Published:Updated:

டெசோ வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு! 1

டெசோ வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு! 1
டெசோ வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு! 1
டெசோ வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு! 1

சென்னை: டெசோ மாநாடு தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமார் மறுத்துள்ளார். இதே வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணையில் இருப்பதாக கூறி அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மாநாட்டுக்கு காவல் துறை விதித்துள்ள தடையை விலக்கக் கோரி டெசோ  மாநாட்டு அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.சிறப்பு  வழக்காக எடுத்துக்கொண்டு உடனடியாக விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல்  செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் இந்த  வழக்கு விசாரணைக்கு வந்தது.

அரசுதரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி வாதிடுகையில்,டெசோ மாநாடு  நடத்துவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், பயங்கரவாத தாக்குதல்  ஏதேனும் நடத்தப்படலாம் என்றும் உளவுத் துறை தகவல் அளித்துள்ளதாகவும், எனவே  அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறினார்.

மாநாட்டு அமைப்பினர் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர், மாநாட்டுக்கு 2500  பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.எனவே 8000 க்கும்  குறைவானவர்களே வருவார்கள் என்று கூறினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், இருதரப்பினரையும்  சரமாரியாக கேள்விகள் கேட்டார்.

"டெசோ மாநாட்டுக்கு 8000 க்கும் மேற்பட்டவர்கள் வந்தால் என்ன செய்வீர்கள்?  மாநாட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்புக்கு டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்  பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

டெசோ மாநாட்டுக்கு அனுமதி கோரியவர் ஒருவர்? தற்போது வழக்குத் தொடர்ந்திருப்பவர்  வேறொருவரா? இதில் யார் பொறுப்பேற்பது? ஒரு வேளை சில நிபந்தனைகளுடன்  காவல்துறை அனுமதி அளித்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்ன?” என்று  சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

மேலும், டெசோ மாநாட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்பு நாங்கள் பொறுப்பு என்று எழுதிக்  கொடுத்தால் காவல்துறை அனுமதி அளிக்குமா என்றும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம்  கேட்ட அவர்,காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள உத்தரவாதம்  அளிக்க தயாரா என்று டெசோ மாநாட்டு அமைப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம்  கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, டெசோ மாநாடு குறித்த முக்கிய வழக்கு டிவிஷன் பெஞ்ச் முன்பு  இருப்பதால் இந்த வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது. இந்த வழக்கு  ஆவணங்களையும் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி இவ்வழக்கை   விசாரிக்க முடியாது என மறுப்புத் தெரிவித்து விட்டார்.

நீதிபதியின் இந்த மறுப்பு திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இதனால்  திட்டமிட்டபடி டெசோ மாநாடு ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுமா என்பது  கேள்விக்குறியாகி உள்ளது.