‘பெட்ரோல், டீசல்’ இவை இல்லை என்றால் வண்டியும் ஓடாது, வாழ்க்கையும் ஓடாது என்ற நிலை உருவாகி உள்ளது. பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட உள்ளது என செய்திகள் பரவியதால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பெட்ரோலும், டீசலும் வாங்கி செல்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களில் தனியார் நிறுவனங்களை விட, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் அணியில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்றவற்றில் மக்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்ததால், திணறிய ஊழியர்களால் அவர்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
ஒரு பக்கம் பொதுத் துறை நிறுவனங்களில் விற்பனை அதிகரித்தாலும், மறுபக்கம் மக்கள் அச்சப்படுவதற்கு ஏற்றார் போல தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது முன்பணத்தை செலுத்தக்கூடிய சில்லறை நிறுவனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் விநியோகிக்க பட உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமைகள் இப்படி இருக்க, “நாட்டின் பெட்ரோல் டீசல் தேவையை பூர்த்தி செய்யும் அளவை விட அதிகமாவே இருப்பு உள்ளது என்றும், திடீரென அவசர தேவை ஏற்பட்டால் அதையும் பூர்த்தி செய்யும் அளவில் இருப்பு உள்ளது” எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவையானது 50 சதவிகிதம் அதிகரித்து, அங்கே திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் சில பகுதிகளிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உண்மையில் என்ன நடவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!