Published:Updated:

`அப்போது அவதிப்பட்டோம்; இப்போது 24 மணி நேரமும் குடிநீர்!'‍- அரசை நம்பாமல் சாதித்த கிராமம் #MyVikatan

விகடன் வாசகர்

நீர்நிலைகளைத் தூர்வாருதல், கால்வாய்களைச் சீரமைத்தல் இப்படி அடிப்படை வசதிகளை அரசாங்கத்திடம் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன மக்கள் தாங்களே கட்டமைக்க முடிவு செய்து களத்தில் இறங்கிவிடுகின்றனர்.

எரிச்சி பகுதி
எரிச்சி பகுதி

பொதுமக்களின் சில தொடர் கோரிக்கைகள் அரசாங்கத்தின் செவிகளை எட்டாதபோது பாதிப்புக்கு உள்ளாகும் மக்களே அதற்கான தீர்வை நோக்கி நகரத் தொடங்கி இருக்கின்றனர். நீர்நிலைகளைத் தூர்வாருதல், கால்வாய்களைச் சீரமைத்தல், சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் இப்படி அடிப்படை வசதிகளை அரசாங்கத்திடம் கேட்டுக்கேட்டு அலுத்துப்போன மக்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை தாங்களே கட்டமைக்க முடிவு செய்து களத்தில் இறங்கிவிடுகின்றனர்.

எரிச்சி கிராமம்
எரிச்சி கிராமம்

அந்த வகையில் புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் உள்ள எரிச்சி பகுதி கிராமத்து இளைஞர்களும் பொதுமக்களும் தாங்களாகவே நிதி திரட்டி தங்களின் குடிதண்ணீர் தேவைக்கான ஆழ்குழாய் அமைத்து தீர்வு கண்டு அசத்தி இருக்கின்றனர். இதுதொடர்பாக எரிச்சி - பொய்யப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவரும் தற்போது சவுதி அரேபியா - ரியாத்தில் பணிபுரிந்து வருபவருமான செ.முத்துக்குமார் என்பவரை தொடர்புகொண்டு பேசினேன்.

செ.முத்துக்குமார்
செ.முத்துக்குமார்

``அறந்தாங்கி தாலுகா எரிச்சி, சிதம்பரவிடுதி, பொய்யப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களும் அடுத்தடுத்து உள்ளன. இங்கு 510 குடும்பங்கள் உள்ளன. 2,500 பேர் வசிக்கிறோம். மழை பொய்த்துப்போனதால் இங்குள்ள நீர் நிலைகள் பல வருடங்களாக வறண்டுபோய்க் கிடக்கின்றன. இதனால் குடிப்பதற்கும் மற்றும் அடிப்படை வசதிகளுக்குக்கூட தண்ணீர் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டோம். கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின. இதைப் போக்குவதற்காக எங்களுடைய இந்த மூன்று கிராமத்து மக்களும் அரசாங்கத்துக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர்ந்து மனுமேல் மனு அளித்து வந்தோம். ஆனால், அரசாங்கம் எங்களின் குடிநீர்ப் பிரச்னைக்கு எவ்விதத் தீர்வும் காணவில்லை.

ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். எனவே, எங்கள் மூன்று கிராமத்து பொதுமக்கள், இளைஞர்கள், வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் ஆகியோர் ஒன்றுகூடி கலந்தாலோசித்து உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது என முடிவு செய்தோம்.

எரிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி
எரிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி

இதற்காக உடனடியாக ஒரு வாட்ஸ்அப் குழுவை அமைத்தோம். இதில் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், ரியாத், கத்தார், மஸ்கட் போன்ற வெளிநாடுகளில் பணிபுரியும் இந்த மூன்று கிராமத்து இளைஞர்களிடம் நிதி திரட்டினோம். அவர்களும் கிராம மக்களின் குடிநீர் பிரச்னையையும் அவர்களின் சிரமங்களையும் உணர்ந்து ஆர்வமுடன் நிதி உதவி செய்தார்கள். இதில் மூன்று கிராமங்களைச் சேராத வேறு ஊர்க்காரர்கள் ஒரு சிலரும் மனமுவந்து நிதி உதவி செய்திருக்கிறார்கள். இந்த மூன்று கிராமங்களில் வசித்து வருபவர்களும் தங்களால் இயன்ற நிதி உதவியைச் செய்தனர். அதில் மொத்தம் 5.71 லட்சம் ரூபாய் வசூல் ஆனது. அந்தத் தொகையில் எரிச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி கோயில் அருகே 500 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைக்க முடிவு செய்தோம். ஆழ்குழாய் அருகிலேயே பெரிய நீர்த்தொட்டியும் அமைத்துள்ளோம். அங்கு வந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை 24 மணி நேரமும் எடுத்துச் செல்கின்றனர்.

ஆழ்குழாயின் மூலம் எங்கள் கிராமங்களுக்குப் போதுமான தண்ணீர் வசதி கிடைத்துள்ளது. இதனால் எங்களின் அடிப்படைத் தேவையான குடிநீர்ப் பிரச்னைக்கு நாங்கள் சொந்தமாகவே தீர்வு கண்டுள்ளோம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று இக்கோயில் அருகில்தான் வாரச் சந்தை நடைபெறுகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கிறது.

எரிச்சி கிராமம்
எரிச்சி கிராமம்

இந்த ஆழ்குழாய் அமைக்கும் பணிக்கு நிதி உதவி அளித்தவர்களின் பெயர்கள் தாங்கிய கல்வெட்டையும் இதன் அருகிலேயே அமைத்துள்ளோம். இதற்கான மின் கட்டணத்தைக்கூட இந்த மூன்று கிராமங்களிலிருந்துதான் செலுத்தி வருகிறோம்.

நம்முடைய எல்லாப் பிரச்னைகளையும் அரசாங்கம்தான் தீர்க்கும் என்று நம்பிக் காத்துக்கொண்டிருக்காமல், நம்முடைய கூட்டு முயற்சியால் சில முக்கியப் பிரச்னைகளுக்கு நாமாகவே தீர்வு காணமுடியும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். எங்களுடைய இந்தப் பணியைப் பலரும் பாராட்டுகிறார்கள். எங்களுக்கு இது பெருமையாக இருக்கிறது” என்கிறார் முத்துக்குமார்.

முன்மாதிரியாய் வாழும் இந்த மூன்று கிராம மக்களின் பணி மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

- பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/