Published:Updated:

`பேனர் கட்டத்தானே கூடாது..!’- புதுக்கோட்டை அ.தி.மு.க-வினரின் புது டெக்னிக்

பேனர்
பேனர்

விளம்பர பேனர்களுக்கு தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அமைச்சர்களை வரவேற்க புதிய முயற்சியில் புதுக்கோட்டை அ.தி.மு.க-வினர் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில், பேனர் இல்லாத அரசியல் நிகழ்ச்சிகளையே பார்க்க முடியாது. கட்சிக் கூட்டங்கள் மட்டுமில்லாமல், அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகைதரும் காதணி விழா தொடங்கி அனைத்து விழாக்களிலும் கட்டாயம் பேனர் இடம்பெற்றிருக்கும். சினிமா நடிகர்களின் பட ரிலீஸ்களிலும் கட்டாயம் பேனர் இடம்பெற்றும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து, சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாகப் பலியானார். அதன்பின்பு, சினிமா நடிகர்கள், அரசியல் கட்சிகல் என பலரும் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என்று ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றமும் பேனர் தொடர்பாக கண்டிப்புடன் தடை விதித்தது.

 சுபஸ்ரீயின் உயிரைப்பறித்த பேனர்.
சுபஸ்ரீயின் உயிரைப்பறித்த பேனர்.

தமிழகத்திற்கு  வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க உயர் நீதிமன்ற உத்தரவுபெற்று சில கட்டுப்பாடுகளுடன் ஆளும் கட்சியினர் பேனர் வைத்தனர். எனினும், சட்டவிரோதமாக சில இடங்களில் பேனர் வைக்கும் கலாசாரம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. 

இந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை அ.தி.மு.க-வினர் இந்த புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் பாஸ்கரின் தனியார் சொகுசு விடுதி திறப்பு விழா நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பேனர்
பேனர்
"நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது!" - பேனர் விவகாரம் குறித்து சுபஸ்ரீ பெற்றோர் குமுறல்

பேண்டு வாத்தியங்கள் முழங்க நகர அ.தி.மு.க சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழி முழுவதும் பேனர் வைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாற்றி யோசித்த புதுக்கோட்டை அ.தி.மு.க-வினர், அமைச்சர்களை வரவேற்பது போன்ற சிறிய அளவிலான பேனர்களைத் தயார்செய்து, பலர் தங்கள் கையில் வைத்திருந்தவாறு வரவேற்றனர். அமைச்சர்களின் கார் சென்றவுடன், அனைவரும் யாருக்கும் இடையூறு இல்லாமல் கலைந்துசென்றனர். எனினும் பேனர்களால் பல உயிர்கள் இழந்தும்கூட இந்த பேனர் கலாசாரத்தை எந்த வடிவிலாவது கொண்டுவந்துவிடுகிறார்களே என்று விழாவுக்கு வந்தவர்களில் சிலர் நொந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு