! தொடங்கியது மதுரை போலீஸ்

மதுரை நகரில் கலப்புத் திருமணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது. 

இதுகுறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மதுரை நகரில் கலப்புத் திருமணம் செய்தவர்களை அச்சுறுத்தல், பயமுறுத்தல், தீங்கு விளைவித்தல் மற்றும் ஆணவக் கொலைகள் செய்தல் போன்றவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத்திட உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவானது மதுரை மாநகர் காவல் துணை ஆணையர், சட்டம் ஒழுங்கு, மதுரை மாவட்ட சமூகநல அதிகாரி மற்றும் மதுரை மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர்களின் மேற்பார்வையில் செயல்படுகிறது.

மதுரை மாநகர் காவல் ஆணையரின் அறிவுரைப்படி, சமூகத்தில் கலப்புத் திருமணத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரைப் பெறுவதற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள குற்றத் தடுப்பு பிரிவும் இந்தப் புகாரினை விசாரணை செய்ய காவல் ஆய்வாளர், கடுமையான குற்றப்பிரிவு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கவும் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கும் தொலைபேசி எண் 0452-2346302 என்ற இணைப்பு மூலம் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.