Published:Updated:

விஜய் திவாஸ்: `சரணடைந்த 93,000 பாகிஸ்தான் வீரர்கள்; வங்கதேசம் உதயம்!’ -`1971’ ஃப்ளாஷ்பேக்

இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசத்தின் (கிழக்கு பாகிஸ்தான்) விடுதலைப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்திருந்தார்.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸ் தினமாக (வெற்றி தினம் - Victory Day) அனுசரிக்கப்படுகிறது. கிழக்கு பாகிஸ்தான் பகுதி வங்கதேசம் என்ற புதிய நாடாக உதயமாக வழிவகுத்ததும் இந்தப் போர்தான்.

இந்தியா - பாகிஸ்தான் போர்
இந்தியா - பாகிஸ்தான் போர்

விஜய் திவாஸ் வரலாறு

1971-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13 நாள்கள் நீடித்த இந்தியா - பாகிஸ்தான் போர் டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி (Amir Abdullah Khan Niazi), இந்திய ராணுவம் மற்றும் முக்தி-பாஹினி (Mukti-Bahini) கூட்டுப் படைகள் முன் சரணடைந்தார். இந்தப் போரின் முடிவு வங்கதேசம் என்ற புதிய நாடு உருவாக வழிவகுத்தது.

பாகிஸ்தான், வங்காள மொழி பேசும் மக்களை மோசமாக நடத்தியதோடு, தேர்தல் முடிவுகளில் குளறுபடி செய்தது. இதனால், கிழக்கு பாகிஸ்தானில் வசித்துவந்த மக்கள் ஆத்திரமடைந்தனர். எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரை அந்தப் பகுதி மக்கள் தொடங்கினர். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வங்கதேச விடுதலைப் போருக்கு முழு ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர் 13 நாள்கள் நீடித்தது. இரு நாட்டுத் தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் பிரிந்துபோன குடும்பங்கள், அதன் பிறகு இணைவதற்கு இன்று வரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுவது உண்டு.

லடாக்கின் வடக்கு பகுதியான டுர்டுக், டியாக்சி, சாலுன்கா, தாங் - ஆகிய நான்கு கிராமங்கள் போரின்போது இந்திய ஆளுகையின்கீழ் வந்தன. லடாக்கின் எல்லையில் இந்தக் குக்கிராமங்கள், ஷியோக் நதியை ஒட்டி, காரகோரம் மலைச்சிகர பாதுகாப்புப் பிரிவினரின் காவலுக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன. லடாக் பகுதி, புத்த மதத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி. இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பால்ட்டி மொழி பேசும் இஸ்லாமியர்களாக இருந்துவந்தனர். 1971-ம் ஆண்டு வரை, இந்த நான்கு கிராமங்களும் பாகிஸ்தானின் ஆளுகையில் இருந்தன.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த இன்றைய வங்கதேசம், பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைக்குள்ளானது. இனப்படுகொலைக்குள்ளான வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இந்தியா களம் இறங்கியதால் 1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்தியாவும், வங்கதேச விடுதலை ராணுவமான முக்தி - பாஹினியும் இந்த யுத்தத்தில் பாகிஸ்தானை வீழ்த்திக்கொண்டே வந்தன. ஒரு வீட்டில் ஒரே சமயத்தில் மூன்று குண்டுகள் விழுந்த அளவுக்குத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு, 1971 டிசம்பர் 15-ம் தேதி இரவு போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியது.

இந்தியா - பாகிஸ்தான் போர்
இந்தியா - பாகிஸ்தான் போர்

அதையடுத்து, டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள், ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்திய ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜெக்ஜித்சிங் அரோரா தலைமையிலான கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர். இந்தப் போரில் கொல்லப்பட்டவர்கள் குறித்து சரியான தகவல்கள் இல்லை. ஆனால், 3,00,000 முதல் 5,00,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விஜய் திவாஸ்: இந்தியாவிடம் அடிப்பணிந்த பாகிஸ்தான் - வங்கதேசம் உருவான வரலாறு #VikatanOriginals

பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் சரணடைந்ததால், கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற தனிநாடாக உருவானது. 16 டிசம்பர் 1971 முதல் வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான புதிய வங்கதேச அரசை, இந்தியா முதலில் அங்கீகரித்தது. அதன் பிறகு, வங்கதேசத்தின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 7 மார்ச், 1973 அன்று நடைபெற்றது. தேர்தலில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிசம்பர் 16

ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி வங்கதேசம், சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த வீரர்களைப் போற்றும் வகையில் அந்த நாள், `விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 16-ம் தேதி விடுதலைப் போரில் பங்கேற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

விஜய் திவாஸ் நிகழ்ச்சி
விஜய் திவாஸ் நிகழ்ச்சி

ஸ்வர்னிம் விஜய் மஷால் (Swarnim Vijay Mashaal) 

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிபெற்று 50 ஆண்டுக்காலம் நிறைவு பெறுவதையொட்டி, மத்திய அரசால் 'ஸ்வர்னிம் விஜய் மஷால்' (Swarnim Vijay Mashaal) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டெல்லியிலுள்ள தேசியப் போர் நினைவிடத்தில் (National War Memorial - NWM) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தநிகழ்வில், `ஸ்வர்னிம் விஜய் மஷால்' நினைவுச் சின்னத்தில் ஜோதியைப் பிரதமர் மோடி ஏற்றிவைத்தார். 1971-ம் ஆண்டு பரம்வீர் சக்ரா, மகா வீர் சக்ரா ஆகிய விருது பெற்றவர்களின் கிராமங்களிலிருந்தும், 1971-ல் பெரிய போர்கள் நடந்த பகுதிகளிலிருந்தும் ஜோதிகள் தேசியப் போர் நினைவிடத்துக்குக் கொண்டுவரப்பட்டன. விஜய் திவாஸ் வெற்றி நினைவுதினத்தை ஒட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு