Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

15. உங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தினரைச் சாப்பிட அழைக்கிறீர்கள். எப்படி பரிமாறுவீர்கள்?

விடை: விருந்தினர் அமர்ந்த பிறகு, ஒவ்வொரு பதார்த்தத்தின் பெயரையும் சொல்லி அவர் அனுமதி பெற்று பரிமாறுவேன்.

இலையில் எதையும் வீணாக்கக் கூடாது. விருந்தினர்களுக்குச் சில பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சில பதார்த்தங்கள் பிடிக்காமல் போகலாம். அவர் சர்க்கரைப் பிரச்னை உள்ளவராக இருக்கலாம். எனவே, அவரை அமரச் செய்து இன்ன பதார்த்தம் என்று சொல்லி, அவர் பரிமாறலாம் என்று சொன்ன பிறகுதான் பரிமாற வேண்டும்.

16. உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் நபர் வந்த ஐந்து நிமிடத்திலேயே, சட்டையிலிருந்து கார் சாவியை எடுத்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

அதன் பொருள்.

விடை: அவர் உடனடியாகப் போகவேண்டும் என உணர்த்துகிறார்.

ஒருவர் கார் சாவியைத் தேடுவது, அலைபேசியை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொள்வது, கைப்பையை எடுப்பது, அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பது போன்றச் செயல்கள் அவர் உடனடியாகச் செல்லவேண்டும் என்பதை உணர்த்தும் சமிக்ஞைகள்.

17. உங்கள் பணியாளர் தவறு செய்தால்...

விடை: தனியாக அழைத்துக் கண்டிப்பேன்.

பாராட்டுவதை பலர் முன்னிலையிலும், கண்டிப்பதைத் தனியாகச் செய்வதும் நல்ல பலன்களைத் தரும். அனைவரின் முன்பும் கண்டித்தால் மனம் உடைந்துபோவதோடு ஊக்கம் குறைந்து பயத்தில், பதற்றத்தில் அதிகத் தவறுகள் நிகழும். இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

18. எப்போதும் அலுவலகம் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள்?

விடை: நிர்வாகத் திறன் அற்றவர்கள்.

அலுவலகத்தை அலுவலகத்திலும் வீட்டை வீட்டிலும் விட்டுவிட்டு வருபவர்களே நிர்வாகத் திறன் உடையவர்கள்.

19. நல்ல தகவல் தொடர்பாளராக இருப்பதற்கு முக்கியமான தகுதி...

விடை: கவனித்தல்.

கவனிப்பவர்களே அடுத்தவர்கள் கருத்தையும் எண்ணத்தையும் தெளிவாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தன்னுடைய உரையை வகுத்துக்கொள்ள முடியும். அவர்களே எல்லாத் தரப்பு கருத்துகளையும் கேட்டு சரியான முடிவெடுக்க முடியும்.

20. உங்கள் நண்பர் ஒரு புத்தகம் வாங்கியவுடன் அதில், அவர் பெயரை எழுதுபவராக இருந்தால்...

விடை: அவர் எல்லைப் பகுதியை வரையறை செய்யும் குணமுடையவர்.

தன் எல்லைப் பகுதியை வரையறுக்க விருப்பம்கொண்டவர்கள்தான் இப்படி நடந்துகொள்வார்கள். பேருந்தில் ஏறியவுடன் இடம்பிடிப்பது, புத்தகத்தில் பெயர் எழுதுவது, அவர்கள் வாகனம் வழக்கமாக நிற்கும் இடத்தில் வேறொருவர் நிறுத்தினால் சண்டை போடுவது ஆகியவை எல்லைப் பகுதியை விடாப்பிடியாக நிர்ணயிப்பவர்கள் செய்யும் செயல்கள்.  

21. உங்களைப் பெரிய மனிதர் ஒருவர் விருந்துக்கு அழைக்கிறார். இலையில் பாகற்காயையும், கேசரியையும் பரிமாறுகிறார். உங்களுக்குக் கேசரி பிடிக்கும். பாகற்காய் ஆகாது.

எப்படி உண்பீர்கள்?  

விடை: முதலில் பாகற்காய்.

'டிலேயிங் த கிராட்டிஃபிகேஷன்’ என்பது நம் நடத்தையில் உள்ள முக்கியமான வெளிப்பாடு. 'ஸ்ட்ரான்ஃபோர்ட் மார்ஷ்மேலோ’ பரிசோதனை என்பது ஒருவர் தன்னுடைய ஆசையைக் கட்டுப்படுத்தினால் அதிக பலன்கள் எப்படிக் கிடைக்கும் என்பது குறித்து விளக்கிச் சொன்ன ஒரு சோதனை. 'மார்ஷ்மேலோ’ என்பது ஒருவிதமான தின்பண்டம். ஒரு குழந்தைக்கு ஒரு தின்பண்டத்தைக் கொடுத்துவிட்டு பரிசோதகர் சென்றுவிடுவார். அவர் மறுபடியும் வருவதற்குள் அந்தக் குழந்தை கையில் வைத்திருந்தால் இன்னொன்று தரப்படும்.  இதுதான் அந்தப் பரிசோதனை. இதை ஸ்காட்பெக், அவருடைய 'அதிகம் பயணிக்காத பாதை’ என்கிற நூலில் குறிப்பிடுகிறார். முதலில் சிரமப்பட்டு பாகற்காயைச் சாப்பிட்ட பிறகு தமக்குப் பிடித்த கேசரியைச் சாப்பிடுகிறவர்கள், வாழ்க்கையில் கடினமானப் பணிகளை முதலில் செய்துவிட்டு எளிதான பணிகளைப் பின்னர் ஆற்றுவார்கள்.  திறமையான அதிகாரிகள் காலையில் அதிக கவனம் தேவைப்படும் பணிகளைச் செய்துவிட்டு பின்னர் எளிதான பணிகளை மேற்கொள்வார்கள். அவர்கள் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.      

மனிதன் மாறி விட்டான்!

22. பெரும்பாலும் சிலர் முன்பு நாம் கைகளைக் கட்டுவது...

விடை: தற்காப்புக்காக.

நம்மையும் அறியாமல் பாதுகாப்புக் கோரும் இடங்களில் கைகட்டுவது பழக்கம். அது நாளடைவில் பணிவைக் குறிப்பதாக ஆகிவிட்டது. சிலருக்கு அது மேனரிசமாக ஆகிவிடுகிறது.  பெரும்பான்மையானவர்கள் குளிரின்போது கைகட்டுவது ஒருவித கதகதப்பை நம் உடலில் ஏற்படுத்திக்கொள்வதற்கு. மற்றநேரங்களில் உள்ளத்தில் ஏற்படுத்திக்கொள்வதற்கு.

23. நாம் பேசும்போது திடீரென ஒருவர் இருக்கையின் நுனிக்கு வந்தால் பொருள்...

விடை: அவருக்கு நம் பேச்சில் உள்ள விஷயத்தில் ஆர்வம்.

நாம் ஒரு பொருளை விற்க நினைத்தால், முதலில் எதிராளி அதிகாரத் தோரணையோடு இருக்கையில் சார்ந்து கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு அமருவார். கொடுக்கிற இடத்தில் அவரும், வாங்குகிற இடத்தில் நாமும் இருப்பதால் இந்த ஆதிக்கத் தோரணை. நம் பொருள்மீது ஆர்வம் ஏற்பட்டால் இருக்கையின் நுனிக்கு வருவார். அப்போது நாம் அவர் பொருளை வாங்க முடிவு செய்துவிட்டார் என்று அறிந்துகொள்ளலாம்.    

24. நேர்காணலுக்கு அழைக்கிற ஒருவர், நம்மைத் தேநீர் அருந்த அழைக்கிறார். சர்க்கரை போட்ட தேநீர் பரிமாறப்படுகிறது. அவர் தேநீரைச் சுவைத்ததும் சர்க்கரையைப் போட்டுக்கொள்கிறார். நீங்கள்?

விடை: சுவைத்துப் பார்த்தபின் தேவையானால் போட்டுக்கொள்வீர்கள்.

எடிசன், பணியாளர்களை நேர்காணலுக்கு அழைக்கும்போது அவர்களோடு சூப் அருந்துவார். அவர்கள்முன்பு அவர் சிறிது மிளகுத் தூளை தன்னுடைய சூப்பில் கலப்பார்.  நேர்காணலுக்கு வந்தவர்களும் சுவைத்துப் பார்க்காமல் அதைக் கலந்தால் அவர் ஆராய்ந்து பார்க்கும் ஆர்வம் இல்லாதவர், சுய சிந்தனையற்றவர் என்று அறிந்துகொண்டு அவர்களைப் பணியில் சேர்த்துக்கொள்ளமாட்டார்.  

25. கதவைப் பூட்டியபின் ஒருவர் பலமுறை பூட்டை இழுத்துப் பார்த்தால்...

விடை: மனப்பிறழ்வு உள்ளவர்.

'அப்ஸஸிவ் கம்பல்ஸரி டிஸ்ஆர்டர்’ என்பது ஒரு மனப்பிறழ்வு. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து கைகளை அலம்பிக்கொண்டே இருப்பார்கள். முகத்தைக் கழுவிக்கொண்டே இருப்பார்கள். வீட்டில் ஒரு சின்ன இலை விழுந்தால்கூட மறுபடியும் பெருக்குவார்கள். மேக்பத்தில், லேடி மேக்பத் மன்னனைக் கொலைசெய்த குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து கைகளைக் கழுவிக்கொண்டே இருப்பாள். 'அரேபியாவின் அத்தனை நறுமணத் திரவியங்களும் இந்தக் கைகளை வாசனை ஆக்காதா?’ என்று புலம்புவாள். பூட்டை இழுத்துப் பார்ப்பதும், 'சரியாகப் பூட்டினோமா’  என்று சந்தேகப்படுவதும் இந்தப் பாதிப்புக்கான அறிகுறிகள்.

26. மூக்குக் கண்ணாடியைக் கீழே இறக்கிப் பார்ப்பது...

விடை: ஆதிக்கத்தை உணர்த்தும் குறியீடு.

மூக்குக் கண்ணாடியை மேலதிகாரி முன்பு யாரும் இறக்கிப் பார்க்க மாட்டார்கள். கீழே பணிபுரிபவர்களுடன் கண்ணாடியை இறக்கிப் பார்ப்பது ஒருவிதமான ஊடுருவிப் பார்க்கும் உத்தி. இதன்மூலம் 'நான் உன்னை நம்பவில்லை’ என்றும் வெளிப்படுத்துகிறோம்.

27. சில பணிகளில் சீருடை கட்டாயப்படுத்தப்படுவதன் முக்கிய நோக்கம்...

விடை: ஏழை - பணக்காரர் வேறுபாட்டை அகற்ற, அடையாளப்படுத்த, கட்டுப்பாட்டை ஏற்படுத்த, மற்றவர்களை எளிதில் ஒழுங்குபடுத்த.

சீருடை அணிந்த ஒரு காவல்காரர் தனி ஒருவராக ஒரு பெரிய கூட்டத்தையே கட்டுப்படுத்த முடியும். சீருடையானது ஒழுங்கு, அடையாளப்படுத்துவது ஆகியவற்றுடன் பணிகளிலும், பள்ளிகளிலும் சமத்தன்மையை ஏற்படுத்துகிறது.

28. ஒரு திட்டத்தின் செயல்பாடு பற்றி தணிக்கை செய்து உங்கள் மேலிடத்தில் அறிக்கைத் தரச் சொல்கிறார்கள்...

விடை: நிறைகளை முதலில் சுட்டிக்காட்டுவீர்கள். பிறகு குறைகளையும், அவற்றைக் களையும் விதங்களையும் சொல்வீர்கள்.

எப்போதும் நிறைகளை முதலில் சுட்டிக்காட்ட வேண்டும். அதற்குப்பின்னர் குறைகளைப் பட்டியலிட்டு அவற்றைப் போக்கும் விதங்களையும் சொல்லவேண்டும். எடுத்தவுடன் குறைகளைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அது நம்மீது வெறுப்பையே ஏற்படுத்தும். குறைகளைச் சொல்லாமல்விட்டால் அது நேர்மையற்றச் செயலாகிவிடும்.

29. உங்கள் பணியாளர் முதல்நாள் வரவில்லை. அடுத்தநாள் வருகிறார். நீங்கள்...

விடை: சிறிது நேரம் கழித்து விசாரிப்பீர்கள்.

எடுத்தவுடன் கேட்டால் அது பணியாளர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தும். வராததற்கு உண்மையான காரணம் இருக்கலாம். ரவீந்திரநாத் தாகூர் அவருடைய பணியாளர் முதல்நாள் வராததற்குக் கோபப்பட்டு மறுநாள் அவர் பணிக்கு வந்தவுடன் கண்டித்துவிட்டார். பிறகுதான் அவருடைய மகன் இறந்துபோனதால் பணியாளர் வரவில்லை என்ற விவரம் தெரிந்தது. இதைப்போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவும் பணியாளர்களுக்குப் பதற்றம் ஏற்படாமல் இருக்கவும் சிறிது நேரம் கழித்துத்  தன்மையாக விசாரிப்பதுதான் நல்லது.

30. நீங்கள் ஆண் என எண்ணிக்கொள்ளுங்கள். அலுவலகரீதியாக ஒருவரைச் சந்திக்கச் செல்கிறீர்கள். அவர் பெண்...  

விடை: அவர் முதலில் கை நீட்டினால் கை குலுக்குவீர்கள்.

பெண்களைப் பொறுத்தவரை அவர்களாகக் கைகொடுத்தால் மட்டுமே கைகுலுக்க வேண்டும். அதைப்போலவே பெண்களுடைய கைப்பையை ஓர் ஆண் தூக்கிக்கொண்டு வரக்கூடாது. கை நீட்டினால் கை குலுக்காமல் இருப்பது பண்பாடு அல்ல.

31. உங்கள் நண்பர் எந்த இடமாக இருந்தாலும் படுத்த அடுத்த நொடியே தூங்கிவிடுவார். உங்களுக்கோ எளிதில் தூக்கம் வராது.

அவரை என்ன மாதிரி நினைப்பீர்கள்?

விடை: அவருக்கு ஏதோ நோய் இருக்கிறது.

எந்த இடத்திலும் படுத்தவுடன் தூங்கினால் அது வரம் அல்ல வியாதி. அதற்கு 'நேக்ரோலெப்ஸி’ என்று பெயர். 'நேக்ரோ’ என்றால் சவம்.

32. உங்கள் அறைக்கு ஒருவர் அலுவலக நிமித்தமாக வருகிறார். அவர் கை குலுக்க கை நீட்டுகிறார்.

விடை: எழுந்து நின்று கை குலுக்குவீர்கள்.

எழுந்து நின்று கை குலுக்குவதுதான் மரபு. அமர்ந்து கை குலுக்கினால் அலட்சியப்படுத்துகிறோம் என்று பொருள்.

33. ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை மற்றவர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. ஏன்?  

விடை: பகிர்ந்த உடனேயே செய்து முடித்த திருப்தி ஏற்பட்டுவிடும்.  

பணியாளர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து  ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பிரிவினர் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே மற்றவர்களுக்கு அறிவித்துவிட்டு செய்ய வேண்டும். மற்றவர்கள் கமுக்கமாகச் செய்ய​வேண்டும். அறிவித்துவிட்டுச் செய்தவர்கள் பாதியிலேயே செயலை முடிக்காமல் விட்டுவிட்டார்கள்.  அறிவிக்கும்போதே செயலைச் செய்த திருப்தி ஏற்பட்டு நாம் முழுமையாக முடிக்காமல் இருந்துவிடுகிறோம் என்பதுதான் ஆய்வின் முடிவு.

34. அரங்கம் அமைக்க விரும்புகிறவர்கள் இருக்கைகளின் முதல் வரிசையை மேடையிலிருந்து எவ்வளவு தொலைவில் அமைக்க வேண்டும்?

விடை: 20 அடி.

பொது இடைவெளி என்பது 20 அடிக்கு அப்பால் ஆரம்பமாகிறது. அந்த இடைவெளிக்குள் பார்வையாளர்கள் இருந்தால் பேச்சு சரளமாக வராது.  

-அறிவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு