Published:Updated:

காதல், காமம், உழைப்பு - தென் கொரியாவின் மறுபக்கம் | மர்மங்களின் கதை | பகுதி-10

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

இயல்பான காதலை கண்டடைய நம் பொருளாதாரச் சூழல் தடையாக இருக்கிறதெனில், அந்த பொருளாதாரச் சூழலை புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் தனி மனித வாழ்க்கையைக்கு மனிதமே அடிப்படை. பொருளாதாரம் அல்ல.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

- ஆர்.எஸ்.ஜெ

ஜேங்க் யுன் ஹ்வா என்கிற பெண்ணுக்கு 24 வயது ஆகிறது. குழந்தை எதுவும் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிறார். குழந்தைப்பேற்றில் இவருக்கு விருப்பம் இல்லை. அதற்கு காரணமாக இவர் சொல்லும் விஷயம் என்ன தெரியுமா?

குழந்தைப்பேறு கொடுக்கும் வலிக்கு பயப்படுகிறார். அதனால் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என சொல்லும் இவர் இன்னொரு விஷயத்தையும் முன் வைக்கிறார். தன்னுடைய வேலைவாய்ப்பை குழந்தைப்பேறு பாதிக்கும் என்கிறார். ஆங்கிலத்தில் career என்று கூறுகிறோமே, தொழில் மற்றும் பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை, அது குழந்தைப் பேறால் கடுமையான பாதிப்பு கொள்ளும் என்றும் தொழில் வாழ்க்கை முன்னேறாமல் தேங்கிப் போகும் என்றும் கவலை தெரிவிக்கிறார்.

கர்ப்பம்
கர்ப்பம்
மாதிரிப் படம்

உழைப்பு… உழைப்பு… உழைப்பு:

தென் கொரியாவின் வளர்ச்சியை பொறுத்தவரை அதிக நேர வேலை, ஒரு நாளிலேயே பல மணி நேர அலுவலகப் பணி போன்ற விஷயங்கள் சொல்லப்படுகிறது. இத்தகைய வாழ்க்கையைத்தான் உழைப்பு, சுறுசுறுப்பு எனவெல்லாம் மெச்சி நமக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நன்றாக யோசித்து பாருங்கள். ஞாபகம் இருக்கிறதா? ஜப்பானியர்கள் எப்படி முன்னேறினார்கள்? சுறுசுறுப்பாலும் உழைப்பாலும் முன்னேறினார்கள். பள்ளிகளில் படித்தது மீண்டும் மனதுக்குள் தோன்றுகிறதா? கொரிய மக்களையும் கூட நமக்கு அப்படித்தான் கற்றுக் கொடுத்திருந்தார்கள். அந்த உழைப்பு, அந்த சுறுசுறுப்பு போன்ற விஷயங்களுக்கு பின் நடந்து கொண்டிருந்த வாழ்க்கை அழிப்புகளை, உறவுகளின் மீதான அவநம்பிக்கை வளர்ப்பை நமக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.

ஜேங்க் யுன்ஹ்வா சொல்கிறார், கொரிய நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம் என. அந்த பங்களிப்பு அந்த நாட்டின் வரலாற்றில் எங்குமே பெரிதாக குறிக்கப்படவில்லை எனவும் சொல்கிறார். கொரியாவின் பொருளாதார வெற்றிக்கு அடிப்படை காரணம் குறைந்த கூலிக்கு உழைக்கும் ஆலை தொழிலாளர்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள். குடும்பங்களில் ஆண்கள் வேலைக்கு செல்வதற்கான ஆயத்தங்களையும் குடும்ப பராமரிப்பையும் பெண்களே கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். பெண்களை பொறுத்தவரை குடும்பமும் வேலையும் இரட்டைப் பளு என்றாகி விட்டது.

பெண்கள்
பெண்கள்
representational image

ஊக்க மருந்து

கொரிய நாட்டில் பெண்கள் ஆண்களுக்கான ஊக்க மருந்தாக பயன்படுத்தப் படுகிறார்கள் என்கிறார் யுன் ஹ்வா. நிறுவனங்களிலுமே கூட ஆண்களின் வேலைகள் குறைக்கப்பட்டு, பெண்களுக்கு அதிகம் வேலைகள் வழங்கப்படுவதற்கு முக்கியமான காரணம் பெண்ணின் உழைப்பை சுலபமாக சுரண்ட முடியும் என்பதால்தான் என்றும் கூறுகிறார் யுன் ஹ்வா. கூடவே இன்னொரு தகவலும் சொல்கிறார். ஒரு அலுவலகத்திலோ ஒரு நிறுவனத்திலோ அதிகமான எண்ணிக்கையில் பெண் ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டாலும் தலைமை அதிகாரங்கள் தெள்ளத்தெளிவாக ஆண்களிடமே இருத்தி வைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார். சோய் மூனும் கொரிய நாட்டை சேர்ந்தவர்தான் , அலுவலகத்தில் ஒருநாள் தலைமை அதிகாரியிடம் தான் கர்ப்பம் தரித்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். தலைமை அதிகாரி அந்த தகவலை ரசிக்கவில்லை. அவர் சோய் மூன்னிடம், ‘உனக்கு குழந்தை பிறந்தா, குழந்தைதான் உனக்கு முக்கியமா இருக்கும். நிறுவனத்தை இரண்டாம்பட்சமாதான் பார்ப்பே.. அப்படி இருக்கையில உன்னால இங்க சரியா வேலை பார்க்க முடியுமா?’ என கேட்டிருக்கிறார். கேள்வி கேட்டவர் ஒரு ஆண்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த கேள்வியை அந்த ஆண் அதிகாரி திரும்ப திரும்ப பல தருணங்களில் கேட்டதாகவும் குறிப்பிடுகிறார் சோய் மூன். ஒரு கட்டத்தில் சோய் மூனின் வேலை வழக்கத்துக்கு மாறாக அதிகரிக்கப்படுகிறது. அதை பற்றி கேள்வி கேட்டதும் சோய் மூனிடம் அர்ப்பணிப்புணர்வு இல்லை என கத்தியிருக்கிறான் தலைமை அதிகாரி. இத்தனை காலம் வேலை பார்த்தும் இப்போது இப்படியொரு கோபம் காட்டப்படுவதை எதிர்பாராத சோய் மூன்னுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியிருக்கிறது. பதட்டம் அதிகரித்து, கண்கள் இருண்டன. மயங்கி விழுந்திருக்கிறார்.

காதல்
காதல்

காதலும் கடந்து போகும்

மருத்துவமனையில் சோய் மூன்னுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பரிசோதனை நடந்திருக்கிறது. சோய் மூன்னுக்கு மன அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கி கர்ப்பச் சிதைவு நேரத் தொடங்கியிருப்பதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அச்சம்பவத்தை நினைவுக் கூரும் சோய் மூன், அது போன்ற பல நிர்பந்தங்கள் கர்ப்பத்தின் காரணமாக பெண்களுக்கு நிறுவனங்களில் சுமத்தப்படுகிறது என்றும் அதனாலேயே பல பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும் இணை தேடவும் தயக்கம் காட்டுகின்றனர் எனவும் சொல்கிறார். இத்தகைய உழைப்பு, சுறுசுறுப்பு போன்ற விஷயங்களால் காதல் மறுப்பு, உறவு மறுப்பு முதலியவை நேர்கின்றன. அவற்றின் மிக முக்கியமான விளைவு அசுரத்தனமாக வளர்ந்து இன்று மொத்த தென் கொரியாவையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

