மிஸ்டர் கழுகு: தி.மு.க-வுக்கு ஐடி ரெய்டு, அ.தி.மு.க-வுக்கு சி.பி.ஐ வழக்கு, மத்திய அரசின் டபுள் ஷாட்!

இளைஞரணியின் மாநிலப் பொறுப்பை தங்கள் மகன்களுக்குக் கேட்டு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, கே.என்.நேரு எனப் பலரும் காய்நகர்த்தினார் களாம்.
“ஒரே நேரத்தில் ‘டபுள் அட்டாக்’ நடத்தியிருக்கிறது மத்திய அரசு. அ.தி.மு.க-வை சி.பி.ஐ மூலமாக அட்டாக் செய்துவிட்டு, தி.மு.க-வுக்கு வருமான வரித்துறை மூலமாக செக் வைத்திருக்கிறது மத்திய அரசு” என்றபடி அலுவலகத்துக்கு வந்த கழுகார், நேரடியாகச் செய்திகளுக்குள் நுழைந்தார்...
“எது நடக்கக் கூடாது என்று சி.விஜயபாஸ்கர் பதறினாரோ அது நடந்தேவிட்டது. சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் குட்கா வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் காவல்துறை டி.ஜி.பி-க்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது சி.பி.ஐ. காவல்துறை அதிகாரிகளுடன், வணிக வரித்துறை, மத்திய கலால்துறை அதிகாரிகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படப்போவதை முன்கூட்டியே அறிந்துதான், டெல்லிக்கு வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றாராம் சி.விஜயபாஸ்கர். மத்திய இணையமைச்சர் எல்.முருகனைச் சந்தித்து உதவி கேட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால், கடைசியில் டெல்லி ஆப்படித்து விட்டது.”

“ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக அல்லவா எல்.முருகனைச் சந்தித்ததாக விஜயபாஸ்கர் சொல்லியிருந்தார்?”
“அது சும்மா சால்ஜாப்புக்குச் சொன்ன காரணம். இன்னொரு முரணைச் சொல்கிறேன். நவம்பர் 23-ம் தேதி காலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, தி.மு.க அரசுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்கள் எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்கள். அன்று மாலையிலேயே, குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட தகவல் வெளியானது. ‘அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் எனச் சொன்னதற்கு, டெல்லி மறைமுக மிரட்டல் விடுத்திருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்த பா.ஜ.க தலைவர்கள்.”
“சரி... புகார் மனுவில் இருப்பதைத் தாண்டி ஆளுநரிடம் அ.தி.மு.க தலைவர்கள் என்ன சொன்னார்களாம்?”
“பொறும்... முதலில் தி.மு.க-வை குறிவைத்திருக்கும் வருமான வரித்துறை தகவலைச் சொல்லிவிடுகிறேன். ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் சப்ளை செய்யும் நிறுவனங்களைக் குறிவைத்து, 80 இடங்களில் சோதனை நடத்தியது வருமான வரித்துறை. ரெய்டில் சிக்கிய நிறுவனங்களுக்கெல்லாம் இருக்கும் ஒற்றுமை, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டவை என்பதுதான் என்கிறார்கள் பொது விநியோகத்துறை அதிகாரிகள். ‘இந்த நிறுவனங்களுக்குத்தான் பெருமளவில் பருப்பு, பாமாயில் டெண்டர்கள் வழங்கப்பட்டன. அதற்காக, ஸ்வீட் பாக்ஸ் கவனிப்புகளும் நடந்திருக்கிறது. இந்த கவனிப்பு எப்படி நடந்தது... யாரெல்லாம் இடைத்தரகர்களாக இருக்கிறார்கள்... வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்பதையெல்லாம் தோண்டி எடுத்திருக்கிறது வருமான வரித்துறை’ என்கிறார்கள் அந்த அதிகாரிகள். ‘கிரிவல’ நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட டைரியில், ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் பருப்புக்கு நான்கு ரூபாய், பாமாயிலுக்கு 10 ரூபாய் என்று கணக்கு எழுதி வைக்கப்பட்டிருந்ததாம். ‘மூன்றெழுத்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஆளுங்கட்சிப் புள்ளிகளை சிக்கவைக்கும் சில முக்கிய ஆதாரங்களும் சிக்கியிருக்கின்றன’ என்கிறது வருமான வரித்துறை வட்டாரம்.”

“ஆக... ஆட்டம் தொடரும் என்கிறீரா?!”
“ஆமாம். அ.தி.மு.க விஷயத்துக்கு வருகிறேன். எடப்பாடி தலைமையில், ஆளுநரை அ.தி.மு.க தலைவர்கள் சந்தித்தபோது, ஜூனியர் விகடனில் வெளிவந்த ‘கரூர் கம்பெனி’ புத்தகத்தை அளித்திருக்கிறார்கள். ‘பத்திரிகைகளே பெரிதாக எழுதிவருகின்றன. ஊழலை ஒருமுகப்படுத்தி வசூல்வேட்டையில் இறங்கியிருக்கிறது தி.மு.க. நாளுக்கு நாள் சட்டம்- ஒழுங்கும் சந்திசிரிக்க ஆரம்பித்துவிட்டது. ஆளுநர் என்கிற முறையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி இருவரையும் அழைத்துப் பேசுங்கள். முறைகேட்டில் ஈடுபடும் அமைச்சர்கள்மீது விசாரணை செய்ய உத்தரவிடுங்கள்’ என்றிருக்கிறார்கள் அ.தி.மு.க தலைவர்கள். அவர்களின் புகார்களைப் புரட்டிப் பார்த்த ஆளுநர், ‘உடனடியாக டெல்லிக்கு அனுப்பி ‘செக்’ செய்யச் சொல்கிறேன்’ என்று உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.”
“தி.மு.க-வில் அணிகளுக்கான நிர்வாகிகள் நியமனத்தைத் தொடங்கியிருக்கிறார்களே?”
“இளைஞரணியின் மாநிலப் பொறுப்பை தங்கள் மகன்களுக்குக் கேட்டு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, கே.என்.நேரு எனப் பலரும் காய்நகர்த்தினார் களாம். ஆனால், ‘இளைஞரணி, மாணவரணியில் யாருக்கும் இடமில்லை. வேண்டுமானால், மாவட்ட அளவில் ஏதாவது பொறுப்பு கொடுக்கலாம்’ எனச் சொல்லிவிட்டதாம் இளைஞரணித் தலைமை. அதன்படியே இந்த நியமனங்கள் நடந்திருக்கின்றன.”
“வாரிசுகளுக்கு இடமில்லை என உதயநிதியே சொல்லிவிட்டாரா..?!”

“நக்கல்தான் உமக்கு... இன்னொரு பக்கம் மகளிரணியில் நடந்த கட்டமைப்பு மாற்றம் முதல் நிர்வாகிகள் தேர்வு வரை அனைத்தையும் செய்தது கனிமொழிதானாம். ஹெலன் டேவிட்சன்தான் கனிமொழியின் சாய்ஸ் என்பதை ஏற்கெனவே நாம் கூறியிருந்தோம். அதன்படியே நடந்திருக்கிறது. தவிர, மகளிரணி இணைச் செயலாளர் என்கிற பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு குமரி விஜயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிதாக, மகளிரணி சமூக வலைதளப் பொறுப்பாளர்களாக மூன்று பேரும், மகளிரணி ஆலோசனைக்குழுவுக்கு எட்டுப் பேரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மாவட்ட அளவிலான பொறுப்பில் ஆக்டிவாக இருந்தவர்களுக்கும், இளம்பெண்களுக்கும் இந்த முறை மாநிலப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில், மூத்த மகளிரணி நிர்வாகிகள் மனம் நோகாமலும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகிவிட்டாலும், மகளிரணியை வலுவான கட்டமைப்பாக உருவாக்கி, எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் கனிமொழி” என்ற கழுகாருக்கு, சூடாக இஞ்சி டீ கொடுத்தோம். டீயைப் பருகியபடி செய்தியைத் தொடர்ந்தார் கழுகார்.
“திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தி.மு.க நிர்வாகி, அண்ணாநகரிலுள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில்தான் பல டீலிங்குகளையும் முடிக்கிறார். சமீபத்தில், தன் மாவட்டத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை அழைத்த அவர், கமிஷனாக ஏழு விரல்களைக் காட்டினாராம். அதிர்ந்துபோன ஒப்பந்ததாரர்கள் துறை மேலிடத்திடம் புலம்பியிருக்கிறார்கள். இதுபோக, ஆந்திராவிலிருந்து மணல் ஏற்றிவரும் லாரிகளிடம், லோடுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கறந்துவிடுகிறாராம் அந்த நிர்வாகி. கட்சி சீனியர்கள் சிலர், ‘இப்பதான் பதவிக்கு வந்திருக்கீங்க. இவ்வளவு வேகம் ஆகாது’ என எச்சரித்திருக்கிறார்கள். ‘பதவியைப் பிடிக்க போட்டக் காசை எடுக்க வேண்டாமா?’ என அவர்களின் வாயை அடைத்துவிட்டாராம் அவர். விவகாரம் அறிவாலயம் வரை சென்றிருக்கிறது.”

“திருமாவளவனுக்கு நடந்த ‘மணிவிழா’வில் என்ன சலசலப்பு?”
“இந்த மணிவிழாவை நடத்தியதே வி.சி.க-வின் மகளிர் விடுதலை இயக்கம்தான். விழாவில் மைக் பிடித்த இயக்கத்தின் மாநிலத் தலைவி இரா.நற்சோனையே, ‘சனாதனத்தை நம் தலைவர் கடுமையாக எதிர்த்து போராடுகிறார். ஆனால், நம் கட்சிக்குள்ளேயே சனாதனம் இருக்கிறது. என்னுடைய பெண் நிர்வாகிகளை, கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மிகக் கேவலமாகத் திட்டியிருக்கிறார்கள். நான் எல்லாவற்றையும் ‘ரெக்கார்டு’ செய்துவைத்திருக்கிறேன்’ என்று மேடையிலேயே போட்டு உடைத்துவிட்டார். இடையிலேயே மைக்கை ஆஃப் செய்யச் சொல்லிவிட்டாராம் திருமா. ஆனாலும், நிறுத்தாமல் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்துவிட்டார் நற்சோனை. இறுதியாக, மகளிர் விடுதலை இயக்கத்தின் மற்றொரு நிர்வாகி அரங்க மல்லிகா எழுந்து, ‘இது நம் குடும்பப் பிரச்னை. பேசித்தீர்க்க வேண்டுமே தவிர, ‘லைவ்’வில் சொல்லக் கூடாது’ என்று சொன்ன பிறகுதான், சலசலப்பு சற்று அடங்கியது” என்றபடி கிளம்பும் மனநிலைக்கு வந்த கழுகார்...
“சென்னையில் தொழிலதிபர் ராஜேஷைக் கடத்தி, அவரின் சொத்துகளை மிரட்டி வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில்,இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட சிலரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்தார்கள் அல்லவா... ராஜேஷ் மீதே மோசடிப் புகார் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் வெங்கட சிவ நாககுமார் என்பவர். அதில், தொழிலதிபர் ராஜேஷுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கெனவே ராஜேஷுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட சர்ச்சைக்குரிய ஐ.பி.எஸ் அதிகாரி, சி.பி.ஐ-யில் இருக்கும் தன்னுடைய பேட்ச்மேட்டான பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் இது தொடர்பாக உதவி கேட்டிருக்கிறார். ‘ஏற்கெனவே உன்னால் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறேன். இனியும் நான் உனக்கு உதவத் தயாராக இல்லை’ என மறுத்துவிட்டாராம் அந்தப் பெண் அதிகாரி. என்ன செய்வதெனத் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் அந்த ஐ.பி.எஸ் அதிகாரி” என்றபடி விருட்டெனப் பறந்தார்.