Published:Updated:

ஜாலியன் வாலாபாக் தினம் - ஒரு வரலாற்றுத் துயரம் #MyVikatan

Representational Image
Representational Image

அரசாங்க அடக்குமுறைக்குப் பலியானோர்க்கு ஜாலியன் வாலா பாக் எனும் இடத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை.

இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது என்பார் பிரடெரிக் ஏங்கல்ஸ். அப்படித்தான் 1919 ஏப்ரல் 13-ல் பிரிகேடியர் ஜெனரல் கர்னல் ரெஜிமென்ட் டயரால் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தை படிக்கும்போதெல்லாம் இப்படுகொலையைப் பற்றி நினைவுகூராமல் இருக்க முடியாது.

#ரெளலட் சட்டம்

முதல் உலகப் போரின்போது ஆங்கில அரசு 'இந்தியப் பாதுகாப்புச் சட்டம்' ஒன்றை அறிவித்திருந்தது. இந்தச்சட்டம் அரசுக்கு எதிராக இயக்கங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கடுமையான முறையில் நசுக்க உதவியது. ஆனால், இந்தச் சட்டம் போர் முடியும்போது ரத்தாக வேண்டியிருந்தது.

எனவே, இதற்குப் பதில் சிட்னி ரெளலட் எனும் ஆங்கில நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து `ரெளலட் சட்டம்' இயற்றியது. இச்சட்டத்தின்படி அரசாங்க சோதனை ஆணை (Warrant) இன்றி, விசாரணையின்றி எவரையும் கைதுசெய்யலாம். குற்ற செயலில் ஈடிபட்டார் எனக் கருதி காவலில் வைக்கலாம். இவ்வழக்கினை மூன்று உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்கலாம். அவர்களின் தீர்ப்பே இறுதியானது.

Representational Image
Representational Image

#ரெளலட் சட்டத்திற்கு எதிரான சத்தியாக்கிரகம்

காந்தி இச்சட்டத்தை முழுமையாய் எதிர்த்ததோடு சத்தியாக்கிரக சபை நாடு முழுதும் தோற்றுவிக்கப்பட்டு முதலில் மார்ச் 30-ம் தேதி சத்தியாக்கிரக நாளாக அறிவித்தது. பின் ஏப்ரல் 6-ம் தேதிக்கு தலைவர்கள் வேண்டுகோளிற்கிணங்க தள்ளி வைத்தார். அந்நாளில் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் நடந்தது. அடுத்த நாள் சுவாமி சித்தாநந்தரின் அழைப்பின் பேரில் டெல்லி புறப்பட்டுச் சென்றபோது பஞ்சாப் எல்லையிலிருந்த பால்வால் புகைவண்டி நிலையத்தில் தடுத்து நிறுத்திய ஆங்கிலேயர்கள் காந்தியை பம்பாய்க்கு அழைத்துச் சென்றனர். இதை அறிந்த மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பஞ்சாபில் கலவரம் ஏற்பட்டது. இதனால் ரெளலட் சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டது.

#பஞ்சாபில் வன்முறை

மழை நின்றாலும் தூவானம் விடாது என்பது போல மக்கள் போராட்டத்தை நிறுத்தினாலும் அரசாங்கம் அடக்குமுறையை நிறுத்தவில்லை. பஞ்சாபில் முஸ்லிம் வழக்கறிஞரான டாக்டர் சைபுதீன் கிட்சுலு, மருத்துவரான டாக்டர் சத்யபால் ஆகிய இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இது மக்களை மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டியது. இவ்விருவரை விடுதலை செய்யக்கோரி நடந்த கலவரத்தில் 25 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ராபின்சன் எனும் சரக்குக்கிடங்கு காவலர் அடித்தே கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் வன்முறை ஆர்ப்பாட்ட மையமாகியது.

Representational Image
Representational Image

#ஏப்ரல் 13-ல் இரங்கல் கூட்டம்

அரசாங்க அடக்குமுறைக்குப் பலியானோர்க்கு ஜாலியன் வாலா பாக் எனும் இடத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. அன்று பைசாகி தினம். இதே நாளில்தான் பத்தாவது சீக்கிய குரு கோவிந்த் சிங் கால்சாவைத் துவக்கியதால் சீக்கியர்களுக்கு அன்று விஷேசமான தினம்.

பாக் என்றால் தோட்டம் என்று பொருள். ஆனால், நெடிய சுவர்களால் சூழப்பட்ட 250 அடி நீளம் 200 அடி அகலம் கொண்ட குறுகிய ஐந்து நுழைவாயிலுடைய மைதானம் அது.

தென் பகுதியில் ஒரு சமாதியும், கிழக்கில் ஒரு பெரிய கிணறும் இருந்தது. மேடும் பள்ளமுமான இடமாகக் காட்சியளித்தது.

அன்று காலை பிறப்பித்த தடை உத்தரவு தெரியாமல் 20,000 பேர் கூடி மாலை 4.30-க்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 8 பேச்சாளர்கள் பேசி முடித்து இருந்தனர். டாக்சர் கிட்சுலுவின் புகைப்படம் வைத்திருந்தனர். அமைதியான முறையில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

#படுகொலை ஆரம்பமானது

தனது ஆணையை மீறி கூட்டம் கூடியதால் ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் உள்ளே நுழைந்தார் டயர். ஐந்தாவது வாயிலை அடைத்து காவலர்களை நிறுத்தினார். மாலை 4.45 மணிக்கு தோட்டாக்கள் தீரும்வரை கூட்டத்தினரைப் பார்த்து சுடுமாறு உத்தரவிட்டார் டயர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்டுகள் என 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. 15 நிமிடங்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.1,500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மாலை 5 மணிக்கு அந்த இடத்தைவிட்டு காவலர்கள் வெளியேறினர்.

வெளியேற வழி இல்லாததால் கூட்டத்தில் நசுங்கியும் கிணற்றில் விழுந்தும் உயிரிழந்தனர்.

மறுநாள் 1,526 பேர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Representational Image
Representational Image

#ஹண்டர் குழு

நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இப்படுகொலையை விசாரிக்க ஹண்டர் குழு அமைத்தது.1919 நவம்பரில் விசாரணையை துவக்கி 1920 மார்ச் இறுதியில் சமர்ப்பித்தது. எச்சரிக்கை எதுவுமில்லாமல் டயரைக் கண்டித்து பதவி விலக்கப்பட்டார்.

ஆனாலும், ஆங்கில நாளேடுகள் இன்னொரு சுதந்திரப் போராட்டம் ஏற்படாமல் தடுத்ததாக டயர் பாராட்டப்பட்டார். காந்தி அடுத்ததாக ஒத்திழையாமை இயக்கம் ஆரம்பிக்க அடித்தளமாய் அமைந்தது இச்சம்பவம்.

இந்திய விடுதலைப்போராட்டத்தில் மிகப்பெரும் வரலாற்று துயரம் எனப் பேசப்படுகிறது ஜாலியன் வாலாபாக் படுகொலை. 100 ஆண்டுகளுக்குப் பின் 2019-ல் பிரிட்டன் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் இன்னுயிர் ஈந்த இவர்களை நினைவுகூர்வோம்

- மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு