Election bannerElection banner
Published:Updated:

புனே: `கோழி, தீவனத்தை சாப்பிட்டுவிட்டு முட்டையிட மறுக்கிறது!’ - பண்ணை உரிமையாளர்களின் விநோத புகார்

இறைச்சிக் கோழிகள்
இறைச்சிக் கோழிகள்

கோழி தேவையான அளவு தீவனத்தை சாப்பிட்டுவிட்டு முட்டையிடுவதை நிறுத்திவிட்டதாக கூறி புனேயில் கோழிப்பண்ணை உரிமையாளர் போலீஸில் புகார் செய்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ் நிலையங்கள் எத்தனையோவிதமான, விநோதமான புகார்களைச் சந்தித்திருக்கின்றன. அது போன்ற ஒரு விநோத புகார்தான் புனே போலீஸாருக்கு வந்திருக்கிறது. புனே அருகிலுள்ள லோன்-கல்போர் என்ற இடத்தைச் சுற்றி, ஏராளமான கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. இங்கு கோழிகள் இறைச்சி மற்றும் முட்டைக்காக வளர்க்கப்படுகின்றன. சில பண்ணைகளில் முட்டையிடும் கோழிகள் திடீரென முட்டையிடுவதை நிறுத்திவிட்டன.

இதனால் அதிர்ச்சியடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்தனர். அவர்கள் வழக்கமாக புனேவிலிருந்து கோழித்தீவனம் வாங்குவது வழக்கம். ஆனால் புனே கம்பெனி கோழித்தீவனத்தின் விலையை கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து அகமத் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கம்பெனியிலிருந்து கோழித்தீவனம் வாங்க ஆரம்பித்தனர்.

முட்டைக் கோழிகள்
முட்டைக் கோழிகள்

புதிய கம்பெனியில் வாங்கிய கோழித்தீவனத்தை சாப்பிட்ட பிறகுதான் கோழிகள் முட்டையிடுவதை நிறுத்தின. இது குறித்து பண்ணை உரிமையாளர் சுக்ராம்மானே போலீஸில் புகார் செய்துள்ளார். `கோழி நன்றாகச் சாப்பிடுகிறது. ஆனால் முட்டையிடுவதை நிறுத்திவிட்டது’ என்று தெரிவித்திருந்தார். இந்த வினோத புகாரை என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் திணறினர். இதே போன்ற பிரச்னை வேறு நான்கு பண்ணையிலும் ஏற்பட்டிருந்தது. அவர்களையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் புதிய கோழித்தீவனத்தை சாப்பிட்ட பிறகுதான் கோழிகள் முட்டையிடுவதை நிறுத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோழித்தீவன தயாரிப்பு கம்பெனி பிரதிநிதிகளையும் அழைத்து பேசினர். அவர்களுக்கும் இது போன்ற பிரச்னை சில கம்பெனிகளிலிருந்து வந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு வழங்க கோழித்தீவன தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. எனவே இந்தப் புகாரை வழக்காகப் பதிவு செய்யாமல் போலீஸார் பேச்சுவார்த்தை மூலம் முடித்துவைத்தனர்.

கோழி
கோழி

இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர மொகாசி கூறுகையில், ``மனுதாரர் தனது புகாரில் கோழித்தீவனத்தை சாப்பிட்ட பிறகு முட்டையிடுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து நாங்கள் கால்நடைத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தோம். சில குறிப்பிட்ட உணவு கோழிகளுக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்ட நேரத்தில் கோழிகள் முட்டையிடுவதை நிறுத்திவிடுவது வழக்கம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பும் இது போன்று புதிய தீவனத்தைக் கொடுத்தவுடன் கோழிகள் முட்டையிடுவதை நிறுத்திய சம்பவங்கள் நடந்துள்ளன.

மீண்டும் பழைய தீவனத்தைக் கொடுத்தவுடன் கோழிகள் மீண்டும் முட்டையிட தொடங்கின. எனவே, இது குறித்து தீவன கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களுக்கும் இது போன்ற புகார்கள் வேறு சில வாடிக்கையாளர்களிடமிருந்து வந்திருந்தது. பண்ணை உரிமையாளர்களிடமிருந்து தீவனத்தை வாங்கிக்கொண்டு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு கொடுப்பதாக கம்பெனி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு