Published:Updated:

`எல்லாக் கடையிலும் தேடிப் பாத்துட்டேன் சார். ஆனா..!’ - ஹெல்மெட் கதையால் அபராதத்தைத் தவிர்த்த போலீஸ்

டெல்லியில் இளம்பெண் ஒருவர் தனக்கு அபராதம் விதித்தால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

Zakir
Zakir ( Twitter )

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கொண்டுவந்த பின்னர் அபராதத் தொகை குறித்த செய்திகளே பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. சில மாநிலங்கள் அபராதத் தொகையைக் குறைப்பதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்கள் குறிப்பிட்ட சில விதிமீறல்களுக்கு அபராதத் தொகையைக் குறைத்துள்ளன.

Helmet
Helmet
Representational image

மேற்குவங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் புதிய வாகனத் திருத்தச் சட்டம் தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. நிலைமை இவ்வாறு இருக்க, இன்னொருபுறம் போக்குவரத்துக் காவலர்கள் விதிக்கும் அபராத தொகையிலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் படும்பாடு வைரலாகி வருகின்றது.

டெல்லியில் இளம்பெண் ஒருவர், `தனக்கு அபராதம் விதித்தால் தற்கொலை செய்து விடுவேன்' என மிரட்டியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த வாக்குவாதத்தின் முடிவில், அப்பெண்ணை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இறுதிவரை அந்தப் பெண் அபராதம் கட்டவில்லை.

`பணத்தைவிட உயிர்தான் முக்கியம்!’ - அபராதத் தொகையைக் குறைக்கும் மாநிலங்கள் குறித்து நிதின் கட்கரி

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஹெல்மெட் போடாத நபர் ஒருவரைப் பிடித்த போலீஸார், அவர் சொன்ன பதிலைக் கேட்டு அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணியாமல் பயணித்த ஜாகிர் மாமோன் என்ற நபரை நிறுத்தி விசாரித்தனர்.

ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிக்கத் தயாரான காவலர்களிடம் அவர், ``சார்... நான் சட்டத்தை மதிப்பவன். அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என நினைப்பவன். ஹெல்மெட் விவகாரத்திலும், கட்டாயம் அணிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். இங்கு இருக்கும் அனைத்து ஹெல்மெட் கடைகளுக்கும் சென்று வந்துவிட்டேன். ஆனால், எனது தலையின் அளவுக்கு ஏற்ற ஹெல்மெட் எங்குமே கிடைக்கவில்லை.

Helmet
Helmet
Representational image

வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் தெளிவாக இருக்கின்றன. ஆனால் இந்த ஹெல்மெட் விஷயத்தில் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை” என்று ஆதங்கப்பட்டுள்ளார். அவரது தலையின் அளவு சற்று பெரியதாக இருந்ததால் சாதாரண ஹெல்மெட், அவர் தலைக்குச் சரியாகப் பொருந்தவில்லை. `பழக்கடை வைத்திருக்கும் ஜாகிர், ஒவ்வொரு முறையும் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லும் போதும் அபராதத்துக்கு எனப் பணமும் எடுத்துச் செல்வார்' என்கின்றனர் அவரின் குடும்பத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் வசந்த் ரத்வா, ``இது கொஞ்சம் வித்தியாசமான பிரச்னை. அவரின் நிலவரத்தை நாங்கள் புரிந்து கொண்டோம். அதனால் அவருக்கு அபராதம் விதிக்கவில்லை. மேலும், அவர் சட்டத்தை மதிக்கும் நபராகத் தெரிந்தார். வாகனம் ஓட்டும்போது இருக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் அவர் வைத்திருந்தார்” என்றார்.

`அபராதம் விதித்தால் தற்கொலை செய்துகொள்வேன்!’ - பெண்ணால்  போலீஸாருக்கு ஏற்பட்ட சங்கடம்

குஜராத் மாநில அரசு சில போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைக் கடந்த வாரம் குறைத்திருந்தது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினால் மத்திய அரசு விதித்த அபராதத் தொகையான ஆயிரம் ரூபாயிலிருந்து ஐந்நூறு ரூபாயாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.