Published:Updated:

`வாழ்க்கையில் முக்கியமான நாள்!' - கவனம் ஈர்த்த மகாராஷ்டிர கலெக்டரின் முயற்சி #CollectorForADay

ஒரு நாள் கலெக்டர் பூனம் தேஷ்முக்
ஒரு நாள் கலெக்டர் பூனம் தேஷ்முக்

``ஒரு நாள் தானும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் செயல்படுகிறார். அதற்காகக் கடினமாக உழைப்பதாகவும் மற்ற பெண்களை ஊக்குவிப்பதாகவும் உறுதிமொழி எடுத்துள்ளார்."

சர்வதேச மகளிர் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1911-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்தத் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை 1977-ம் ஆண்டு அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. சமூக, இலக்கிய மற்றும் அரசியல் உள்ளிட்ட பெண்களின் பல்வேறு சாதனைகளைக் கொண்டாடும் நாளாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் சில நாள்களில் `சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்காக பலரும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தினத்தை முன்னிட்டு புதிதாக எடுக்கும் முயற்சிகள் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தின் கலெக்டர் வித்தியாசமான முறையில் பெண்கள் தினம் தொடர்பான முன்னெடுப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது நெட்டிசன்கள் பலரையும் இந்தப் பதிவு கவர்ந்துள்ளது.

மாவட்ட கலெக்டர் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சில வாரங்கள் பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவிகள் சிலருக்கு ஒரு நாள் கலெக்டராக இருக்க வாய்ப்பு வழங்கப்படும். இன்றைய கலெக்டராக, ஜில்லா பரிஷத் பள்ளியைச் சேர்ந்த பூனம் தேஷ்முக் பணியாற்றியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். அதனுடன் மாணவியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

`பள்ளிகள் இல்லாத கிராமம், முதன்முதலாக 10-வது தேர்ச்சி பெற்ற மாணவிகள்’ - நெகிழ்ந்து கொண்டாடிய மக்கள்!

மேலும், ``பூனம் தேஷ்முக், தன்னுடைய ஒருநாள் ஆட்சியர் பணியைப் புத்திசாலித்தனமாகச் செய்தார். ஒரு நாள் தானும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் செயல்படுகிறார். அதற்காகக் கடினமாக உழைப்பதாகவும் மற்ற பெண்களை ஊக்குவிப்பதாகவும் உறுதிமொழி எடுத்துள்ளார்" என்று அவருக்கு தனது பாராட்டுகளையும் ஆட்சியர் சந்திரா பதிவு செய்துள்ளார். இதற்கு #CollectorForADay என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு நாள் கலெக்டர் பூனம் தேஷ்முக்
ஒரு நாள் கலெக்டர் பூனம் தேஷ்முக்

ஒரு நாள் ஆட்சியராக இருந்த பூனம் தேஷ்முக் பேசும்போது, ``எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேன்டும் என்பது கனவு. இந்த நாளை என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது" என்று நெகிழ்ந்து கூறியுள்ளார். ஆட்சியர் சந்திராவின் இந்த முன்னெடுப்பை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

`மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சி, மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இப்படியான ஒரு சிறந்த முயற்சிக்கு எங்களது வாழ்த்துகள்' போன்ற கமென்டுகளால் ஆட்சியர் சந்திராவை, நெட்டிசன்கள் பாராட்டினர். `புத்திசாலியான மாணவிக்கு வாய்ப்பளிப்பதைப்போல கஷ்டங்களோடு போராடி படிக்கும் மாணவிக்கும் நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்' என்ற நெட்டிசன்களின் கோரிக்கைக்கும் `நிச்சயமாக' என்று பதிலளித்துள்ளார்.

``காந்தி கனவுகண்ட நாளுக்காக காத்திருக்கிறோம்!”–  தத்ரூபக் காட்சி மூலம் பாடம்சொன்ன மாணவிகள்
அடுத்த கட்டுரைக்கு