Published:Updated:

மருத்துவமனை சூழலால் அவதிக்குள்ளாகும் ஊத்தங்கரை நோயாளிகள்... மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு?!

மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பல. இவை எதையும் சுற்றியுள்ளோர் பின்பற்றாத நிலையில் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது ஊத்தங்கரை அரசு மருத்துவமனை.

Hospital - Bus stop
Hospital - Bus stop

பேருந்து நிறுத்தம், இலவச வாகன நிறுத்தம், பொதுக்கழிப்பிடம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டத் திடல் என ஓர் அரசு மருத்துவமனை பல்வேறு வசதிகளுக்காக பயன்படுமாயின் அதன் சூழல் எப்படிப்பட்டதாக இருக்கும்?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் நிலைதான் அது. தினசரி 1000 முதல் 1200 நோயாளிகள் சிகிச்சை பெறும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவமனை இது. மருத்துவமனையைச் சுற்றிய இடங்களில் அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது; அசுத்தப்படுத்தக்கூடாது என மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பல. இவை எதையும் சுற்றியுள்ளோர் பின்பற்றாத நிலையில் பரிதாபத்துக்குரியதாக அவதிப்படுகிறது ஊத்தங்கரை அரசு மருத்துவமனை.

Hospital
Hospital

மருத்துவமனையின் நுழைவாயில் முன்பாகவே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. பேருந்து நிறுத்தம் மருத்துவமனைக்கு அருகிலேயே இருந்தாலும், நுழைவாயில் முன்பாகவே நிறுத்தப்படுகின்றன. அப்பேருந்துகள் எழுப்பும் இரைச்சல் ஒலிமாசுபாடாக அமைகிறது. பற்றாக்குறைக்கு பேருந்து நடத்துனரின்‌ கூவல் ஒலி. அத்துடன் தனியார் ஆம்புலன்ஸ்களும் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலில்தான் தஞ்சமடைந்துள்ளன. இதனால் மருத்துவமனையின் முன்பு எந்த நேரமும் வாகன நெரிசல் காணப்படுகிறது.

கிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது? #DoubtOfCommonMan

அதனால், அவசரமாக அழைத்து வரப்படும் நோயாளிகள் உள்நுழைவதில்கூட சிக்கல் நிலவுகிறது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கும் இதே நிலைதான். மருத்துவமனைக்கு என வாயில் காவலர்கள் கிடையாது. மருத்துவமனையினுள் பலரும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் நோயாளியாகவும் இல்லை, நோயாளியைப் பார்க்க வருபவர்களாகவும் இல்லை, 'பின்பு எதற்காக வருகின்றனர்?' என விசாரித்ததில் அவர்கள், இலவச வாகன நிறுத்தும் இடமாக மருத்துவமனை பகுதிகளையும் பொதுக்கழிப்பிடமாக மருத்துவமனை கழிப்பறையும் பயன்படுத்துவதுதான் காரணம் எனத் தெரியவந்தது.

Bike stand
Bike stand

மருத்துவமனையின் மேற்கு சுற்றுச்சுவரின் வெளிப்புறம், ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ நிறுத்தும் பகுதியில் உள்ள மருத்துவமனை சுவரில்தான் பலரும் சிறுநீர் கழித்துச் செல்கின்றனர். படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம் இந்தச் சுகாதாரச் சீர்கேட்டிற்கு இல்லை. இவையெல்லாம் போதாத குறைக்கு அரசியல் கட்சியினர் நடத்தும் கட்சிப் பொதுக் கூட்டங்கள் அனைத்தும், மருத்துவமனையைச் சுற்றியே நடத்தப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கான அமைதியையும் சுகாதாரத்தையும் இழந்து தவிக்கிறது ஊத்தங்கரை அரசு மருத்துவமனை.

இதுகுறித்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். பெயரைக் குறிப்பிட விரும்பாத அவர், "இங்கு தினமும் 20 முதல் 30 விபத்து நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றனர். நுழைவாயிலின் முன்பாகவே பேருந்துகள் இடைவிடாது நிறுத்தப்படுவதால் விபத்துக்குள்ளானவர்கள் உரிய நேரத்தில் எங்களை வந்தடைவதில் தாமதம் ஏற்படுகிறது. 108 ஆம்புலன்ஸ்களுக்கும் பேருந்துகள் வழி விடுவதில்லை. சரியான நேரத்திற்கு வருவதில் எங்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக வாகனங்கள் எழுப்பும் 'ஹாரன் சத்தம்' நோயாளிகளைப் பெரிதும் பாதிக்கிறது.

Bus stop
Bus stop

கட்சிப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் போது ஒலிப்பெருக்கியின் இரைச்சல் அதிகம் இருக்கும். அது நோயாளிகளை மட்டுமின்றி மருத்துவர்களின் மனநிலையையும் பாதிக்கிறது. எங்களது சிகிச்சைக்கும் இடையூறு அளிப்பதாக உள்ளது." என்றார்.

அவரிடம் “மருத்துவமனை நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லையா ?” எனக் கேட்டோம். "மருத்துவமனை சுற்றுச் சுவர்களில் 'இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்' என்று பலகைகள் வைக்கப்பட்ட போதிலும் யாரும் அதைப் பின்பற்றுவது இல்லை. பேருந்துகளை இங்கு நிறுத்தாதீர்கள் என பேருந்து ஓட்டுநர் நடத்துநரிடத்தில் கூறினால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பிரச்சனைகள் குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர் என பலரிடமும் புகாராக தெரிவித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Vikatan

சிகிச்சைக்காக வந்திருந்த மாணவி ஒருவரிடம் பேசினோம். அவர், "ஆஸ்பத்திரிக்கு உள்ள வந்து வெளில போறது பெரும்பாடா இருக்கு. எப்போ பாத்தாலும் ஏதாவது ஒரு வண்டியோட சத்தம் மாத்தி மாத்திக் கேட்டுகிட்டே இருக்குது! இப்படி இருந்தால் ஹார்ட் அட்டாக் வந்து அட்மிட் ஆனவங்களாம் என்னதான் பண்ணுவாங்க? பேருந்து நிறுத்தத்தை ரவுண்டானாவிற்கு முன்பாகவோ அல்லது வேறு இடத்திற்கோ மாற்றினால் நல்லா இருக்கும்.பொது மக்களின் நலன் கருதி கலெக்டர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி விடைபெற்றார்.

Roundana
Roundana

இதுதொடர்பாக ஊத்தங்கரை அரசுப் போக்குவரத்து கழக டிப்போ மேலாளர் அழகர் கூறியதாவது, "எங்களது டிப்போ கட்டுப்பாட்டில் இயங்கும் பேருந்துகளுக்கு இதுகுறித்து சுற்றறிக்கை‌ அனுப்பியுள்ளோம். அதனால் அங்கு தற்போது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை.'' என்றார்.

ஊத்தங்கரை டிப்போ பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் அங்குதான் நிற்கிறது என பொதுமக்கள் கூறியதைத் தெரிவித்தோம். “அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்துகிறேன். மற்றபடி பிற பேருந்துகள் நிற்பதற்கு நான் எதுவும் செய்யமுடியாது" என்றார்.

இதுதொடர்பாக ஊத்தங்கரை டி.எஸ்.பி யிடம் பேசினோம். "மருத்துவமனை சார்பாக புகார் தெரிவித்த பின்னர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டோம். நாங்கள் இருக்கும்போது பேருந்துகள் நுழைவாயிலின் முன்பு நிறுத்தப்படுவது இல்லை. ஆனால், நாங்கள் அங்கிருந்து சென்ற பின்பு நுழைவாயிலின் முன்பாக பேருந்துகளை நிறுத்திச் செல்கின்றனர். எங்களால் என்னசெய்ய முடியும்? தொடர்ந்து கண்காணிக்கும் அளவிற்கு ஆட்கள் இல்லை. முடிந்ததைச் கண்டிப்பாக செய்கிறோம்" என்று கூறி முடித்துக்கொண்டார்.

Bus stop
Bus stop

இதுதொடர்பாக பேச பலமுறை மாவட்ட ஆட்சியர் பிரபாகரைத் தொடர்பு கொண்டோம். தொடர்புகொள்ள முடியவில்லை. பலரது உயிரைக் காக்கும் மருத்துவமனையின் சூழலை சீர்குலைக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.