`ரூ.971 கோடி; 543 எம்.பிக்களுக்கு 888 இருக்கைகள் ஏன்?’ - புதிய நாடாளுமன்றம்... சுவாரஸ்யத் தகவல்கள்
மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 324 இருக்கைகளும் அமைக்கப்படவிருக்கின்றன. புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புகளை அலசுகிறது இந்தக் கட்டுரை.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் பணிகளுக்கு வரும் 10-ம் தேதி அடிக்கல் நாட்டவிருக்கிறார் பிரதமர் மோடி. உலகத்தரம் வாய்ந்த பல வசதிகளோடு கட்டப்படவிருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் 2022-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு தயாராகும் எனத் தெரிவித்திருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா.
நாம் சுதந்திர இந்தியாவின் பயணத்தைப் பழைய கட்டடத்தில் தொடங்கினோம். சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு நிறைவு பெறும்போது, இரு அவைகளையும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கொண்டிருப்போம்... இது வெறும் செங்கல் மற்றும் கற்களால் கட்டப்பட்ட கட்டடமாக இருக்காது. 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் கட்டடமாக இருக்கும்.ஓம் பிரகாஷ் பிர்லா, மக்களவை சபாநாயகர்
`சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்' என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தின் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கான ஏலத்தில், குறைந்த தொகையில் திட்டங்களை வகுத்து இந்தக் கட்டுமானப் பணி ஒப்பந்தத்தைக் கைப்பற்றியது டாடா நிறுவனம். 861.90 கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான திட்டத்தை வகுத்து சமர்ப்பித்திருந்தது டாடா நிறுவனம்.
புதிய நாடாளுமன்றம்... சில தகவல்கள்!
* குஜராத்தைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஹெச்.சி.பி டிசைன் என்ற நிறுவனம்தான், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்திருக்கிறது.
* புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணி, 2022-ம் ஆண்டு நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்தக் கட்டுமானப் பணியில் நேரடியாக 2,000 பேரும், மறைமுகமாக 9,000 பேரும் ஈடுபடவிருக்கிறார்கள்.
* புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மொத்தமாக 971 கோடி ரூபாய் செலவாகும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
* புதிய நாடாளுமன்றத்தில் மொத்தம் நான்கு தளங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
* புதிய நாடாளுமன்றத்தின் பரப்பளவு 64,500 சதுர மீ.
மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 324 இருக்கைகளும் அமைக்கப்படவிருக்கின்றன. தற்போது மக்களவையில் 543 பேரும், மாநிலங்களவையில் 245 பேரும்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால், எதிர்காலத்தில் இது அதிகரிக்கலாம் என்பதை மனதில்கொண்டு கூடுதல் இருக்கைகளோடு இரு அவைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
* பிரதமர், ஜனாதிபதிக்கான சிறப்பு நுழைவாயில், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நுழைவு வாயில், சிறப்பு நுழைவாயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மற்றொரு நுழைவாயில், இரண்டு பொது நுழைவாயில்கள் எனக் கட்டடத்தில் மொத்தம் ஆறு நுழைவாயில்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
* தற்போதிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தைவிட புதிய கட்டடம் 17,000 சதுர கி.மீ அளவு பெரியது.
* நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமையும், தீ பரவாமலிருக்கும் திறனும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருக்கும்.
* புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகிலுள்ள ஷ்ரம் சக்தி பவனில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலக அறைகள் அமைக்கப்படவிருக்கின்றன.
* நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படவிருக்கிற.
* இந்தியாவின் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படவிருக்கும் இந்தக் கட்டடத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் உட்பட பல்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றவிருக்கிறார்கள்.
தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடம்!
தற்போது செயல்பாட்டிலிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு 1921-ம் ஆண்டு, பிப்ரவரி 12 தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து 1927-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இந்தக் கட்டடம் கட்டுவதற்கு 83 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.

அந்தச் சமயத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் இர்வினால், 1927, ஜனவரி 18-ம் தேதியன்று இந்தக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.