Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

ஆண்களைவிட பெண்களுக்கு மூக்கின் அளவு சிறியது. ஆதிவாசிகளாக இருந்த மனிதன் வேட்டையாடி உணவைச் சேகரித்தான்.  அப்போது இரையைத் துரத்துவதற்கும், மாமிசப் பட்சிணிகளிடம் இருந்து வேகமாக ஓடித் தப்பிப்பதற்கும் அதிகமான காற்றை உள்ளிழுக்க வேண்டியதாக இருந்தது.  எனவே அவனுக்கு மூக்குப் பெரிதாக ஆனது. பெண்களுக்கு அப்படிப்பட்ட தேவையில்லாமல் இருந்ததால் மூக்கு சிறிதானது. மூக்கு சிறிதாகச் சிறிதாக பெண்மையின் லட்சணமாக அது கருதப்பட்டது. குழந்தைகளுக்கு மூக்கு சின்னதாக இருப்பதைப் பார்க்கலாம்.  எனவே சின்ன மூக்கு இருக்கிறவர்கள் இளமையாக இருப்பதாகக் கருதப்பட்டார்கள்.  பெண்களில் பெரிய மூக்கை சிறிதாக அறுவைச்சிகிச்சையின்மூலம் மாற்றுவது அழகாக்குவதில் ஒரு பகுதியாகத் தொடர்ந்துகொண்டி​ருக்கிறது.

முகர்தல்  தொலைவிலிருந்தே உணரக்கூடிய புலன். பார்வைக்கு சூரிய வெளிச்சம் தேவை.  கும்மிருட்டில் கண்கள் செயலிழந்து விடுகின்றன.  ஆனால் முகர்தல் இரவு பகலாக பயன்படுகிறது. கேட்பதுகூட சத்தத்தை நிறுத்திவிட்டால் பயனற்றதாகிவிடுகிறது.  ஆனால், உடலின் மணம் கட்டுப்படுத்த முடியாததாகிவிடுகிறது.  

மாமிசப் பட்சிணிகள் தங்களது உணவை, மணத்தைக்கொண்டே அடையாளம் காணுகின்றன. தேனீக்கள் மற்ற தேன் கூடுகளிலிருந்து மணத்தைக்கொண்டே தங்கள் கூட்டை அடையாளம் காணுகின்றன. நீர்நாய்  அதன் குட்டியை,  மணத்தைக்கொண்டே அடையாளம் காணுகிறது. நாயோடு ஒப்பிடுகிறபோது மனிதனின் முகரும் சக்தி குறைவு.  நாம் தனிப்பட்ட உடல் மணத்தை ஒரு வேட்டை நாயைப்போல அடையாளம் காண முடியாது.  ஆனால், எப்போதோ நம் மூக்கில் தட்டுப்பட்ட வாசனையை மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் முதன்முதலில் அந்த வாசனை ஏற்பட்டபோது இருந்தச் சூழலும் நம் நினைவுக்கு வருகிறது.

மனிதன் மாறி விட்டான்!

வாசனையை முகரும் பகுதி மூக்கின் உள்பகுதிகளில் அமைந்துள்ளது.  சின்ன நாணயத்தைப்போல அவை 50 லட்சம் மஞ்சள் நிற செல்களோடு அமைந்திருக்கிறது.  அதுவே பலகோடியில் ஒரு பகுதியை முகர்ந்துபார்க்க வல்லதாக இருக்கிறது.  அது தொண்டைவரை செல்வதால் நம் உணவில் ருசி அதன் மணத்தையும் அடிப்படையாகக் கொண்டது.  கண்களைக் கட்டி, மூக்கைப் பொத்தி ஒருவரைச் சாப்பிடச்சொன்னால் அவர் சாப்பிடுவது பாதியாகக் குறைந்திருக்கும்.

ஆண்களின் உடல் மணத்தை பெண்களின் மூக்கு கண்டுபிடிப்பதில் அதிக சக்தி வாய்ந்தது.  தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடல் மணத்தை வைத்தே அவர்களை அடையாளம் காணமுடியும்.  பரிசோதனை ஒன்றைச் செய்தார்கள்.  வரிசையாக பெண்களைக் கண்ணைக் கட்டி நிறுத்திவைத்தார்கள். அவர்கள் முன்னால் அவர்கள் குழந்தைகள் படுக்க வைக்கப்பட்டிருந்தன.  அந்தப் பெண்கள் நறுமணத்தைக் கொண்டே சரியாக தங்கள் குழந்தையை கையில் எடுத்துக்கொண்டார்கள்.  ஆனால், ஆண்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே வெற்றியடைய முடிந்தது.

மூக்குக்கு முகர்வது மாத்திரம் பணியல்ல.  அது உள்ளிளுக்கும் காற்றை பதப்படுத்தி, ஈரமாக்கி உள்ளே அனுப்புகிறது.  மூக்கில் இருக்கும் முடிகள் பெரிய துகள்கள் நுரையீரல்களுக்குப் போகாமல் தடுக்கின்றன. ஆண்களுக்கு உதட்டுக்குமேல் இருக்கும் மீசையும் ஒருவித பாதுகாப்பை அளிக்கிறது.  தும்மல் என்பது மூக்கில் ஏற்படும் ஒருவித சௌகரியமின்மையால் உண்டாகிறது.  நுரையீரல் மிகவும் நுண்ணியது.  அதற்குள் போகிற காற்று 35 டிகிரி சென்டி கிரேடில் இருக்க வேண்டும்.  அதற்கு 95 சதவிகிதம் ஈரப்பதம் இருக்கவும், தூசி இல்லாமல் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அதன் மெல்லிய சவ்வு பாதிக்கப்படாமல் இருக்கும்.  மூக்கு 24 மணி நேரத்தில் 14 கன மீட்டர் தூய்மையான பதப்படுத்தப்பட்ட காற்றை அனுப்பி இந்தத்தேவையை பூர்த்தி செய்கிறது.  மருத்துவமனைகளில் மூக்கின் பயன்பாட்டை இழக்கிற நோயாளிகள் இரண்டொரு நாளிலேயே நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அறிவார்கள்.  

மூக்குக்குள் இருக்கும் ம்யூக்கஸ் என்கிற மெல்லிய சவ்வு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் நீரை உற்பத்தி செய்கிறது.  காற்றிலிருக்கும் தூசியும், அழுக்கும் ம்யூகஸில் படிந்துவிடுகிறது.  

இன்றிருக்கும் மூக்கு நாம் எங்கிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. வறண்ட கிழக்கு ஆப்பிரிக்காவின் புல்தரைகளில் வாழ்ந்தவர்களைவிட மேற்கு ஆப்பிரிக்கா போன்ற வெப்பம் நிறைந்த ஈரப்பகுதிகளில்  வசித்தவர்களுக்கு இன்னும் பரந்த சப்பையான மூக்கு காணப்படுகிறது. நம் மூதாதையர்கள் சுவாசித்த விதத்தைப்பொருத்தே நம் மூக்கின் நீளம் நிர்ணயிக்கப்படுகிறது.  

மூக்கிலிருக்கும் அழுக்குகளில் அவ்வப்போது கையைவிட்டு எடுப்பது அருவருப்பான செயல்.  அதை பொது இடங்களில் செய்பவர்கள் நாகரிகமற்றவர்களாக கருதப்படுவார்கள்.  சிறுநீர் கழிப்பதைப்போல அதுவும் தனிமையில் செய்யவேண்டிய செயல்.  

நீளமான மூக்கு இருப்பவர்கள் கேலிச்சித்திரம் வரைபவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.  பல கேலிச் சித்திரங்களில் மூக்கு பிராதனப்படுத்தப்படுவதை பார்க்கலாம் யூதர்களை பெரிய மூக்கு கொண்டவர்களாக அவர்களுக்கு எதிரான பிரசாரத்தில் சித்திரிப்பது வழக்கம்.  சீனா போன்ற நாடுகளில் மேற்கத்தியவர்களை பெரிய மூக்கு கொண்டவர்களாகக் குறிப்பிடுவார்கள்.  

மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது பிரதானமான மூக்குத்தண்டுடன் நம் நாசி இருப்பதை பார்க்கலாம்.  குரங்குகளோடு ஒப்பிடும்போது அதிகம் வெளிவந்த நம்முடைய மூக்கை தனியாக அடையாளம் காணமுடியும்.  பேச்சு வளர்ந்ததன் காரணமாக மூக்கும் முக்கியத்துவம் பெற்றதை உணரலாம்.  அடுத்ததாக கண்களைக் காக்கும்பொருட்டு நெற்றி, கன்னம், மூக்கு போன்றவை வெளியே வந்து ஏதேனும் அடிபடுகிறபோது கண்களை காப்பாற்ற உதவுகிறது.  

மூக்குக் குத்துவது என்பதற்கு 4,000 ஆண்டு பாரம்பர்யம் உண்டு.  மத்திய தரைக்கடல் பகுதியில் இது புழக்கத்தில் இருந்தது.  திருமணத்தின்போது கணவன் ஒரு தங்க மூக்குத்தி மனைவிக்கு அளிப்பது வழக்கம்.  ஒருவேளை விவாகரத்து நிகழ்ந்தால் விலக்கிவைக்கப்பட்ட மனைவி அந்த மூக்குத்தியில் இருக்கும் தங்கத்தை நிவாரண நிதியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  முகலாயர்கள் இந்தியாவுக்கு வருகிறபோதுதான் மூக்குக் குத்துவதும் பரவ ஆரம்பித்தது. அப்போது  இடது பக்க மூக்கை குத்திக்கொள்கிற வழக்கம் 17-ம் நூற்றாண்டில் ஆரம்பமானது.  இடதுபக்கத்தைத் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் அது பெண்களுடைய கர்ப்பம், குழந்தை பிறப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய பகுதி என்பதால்தான். தமிழ்நாட்டில் பெரும் பாலோனோர் வலது பக்கத்தை மூக்குக் குத்திக்கொள்ளத் தேர்ந்தெடுக்கிறார்கள். மூக்குக் குத்தினால் குழந்தை பிறப்பு வலியில்லாமல் இருக்கும் என்று கருதினார்கள்.

1960-களில் ஆசிய கண்டத்துக்கு வந்த மேற்கத்திய ஹிப்பிகள் இங்கிருக்கும் நடைமுறையைப் பார்த்து மூக்கு குத்த ஆரம்பித்தார்கள்.  இது பாலிவுட் படங்களிலும் காண்பிக்கப்பட்டது.  ஆனால், இதுபோன்ற பழக்கம் முதலாளிகளை எரிச்சலூட்டி அவர்களை வேலையிலிருந்து நிறுத்துகிற அளவுக்குச் சென்றது.  

மூக்கை அறுப்பது என்பது ஒரு மிகப்பெரிய தண்டனையாக இருந்தது.  இந்தியாவில் மனைவி வழிதவறினால் மூக்கை அறுத்துவிடுகிற பழக்கம் இருந்தது.    ஐரோப்பாவிலோ வரி கட்டாதவர்கள் மூக்கை வெட்டுவது ஒரு வாடிக்கையாக இருந்தது.

அல்பினோக்கள் குறைவான முகரும் தன்மையோடு இருக்கிறார்கள்.  தோலின் நிறத்தில் கறுப்பு கூடும்போது வாசனையை உணரும் திறன் அதிகரிக்கிறது.  குழந்தைகளுக்கு நறுமணத்தின் விவரங்களோடு பட்டியல் கொடுத்தால் அவர்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்வார்கள். இளைக்க விரும்பினால் மூக்கை மூடிக்கொண்டு சாப்பிட்டால்போதும்.  மூன்றேமாதத்தில் எடை குறையும்.  உணவின் நிறமும், மணமுமே நம்மை அதிகம் உண்ண ஊக்கப்படுத்துகிறது.

முகரும் திறன் விட்டமின் பி 12 குறைபாட்டால் தற்காலிக​மாக பாதிக்கப்பட வாய்ப்புண்டு.  ஒரு சிலருக்கு முகரும் திறன் முற்றிலுமாக   அற்றுப்போய்விடுவதும் உண்டு. அதற்கு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்படுவதோ காரணம்.   மாமிசம் சாப்பிடுபவர்கள் உடல் ஒரு விதமாகவும், குழந்தைகள் உடல் ஒரு மணத்துடனும், புகைப்பவர்கள் உடல் வாசம் வித்தியாசமாகவும்  இருக்கின்றன.  எறும்புகள் முன்னால் செல்லும் சாரண எறும்புகள் உடலிலிருந்து கசியும் திரவத்தின் நறுமணத்தைக் கொண்டுதான்  சாரை சாரையாக செல்கின்றன.  

மூக்கு தன்னிச்சையாக செய்யும் செயல் தும்மல். தும்மும்போது ஒலியின் 85 சதவிகித  வேகத்தில் காற்று வெளிவருகிறது.  அப்போது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களையும், அழுக்குகளையும் அது வீசி எறிகிறது. தும்மும்போது வாயைப் பொத்தினால் காதுகளுக்கு சேதாரம்.   காது, மூக்கு, தொண்டை மூன்றும் வலுவான கூட்டணியோடு இயங்குகின்றன.  மூக்கை சிந்தும்போது ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு சிந்த வேண்டும்.  இரண்டு துவாரங்களையும் ஒரே நேரத்தில் பிடித்து சிந்தினால் காதுகள் பாதிக்கப்படும்.  

  நாற்றத்தை உணர்த்த மூக்கை கைகளால் மூடுவது ஓர் உடல் மொழி.  மூக்கை சுளிக்கும்போது துர்நாற்றம் என்பது தெரிவிக்கப்படுகிறது.  நன்றாக சுவாசத்தை உள்ளிழுத்து மூக்கைப் பெரிதாக்க முயன்றால் வீசும் நறுமணம் பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  வியக்கிறபோது மூக்கின் மீது விரல் வைப்பதும் நிறைய சாப்பிட்டால் மூக்குபிடிக்க உண்டதாகக் கூறுவதும் நம்மிடையே வழங்கும் பேச்சு வழக்குகள். சிவந்த காது கோபத்தை உணர்த்துகிறது. ஆனால் சிவந்த மூக்கு அலர்ஜி, சளி, ஜலதோஷம், ஒவ்வாமை ஆகியவற்றைத் தெரியப்படுத்துகிறது. மூக்கின் துவாரம் சின்னது தான் என்றாலும் எவ்வளவு பெரிய விஷயங்கள் அதில் இருக்கிறது பாருங்கள்!

மனிதன் மாறி விட்டான்!

1. நீங்கள் கடிகாரம் வாங்கச் செல்லுகிறீர்கள் ரூ. 1,000-க்கு  ஒரு கடிகாரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் நண்பர் பக்கத்து கடையில் அதே கடிகாரம் ரூ. 900-க்கு கிடைப்பதாகச் சொல்லுகிறார்.  நீங்கள் அந்தக் கடையில் சென்று கடிகாரம் வாங்குகிறீர்கள்.  அடுத்த வாரம் ஒரு கடையில் ரூ. 1,10,000-க்கு வைர மோதிரம் தேர்வு செய்து பில் போடப் போகிறீர்கள்.  அப்போது அதே நண்பர் இன்னொரு கடையில் அதே மோதிரம் ரூ. 1,09,900-க்கு கிடைப்பதாகச் சொல்லுகிறார்.

அ) நீங்கள் அவ்வளவு தொகைக்கு 100 ரூபாய் பெரிதல்ல என்று அந்தக் கடையிலேயே வாங்குவீர்கள்.

ஆ) 100 ரூபாய் குறைவாகக் கொடுக்கும் கடையில்தான் வாங்குவீர்கள்.

2. சில ஊர்களில் திருவிழாக்களின்போது வேல்களையும் ஈட்டிகளையும் வாயில் குத்திக்கொள்கிறார்கள். இவர்களுக்கு...

அ) வலிதாங்கும் சக்தி அதிகம்.

ஆ) இவர்கள் வலியை வெளியே காட்டிக்கொள்வது  அசிங்கமென நினைக்கிறார்கள்.

இ) பரவச நிலையில் வலியை இவர்கள் உணர்வதில்லை.

ஈ) வலியைப் பற்றியே நினைக்காமலும் பேசாமலும் இருந்தால் வலி நம்மைத் தாக்குவதில்லை.

3. அளவுக்கதிகமாக கண் விழித்து தொடர்ந்து படித்தாலோ அல்லது உழைத்தாலோ...

அ) உடல் கெட்டுப்போய்விடும்.

ஆ) அதற்குப் பிறகு தூக்கம் வராமலேயே போய்விடும்.

இ) இழந்த உடல் நலத்தை பின்னர் முறையான தூக்கத்தால் ஈடுகட்ட முடியும்.

4. கெட்ட கனவுகள் தூங்கும்போது வருவது...

அ) பதின்மப் பருவத்தில் அதிகம்.

ஆ) குழந்தைப் பருவத்தில் அதிகம்.

இ) வயோதிகத்தில் அதிகம்.

ஈ) மன அழுத்தம் ஏற்படும்போது அதிகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு