Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

புன்னகை மன்னர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

சொற்களைக் காட்டிலும் சக்திவாய்ந்தது ஒரு புன்னகை.  மனித மனங்களை ஒரு புன்னகையால் இணைக்கும்போதுதான் உறவுகள் மேம்படுகின்றன.  உதடுகளும் பற்களும் கூட்டணியமைத்துக்கொண்டு புன்னகையை உருவாக்குகிறபோதுதான் அது சக்திவாய்ந்ததாக அடுத்தவர் இதயங்களில் நங்கூரம் பாய்ச்சுகிறது. ஒரு புன்னகையை சிந்துவதற்கு எந்தச் செலவும் இல்லை.  ஆனால், அதுவே நமக்கு சிரமமான செயலாக இருக்கிறது. புன்னகை, அனைத்தையும் நேராக்கும் ஒரு வளைவு.    

சிரிப்பதன் மூலமே குழந்தைகள் அம்மாவை அடையாளம் கண்டுகொள்கின்றன. இரண்டு மாதங்கள் ஆகிறபோது குழந்தை அந்நியர்களைக் கண்டால் அச்சப்பட ஆரம்பிக்கிறது. தெரிந்த முகங்களையே நேசிக்கிறது. அறியாத முகங்கள் பார்வையில் அகப்பட்டால் அழத் தொடங்குகிறது. தாயும் ஏதாவது புதிய செயலைச் செய்தால் அதுவரை நிகழாத அனுபவத்தைப் பெற்றால், அந்தக் குழந்தை அச்சப்படுகிறது.  தட்டிக் கொடுப்பதன் மூலமும் சிரிப்பதன் மூலமும் 'ஆபத்தே இல்லை’ என்று அம்மா குழந்தைக்குத் தெரியப்படுத்துகிறாள்.  அப்போது குழந்தை பாதி அழுகையோடு பெற்றோரை அறிந்த கெக்களிப்பையும் சேர்க்கிறது. சிரிப்பு உண்டாகிறது. கை தட்டல், பொம்மைகளின் சத்தம் என்று புதியன நிகழ்கிறபோது அழுகையின் விளிம்பில் இருந்த அது 'ஆபத்தில்லை’ என்று உணர சிரிப்பு உண்டாகிறது. படிப்படியாக சிரிப்பு குழந்தைக்கும் பெற்றோர்களுக்குமான விளையாட்டு சமிக்ஞையாக ஆகிறது.  

மனிதன் மாறி விட்டான்!

குழந்தை பயப்படும்போதெல்லாம் ஒட்டிக் கொள்வதற்கு தாய் அவசியமாகிறாள்.  அப்போது தாய் ஓடிச்சென்று அதை கைகளில் தூக்கி வெதுவெதுப்பாக அணைத்துக்கொள்ளும்போது அவளுக்குப் பரிசாகக் கிடைப்பதுதான் குழந்தையின் புன்னகை.  குழந்தை பிறந்த ஐந்தாவது வாரத்திலிருந்துதான் புன்னகை நிகழ்வுகளின் அனுபவத்தைப் பொறுத்து அமைகிறது.  வாயைத் திறந்து இதழ்களை பின்னிழுத்து வாய் ஓரங்களில் சுருக்கங்களை ஏற்படுத்தி முகத்தில் மாற்றத்தை புன்னகை ஏற்படுத்திவிடுகிறது. குழந்தைகள் முழுமையாகப் புன்னகைக்கும்போது கால்களை உதறியும் கைகளை ஆட்டியும் குரலெழுப்பியும் அவற்றில் அத்தனை ஆற்றலையும் கொண்டுவந்துவிடுகின்றன.  

இயல்பாக எழுந்த புன்னகை நாளடைவில் அன்பைப் பரிமாறுவதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் முக்கியமான ஒன்று என்கிற காரணத்தால் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியத்துக்கு உள்ளாகின்றது. மரியாதை காரணமாகவும் பணிவு காரணமாகவும் பழகியதன் அடையாளமாகவும் செயற்கையாகக் கூட சில நேரங்களில் நம் மனத்தின் உணர்ச்சிகளைத் தாண்டி புன்னகை புரிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.  

பல்வரிசை அழகாக இருப்பவர்கள் அடிக்கடி சிரிப்பதையும் பளிச்சென்ற பற்களை வெளியே காட்டி புன்னகை மன்னர்களாக திகழ்வதையும் பார்க்கலாம். மனிதனுக்கு மனிதன் சிரிக்கும் விதமும் சிரிப்புச் சத்தமும் வேறுபடுகிறது.  புன்னகையை வாயோடு வரப்புகட்டி நிறுத்திவிடுபவர்கள் உண்டு. சிலரோ சின்ன நகைச்சுவைக்கு வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிப்பதுண்டு.  ஒரு சிலர் சிரிக்கும்போது கார் புறப்படுகிற சத்தம் கேட்பதுண்டு. கோலி சோடாவை திறப்பதுபோன்ற சத்தத்துடனும், கோழி கூவுகிற சத்தத்தோடும் சிரிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். நகைச்சுவையைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே சிரித்து நாம் புண்படாமல் பார்த்துக்கொள்பவர்கள் உண்டு. இன்னும் சிலரோ அருகில் இருப்பவர்கள் முதுகில் எல்லாம் தட்டிச் சிரிப்பது உண்டு.

பாராட்டுகிற விதத்தில் சிரிப்பதற்கும், வாழ்த்துத் தெரிவிக்கிற வகையில் சிரிப்பதற்கும், மன்னிப்பு கேட்கிற வகையில் சிரிப்பதற்கும் வேறுபாடு இருக்கின்றன.  மனிதர்களைப் போலவே சிம்பன்சிகளும் சிரிக்கும் இயல்பைப் பெற்றிருக்கின்றன.  'ஆஹா ஆஹா’ என்று சிம்பன்சிகளால் சிரிக்க முடியாது. அவை 'ஓஹோ’ 'ஓஹோ’ என்று சிரிக்கும். அது மகிழ்ச்சியால் ஏற்படுவது. நம்மைப்போல பண்படுத்திக்கொள்வதால் வருவது அல்ல.  

செயற்கையாகப் புன்னகை செய்வது அவ்வளவு எளிதல்ல.  எனக்குத் தெரிந்த ஒருவர் எல்லா புகைப்படங்களிலும் சிரிக்கிற மாதிரி தோற்றமளிப்பார். அந்தப் புகைப்படத்தில் இருக்கிற அனைவரும் சிரிப்பார்கள்.  அதற்குக் காரணம் புகைப்படக் கருவியை நிபுணர் சரிசெய்வதற்கு முன்பாக ஒரு நகைச்சுவையை அவர் உதிர்ப்பார். அது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்துவிடும். திறமையான நடிகர்கள் சிரிப்பதற்கும் அழுவதற்குமான சூழலை மனத்துக்குள்ளேயே உருவாக்கி காட்சிப்படுத்தி அவற்றை உண்மையைப் போல வெளிப்படுத்துகிறார்கள்.  

பார்வையற்றவர்கள் சிரிப்பதும் வித்தியாசமாக இருக்கும். ஒரு வகையில் அது நமக்கு உண்மையானதாக இல்லையோ என்றுகூடத் தோன்றும்.  நாம் எல்லோருமே தொடக்கத்தில் அப்படிப் புன்னகை புரிந்தவர்கள்தாம்.  நாளாக நாளாக மற்றவர்கள் புன்னகையையெல்லாம் பார்த்து நயமாக சிரிக்க அதை மெருகேற்றக் கற்றுக்கொள்கிறோம்.   ஒவ்வொரு சமூகத்திலும் புன்னகை செய்கிற விதம் மாறுபடுகிறது.  

புன்னகை என்பது பல நேரங்களில் நாம் அணியும் முகமூடியாக இருக்கிறது.  சிரித்துத் தொலைக்க வேண்டுமே என்று நம் அதிகாரிகள் முன்பும் பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் நாம் புன்னகை செய்கிறோம்.  அதைப் போலவே, சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொள்ளவும் கற்றுக்கொள்கிறோம். 'சிறைச்சாலை நாகரிகங்கள்’ என்ற புத்தகத்தில் சிறைக்கு வருகிற புதிய கைதிகள் எப்படி விரைவாக எந்த உணர்ச்சியும் இல்லாத முகத்தை வைக்கக் கற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. குற்றமே செய்யாமல் உணர்ச்சிவசப்பட்டு சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் குற்ற உணர்வை எப்போதும் இதயத்தில் ஏந்தி இருப்பவர்கள்.  அதை அடுத்தவர்களுக்கு உணர்த்தவும் விரும்புவார்கள்.  சில நாட்களில்  சிறைச்சாலை வாழ்க்கை பழகிப்போனாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல வெளியே காட்டிக்கொள்ள விரும்பமாட்டார்கள்.  மரத்துப்போன முகத்தோடு எல்லோர் முன்பும் தோன்றுவார்கள். தனியாக இருக்கும் சூழல் வருகிறபோது அவற்றை ஈடுகட்டும் விதத்தில் மிகையாக சிரிக்கவும் புன்னகை செய்யவும் அவர்களை வெளியே செல்லாமல் காவல் காப்பவர்கள் மீதும் இருக்கிற வெறுப்பை வெளிக்காட்டும் விதத்திலும் கோபத்தை உமிழும் வகையில் அவர்கள் நடந்துகொள்வார்கள்.  

இதை அலுவலகங்களிலும் பார்க்கலாம்.  அதிகாரி இல்லாதபோது இயல்பாக சிரித்துக்கொண்டிருக்கிற பணியாளர்கள் அதிகாரியின் முகத்தைப் பார்த்ததும் சட்டென்று சிரிப்பதை நிறுத்தி இறுக்கமான முகத்தோடு காட்டிக்கொள்வார்கள். திருவள்ளுவர் மேலதிகாரியின் முன்பு இரண்டு பணியாளர்கள் தங்களுக்குள் 'ஜோக்’ சொல்லி சிரித்துக் கொள்வது ஆபத்தான செய்கை என்று குறிப்பிடுகிறார். 'நம்மைப் பற்றித்தான் நக்கலடிக்கிறார்களோ’ என அதிகாரி நினைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

'ஒருவன் சிரித்துக்கொண்டே வில்லனாக இருக்கலாம்’ என்று ஷேக்ஸ்பியர் தன்னுடைய ஹேம்லட் நாடகத்தில் கூறுவார். அளவுக்கு அதிகமாக, பார்க்கிறபோதெல்லாம் சிரிக்கிறவர்கள் ஆபத்தான பேர்வழிகள். அவர்களை நாம் அப்படியே நம்பிவிடக் கூடாது.  

மனமார்ந்த புன்னகை என்பது முகத்தின் ஒட்டுமொத்த மலர்ச்சியோடு தொடர்புடையது.  முகத்தில் அத்தனை தசைகளும் அதில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கிற கூட்டத்தைப்போல தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்கின்றன.  கண்களில் பூரிப்பு கன்னங்களில் புத்துணர்ச்சி, முகத்தில் பொலிவு ஆகியவை அதில் வெளிப்படுகின்றன. இரண்டு பக்கங்களும் சரிசமமாக உதடுகள் விரிந்து கண்களின் ஓரங்களில் சுருக்கங்கள் நிகழ்ந்தால்தான் அது உண்மையான புன்னகை என்பதையும் நேசத்தின் வெளிப்பாடு என்றும் நாம் தெரிந்துகொள்ளலாம்.  கீழ் உதட்டை மடித்துக்கொண்டு மேல் உதட்டை மாத்திரம் புன்னகையில் ஈடுபடச்செய்கிறவர்கள் தங்களை அடுத்தவர்களுக்கு கீழே இருப்பதாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அறியலாம்.

சிரிக்கும்போது இரண்டு கைகளையும் மூடி மேல் நோக்கி உயர்த்தினால் அது வெற்றியைக் குறிக்க நாம் செய்யும் சமிக்ஞை.  அது ஒலியோடு வருகிற எக்காளச் சிரிப்பு. விளையாட்டுப் போட்டிகளில் ஓர் அணி வெற்றிபெறுகிறபோது பார்வையாளர்கள் மத்தியிலும் அதைப் போன்ற செயல்பாட்டை நாம் பார்க்க முடியும்.  புன்னகை செய்துகொண்டே வலது கையை இறுக்க மூடி தன்னை நோக்கி நகர்த்துவது 'வந்து மோதிப் பார்’ என்று நாம் செய்கிற செய்கை.  

எத்தனை வலி வந்தாலும் அதை வெளிக்காட்டாமல் புன்னகைக்க வீரர்களாலும், தாய்மார்களாலும் மட்டுமே சாத்தியம்.  

- அறிவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு