Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

49. கெட்ட கனவுகள் தூங்கும்போது வருவது...

விடை: பதின்மப் பருவத்தில் அதிகம்.

பதின்மப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் பயமுறுத்தும் கெட்ட கனவுகள் பலருக்கும் வருவதுண்டு. ஓர் ஆண்டுக்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக 24 கெட்ட கனவுகள் வருவதாக உட், பூட்சின் என்ற இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உணவு தயாரிப்பது, சூப்பர் மார்க்கெட் செல்வதுபோல வருகிற கனவுகள்தான் அதிகம்.  சிலருக்கு வேண்டுமானால் சிம்மாசனக் கனவுகள் வரலாம்.    

50. படுக்கையைத் தூங்குவதற்காக மட்டும் பயன்படுத்தாமல், நாள் முழுவதும் பயன்படுத்துபவர்களுக்கு...

விடை: தூக்கமின்மை ஏற்படும்.

தூக்கம் வராதவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும். தூக்கம் வந்தவுடன் படுத்துவிட வேண்டும். படுக்கையில் படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பவர்கள் தூக்கம் வராத தொந்தரவுக்கு ஆட்படுவார்கள்.  

51. பெற்றோர்கள் குழந்தைகளின் ஒருசில நடவடிக்கைகளை மாற்றுவதற்கு...

விடை: சிலவற்றுக்கு முதல் முறையே தண்டனை தருவது அவசியம்.

வாகனங்களைக் கடக்கும்போதும் கீழே விழுந்தவற்றை எடுத்து உண்ணும்போதும் திருடும்போதும் மரியாதைக் குறைவாக பேசும்போதும் முதல் முறையே கடுமையான தண்டனை தரவேண்டும்.

 52. சீன மொழி பேசுபவர்கள் கணிதத்தில் அமெரிக்கர்களைவிட கெட்டிக்காரர்களாக இருக்கக் காரணம்...

விடை: சீன மொழியின் கணிதச் சார்புள்ள எழுத்தமைப்பு.

சீன மொழியில் சில எழுத்துகளில் எண்களைக் குறிக்கும் வகையில் இலக்கணம் அமைந்து இருப்பதால் நிறைய எண்களை நினைவில் வைத்துக்கொள்ள அவர்களால் முடியும். அதனால்தான் சீன மொழி பேசுபவர்கள் கணிதத் திறனில் சிறந்து விளங்குகிறார்கள்.  

 53. உங்கள் நண்பர் ஒருவர் மறதியே ஏற்படாமல் இருக்கிறார்...

விடை: அவர் முக்கியமானவற்றை ஞாபகம் வைத்துக்கொள்வதில் சிரமப்படுவார்.

ஞாபக சக்திக்கு மறதியும் அவசியம். இல்லாவிட்டால், முக்கியமானவற்றைக் கோட்டை விட்டுவிடுவோம்.  

 54. ஆயுதத்தைக் காட்டி ஒருவரை ஒரு மனிதன் தாக்குகிறான். சாட்சிகள் தவறான நபரை அடையாளம் காட்டுகிறார்கள். அதற்குக் காரணம்...

விடை: ஆயுதத்தைக் கவனிக்கிற மும்முரத்தில் ஆளைக் கவனிக்கத் தவறிவிடுவது.

பார்வையாளர்கள், ஆயுதத்தையும் தாக்கும் விதத்தையும் ரத்தத்தையும் பார்த்து குற்றத்தைச் செய்தவர்களின் முகத்தைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.  

 55. 'அல்சைமர்’ நோய் ஏற்படுவதற்குக் காரணம்...

விடை: மரபுவழிக் கோளாறு.

இது மரபுவழிக் கோளாறாக இருக்கும் என்று கருதுகிறார்கள். 'பீட்டா அமிலாய்ட்’ என்கிற புரதத்தை உற்பத்தி செய்வதில் ஏற்படுகிற பிரச்னையே இதற்குக் காரணம். இந்தப் புரதம் குறைவதால்தான் அல்சைமர் நோய் ஏற்படுகிறது.

 56. அம்னீசியா ஏற்படும்போது...

விடை: சிலருக்கு எல்லாம் மறந்துபோகும், ஒருசிலருக்கு குறிப்பிட்ட சம்பவத்துக்கு முன் நடந்தவை மட்டும் மறந்து​போகும்.

 57. இரண்டு மொழிகளுக்குமேல் தெரிந்திருப்பவர்கள், ஒரே மொழியை அறிந்தவர்கள். இவர்களில் யாருக்கு அனுகூலம்?

விடை: அதிக மொழிகள் தெரிந்தவர்களுக்கு அனுகூலம்.

இரண்டு மொழிகளுக்குமேல் தெரிந்தவர்களுக்குப் புலன் உணர்வு, நெகிழித்தன்மை அதிகம் என்பதை இருமொழி அறிஞர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கனடாவில் பள்ளி மாணவர்களிடையே நடந்த ஆய்வில் ஃபிரெஞ்ச், ஆங்கிலம் பேசுகிற குழந்தைகள் நுண்ணறிவு சம்பந்தப்பட்ட தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்கள்.

58. நுண்ணறிவு என்பது...

விடை: இசையில் வல்லுநராவதற்கும் தேவை.

ஒரு காலகட்டம் வரை நுண்ணறிவு என்பது சில பரிமாணங்களோடு மட்டும் தொடர்புகொண்டது என்று கருதப்பட்டது.  ஹாவர்ட் கார்ட்னர் என்பவர் எட்டுவிதமான நுண்ணறிவுகளை அடையாளப்படுத்தினார். உடல் அசைவில் சார்லி சாப்ளின் நுண்ணறிவு மிகுந்தவர். தர்க்கரீதியாக ஆர்கிமிடீஸ் போன்றவர்கள் நுண்ணறிவுப் பெற்றவர்கள். எனவே, ஓவியம், காவியம், கட்டடக்கலை என எல்லாவிதமான திறமைகளும் நுண்ணறிவையே அடிப்படையாகக் கொண்டவை.

59. மனிதத் தேவைகளில் முதல் வரிசையில் நிற்பது...

விடை: உடல் சார்ந்த தேவைகள்.

உடல் சார்ந்த தேவைகளே முதலிடம் பெறுகின்றன. எல்லாவற்றையும் அடைந்தபின்பும் திருப்தி அடையாதவர்கள் சிலர் உண்டு.  

60. ஆண்களைவிட பெண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவதற்குக் காரணம்...

விடை: மனைவியாகவும் தாயாகவும் ஊட்டிவளர்க்கும் சூழல்.

பெண்கள் ஊட்டமளிக்கிற பணியையும் பணிவிடை செய்கிற பணியையும் வீடுகளில் செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு உணர்ச்சி வசப்படுவது தவிர்க்கமுடியாததாகிறது. ஆசிரிய, நர்ஸிங் போன்ற பணிகளில் பிரகாசிப்பதற்கு அதுவே காரணம்.

 61. கணினியோடு அதிகம் விளையாடும் குழந்தைகளுக்கு...

விடை: மற்றவர்களோடு பழகுவது தடைபடும்.

பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இந்தக் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களோடு அனுசரித்துப் போவதும் சிரமம். மற்றவர்களிடம் தோற்பதைவிட, கணினியோடு தோற்பது பரவாயில்லை என்று எண்ணத் தொடங்குவார்கள்.    

62. பதின்ம வயதில் உங்கள் மகன் அடிக்கடி கன்னத்தில் கை வைத்து விரக்தியுடன் அமர்ந்தால்...

விடை: தற்கொலைக்கான அறிகுறி.

விரக்தி அடைவது ஒருவிதமான மனப் பிறழ்வு. பதின்மப் பருவத்தில் இதுபோன்ற அறிகுறி தெரிந்தால் உடனடியாக கவுன்சலிங் செய்யவேண்டும். வீட்டைவிட்டு ஓடிப்போவது, அடிக்கடி விபத்துக்குள்ளாவது, நிறையச் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, அதீத தனிமை, தூக்கக் குறைபாடு, மனச்சோர்வு, தற்கொலை பற்றி சிந்திப்பதாகக் கூறுவது போன்றவை மற்ற அறிகுறிகள்.

 63. வயோதிக தாக்கத்தைக் குறைக்க...

விடை: நடுத்தர வயதில் இருந்த ஆர்வங்களில் தொடர்ந்து ஈடுபட்டு நிறைய பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வது நல்லது.

வயோதிகத்தில் சுறுசுறுப்பு என்கிற கோட்பாடு இதைத்தான் முன்மொழிகிறது. ஆர்வமுள்ள செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வயதாகிவிட்டதே என்று வருத்தப்படாமல் இசை, எழுத்து, நண்பர்களோடு பழகுதல் போன்ற ஆர்வங்களில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் காய் பழமாவதுபோல கம்பீரமாக முதிர்ச்சி அடைவார்கள்.

 64. முன்பின் தெரியாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்பதற்குக் காரணம்...

விடை: சூப்பர் ஈகோ.

சூப்பர் ஈகோதான் நம்மை, சுயநலமற்றவர்​களாகவும் குணநலம் மிக்கவர்களாகவும் மாற்றுகிறது.  

65. மன அழுத்தம் ஏற்படுவதற்குக் காரணம்...

விடை: நல்ல நிகழ்வுகளுக்கும் நம்மை தயார்படுத்திக்கொள்ள சிறிது மன அழுத்தம் ஏற்படும்.

நல்ல நிகழ்வுகளுக்குத் தயாராகும்போதுகூட பதற்றம் வரும். காதல் திருமணத்தின்​போதுகூட, பலர் பதற்றமாக இருப்பதைப் பார்க்கலாம்.

 66. ஒரு கடினமான நிகழ்வில் பதற்றம் ஏற்படாமல் இருக்க...

விடை: நம் கண்ணோட்டம் முக்கியம்.

'பங்கீ ஜம்பிங்’ போன்ற ஆபத்தான சாகச நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக சிலர் இருப்பதற்கு அதுகுறித்த அவர்கள் கண்ணோட்டமே காரணம்.

  67. போட்டி மனப்பான்மையுடனும் பொறுமையின்மையோடும் திகழ்பவர்கள்...

விடை: இதயநோய், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

இவர்கள் எல்லாவற்றிலும் போட்டியோடும் அவசரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் திகழ்கிற காரணத்தால் இவர்கள் இதயநோய், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

- நிறைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு