திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுசெய்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. இந்து சமய அறநிலையைத் துறை தொடங்கி பள்ளிக்கல்வித் துறை வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன; ஏராளமான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில், அண்மையில் தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பல்வேறு தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டைக் குவித்த இந்தத் திட்டத்திற்கான முதற்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் பயிலும் நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகளைப் பொறுத்தவரை காலை உணவு உண்டுவிட்டு அவர்கள் பள்ளிக்கு வரும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரின் வீட்டுப் பிள்ளைகளுக்கு அன்றாடம் காலை உணவு என்பது கனவாகவே இருக்கிறதென கணக்கெடுப்பு சொல்கிறது.
கட்டிட வேலை செய்வோர் காலை 6 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களால் பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுத்துவிட்டுச் செல்ல முடியாது. அது போலவே விவசாயக் கூலிகளாக உள்ள பெற்றோர்களும் அதிகாலையிலேயே வயல் வேலைகளுக்குச் சென்றுவிடுவதால் வீடுகளில் சமையல் இல்லை. வீட்டில் இன்னொரு மூத்த குழந்தை இருந்தால் சில வீடுகளில் சமைக்கும் பொறுப்பு அக்குழந்தைக்கு அளிக்கப்படுகிறது.
துப்புரவு தொழிலாளிகளின் வீடுகளிலும் காலை சமையல் கிடையாது. அவர்களும் அதிகாலையில் பணிக்குச் சென்றுவிடுவார்கள். அல்லது இரவுப் பணி முடிந்து காலையில்தான் வருவார்கள். அவர்களாலும் சமைக்க இயலாது. இவை அல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வேலைக்குச் செல்பவர்கள் உண்டு. கல்யாண வீடுகளில் சமையல் வேலைக்குச் செல்பவர்கள், நூறு நாள் திட்டத்தில் வேலைக்குச் செல்பவர்கள் என பலருக்கு காலை சமையல் செய்ய முடியாத பணிச்சூழல் என்பதே யதார்த்தம். அப்படியே அவசரம் அவசரமாக சமையல் செய்தாலும் பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்வதும் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் `எமிஸ்' செயலி மூலமாக அன்றாடம் திரட்டித் தந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் கீழ்க்கண்ட விவரங்கள் கிடைத்தன. தமிழ்நாட்டில் 9 – 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 57.21% சதவிகித மாணவர்கள் மட்டுமே காலை உணவு உட்கொண்டபின் பள்ளிக்கு வருகிறார்கள் என்கிற விவரம் அரசுக்குக் கிடைத்தது. சில நாட்கள் மட்டும் காலை உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை 29.51% ஆக இருக்கிறது. இந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து பார்தததில் உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள எடை உயர விகித குறியீட்டு (BMI Index) அளவைவிட 6, 10, 15 மற்றும் 19 வயதில் உள்ள குழந்தைகளில் ஏறத்தாழ 75% மாணவர்கள் குறைவான அளவைக் கொண்டிருக்கிறார்கள். மேலும் 15 வயது குழந்தைகளை எடுத்துக்கொண்டால் நகர்ப்புறத்தில் வாழும் குழந்தைகள் ஓரளவுக்கு கிராமப்புற குழந்தைகளைவிட சற்று முன்னேறிய நிலையில் உள்ளனர் என்கிற உண்மையும் புலப்படுகிறது. இதற்காக மொத்தமுள்ள 52, 36, 930 மாணவர்களில் 45,85, 535 மாணவர்களிடம், அதாவது 87.56% மாணவர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

காலை உணவு உண்ணாத குழந்தைகள் பள்ளிகளில் காலைக் கூடுகையின்போது மயக்கம் போட்டு விழுவது அடிக்கடி நிகழ்வதுண்டு. காலை உணவு உட்கொள்ளாததால், உடல் சோர்வும் மனச்சோர்வும் ஏற்பட்டு பிள்ளைகள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இது அக்குழந்தையின் கற்கும் திறனையும் கல்வியையும் பாதிக்கும். ஆகவேதான் முதற்கட்டமாக ஆரம்பப்பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. மதிய உணவுத் திட்டம் எவ்வாறு வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததோ அதுபோலவே காலை உணவுத் திட்டமும் வரலாற்றில் இடம்பிடிக்கும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் சாத்தியப்பட்டது அரசுப் பள்ளி ஆசிரியர்களால் மட்டுமே. அவர்கள் மாணவர்களிடமிருந்து திரட்டித் தந்த தகவல்களின் அடிப்படையில்தான் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. எனவே மாணவர்களின் கல்விப் பாதையில் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கப் போகும் இத்திட்டத்திற்கு அடித்தளமிட்டவர்கள் ஆசிரியர்களே. ஆசிரியர்களின் இப்பணி மகத்தானது.
காலை உணவுத் திட்டம் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் திரட்டித் தந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையிலேயே அரசு சில முடிவுகளை எடுக்க முடிந்திருக்கிறது.

7.5% இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் வழங்குவதாக அரசு எடுத்த முடிவுக்குப் பின்னும் ஆசிரியர்களின் அரும்பணியே பின்னால் இருக்கிறது. எத்தனை சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என முடிவு செய்வதில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை ஆசிரியர்கள் `எமிஸ்' செயலி மூலம் அனுப்புவதால் மட்டுமே இத்தனை சதவிகிதம் தேவைப்படுகிறது என அரசால் முடிவுக்கு வர முடிந்தது. அதுபோலவே அரசுப் பள்ளியில் படித்த பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வியின்போது மாதம் 1,000 வழங்கும் திட்டமும் ஆசிரியர்கள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து உயர்கல்வி சேரும் வரையில் இவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்றார்கள் என்பதற்கு ஆதாரம் ஆசிரியர்கள் அவர்கள் குறித்து அனுப்பும் தகவல்கள்தான்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களில் தமிழ்வழியில் பயின்ற 20% பேருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தின் பயனாளிகளுக்கும் ஆசிரியர்கள் அனுப்பிய தகவல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சிலிங்கின்போது 2 லட்சம் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றனர். இதற்கு முற்றிலும் உதவியது எமிஸ் மூலம் ஆசிரியர்கள் தந்த தகவல்கள்தாம்.
ஏப்ரல் 11 அன்று சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில் உரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அவற்றுள் முக்கியமான அறிவிப்பாக பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சரிசெய்வதற்காகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதற்கெனவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு வருவதற்கும் ஆசிரியர்கள் அன்றாடம் அனுப்பிய தகவல்களே காரணமாக இருந்தன.
பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவைப்பது என்கிற திட்டத்தின் கீழ் பள்ளியில் இருந்து இடைநின்ற குழந்தைகள் குறித்த விவரங்களை அரசுக்கு ஆசிரியர்களே திரட்டி அளித்தார்கள். இதன் மூலம் எந்தக் குழந்தையும் பள்ளிப் படிப்பை பாதியில் விடமுடியாத நிலை உண்டானது. இத்திட்டத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனிப்பட்ட எண் நிர்ணயிக்கப்பட்டு அதன்மூலம் அக்குழந்தை வேறு எந்தப் பள்ளிக்குச் சென்றிருக்கிறது என்கிற தகவலை அரசு அறிந்துகொள்ள முடியும். அப்படி அக்குழந்தை எந்தப் பள்ளியிலும் சேரவில்லை எனில் அக்குழந்தை பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டதை அறிந்து அக்குழந்தையை மீண்டும் பள்ளிக்கு வரவைக்கவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இதில் குழந்தைகள் குறித்த விவரங்களை திரட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல், இடைநின்ற குழந்தையின் பெற்றோர்களோடு பேசி மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரவைக்கும் பொறுப்பையும் ஆசிரியர்கள் திறம்பட செய்கின்றனர்.
ஆகவே ஆசிரியர்களின் அயராத உழைப்பின் மூலமே இத்தகைய நல்ல திட்டங்களை தமிழ்நாடு அரசால் செயல்படுத்த முடிந்திருக்கிறது.

வகுப்பறையில் சில குழந்தைகளுக்கு கற்பித்தலோடு சேர்த்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் வேலையை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடு குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.