ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

உள்ளூர் போட்டியில் நிராகரிப்பு... சர்வதேசப் போட்டியில் சாதனை!

ஸ்ருதி சித்தாரா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ருதி சித்தாரா

திருநங்கை சமூகத்திலிருந்து முதன்முதலா ‘ரேடியோ ஜாக்கி’ வேலையை தனதாக்கிய, மறைந்த அனன்யா குமாரி அலெக்ஸுக்கு என்னோட வெற்றியை சமர்ப்பணம் செய்யுறேன்.

பல நாட்டுப் போட்டியாளர்களை வென்று `Miss Trans global 2021' என்ற சர்வதேச பட்டத்தை தனதாக்கியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 25 வயது திருநங்கை ஸ்ருதி சித்தாரா. இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் இவர். கேரள அரசின் சமூகநீதித்துறையில் திட்ட உதவியாளராகப் பணியாற்றி வரும் ஸ்ருதி சித்தாரா, அந்த மாநிலத்தில் அரசுப் பணி கிடைக்கப் பெற்ற நான்கு திருநங்கைகளில் ஒருவர்.

“இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க வார்த்தைகளே இல்ல. கொரோனாவால இந்த முறை டிஜிட்டல்லதான் போட்டி நடந்துச்சு. கிட்டத்தட்ட ஆறு மாசமா பல கட்டமா தேர்வு நடந்துச்சு. நேரடிப் போட்டியைவிட இது ரொம்பவே கடினமா இருந்துச்சு. இறுதிச்சுற்றுல ‘இந்தப் பட்டத்துக்கு நான் ஏன் தகுதியானவள்’னு விவரிக்கும் விளக்கப்பேச்சுதான் ரொம்ப சவாலானதா இருந்துச்சு’’ படபடப்புடன் அனுபவத்தை மீட்டெடுத்துப் பேசுகிறார் ஸ்ருதி.

“திருநங்கை சமூகத்திலிருந்து முதன்முதலா ‘ரேடியோ ஜாக்கி’ வேலையை தனதாக்கிய, மறைந்த அனன்யா குமாரி அலெக்ஸுக்கு என்னோட வெற்றியை சமர்ப்பணம் செய்யுறேன். 2020-ல நானும் அனன்யாவும் திருச்சூர்ல ஒரு மாடலிங் போட்டியில கலந்துக்க ஆசைப்பட்டோம் . திருநங்கைன்ற எங்களோட அடையாளத்தைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டோம். எல்லாரும் திரும்பிப் பார்க்குற மாதிரி ஏதாவது சாதிக்கணும்னு அனன்யா என்கிட்ட சொன்னாங்க. போட்டிகள் நடந்துட்டிருந்த இடைப்பட்ட காலத்துல, என்கூடப் பிறக்காத அனன்யா சேச்சியை இழந்துட்டோம்” - குரல் உடைகிறது.

உள்ளூர் போட்டியில் நிராகரிப்பு... சர்வதேசப் போட்டியில் சாதனை!

“என்னுடைய இந்தச் சாதனைக்கு பெரும் ஆதரவா இருந்தது ‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துதான். மென்ட்டாரா இருந்ததோடு, இந்தப் போட்டிக்கு என்னை அறிமுகப்படுத்தி, நான் எப்படிப் பேசணும், நடந்துக்கணும்னு தயார்படுத்தினதும் அவங்கதான். என்னோட எல்லா மாற்றங்கள்லயும், என் உணர்வை மதிச்சு, அதை ஏத்துக்கிட்டு பக்கபலமா இருந்தா என் அம்மா இப்போ என்கூட இல்லாததும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கு” எனும் ஸ்ருதி, தன் சமூகத்தினர் சந்திக்கும் பாலியல் பிரச்னைகளைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

“எங்களுக்கும் மாடலிங் துறையில பாலியல் தொந்தரவுகள் நடக்கத்தான் செய்யுது. நான் அடங்கிப்போற கேரக்டர் கிடையாது. உடனே ரியாக்ட் செய்துடுவேன். அது தெரிஞ்ச யாரும் என்னைத் தொந்தரவு செய்யுறதில்ல. ஆனா, என் தோழிகளுக்கு நடந்துகிட்டேதான் இருக்கு. இந்த நிலை கண்டிப்பா மாறணும்” - ஸ்ருதியின் வேண்டுகோள் உரக்க ஒலிக்கட்டும்.