Published:Updated:

`உதாசீனம்.. எரிச்சல்.. திட்டுகள்.. மாறுங்களேன், ப்ளீஸ்!' - அரசு ஊழியர்களுக்கு ஒரு சாமானியனின் கடிதம்

அதிகாரிகள்
அதிகாரிகள்

அரசாங்க உத்யோக அன்பர்களுக்காகச் சாமானியனின் கடிதம். நிமிர்ந்து நிற்கும் ஊழியர்களே, கொஞ்சம் உட்கார்ந்து படியுங்கள் எங்கள் உணர்வுகளை!

மலைக்காட்டுக் கிராமத்தின் ஓட்டுக்குடிசை. ஆட்சியர் அலுவலகம் கிளம்பிய 90-ஐக் கடந்த பாட்டி. `குப்பையெல்லாம் முன்னாடியே எடுத்து வச்சிருக்க முடியாதா?' - வெளியே துப்புரவுத் தொழிலாளி சத்தம். சாலையில், `உனக்குத் தனி வண்டி விடமுடியுமா? சீக்கிரம் ஏறித் தொலை' - பஸ் ஊழியர் தம் பங்குக்கு. அலுவலகத்தில் `கலெக்டர் வர்றாரு, ஓரமா நிக்க மாட்டாயா?' - சப் இன்ஸ்பெக்டர் அதட்டல். கடைசியாகச் சான்றிதழ் தருவோர் அறை, `வந்துட்டியா, ச்சை. ஓரமா போய் உட்காரு'. கணவனின் இறப்புச் சான்றிதழுக்குத்தான் இந்தத் தொடர் பயணம். பணிச் சுமைகளால் வேலை தாமதம் ஏற்படலாம். கார முகத்தின் காரணம்?

அரசு ஊழியர்களின் அலட்சியம்
அரசு ஊழியர்களின் அலட்சியம்
சக ஊழியர்களால் கோபம் வருகிறதா? - உங்கள் டென்ஷனைத் தவிர்க்க எளிய ஆலோசனைகள்
#NoMoreStress

ஊழியர்களே, `கொடுப்பதற்கு' எதுவுமின்றி அல்லது கொடுக்க விருப்பமின்றி, சிபாரிசும் இல்லாமல் உங்களை அணுக வேண்டுமென்றால் எங்களை நிறையவே தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. முகம் காட்டுவீர்களா, கடுகடுப்பீர்களா, உதாசீனப்படுத்துவீர்களா என்றெல்லாம் மனதில் ஓடுகின்றன. ஒன்றை யோசிப்பதுண்டு, உங்கள் உயரதிகாரிகளிடம் இந்தக் காட்டத்தைக் காட்டுவீர்களா என! மாட்டீர்கள்தானே? அவ்வாறெனில் சம்பளத்துக்கு உத்திரவாதமாய் வரி கட்டுகிற நாங்கள்தானே உங்கள் சூப்பர் சுப்பீரியர். ஆனாலும், எங்களைக் கீழாய் மதிக்கும் மனப்போக்கு ஏனோ!

உங்கள் வெறுப்புச் செயல்பாட்டால் ஆட்சியர் அலுவலகமோ, இதர அரசுக் கட்டடமோ எங்களைப் பயமுறுத்தத்தான் செய்கிறது, ஊழியர்களே. ஏதேனும் காரியத்துக்காக, அரசுக் கட்டடங்களில் நுழைய வேண்டுமென்றால் ஒரு பெரிய மலைப்பு ஏற்படத் தொடங்குவதையும், அரசு ஊழியரிடம் சென்று பேச வேண்டும் எனக் கட்டாயம் ஏற்பட்டால், `ப்ச்' என மனதுக்குள் ஒரு சலிப்புத் தட்டுவதையும் தவிர்க்க முடிவதே இல்லை.

அரசு அலுவலகம்
அரசு அலுவலகம்

ஒருநாள் கண்ட காட்சி. வடபழனியில் பேருந்திலிருந்து இறங்கிய ஓர் இளம்பெண்ணைச் சோதனையிட்ட பரிசோதகர்கள் அவரை வசைபாடத் தொடங்கினர். பயணச்சீட்டு எடுக்கவில்லையா, கையிலிருந்த பாஸைப் புதுப்பிக்கவில்லையா எதுவும் தெரியவில்லை. பயணிகள் பார்வையாளர்களாகி அந்தப் பெண்ணையே நோக்கி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் கூனிக்குறுகி, கண்களில் நீர் ததும்ப, கைகால்கள் உதறியபடி நின்றிருந்தார். ஆனால், உண்மையில் அங்கே நேர்ந்தது, மனித உரிமை மீறலே! அந்த இடத்தில், விசாரிக்க வேண்டியதும், தண்டத்தொகை பெற வேண்டியதும்தான் அந்தப் பரிசோதகர்கள் பணியே ஒழிய திட்டுவதும், அவமானப்படுத்துவதும் அல்ல. காவலர்கள், அலுவலக ஊழியர்கள் என அரசு சார்ந்த பணியில் மக்கள் சேவையாற்றுகிற நீங்கள், எரிந்து கொட்டுவதையே தினசரி வாடிக்கையாகக் கொண்டிருக்கிறீர்கள். இவை போன்ற காட்சிகள் இன்று நேற்றல்ல காலங்காலமாய்த் தொடர்கின்றன.

`அரசு ஊழியர்' என்று தேடினால், `எரிச்சல்' என்றுதான் கூகுளே மொழிபெயர்க்கும்போல. அந்தளவுக்கு தொன்றுதொட்டு வழிவழியாய் எரிந்து விழுகிறீர்கள். பெரும்பான்மை ஊழியர்கள் ஒரே மாதிரி குணாம்சத்தைத்தான் பெற்றிருக்கிறீர்கள். அரசாங்கப் பணி என்பது வேலைக்கும் வாழ்க்கைக்கும் உத்திரவாதம் தருவதுதான். உங்களை நம்பி வருகிறோம் என்ற எண்ணத்தால் ஏற்படுகிற ஒருவித கர்வமா, உயரதிகாரிகளின் அழுத்தம் தருகிற எதிர்வினையா.. அந்த அசட்டை உடல்மொழிக்கும், அவமானப்படுத்தும் வாய்மொழிக்கும் என்னதான் காரணம், பதில் சொல்லுங்களேன்.

அலைக்கழிப்பு
அலைக்கழிப்பு

டிராஃபிக் போலீஸிடம் பஸ்ரூட் கேட்டால் பதிலைவிட நீளமாக விழும் திட்டுகள். சான்றிதழுக்காக தினமும் வந்து நின்றால், உங்கள் குடிகெடுக்க வந்தவர்கள்போல நடத்தும் தன்மை. இவையெல்லாம் உங்களுக்கு வழக்கம், எங்களுக்கோ தாங்கமுடியாத ரணங்கள். பலன் எதிர்பாராத இடத்தில்தான் மனிதநேயம் சூழ்ந்திருக்கும். நாம் உண்டு நம் பணி உண்டு என்றிருப்பவர்கள், முடிந்தவரையிலும் நல்லமுறையில் எதிர்வினையாற்றுவார்கள். தங்கள் பணியைப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் செய்வது தொழில் அல்ல, சேவை. மக்கள் சேவை. முதலமைச்சர் தொடங்கி அங்கன்வாடி வாயிற்காவலர் வரை அனைவருமே அரசாங்கச் சம்பளம் பெறுகிற சேவகர்களே. கேள்விக்குப் பதிலளிப்பதும், வந்திருக்கும் வேலை முடிக்க வழிகாட்டி உதவுவதும் உபரி பணிகளல்ல, உங்கள் பணிகள்தானே?

உண்மையில் நடந்தது என ஏதோவொரு தமிழ்ப் பத்திரிகையில் படித்த நினைவு. புறநகர்ப் பேருந்தில் நடத்துநர் சரியான சில்லறையை எண்ணியெண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த பயணி ஒருவர் அவரைப் பெரிதும் பாராட்டிப் பேசவும், அழுதுகொண்டே தன் சோகக்கதை சொன்னாராம் நடத்துநர். "எல்லோரையும்போல, சில்லறை கேட்டு எரிந்து விழுந்தவன்தான். வயதான என் தாய் சில்லறை இல்லாமல் ஒரு பேருந்தில் ஏறியிருக்கிறார். என்னைப் போலவே கடுகடுப்பில் இருந்த கண்டக்டர், அவரை நடுவழியில் இறக்கிவிட்டார். என் தாய்க்கு எழுத படிக்கத் தெரியாது. அவரிடம் போன் இல்லை. என் நம்பரும் அவருக்குத் தெரியாது. இன்று வரை தாயைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்றாராம்.

மக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன? #DoubtOfCommonMan

அன்பு ஊழியர்களே, உங்களைப் போன்ற ஒருவரிடம் உங்கள் உறவுகளும் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டிருந்தால் துடிப்பீர்கள்தானே. எனக்கு விழும் வசைச்சொல் கேட்டு என் தாய் துடிக்கிறார். உயிர் வாங்காமல் உதவி கொடுங்கள்.

"ஒருதடவ சொன்னா புரியாதாம்மா உனக்கு?", "காலங்காத்தால வந்துட்டானுங்க.." போன்ற வார்த்தைகள் ஒலிக்காமலிருக்கட்டுமே. எங்களுக்கும் உங்களுக்கும் ஒரே விடியல்தான்.

அடுத்த கட்டுரைக்கு