Published:Updated:

''ரவுடிகளைப் புடிச்சு ஜெயில்ல போடுவேன்!''

ஹைதராபாத்தை கலங்கவைத்த 'ஒரு நாள்' கமிஷனர்

ஹைதராபாத் சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வழக்கத்துக்கு மாறாகப் பரபரப்பாக இருந்தது. புதிதாகப் பொறுப்பேற்க இருந்த போலீஸ் கமிஷனரின் வரு¬கையை எதிர்பார்த்து ஒட்டுமொத்த போலீஸ் டீமும் காத்திருந்தது. சைரன் பொருத்தப்பட்ட கார் நடுவே வர, முன்னும் பின்னும் பாதுகாப்பு கார்கள் அணிவகுத்து கமிஷனர் அலுவலகத்துக்குள் நுழைந்தது. காரில் இருந்து இறங்கினார் புதிய கமிஷனர் முகம்மது சாதிக். புதிய கமிஷனருக்கு மற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பொக்கே கொடுத்து வரவேற்றனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, கமிஷனர் சீட்டில் உட்கார்ந்தார் 'ஒரு நாள்’ கமிஷனரான முகம்மது சாதிக். இவருக்கு வயது 10. அட... என்று ஆச்சர்யப்பட வைக்கும் இந்த ஒரு நாள் கமிஷனருக்குப் பின்னால் இருக்கும் கதையைக் கேட்டால், மனது ரணமாகிறது.

''ரவுடிகளைப் புடிச்சு ஜெயில்ல போடுவேன்!''

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணத்தை நோக்கிக் காத்திருக்கும் சிறுவன் முகம்மது சாதிக். ''சாதிக் எப்போதும் துறுதுறுன்னு இருப்பான். பெரியவன் ஆனதும் போலீஸாகத்தான் ஆவேன் என்று அடிக்கடி சொல்லுவான். டிரஸ் எடுக்கப் போனாக்கூட, போலீஸ் டிரஸ்தான் வேணும் என்று அடம்பிடிப்பான். எங்கள் உறவினர்கள் பலர் போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணியாற்றுவதால், போலீஸ் வேலை மீது அவனுக்கு ரொம்ப இஷ்டம். ஒருநாள், அவன் அம்மாவுடன் ஆஸ்பத்திரிக்கு போனப்போ, சாதிக்கோட கழுத்து வீங்கி இருந்ததைக் கண்ட டாக்டர், அதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்றார். சரி என்றோம். பரிசோதனையின் முடிவு எங்கள் தலையில் இடி இறங்கியதுபோல இருந்தது. 'சாதிக்கோட உடல் நிலை ரொம்ப மோசமா இருக்கு. அவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கு’ என்று டாக்டர் சொன்னதைக் கேட்டு நாங்கள் துடிச்சுப் போயிட்டோம். 7 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் கொண்ட எங்களால், மகனுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்ற கவலையில் இருந்தபோது, ஹைதராபாத் எம்.என்.ஜே கேன்ஸர் மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை அளிக்க முன்வந்தது'' என்று கலங்கினார் சாதிக்கின் தந்தை முகமத் ரஹீமுதீன்.

சாதிக்கின் 'போலீஸ் கனவு’ குறித்து தெரிந்துகொண்ட, 'மேக் எ விஷ்’ என்ற அமைப்பு, அவனது கனவை நிறைவேற்ற முன்வந்தது. 'ஒரு நாள் போலீஸ் கமிஷனர்’ ஆனான் சாதிக். காக்கி சீருடையில், போலீஸ் ஜீப்பில் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்றான்.

''காலையிலே போலீஸ் யூனிஃபார்ம் போட்டுகிட்டேன். சைரன் வெச்ச கார்ல கமிஷனர் ஆபீஸுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. காரைவிட்டு இறங்கின உடனே துப்பாக்கியால வானத்தை நோக்கிச் சுட்டு மரியாதை கொடுத்தாங்க. கமிஷனர் சார் வந்து கை கொடுத்து 'சல்யூட்’ அடிச்சாரு. கமிஷனர் ஆபீஸுக்குள்ள நிறைய பேர் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. என்கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டாங்க. எனக்கு ரொம்ப கூச்சமா இருந்துச்சு. அப்புறம் ரெண்டு ஃபைல்ல கையெழுத்துப் போட்டேன். என்ன ஃபைல்னு தெரியாது. சும்மா என் பெயரை எழுதிவெச்சேன்'' என்று அன்றைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சாதிக், ''நான் போலீஸ் ஆனதும், ஊருல இருக்குற மொத்த ரவுடிங்களையும் புடிச்சு ஜெயில்ல போடுவேன்'' என்று சிரிக்கிறான். பாவம், அவனுக்குப் புற்றுநோய் பற்றி எதுவும் தெரியாது.

ஹைதராபாத் சிட்டி கமிஷனர் மஹேந்தர் ரெட்டி, ''இது எங்களுக்கு நெகிழ்ச்சியான தருணம். ஒரு நல்ல நோக்கத்துக்கு நானும் காரணமாக இருந்துள்ளேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. கூடிய விரைவில் சாதிக் உடல்நிலை தேறி நலம்பெற வாழ்த்துவோம்'' என்கிறார்.

'மேக் எ விஷ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் புஷ்பா தேவி ஜெயின், ''மிகமோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதே எங்கள் அமைப்பின் நோக்கம். குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கிப் பேசும்போதுதான், அவர்களுடைய ஆசையை நம்மோடு பகிர்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகளால் தங்களுடைய நோய் ஏற்படுத்தும் வலியை மறந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் மூளையில் கட்டி உள்ளது. தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணை சந்திக்க வேண்டும் என்பது அந்தச் சிறுமியின் ஆசை. அதை பவன் கல்யாணிடம் தெரிவித்தோம். அவரும் உடனே மருத்துவமனைக்கு வந்து அந்த சிறுமியைப் பார்த்தார். மயங்கிய நிலையில் இருந்ததால், பவன் கல்யாண் வந்ததை அவளால் உணர முடியவில்லை. அந்தக் குழந்தைக்கு அருகே அரை மணி நேரத்துக்கு மேலாக உட்கார்ந்து இருந்துவிட்டுத்தான் கிளம்பினார். ஏதோ எங்களால் முடிந்த வரைக்கும் இதுபோன்ற குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறோம்!'' என்று சொன்னார்.

'சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும்’ என்பது உண்மைதானே!

- நா.இள.அறவாழி

படங்கள்: பி.கே.ரமேஷ்