Published:Updated:

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க கையிலெடுக்கும் கிராமக் கோயில் பிரசாரம்!

அன்பழகன் படத்திறப்பு விழாவில்...
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பழகன் படத்திறப்பு விழாவில்...

‘‘கட்சியை வளர்க்க என்ன செய்யப்போகிறார்களாம்?’’

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க கையிலெடுக்கும் கிராமக் கோயில் பிரசாரம்!

‘‘கட்சியை வளர்க்க என்ன செய்யப்போகிறார்களாம்?’’

Published:Updated:
அன்பழகன் படத்திறப்பு விழாவில்...
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பழகன் படத்திறப்பு விழாவில்...
லுவலகத்துக்குள் நுழையும்போது வழக்கமாக நமக்கு கைகொடுக்கும் கழுகார், முன்னெச்சரிக்கையோடு கையெடுத்துக் கும்பிட்டவாறு உள்ளே நுழைந்தார். அவருக்கு ‘சானிடைசர்’ கொடுத்து கைகளைச் சுத்தம் செய்யச் சொல்லிவிட்டு, சூடாக சுக்குமல்லிக் காபியைக் கொடுத்தோம்.

அதை அவர் குடிக்க ஆரம்பித்ததும், ‘‘கொரோனா பீதியில் இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள்போலிருக்கிறதே?’’ என்று கேட்டோம். பதில் சொல்லத் தொடங்கினார் கழுகார்...

மிஸ்டர் கழுகு:  பா.ஜ.க கையிலெடுக்கும் கிராமக் கோயில் பிரசாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஒரு மாதத்துக்கும்மேலாக சென்னை உள்ளிட்ட இடங்களில் ‘ஷாஹீன் பாக்’ பாணியிலான தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மார்ச் 16 அன்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனா தாக்கம் இருப்பதால், தொடர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு பல இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. ‘எங்களைக் கேட்காமல் அறிவிப்பு வெளியிட நீங்கள் யார்?’ என்று கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் போராட்டக் குழுவினர் கொந்தளித்தனராம்.’’

‘‘அரசுத் தரப்புடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவை எடுத்தார்களோ?’’

‘‘அப்படியும் ஒரு கருத்து உலவுகிறது. மார்ச் 14-ம் தேதி மாலை தலைமைச் செயலகத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போராட்டத்தை நிறுத்துவது குறித்துப் பேசியிருக்கின்றனர். அப்போது, ‘அரசுத் தரப்பில், உங்களைச் சந்தித்து கருத்து கேட்கச் சொல்லியிருக்கின்றனர். நீங்கள் சொல்வதை அவர்களிடம் சொல்லவே இந்தக் கூட்டம். உங்களின் தொடர் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?’ என்று கொஞ்சம் மிரட்டும் தொனியில் அதிகாரிகள் பேசியிருக்கின்றனர்.’’

‘‘ஓஹோ!’’

‘‘இதைத் தவிர, உளவுத்துறை மூலம் இஸ்லாமியத் தலைவர் களைத் தனியாக தொடர்புகொண்டும் ‘போராட்டத்தை நிறுத்துங்கள்’ என்று அழுத்தம் கொடுத்துவருகின்றனர். இதற்கிடையில்தான், ‘போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு’ என்ற அறிவிப்பும் வந்திருக்கிறது. அதே நேரத்தில் அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் முஸ்லிம்கள் வைத்துள்ள சேமிப்பு மற்றும் வைப்புத் தொகைகளை மொத்தமாக எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் தீர்மானம் போடப்பட்டிருக் கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்கள் வைப்புத்தொகையை மொத்தமாக எடுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையே அனைத்து இடங்களிலும் செய்தால் சிக்கலாகிவிடும் என்று உளவுத்துறை உஷார் செய்துள்ளது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘என்ன சிக்கல் வரும் என்கிறார்களாம்?’’

‘‘உளவுத்துறையினர் அரசுத் தரப்புக்கு அனுப்பியுள்ள ‘நோட்’டில், ‘இப்படி வெளியே எடுக்கப்படும் பணம் எங்கே போகிறது என்பதைக் கண்காணிக்க முடியாது. இந்த வழிமுறையில் சில இஸ்லாமிய இயக்கங்களுக்கு நிதி திரட்டி அளிக்கவும் சிலர் முயல்கின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளனராம். விஷயம் சீரியஸாகியுள்ளதால், இந்த விவகாரத்தைக் கண்காணிக்க ஐ.ஜி அந்தஸ்திலான ஓர் அதிகாரியை மாநிலப் பாதுகாப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.’’

அன்பழகன் படத்திறப்பு விழாவில்...
அன்பழகன் படத்திறப்பு விழாவில்...

‘‘தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் வந்ததும், அந்தக் கட்சி சுறுசுறுப்பாகிவிட்டதா?’’

‘‘விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடக்கலாம் என்கின்றனர். வேதாரண்யம் வேதரத்தினம், கிருஷ்ணகிரி நரசிம்மன், கன்னியாகுமரி விக்டோரியா கெளரி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு காய் நகர்த்துகின்றனராம். ஏற்கெனவே துணைத்தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் அந்தப் பொறுப்பு அளிக்கப் படலாம். சசிகலா புஷ்பாவையும் துணைத்தலைவராக நியமிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்.’’

‘‘கட்சியை வளர்க்க என்ன செய்யப்போகிறார்களாம்?’’

‘‘சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தி.மு.க தவறான தகவலைப் பரப்புவதாகக் கூறி, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கோயில்களில் வைத்து மக்களிடம் விளக்கமளிக்கும் பிரசாரத்தை பா.ஜ.க தொடங்கியுள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள பிரதான கோயில்களில் மக்களிடம் பிட் நோட்டீஸ் மூலமாக சி.ஏ.ஏ குறித்து விளக்கவும் தொடங்கியுள்ளனர். கிராமப்புற தெய்வ வழிபாட்டை கையில் எடுக்க தி.மு.க வியூகம் வகுத்திருந்த வேளையில், கிராமப்புற பொதுக்கோயில்கள் மூலமாக தி.மு.க-வைத் தாக்கும் பிரசாரத்தை பா.ஜ.க கையிலெடுத்துள்ளது.’’

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில்...
சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில்...

‘‘தி.மு.க-வின் திட்டம் என்னவாம்?’’

‘‘பேராசிரியர் அன்பழகன் படத்திறப்பு விழாவில் கூட்டணிக் கட்சியினர் அனைவரையும் அழைத்திருந்தார் ஸ்டாலின். அன்பழகனுக்கு நடந்த அஞ்சலியாக இது அறிவிக்கப்பட்டாலும், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இருந்த முரண்களையும் இது சரிசெய்துவிட்டது என்கிறார்கள். குறிப்பாக, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்தாராம். ஆனால், விழா நடந்த அன்று காலை ராமச்சந்திரா மருத்துமனைக்குச் சென்று இதயப் பரிசோதனையை முடித்துக்கொண்டு அன்று மாலையே கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரும் ‘ஸ்டாலின் பின்னால் அணித்திரளத் தயார்’ என்று சொல்ல, ஸ்டாலின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் சந்தோஷத்தைப் பார்க்க முடிந்தது.’’

‘‘தேர்தலுக்கு இப்போதே தயாராகிறார்களோ?’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஆமாம். அ.தி.மு.க-வுக்கு எதிரான பிரசாரத்தை உடனே தொடங்க வேண்டும் என்று பிரஷாந்த் கிஷோர் தரப்பு ஸ்டாலினிடம் சொல்லி விட்டதாம். குறிப்பாக, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அடுத்தடுத்து கிளப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர். இப்போது கொரோனா விவகாரம் பரபரப்பாகி இருப்பதால், கொஞ்சம் அடக்கி வாசிக்க முடிவுசெய்திருக்கின்றனராம். ஒருபுறம் அமைச்சர்களுக்கு எதிராக அஸ்திரம் ஏவுவதற்கு தி.மு.க நினைக்க, மறுபுறம் காரியம் சாதிப்பதில் ஆளுங்கட்சியினரோடு தி.மு.க-வினர் சிலர் கைகோத்துவருகின்றனர் என்ற ஆதங்கக்குரல்களையும் கேட்க முடிகிறது.’’

செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் முருகன்
செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் முருகன்

‘‘இப்படி பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி? சமீபத்திய சம்பவம் ஏதேனும் இருந்தால் சொல்லும்!’’

‘‘தி.மு.க-வைச் சேர்ந்த மிக மூத்த அரசியல்வாதி அவர். சமீபத்தில் தி.மு.க-வுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கொந்தளித்த பிறகு, முதல்வரை 45 நிமிடங்கள் தனியாக கோட்டையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். தன் சொந்த மாவட்டத்தில் பள்ளி தொடங்குவதற்கான என்.ஓ.சி குறித்துப் பேசி, கையோடு சான்றிதழையும் வாங்கிவிட்டாராம். ‘இந்த என்.ஓ.சி வாங்க 40 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், நம்மாளு சத்தமில்லாமல் காரியம் சாதித்துவிட்டாரே’ என தி.மு.க எம்.எல்.ஏ-க்களே ஆச்சர்யத்தில் கண்களை விரிக்கின்றனர்.’’

‘‘அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?’’

‘‘ஆளுங்கட்சியில் ராஜ்யசபா சீட் கிடைக்காத பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர். ‘இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. வாரியமாவது அளிக்கலாமே’ என்று மூத்த நிர்வாகி ஒருவர் முதல்வரிடம் கேட்க, `வாரியத்தின் எண்ணிக்கையே 15தான். ஆனா, 45 பேர் பதவி கேட்டா நான் என்ன செய்யுறது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக் கிறார். ராஜ்யசபா பதவியை எதிர்பார்த்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனராம். முன்னாள் எம்.பி ஒருவர் கட்சி மாறும் அளவுக்கு கோபத்தில் இருக்கிறார்.’’

‘‘ ‘மாஸ்டர்’ விஜய், அரசியல் பன்ச் எதுவும் பேசவில்லையே?’’

‘‘அரசுத் தரப்பில் படத்துக்கு சிக்கலை உருவாக்கினால், தேவையில்லாத நஷ்டமாகுமே என்றுதான் நாசூக்காகத் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளர், விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ. தி.மு.க-வின் மிகமிக முக்கியப் புள்ளிக்கு நெருக்கமான உறவினர் ஒருவரும் பெரும்தொகையைப் போட்டிருக்கிறாராம். சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கிய அந்த நபரை தலைவர் குடும்பம் ஒதுக்கிவைத்தும் ஆடியோ விழாவில் அசத்தலாக அவர் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.’’

‘‘ரஜினி?’’

‘‘தன்னுடைய பிரஸ்மீட்டுக்குப் பிறகு வரும் விமர்சனங்களை தினமும் கவனித்துவருகிறாராம் ரஜினி. தனக்கு நெருக்க மானவர்களிடம் பேசும்போது, ‘நான் கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. என் மாவட்டச் செயலாளர்கள் மனமாற்றம் அடையத்தான் அப்படிச் சொன்னேன். ‘நான் முதல்வர் அல்ல என்பதை அவர்கள் நாளையே ஏற்றுக்கொண்டால் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. மூன்று மாதங்களுக்குள் இதற்கு ஒரு நல்ல முடிவு வரும்’ என்று உறுதியாகச் சொல்லியிருக் கிறாராம்’’ என்ற கழுகார், ‘‘ரபேல், சபரிமலை, அயோத்தி உள்ளிட்ட பரபரப்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ராஜ்ய சபாவில் நியமன எம்.பி-யாகியுள்ளார். இது அரசியல் அரங்கில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism