
140நாள்களாக நிலையென்ன என்று தெரியாமல் இருந்த சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் திரும்பி வந்துவிட்டார். ஜூலை 6-ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர போலீசாரால் மீட்கப்பட்டிருக்கிறார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் சுப.உதயகுமாரனுடன் தொடங்கிய முகிலனின் களப்பயணம் பிறகு ஆற்று மணற்கொள்ளை எதிர்ப்பு, ஸ்ரீவைகுண்டம் அணை விவகாரம் என அடுத்தடுத்த களங்களைக் கண்டது. தமிழகத்தின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதற்கு எதிராக நிச்சயம் முகிலனின் குரல் ஒலிக்கும். இப்படித்தான் அரசுப் பொறியாளராக இருந்த முகிலனின் பயணம் சூழலியல் செயற்பாட்டாளராகப் பரிமாணம் எடுத்தது. காவிரி உரிமை, ஹைட்ரோகார்பன், ஏழு தமிழர் விடுதலை எனத் தொடர்ந்து பல பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது என்று குரல் எழுப்பியபோதுதான் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இடைப்பட்ட காலத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்து, கோரமுகம் எடுத்திருந்தது. பொதுமக்கள் 13 பேர் காவல்துறையால் கண்மூடித்த னமாகச் சுடப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த முகிலன் காவல்துறை திட்டமிட்டே துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தியது என நிரூபிக்கக் களமிறங்கினார். பிப்ரவரி 15-ம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான இரண்டாம்கட்ட ஆவணப்படத்தை, சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டுவிட்டு அன்று இரவு சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் கிளம்பியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் முகிலன் மறுநாள் ஊர் சென்றடைய வில்லை.அதையடுத்து அவர் காணவில்லை என்று அவரின் நண்பர்களும் சக செயற்பாட்டா ளர்களும் கூறத் தொடங்கினார்கள்.

முகிலன் காணாமல் போனதை யடுத்து சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அலட்சிய மாகவே கையாளப்பட்ட நிலையில், செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து ‘முகிலன் மீட்பு இயக்கத்தை’ ஒருங்கிணைத்தார்கள். அவர்கள் சென்னை நீதிமன்றத்தில் பதிவு செய்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இணைகோடாக, மீட்பு இயக்கத்தின் தியாகு மற்றும் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவும் இதில் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். சமூக வலைதளங்களில்கூட #PrayForNesamani களேபரங்களுக்கு இடையேயும் #WhereIsMugilan என்னும் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருந்தது.
முகிலன் காணாமல்போனது எல்லோரையும்விட அவரின் மனைவி பூங்கொடிக்கும், மகன் கார்முகிலுக்கும் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. “ஊருக்கு ஏதாவது பிரச்னைனா இவருதான் முன்னால போய் நிப்பாரு. இவருக்கு ஏதாவது பிரச்னைனா என்னைத் தவிர யாருகிட்டையும் இவருக்குப் பேசத் தெரியாது. என்னோட நம்பர் தவிர அவருக்கு வேற யாருடைய எண்ணும் நினைப்புலேயே இருக்காது” என்று அடிக்கடி சொல்லும் பூங்கொடியும் எப்படியேனும் முகிலனிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்துக்கொண்டிருந்தார். `மதுரையில் ஏழுதமிழர் விடுதலைக்காகச் சிலபேரைச் சந்தித்துப் பேசிவிட்டு அடுத்த கட்டமாக உனது மேல்படிப்புக்கான ஆயத்தங்கள்தான்’ என்று தன்னிடம் வாக்குறுதியளித்துவிட்டுச் சென்றிருந்த தந்தைக்காக மகனும் காத்திருந்தார். எல்லோரும் அவர் இருப்பு குறித்து நம்பிக்கை இழந்துவிட்டிருந்த சூழலில்தான் தற்போது முகிலன் மீண்டும் கிடைத்திருக்கிறார்.

காடுகளில் சுற்றித்திரிந்த சோர்வு மிரண்டிருந்த அவர் கண்களிலும், அயர்ச்சியடைந்திருந்த அவரது உடலிலும், மழிக்கப்படாத அவரது தாடியிலும் தெரிந்தது. எப்போதும் சீரான முழுக்கைச் சட்டையையே அணிந்திருப்பவர் அழுக்குப்படிந்த வெள்ளைச்சட்டையில் காட்சியளித்தார்.
“நீங்கள் முன்பு பார்த்த முகிலன் இல்லை நான். நான் பைத்தியமாகிவிட்டேன். என்னைக் கடத்திச் சென்றவர்கள் என்னைப் பைத்தியமாக்கி விட்டார்கள். காவல்துறைதான் என்னைக் கடத்திச் சென்றது. எங்கே அடைத்து வைத்திருந்தார்கள் எனத் தெரியவில்லை. கண்களைக் கட்டி வைத்திருந்தார்கள். குரல் மட்டும்தான் கேட்டது. `உங்களுக்கு செட்டில் செய்கிறோம். நீங்கள் வெளிநாடு சென்றுவிடுங்கள்’ என்று ஒருவர் மிரட்டினார். நான் பணியவில்லை. எப்படியோ தப்பித்துவந்துவிட்டேன். ஊர் பேர் தெரியாத இடமெல்லாம் சுற்றி திருப்பதி வந்து சேர்ந்தேன். அங்கே ரயில் முன்பு அமர்ந்து மோடிக்கு எதிராக, கூடங்குளம் உலைக்கு எதிராக முழக்கம் வைத்ததால் ரயில்வே போலீசார் என்னைப் பிடித்தார்கள்” என்கிறார்.
கண்டுபிடிக்கப்பட்ட முகிலன் மறுநாளே அவர்மீதான பாலியல் புகாரின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். புகார் கொடுத்தவர் அவரோடு பல போராட்டக்களங்களை ஒன்றாக இணைந்து சந்தித்த பெண். முகிலன்மீது கடந்த ஜனவரி இறுதியிலிருந்தே தங்களது கூட்டியக்கத்தில் அவர் புகார் சொன்னதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரியில் முகிலனுடன் இந்த விவகாரம் பேசித் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில்தான் அவர் மாயமானார். இதற்கடுத்த காலகட்டங்களில்தான் குற்றம்சாட்டிய பெண் அவர்மீது காவல்துறையில் பாலியல் புகாரும் கொடுத்துள்ளார்.
முகிலன் கிடைத்ததற்கு ஆசுவாசம் கொள்ளும் அதே சூழலில் இந்தப் புகார் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முகிலனும் அந்தப் பெண்ணும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடுதான் உறவில் இருந்தார்கள் என்று களத்தில் இருந்த தரப்பினர்கள் கூறுகிறார்கள். இல்லை, ``முகிலனுக்கு எதிராக வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்டவர்தான் அந்தப் பெண்.’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தன்மீது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட வழக்கு என்பதைத் தவிர முகிலனிடமிருந்து இதுதொடர்பாக வேறு விளக்கங்கள் கிடைக்கவில்லை. போராட்டக்களத்துக்கு வரும் பெண்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கிடையே இதுபோன்ற புகார்களை மறுதலித்துக் கடக்க முடியாது. போராட்ட இயக்கங்களும் தங்களோடு பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்குத் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்தியிருக்கிறது.
``என் கணவர் நல்லவர் என்பதை நானே சொல்லிக்கொண்டிருக்க முடியாது! நீங்க எப்படியாச்சும் வெளியவந்து இது பொய்னு நிரூபிங்கன்னு சொல்லிட்டேன்” என்கிறார் பூங்கொடி. முகிலன் அறத்தோடு புகார்களை எதிர்கொள்வார் என்றே நம்புவோம்.