Published:Updated:

Central Square: ரூ.34 கோடி திட்டம்; அருகில் பராமரிப்பின்றிக் கிடக்கும் சென்னையின் அடையாளச் சின்னம்!

மூர் மார்க்கெட் மினியேச்சர் ( ந.கார்த்திக் )

கடந்த காலத்தின் வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவத்தை இப்படியான நினைவுச் சின்னங்கள் வழியாகத்தான் நாம் இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப் போகிறோமா?

Central Square: ரூ.34 கோடி திட்டம்; அருகில் பராமரிப்பின்றிக் கிடக்கும் சென்னையின் அடையாளச் சின்னம்!

கடந்த காலத்தின் வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவத்தை இப்படியான நினைவுச் சின்னங்கள் வழியாகத்தான் நாம் இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப் போகிறோமா?

Published:Updated:
மூர் மார்க்கெட் மினியேச்சர் ( ந.கார்த்திக் )
சென்னை சென்ட்ரல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போக்குவரத்து ஒருங்கிணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30 மார்ச்) திறந்துவைத்தார்.
சென்னை மத்திய சதுக்கம்
சென்னை மத்திய சதுக்கம்
வி.ஶ்ரீனிவாசுலு

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத் தரம் வாய்ந்த பன்முகப் போக்குவரத்து ஒருங்கிணைப்புத் திட்டமான மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் ரூ.34.22 கோடி மதிப்பீட்டில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை மத்திய சதுக்கம்
சென்னை மத்திய சதுக்கம்
வி.ஶ்ரீனிவாசுலு

நடந்து செல்பவர்களின் பாதுகாப்புக்காகவும், வசதிக்காகவும் திறந்த வெளிப்பகுதி, மரங்கள், புல்வெளி மற்றும் அழகிய தாவரங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள், நடைபாதையில் டென்சைல் கானோபி, பர்கோலாஸ் மற்றும் கிரைனைட் இருக்கைகள், நடைபாதையை ஒட்டி வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் பாதைகளும், கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகள் சுமார் ரூ. 12.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பகுதியில் பல்லவன் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்குக் குறுக்கே பாதசாரிகள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அனைத்து வகையான பயனாளிகளும் பயன்பெறுமாறு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளும் நிறுவப்பட்டுள்ளன. ஏற்கெனவே பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள சுரங்க நடைபாதையுடன் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, பழைய சுரங்கப்பாதையும் மேம்படுத்தப்பட்டு, மின்விளக்குகள் மற்றும் ஒளிரும் வழிகாட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சுரங்க நடைபாதை சுமார் ரூ. 21.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய சதுக்கம்
சென்னை மத்திய சதுக்கம்
வி.ஶ்ரீனிவாசுலு
இப்படியாக ரூ.34.22 கோடி மதிப்பீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தின் எல்லைக்குள் கவனிப்பாரற்றுச் சிதிலமடைந்து கிடக்கிறது சென்னையின் கடந்த காலம் செல்லும் நினைவுச் சின்னம் ஒன்று - கடந்த நூற்றாண்டில் சென்னையின் முதன்மை அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய, தீக்கிரையாகிப் போன மூர் மார்க்கெட்டின் மினியேச்சர் வடிவம்தான் அது!
மூர் மார்க்கெட் மினியேச்சர்
மூர் மார்க்கெட் மினியேச்சர்
ந.கார்த்திக்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி, பக்கிங்ஹாம் கால்வாயின் மறுகரையில் மூர் மார்க்கெட் என்ற கனவுலகம் அந்தக் காலத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கே அம்மா, அப்பாவைத் தவிர எல்லாமும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டதுண்டு.

பாண்டி பஜார், பர்மா பஜார், ரட்டன் பஜார், ஈவ்னிங் பஜார், சைனா பஜார், செங்கம் பஜார், ஜாம் பஜார் - பஜார்களின் நகரமான மெட்ராஸில் இந்தப் பஜார்களுக்கெல்லாம் முன்னோடி மூர் மார்க்கெட். சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்த ஜார்ஜ் மூர், 1898 ஏப்ரல் 29 அன்று அவர் பெயரால் அமையவிருந்த இந்த மார்கெட்டுக்கு அடிக்கல் நாட்டினார். அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் கட்டடக் கலையின் பிரதான வடிவமாக விளங்கிய இந்தோ சராசனிக் பாணியில், 40 ஆயிரம் சதுர அடிகளில் பிரமாண்டமாக உருவானது சந்தை. 1900 நவம்பர் 30 அன்று அப்போதைய கவர்னர் சர் ஆர்தர் ஹேவ்லாக் இதைத் திறந்து வைத்தார்.

மூர் மார்க்கெட்
மூர் மார்க்கெட்

“நாற்கோண வடிவத்தில் அமைந்திருக்கும் இந்தக் கட்டடம், மேலே மூடப்பட்டு நீண்ட வரிசைத் தூண்கள் உடைய நடைபாதைகளைக் கொண்டிருக்கிறது. நான்கு மூலைகளிலும் கோபுரங்களை போன்ற அமைப்புகள் அமைந்திருந்தன. நுழைவாயில்களில் கருங்கற்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச்சுவர்களில் இடம்விட்டு இடமாய், கோயில் கலசங்களின் வடிவில் கலசங்களும் இருந்தன. இந்த வளாகத்தின் மையத்தில் திறந்தவெளி இருக்கிறது. மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த வளாகமும் நல்ல காற்றோட்டம் பெற்று, தூய்மையான நிலையில் இருக்கிறது” என்று மூர் மார்க்கெட் பற்றிய ஆரம்ப காலக் குறிப்புகள் சொல்கின்றன.

பழைய, புதிய புத்தகங்கள்; வளர்ப்புப் பிராணிகள், பேனா, கைக்கடிகாரம், கிராமஃபோன் இசைத்தட்டுகள், சினிமா புரொஜெக்டர்கள், பழங்காலக் கலைப் பொருள்கள், பல்வேறு நாடுகளின் நாணயங்கள், பொம்மைகள், துணிகள், சாமான்கள் மற்றும் ரிப்பேர் கடைகள் என காண்போரைத் திகைக்கச் செய்யும் அளவுக்கு பொருள்களைத் தன்னகத்தே கொண்டு ஒரு நிரந்தர அதிசயமாக மூர் மார்க்கெட் இயங்கிக் கொண்டிருந்தது.

மெட்ராஸின் அன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தீவிர வாசகர்களின் புத்தகத் தேவையை மூர் மார்க்கெட் நிறைவேற்றியிருக்கிறது; பல்துறை புத்தகங்கள் குறித்த புத்தக வியாபாரிகளின் அறிவு பிரமிக்கத்தக்கதாய் இருந்திருக்கிறது; அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பைக்கூட முடித்திராதவர்கள் என்பது மேலும் பிரமிப்பைத் தரவல்லது.

மூர் மார்க்கெட்
மூர் மார்க்கெட்

காலப்போக்கில் மெட்ராஸின் முதன்மைச் சுற்றுலாத் தளமாக மூர் மார்க்கெட் மாறியது. மெட்ராஸுக்கு வரும் எவரும், ஒருவித கொண்டாட்ட மனநிலையைத் தரும் மூர் மார்க்கெட்டைப் பார்வையிடாமல் திரும்பிச் செல்ல முடியாத நிலை உருவானது.

மெட்ராஸ் விரிவடையத் தொடங்கியபோது இங்கும் இடப்பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. மெட்ராஸின் நுரையீரல் என்று போற்றப்பட்ட இந்தப் பூங்கா, சிறிய பகுதியாக சுருங்கிப்போனது. இந்தப் பின்னணியில்தான் தென்னக ரயில்வே சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் விரிவுபடுத்தி, புதிய ரயில் பாதைகளை அமைத்து நவீன புறநகர் முனையத்தை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது. இதற்கு நிறைய இடம் தேவைப்பட்ட நிலையில், தென்னக ரயில்வே கைநீட்டிய இடம் மூர் மார்க்கெட் வளாகம்.

தென்னக ரயில்வேயின் இந்தக் கோரிக்கை மூர் மார்க்கெட் வளாக வியாபாரிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டு பண்ணியது. சுமார் 800 கடைகளைக் கொண்டு நகரின் முக்கிய வணிக மையமாக இயங்கிவந்த மூர் மார்க்கெட், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக விளங்கியது. இந்தப் பின்னணியில்தான், மூர் மார்க்கெட் வியாபாரிகளோ, மெட்ராஸ்வாசிகளோ எதிர்பாராத நிலையில், அந்தக் கோரம் அரங்கேறியது. ஆம், மூர் மார்க்கெட் பற்றி எரிந்தது.

மூர் மார்க்கெட் எரிந்தது
மூர் மார்க்கெட் எரிந்தது

85 ஆண்டுகால பாரம்பர்யமிக்க, மெட்ராஸ்வாசிகளின் வாழ்வோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துவிட்ட, ஆயிரமாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய மூர் மார்க்கெட் அழிந்தது தாள முடியாத சோகத்தை நகரில் பரவச் செய்தது. அந்தக் காலத்தில் சென்னையின் வரலாற்றில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவங்களில் ஒன்றாக இது மாறியது.

மூர் மார்க்கெட் எரிந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ல் அருகிலிருந்த அல்லிக்குளத்தில் புதிய மூர் மார்க்கெட் வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

கலைநயமும், கம்பீரமும், பாரம்பர்யமும் கூடி நின்ற மூர் மார்க்கெட் கட்டடத்தில், அதன் தடமே இன்றி, தட்டையான ஒரு கட்டடமாக நவீன புறநகர் ரயில் முனையத்துக்கான கட்டடம் உருவாக்கப்பட்டது. பழைய மூர் மார்க்கெட் கட்டடத்தில் அங்கு வியாபாரம் செய்துவந்த மனிதர்களைத் தவிர்த்து, அதன் ஒரே நினைவு எச்சமாக இன்று இருப்பது அந்தக் கட்டிடத்தின் மினியேச்சர் மாடல். இது சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் வாசலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நினைவுச் சின்னத்தின் இன்றைய நிலையோ, எரிந்து அழிந்த பழைய மூர் மார்க்கெட்டின் நிலையைவிட மோசமாக இருக்கிறது. நொடிக்கு நூறு பேர் கடந்து செல்லும் பகுதியின் மையமாக, ஒரு நூற்றாண்டு வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த நினைவுச் சின்னம் பற்றிய சின்னக் குறிப்பு, அறிவிப்புப் பலகை எதுவும் இல்லை. மிகத் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நினைவுச் சின்னம் பராமரிப்பு இல்லாமல், உடைந்து சிதைந்துகொண்டிருக்கிறது. இதன் மேல் செடி, கொடி, சருகுகள் படர்ந்து நிற்க, காலி மதுபாட்டில்கள் சுற்றிலும் உருண்டுகொண்டிருக்கின்றன. பழைய மூர் மார்க்கெட் தீக்கிரையாகி எரிந்து அழிந்த சோக வரலாற்றின் நினைவாக நிறுவப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தின் இன்றைய நிலை, நம்முடைய கடந்தகாலம் குறித்த அக்கறையின்மையை அப்பட்டமாக முகத்தில் அறைகிறது. கடந்த காலத்தின் வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவத்தை இப்படியான நினைவுச் சின்னங்கள் வழியாகத் தான் நாம் இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப் போகிறோமா?

அல்லிக்குளம் மூர் மார்க்கெட் வளாகத்தின் பராமரிப்பும் மிக மோசமான நிலையில் உள்ளது. பழைய மூர் மார்க்கெட் கட்டடம் தீக்கிரையானது அழிக்க முடியாத சோக வரலாறு, ஆனால் அதிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே அல்லிக்குளம் மூர் மார்க்கெட் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகளின் இன்றைய நிலை நமக்கு உணர்த்துகிறது. அதன் படங்கள் இங்கே...

மத்திய சதுக்கத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எழில்மிகு சென்னையில் காணும் இடமெல்லாம் கண்கவர் இடங்களாக்குவோம்!” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னையைச் சிங்காரமாக்கும் திட்டங்கள் இந்த மாநகரின் கடந்த கால நினைவுகளையும் பேணிப் பாதுகாப்பதாய் அமையவேண்டும்; மத்திய சதுக்க எல்லைக்குள் இருந்து கவனிப்புக்குள் வரமால் போன மூர் மார்க்கெட் நினைவுச் சின்னம் போய் தவறிப் போய்விடக் கூடாது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism