Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

வெளியே தெரியும் காது மடலைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்திருக்கிறது.  இரு நபர்களின் காதுகள் ஒரே தோற்றத்தை ஒத்திருப்பதில்லை.  தொடக்கத்தில் கைரேகைக்குப் பதிலாக காதுகளையே அடையாளங்களாகப் பயன்படுத்தலாம் என்றுகூட யோசனைகள் சொல்லப்பட்டன.  

காதை அறிவுக்கு அடையாளமாக ஆக்குவதுண்டு.  சரியாகப் படிக்காத மாணவர்களின் காதுகளை இழுத்து ஆசிரியர்கள் தண்டனை வழங்குவது, அவர்களிடம் முடங்கிக்கிடக்கும் நுண்ணறிவை

மனிதன் மாறி விட்டான்!

எழுப்பிவிடத்தான் என்பதும் உண்டு. தமிழ்நாட்டில் விநாயகருக்கு  முன்னால் தோப்புக்கரணம் போடுவதும் அதனால்தான்.  சில வெளிநாடுகளில் 'காது தெரபி’ என தோப்பு​க்கரணம் போட வைத்து பணம் பண்ணுகிறார்கள்.  தவறு செய்யாமல் தோப்புக்கரணம் போடுவது உடலுக்கு நல்லது.  அணிகலன்களை காதில் அணிவது தீய சக்திகள் காதின் வழியாக நுழையாமல் இருப்பதற்குவழியாக நம்பப்படுகிறது.  மிக நீளமான தோடுகளை அணிகிற பழங்குடியினர் இன்றும் இருக்கிறார்கள்.  

காது என்பது கேட்கும் உறுப்பு மட்டு​மல்ல அழகுணர்ச்சியையும் அடக்​கியதுதான்.  பெண்களின் காதுகள் காலம் காலமாக அழகு செய்யும் பொருட்டு அதிக அவதிக்​குட்படுத்தப்பட்டன.  உடலின் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிற கருவி​யாக காது இருக்கிறது.  யானைகள் தொடர்ந்து தங்கள் காதுகளை ஆட்டிவருவது அதனால்​தான்.  ஒருவர் கோபப்பட்டு உஷ்ண​மடையும்போது, காதுகள் சிவப்பதைப் பார்க்கலாம்.  மெல்லிய காதுகள் உணர்ச்சி​களை வெளிப்படுத்தும் பாகங்களாகவும் இருக்கின்றன.  

தோடுகளைச் சேகரிப்பது சிலருக்கு பொழுதுபோக்கு.  பெனிசில் வேனியாவைச் சார்ந்த ஒரு அமெரிக்கப் பெண்மணி 17,122 ஜோடி தோடுகளைச் சேகரித்து வைத்திருக்கிறாராம்.  

தகவல் பரிமாற்றத்தில் காதுகள் வேண்டியதைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலை பெற்றிருக்கின்றன. கும்பலாக சிலர் பேசிக்​கொண்டிருந்தாலும் அதில் இருக்கும் நம் வீட்டு உறுப்பினரின் குரலைத் துல்லியமாக நம்மால் கேட்டுவிட முடியும்.

வார சந்தை ஒன்றில் இருவர் சென்று கொண்டிருந்தார்கள்.  அந்தச் சந்தைக்குப் புதிதாக வந்த நபர் அங்கிருந்த பல்வேறு சப்தங்களைக் கண்டு அசந்துபோனார்.  நண்பரிடம் 'இத்தனைச் சத்தத்தில் அவர்களால் எப்படி தங்களுக்கு வேண்டிய பொருளை, விற்பவரின் குரலை அறிய முடியும்?’   என்று கேட்டார். உடனே அந்த நண்பர் தன் பையிலிருந்து ஒரு நாணயத்தை கீழே போட்டார்.  அப்போது மூன்று பேர் அந்த நாணயத்தின் ஓசையை கேட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.  'பார்த்தாயா இத்தனை சத்தத்திலும் பணத்தில் குறியாய் இருக்கும் இவர்களுக்கு நாணயத்தின் ஓசை கேட்டதல்லவா?   அதைப் போலத்தான் அவர்களுக்கு வேண்டிய பொருளை விற்பவரின் குரலை இவர்களால் தரம் பிரித்து அறிய முடியும்'' என்று குறிப்பிட்டார்.

பார்வைற்றவர்கள் ஒலியை வைத்துத்தான் உலகைப் புரிந்து​கொள்​ளு​கிறார்கள்.  அவர்கள் கையில் உள்ள குச்சியால் தட்டி கவனமாக எதிர்ஒலியைக் கேட்கி​றார்கள்.  அதிலிருந்து அடுத்து இருப்பது என்ன என்று கண்டுகொண்டு எச்சரிக்கையடைகிறார்கள்.  

மனிதர்கள் உலகமெங்கும் உபயோகிக்கும் பல சொற்கள் அப்பொருகள் ஏற்படுத்தும் ஓசையைப் பொறுத்தே அமைகின்றன.  'கா’ 'கா’ என்று கத்துவதால் 'காக்கை’ என்றும்,  'கீ’ என்று கத்துவதால் 'கிளி’ என்றும், காரணப் பெயர்களாக அமைகின்றன.  நம் மொழியை உருவாக்குவதில் ஒலிகளுக்கான பங்கை குறைத்துவிட முடியாது.  

என்ன பேசுகிறோம் என்பதைவிட எப்படிப் பேசுகிறோம் என்பதே முக்கியமான பங்கை தகவல் பரிமாற்றத்தில் வகிக்கிறது.  எந்த சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோம், எந்த சொல்லை ஓசையோடு உபயோகிக்கிறோம், இரண்டு சொற்களுக்கு இடையே எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பவை நாம் கேட்கிற கேள்வி குத்தலா, குதர்க்கமா, குறிக்கோள் உடையதா என்பதை அடிக்கோடிடுகிறது.  மேடையிலே பேசுகிறபோது கூட ஒரே ஓசையில் பேசாமல் தேவைப்படும் இடங்களில் நிறுத்தி பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்த முடியும்.   ஏற்ற இறக்கங்களுடன் பேசுபவர்கள் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள்.  இரண்டு பேர் ஒரே நகைச்சுவையைச் சொன்னால் கூட ஒருவருடைய நகைச்சுவையே எடுபடும்.  அதற்கு அவர்கள் உச்சரிக்கும் விதமும்,  எப்படி கடைசி வரியை அவர்கள் அழுத்தம்கொடுத்து சொல்லுகிறார்கள் என்பதும் முக்கியமானவை.  

ஒருவர் குரலை வைத்தே அவர் கோபமாகப் பேசுகிறாரா, ஆர்வமாக பேசுகிறாரா, அன்பாகப் பேசுகிறாரா என்பதை அறிந்துகொள்ள முடியும். உச்சஸ்தாயில் ஒருவர் ஓரிடத்தில் பேசிக்கொண்டிருந்தால், மொழி புரியாவிட்டாலும் கோபமாக கத்துகிறார் என்பதை அவர் முகத்தைப் பார்ப்பதற்கு முன்பே யூகித்துவிடமுடியும்.  அலைபேசியிலும் எதிரே இருப்பவர்கள் உற்சாகமாகப் பேசுகிறார்களா, இல்லையா என்பது நம்மால் யூகித்துக்கொள்ள முடியும்.  விற்பனையாளர்கள் எதிராளியின் குரலைக் கொண்டு அவருடைய ஆர்வத்தை அறிந்துகொள்வார்கள்.  

  இன்று அலுவலகங்களில் ஒருவருடைய குரலை வைத்தே அவர் இணக்கமானவரா இல்லையா என்பதைப் பணியாளர்கள் புரிந்துகொள்வார்கள்.  மென்மையாகப் பேசுபவர்களையே எல்லோரும் விரும்புகிறார்கள்.  மலர்ந்த முகத்துடன் குறைவான சொற்களை உச்சரிப்பவர்களை மதிக்கிறார்கள்.  சொன்ன சொல்லையும், எறிந்த கல்லையும், கழிந்த  நேரத்தையும் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது.  

மிக அதிகமான சத்தத்தை கேட்கிறபோது காது மந்தமாகி விடுகிறது.  காதுக்குப் பக்கத்தில் வந்து யாராவது கத்தினால் செவிப்பறை சேதப்பட்டுவிடுகிறது.  எப்போது பார்த்தாலும் சத்தமாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்களும், தொலைக்காட்சியை அலற விடுகிற சிறுவர்களும் எளிதில் கோபம் அடைபவர்களாக இருக்கிறார்கள் என்று மான்ஹாட்டன் பள்ளி ஒன்றில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.  

இன்று நாம் சத்தங்களில் நடுவே வாழ்ந்துவருகிறோம்.  எதை எடுத்தாலும் சத்தம்தான்.  அரைக்கிற எந்திரம், துவைக்கிற எந்திரம், அச்சடிக்கிற எந்திரம், தொடர்ந்து ஒலிக்கிற அலைபேசிகள், குளிர்ச்சாதன பெட்டிகள், விரைந்து  செல்லும் வாகனங்கள், விசில் எழுப்பிச் செல்லும் தொடர்வண்டிகள், காற்று மண்டலத்தில் ஓசை எழுப்பும் ஆகாய விமானங்கள் என்று சத்தங்களின் நடுவே நாம் வாழ்ந்துவருகிறோம்.  இவை நம்முடைய கேட்புத் திறனை பாதிக்கும் தன்மை கொண்டவை.  அதனால்தான் அமைதியை நாடுபவர்கள்  ஆளில்லாத இடங்களுக்கு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.  

ஜான் கேஜ் என்பவர் அமைதி என்கிற ஒன்று சாத்தியமே இல்லை என்கிறார். வெளியே இருக்கும் அனைத்து ஓசைகளையும் நிறுத்தினாலும் நம் உள்ளே இருக்கும் உறுப்புகளின் ஓசைகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கும் என்பது அவருடைய முடிபு. சத்தத்தை வைத்தே உலக சரித்திரத்தை மாற்றியவர்கள் இருக்கிறார்கள். 'ஸ்பீக்கர் இல்லாமல் இருந்தால் நாங்கள் ஜெர்மனியை வெற்றிபெற்று இருக்க முடியாது' என்று ஜெர்மன் ரேடியோ கையேட்டில் ஹிட்லர் எழுதினார்.  

வஞ்சப் புகழ்ச்சி என்பது சொற்களைத் தாண்டி சொல்லுகிற விதத்தையும் உள்ளடக்கியது.  ஒருவர் பேசுகிற விதத்தில் அவருடைய ஆளுமை வெளிப்படுகிறது.  அதனால்தான் தன்னம்பிக்கையோடு பேசுகிற மனிதன் சரளமாகவும் அழுத்தமாகவும் கருத்துகளை எடுத்துச் சொல்லுகிறான்.  அவன் கூட்டத்தை வசப்படுத்துகிறான்.  பொய் பேசுகிற போது குரல் தடுமாறுகிறது.  அச்சம் ஏற்படுகிறபோதும் வாய் குழறுகிறது.  இவையெல்லாம் ஓசைகள் மூலம் நாம் அறியும் சொற்களற்ற மொழி விளையாடும் சொக்கட்டான்கள்.  

இன்று பேசுவதிலேயே மக்களுக்கு அலைபேசிகளின் காரணமாக அதிக நாட்டம். நிறைய நேரத்தை வெற்றுப் பேச்சுகளில் பலர் விரயம் செய்துகொண்டிருக்கிறார்கள். கவனிக்கும் திறன் குறைந்து வருகிறது. எபிக்டியஸ் என்பவர் 'பேசுவதுமாதிரி இரண்டு மடங்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் நமக்கு இரண்டு காதுகளையும், ஒரு வாயையும் தந்திருக்கிறார்' என்று  2,000 ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிட்டார்.  ஷேக்ஸ்பியர் கவனிக்காததை ஒரு வியாதி என்று குறிப்பிட்டார்.  இன்று தகவல் தொடர்பில் கவனித்தல் மறக்கப்பட்ட பகுதி. நன்றாகக் கவனிப்பவர்கள் எல்லா இடங்களிலும் ஜொலிக்கிறார்கள்.  அவர்கள் அனைவரின் மெல்லிய உணர்வுகளையும் அப்படியே படம் பிடித்துக்கொள்கிறார்கள்.  

பேச்சை இசையாகக் கையாளுபவர்கள் இதயங்களில் வாழ்கிறார்கள். வசையாகக் கையாளுகிறவர்கள் வசமாக மாட்டிக்கொள்கிறார்கள்.

- அறிவோம்!

விடை தேடுங்கள்...
தொடரின் முடிவில் விடை தருகிறேன்!

1. உங்களிடம் ஒருவர் புதிய இடத்துக்கு அடையாளம் கேட்கிறார். அவரிடம் எப்படி வழி சொல்வீர்கள்?

அ) தூரத்தை வைத்தும், திசையை வைத்தும்.

ஆ) நேரத்தை வைத்தும், திசையை வைத்தும்.

இ) நேரத்தையும் முக்கிய அடையாளமான வேறொரு இடத்தையும் வைத்து.

2. உங்கள் வீட்டுக்கு முக்கிய மனிதர் விருந்துக்கு வருகிறார்.  அவர் மெதுவாகச் சாப்பிடுபவர். அவரோடு அமர்ந்து சாப்பிடும்போது...

அ) அவர் முடிக்கும் வரை காத்திருக்காமல் சாப்பிட்டு முடித்துவிடுவீர்கள்.

ஆ) அவர் சாப்பிட்டு முடித்த பிறகும் சாப்பிட்டுக்கொண்டிருப்பீர்கள்.

இ) அவர் சாப்பிடும் வரை சாப்பிடுவீர்கள்.

ஈ) முன்பே சாப்பிட்டுவிட்டு அவர் முடிக்கும்வரை கைகழுவாமல் காத்திருப்பீர்கள்.

3. உங்கள் குழந்தைகளோடு விளையாடுகிறீர்கள்.  

அ) எப்போதும் நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஆ) குழந்தையை ஜெயிக்க விடுவீர்கள்.

இ) சிலநேரம் ஜெயித்தும், சில நேரம் தோற்றும் விளையாடுவீர்கள்.

4. நீங்கள் ஒரு நிறுவனத்துக்குப் பணிக்குச் சேர நேர்காணலுக்குச் செல்கிறீர்கள்.    

முதலாளி காந்தியவாதி.

அ) முதலாளியைப் போல உடையணிவீர்கள்.

ஆ) பணியாளர்கள் உடையணியும் பாணியில் உடையணிவீர்கள்.

இ) உங்கள் இயல்பான உடையுடன் செல்வீர்கள்.

ஈ) நீங்கள் சேரும் பணிக்கேற்ப உடையணிவீர்கள்.

5. ஒரு சர்க்கரைக் கட்டியை நாக்கின் பின்புறம் நீங்கள் வைத்தால்...

அ) இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும்.

ஆ) சளி பிடிக்கும்.

இ) சுவையே தெரியாது.

ஈ) தொண்டையில் சிக்கிக்கொள்ளும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு