Published:Updated:

``வீணாகிக் கிடந்த பொதுக்கிணற்றில் தண்ணீர் ததும்புது!"- சாத்தியப்படுத்திய `ஊர் கிணறு' இளைஞர்கள்

``வானில் இருந்து வரும் மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் அதை சேகரிக்க வேண்டும் என்பதே எங்களின் லட்சியமாக உள்ளது"

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

நாமக்கல் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கடும் வறட்சி நிலவி வந்தது. பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்பட்ட நிலையில், ஊர் இளைஞர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து அதற்கு ஒரு தீர்வு ஒன்றைக் கண்டிருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களாகக் கொட்டித்தீர்ந்த கனமழையால் தற்போது அந்த ஊர் பொதுக்கிணறு மழைநீரால் நிரம்பி வழிகிறது. அந்த ஊர் இளைஞர்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை பொது இடம், பள்ளிக்கூடம் ஆகியவற்றில் அமைத்து வருகின்றனர்.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

தற்போது, ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பற்றியும், அதன் செயல்பாடு குறித்தும் `ஊர் கிணறு' நண்பர்களிடம் பேசினோம்.

``எங்கள் ஊரில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் இந்த `ஊர் கிணறு' அமைப்பில் உள்ளோம். ஆரம்பத்தில் எங்கள் பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஒன்று சேர்ந்தோம்.

ஊர் பெரியவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று ஊர் பொதுக்கிணற்றைத் தூர்வாரினோம். ஆரம்பத்தில் எதற்கு இந்த வேண்டாத வேலை எனப் பேசினார்கள். அவர்களில் பலரும் தற்போது எங்களின் குழுவில் உள்ளனர்.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

நல்ல முறையில் ஊர் கிணற்றைத் தூர்வாரியதால், `ஊர் கிணறு' என்ற பெயரே எங்கள் குழுவுக்கு நிலைத்துவிட்டது. எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சமே இருக்கக் கூடாது என்பதற்காக மழைநீர் சேகரிப்பு முறைகளில் பலவற்றைத் தேடிக் கண்டறிந்தோம். இதற்கு முன்னர், தெரு பைப்புகளில் தேவை முடிந்தும் வீணாக ஓடும் தண்ணீரை நிலத்தடிக்குள் சென்றுசேரும் வகையில் ஏற்பாடு செய்தோம். அதேபோல, பண்டிகை மாதங்களில் கோயில்களில் தண்ணீர் வீணாவதைத் தடுத்து, சேமிக்கும் அமைப்பை ஏற்படுத்தினோம். இதற்கு எங்கள் ஊர் மக்களின் ஒத்துழைப்பும் வரவேற்பு இருந்தது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் தேங்கும் மழைநீரைச் சேகரிக்க முடிவு செய்தோம். இந்தப் பகுதியில் மழை பெய்யும்போது மைதானத்தில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கும். இந்த நீரை எவ்வாறு சேகரிப்பது என யோசித்தோம். மைதானத்திலிருந்து 40 அடி தொலைவில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறு ஒன்று இருக்கிறது. மைதானத்தில் உள்ள மழைநீரை இந்த ஆழ்துளைக் கிணற்றினுள் விட வேண்டும் எனத் தோன்றியது. அவ்வாறு செய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என நினைத்தோம். அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து பள்ளியில் உரிய அனுமதி பெற்று அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கினோம்.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

இதற்காக பொக்லைன் ஒன்றை வரவழைத்தோம். மைதானத்தில மழைநீர் தேங்கும் இடத்திலிருந்து ஆழ்துளைக் கிணறு உள்ள இடத்துக்குக் குழி தோண்டி பைப் ஒன்றைப் பதித்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே மைதானத்தில் உள்ள மழைநீர் ஆழ்துளை கிணற்றினுள் இறங்கியது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கிறோம். எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து எங்களுக்கு சில உதவிகளை ஆர்வம் உள்ளவர்கள் செய்து தருகின்றனர். அதேபோல் குழுவில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறோம். வானிலிருந்து வரும் மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் அதைச் சேகரிக்க வேண்டும் என்பதே எங்களின் லட்சியமாக உள்ளது" என்றனர்.