கொரிய நாட்டின் இன்றைய தலைமுறைக்கு ஒரு பெயர் இருக்கிறது. சேம்போ தலைமுறை! சேம்போ என்றால் மூன்று விஷயங்களை தவிர்ப்பது என பொருள். உறவு, திருமணம், குழந்தைகள்! 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 25-லிருந்து 29 வரையிலுமான வயதில் இருக்கும் பெண்களில் 23% பேர் மட்டுமே திருமணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை எல்லாமும் சேர்ந்துதான் தென் கொரிய அரசை பல திட்டங்களை முன்னெடுக்க வைத்திருக்கிறது. குழந்தை வளர்ப்புக்கென ஆகும் செலவை குறைப்பதாக உறுதியளித்திருக்கிறது அரசு. மக்களின் தனி வாழ்க்கைகளின் தரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை உருவாக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. நாட்டில் இருக்கும் பொருளாதார சூழலும் திருமணம் மற்றும் காதலுறவுகள் பக்கம் இளைஞர்கள் செல்வதற்கு தடையாக இருக்கும் உண்மையை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இன்னொரு முக்கியமான முயற்சியையும் கொரிய அரசு முன்னெடுத்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் காதல் பற்றிய பாடத்திட்டத்தை அரசு கொண்டு வந்திருக்கிறது. வேலையே கிடைக்காத சூழல் இருக்கும் நிலையில், காதலுக்கு என ஒதுக்க நேரமோ மனநிலையோ இல்லை என்பதே கொரிய இளைஞர்களின் பதிலாக இருக்கிறது.

மனிதத்தின் மகோன்னதம்

மனித இனத்தின் உருவாக்கங்களிலேயே மிக அழகானது காதல். மனிதம் கொண்டிருக்கும் அத்தனை அசிங்கங்களையும் தாண்டி நம்மை இயங்க வைக்கும் காரணம் காதல். ஒரு பெண்ணை, ஒரு ஆண் என் அகங்காரம் கடந்து நான் சந்திக்கும் புள்ளி காதல். இன்னொரு உயிரை சாதியற்று, மதமற்று, இன மொழி பேதங்களற்று சக தோழமையாக வாழ்க்கையை பகிர்ந்தளிக்க வைக்கும் அச்சாரம் காதல். மனிதத்தின் மகோன்னதத்தை கூட நாம் தொலைக்கும் கட்டத்தை அடைந்திருக்கிறோம். கொரியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே காதலையும் உறவையும் மறுக்க பல விஷயங்களை கண்டறிந்து வைத்திருக்கிறோம். காதலை மறுத்து உழைப்புக் கருவியாக மட்டுமே நம்மை பார்க்கும் ஒரு சமூகத்தை படைத்து விட்டோம். அது நம் நகக்கண் வழியாக கை கால் உடல் அனைத்தையும் இரும்பாக்கி இறுதியில் இதயத்தையும் இரும்பாக்க முயன்று கொண்டிருக்கிறது.

தென்கொரிய ஆண்களுக்கு பயமுறுத்தும் கேள்வி ஒன்று இருக்கிறது. ‘எப்போது கல்யாணம்?’. ஆண், பெண் என்ற பேதமின்றில் 30 வயதை நெருங்க தொடங்கியதுமே குடும்பத்திலிருந்து வரும் கேள்வி. இக்கேள்வி அச்சுறுத்துவதாக சொல்கிறார்கள் தென்கொரிய இளைஞர்கள். மிகப்பெரும் மன அழுத்தத்தை கேள்வி கொடுப்பதாக சொல்கிறார்கள். ஆண்கள் பெண்களை கண்டால் பயப்படுகின்றனர். பெண்கள் ஆண்களே சுமையென கருதுகிறார்கள். திருமணம் செய்து கொள்வதும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் அவசியமில்லாத விஷயங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. அடிப்படையான காரணம் ஒன்று இருக்கிறது. இணை தேடி திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு குழந்தையை வளர்ப்பது என்பதெல்லாம் மிகப் பெரும் பொருளாதார சுமை என்ற கருத்துக்கு இன்றைய தலைமுறை வந்துவிட்டது. அலுவலகங்களே கதி என்று கிடைக்கும் வாழ்க்கைமுறையில் தனி வாழ்க்கை என யோசிப்பதற்கு வாய்ப்பே இல்லை என நினைக்கிறார்கள்.

தென்கொரியா
தென்கொரியா

ஒவ்வொரு தென் கொரியனும் அமெரிக்கனை விட 250 மணி நேரங்கள் அதிகம் வேலை வாங்கப்படுகிறான். ஜெர்மானியனை விட 424 மணி நேரங்கள் அதிகம் வேலை வாங்கப்படுகிறான். வேலையில்லா திண்டாட்டமும் குறைவான ஊதியமும் யதார்த்த வாழ்விலிருந்து மனிதர்களை விலக்கி வைத்திருக்கிறது. 68% தென் கொரியர்கள் அவர்களின் வேலை வாழ்க்கையையே முக்கியமென கருதுகிறார்கள். 47% மேலான இளைஞர்கள் பொருளாதார சுமைகளை பற்றி கவலைப்படுகிறார்கள். அரசாங்கமும் குழந்தைப்பேறுக்கான உதவித் திட்டங்கள் பலவற்றை அறிவித்து பார்த்தது. திருமணம், உறவு போன்றவற்றால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைப்பதற்கான பொருளாதார உதவித் திட்டங்களையும் கொண்டு வந்தது. எந்த பலனும் இல்லை. இளைஞர்களிடம் உறவுக்கான தேவையைக் காட்டிலும் அது கொடுக்கும் பயமே அதிகமாக இருக்கிறது.

தென் கொரியா உலகின் ஏதோவொரு மூலையில் இருக்கிறது என நாம் பொருட்படுத்தாமல் இருந்துவிட முடியாது. தென் கொரியாவை போல் வளர்ச்சியையும் வல்லரசுக் கனவையும் கொண்டிருக்கும் எல்லா நாடுகளிலும் தென் கொரியாவின் நிலை வரும் சாத்தியங்கள் அதிகம். சமூகவியல் ஆய்வாளர்கள் இளைஞர்களிடம் காணப்படும் காதலை மறுக்கும் நிலையை பற்றி சொல்கையில், சமூக அமைப்புகளும் நிறுவனங்களும் பராமரிக்கப்படுவதில்லை என்கின்றனர். ஒரு நாட்டில் ஏற்படும் வளர்ச்சி அந்த நாட்டின் மக்களை புறக்கணித்து நிகழ்வதாக இருக்கக் கூடாது. அப்படி அது நேர்கிறது எனில், அந்த நாட்டின் அரசு மக்களுக்கு வேலை பார்க்கவில்லை என்று அர்த்தம். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் பணக்காரர்களின் நலனுக்கு மட்டுமே வேலை செய்வதாக புரிந்து கொள்ள வேண்டும்.

தென்கொரியா
தென்கொரியா

ஒரு இளைஞன் இயற்கையின் அடிப்படையான காதலையே மறுக்கும் நிலைக்கு செல்கிறான் எனில், அவன் வசிக்கும் நாட்டின் அரசு அவனுக்காக இயங்கவில்லை என பொருள். அவனுடைய இயல்பை அந்த அரசு நசுக்குகிறது என அர்த்தம். மாறாக அந்த அரசு அவனுடைய பொருளாதாரச் சுமையை அகற்றியிருக்க வேண்டும். வேலையை பற்றிய பதற்றம் இல்லாமலாக்கும் வகையில் வேலையை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை கருதி நிர்ணயித்திருக்க வேண்டும். குழந்தைப்பேறு, காதல் போன்ற விஷயங்களில் தலையிடும் அளவுக்கு செயல்படும் நிறுவனங்களை ஒடுக்கியிருக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் சட்டவழிகளை உருவாக்கி இருக்க வேண்டும்.

தேஜா வூ  உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? - `எங்கேயோ பார்த்த மயக்கம்!’ : மர்மங்களின் கதை | பகுதி-9

இயல்பான காதலை கண்டடைய நம் பொருளாதாரச் சூழல் தடையாக இருக்கிறதெனில், அந்த பொருளாதாரச் சூழலை புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் தனி மனித வாழ்க்கையைக்கு மனிதமே அடிப்படை. பொருளாதாரம் அல்ல. மனிதத்துக்கு காதலே அடிப்படை. காதலை புறக்கணிக்க சொல்லும் அரசியலும் பொருளாதாரமும் சமூகமும் மனிதத்துக்கு விரோதமானது. அவற்றை நாம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்பதே மனிதப் பரிணாம வரலாறு நமக்கு வைக்கும் கோரிக்கை!

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு