Published:Updated:

மிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி! - ரகசியமாய் சந்தித்த 10 அமைச்சர்கள்...

டி. டி. வி. தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
டி. டி. வி. தினகரன்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும் மக்களிடம் ஒரு சர்வே எடுத்துள்ளது பா.ஜ.க. அதில், 7.6 சதவிகித மக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறதாம்.

மிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி! - ரகசியமாய் சந்தித்த 10 அமைச்சர்கள்...

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும் மக்களிடம் ஒரு சர்வே எடுத்துள்ளது பா.ஜ.க. அதில், 7.6 சதவிகித மக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறதாம்.

Published:Updated:
டி. டி. வி. தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
டி. டி. வி. தினகரன்

“அம்மாவுக்காக இடம்மாற முடிவெடுத்திருக் கிறாராமே?” என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். குழப்பத்துடன், “யாரைச் சொல்கிறீர்கள்?” என்றோம். “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத்தான் சொல்கிறேன். தன் அக்கா பானுமதியின் இறப்பால் மிகவும் வேதனையில் இருந்தார் திருமா. இப்போது, தன் தாயார் சின்னம்மாளும் உடல்நலக்குறைவால் வாடுவதால் மனம் உடைந்து போயிருக்கிறாராம். ‘கட்சிப் பணிக்காக ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வந்துபோக முடியவில்லை. அம்மாவைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ள வேண்டிய நேரமிது’ என்று நெருக்கமானவர்களிடம் கண்கலங்கியுள்ளார் திருமா. சென்னையிலிருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தை அரியலூர் மாவட்டம், அங்கனூருக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.”

“தாய்ப்பாசம் என்றால் சும்மாவா!”

“வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே, ‘மண் பிரமுகர்’ ஒருவருக்குச் சொந்தமாக 300 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் உள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அமைச்சர் வீரமணியின் பெயர் நீதிமன்றம் வரை அடிபட்டது. இந்தநிலையில் அந்த விவகாரத்தில் மேலும் இரண்டு அமைச்சர்கள் மூக்கை நுழைத்துள்ளனராம். திருவண்ணா மலையைச் சேர்ந்த முக்கிய புள்ளியிடம் நிலத்தை விற்க ‘டீல்’ பேசப்பட்டிருக்கிறது. ஆனால், விவகாரத்தில் ஏகப்பட்ட வில்லங்கங்கள் இருப்பது தெரிந்து முக்கியப்புள்ளி பின்வாங்கிவிட்டார். இப்போது கார்ப்பரேட் கம்பெனியிடம் நிலத்தை விற்று, கமிஷன் பார்க்கலாம் என்று பேசிவருகிறார்கள்.”

திருமாவளவனை
திருமாவளவனை

“சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஏதேனும் சுவாரஸ்யம் இருக்கிறதா?”

“கோட்டையிலுள்ள சட்டசபை வளாகத்தில் 14 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருக்கும். அதே படங்களை நகலெடுத்து கலைவாணர் அரங்கிலும் மாட்டியிருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தி.மு.க உறுப்பினர்கள் ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்கிற வாசகம் அச்சிட்ட மாஸ்க்கை அணிந்து அவைக்கு வந்தனர். தி.மு.க தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்த மாஸ்க் அளிக்கப்பட்டிருந்தது. முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாண்டியன், தாராபுரம் எம்.எல்.ஏ காளிமுத்து இருவரும் இந்த நீட் எதிர்ப்பு மாஸ்க்கை மாட்டிய சில நிமிடங்களில், எங்கிருந்தோ ஓர் உத்தரவு போனில் வந்தது. அவசரமாக மாஸ்க்கை கழற்றிய அவர்கள், வேறு சாதாரண மாஸ்க்கை மாட்டினர். ‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவேன்னு உங்க ராகுல் காந்தியே சொல்லியிருக்கார். அப்புறம் ஏம்ப்பா இப்படி பயந்து மாஸ்க்கைக் கழட்டுறீங்க’ என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கிண்டலடிக்க, கதர்களால் பதில்பேச முடியவில்லை” என்ற கழுகாருக்குச் சூடாக மசால் வடையுடன் இஞ்சி ‘டீ’யை நீட்டினோம்.

வடையைச் சுவைத்த கழுகார், “ஓர் அமைச்சரின் நைட் ரவுண்ட்ஸ் பற்றிச் சொல்கிறேன். பெயர் கேட்காதீர்” என்று ‘டீ’யை உறிஞ்சியபடி தொடர்ந்தார்.

“சென்னை போரூர் அருகே உள்ள ஒரு விடுதிக்கு அந்த அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் மாதத்தில் ஒருநாள் வருகிறார்களாம். இவர்கள் வருவதற்கு முன்னதாக, துணை நடிகைகள் சிலரும் வந்து அறையெடுத்துத் தங்குகிறார்கள். தாகசாந்தி முடிந்தவுடன், அந்த நடிகைகள் தங்கியிருக்கும் ‘ரூம் சாவி’கள் குலுக்கப்படுமாம். யார், எந்தச் சாவியைக் கண்ணை மூடிக்கொண்டு எடுக்கிறார்களோ, அவர்கள் அந்த ரூமில் ‘இளைப்பாறுவது’ வழக்கம் என்கிறார்கள். துணை நடிகைகளை அழைத்துவரும் பொறுப்பை கடவுளின் பெயர்கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவரே செய்கிறாராம். இந்த விவகாரம் அரசல் புரசலாக அமைச்சரின் குடும்பத்துக்குள் கசிய, அவரை ‘பெஞ்ச்’ மீது நிற்கவைக்காத குறையாகக் குடைந்துவிட்டனராம் குடும்பத்தினர்.”

“தி.மு.க செய்திகள் ஏதேனும்?”

“சமீபத்தில் திருச்சி மாவட்டம், மணப்பாறையி லுள்ள நடிகர் விமல் வீட்டுக்குச் சென்ற தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, விமலிடம் பத்து நிமிடங்கள் தனியாகப் பேசியிருக்கிறார். திருச்சி மாவட்ட அரசியலுக்குள் அன்பில் மகேஷின் கை ஓங்கிய பிறகு, நேருவின் செல்வாக்கு சறுக்க ஆரம்பித்துவிட்டது. அதை ஈடுகட்டவே, சிறு நட்சத்திர ‘சந்திப்பு’ என்கிறார்கள்.”

டி. டி. வி. தினகரன்
டி. டி. வி. தினகரன்

“பலே...”

“பிரசாந்த் கிஷோர் மீது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடுப்பில் இருப்பதாகத் தகவல். ‘தூத்துக்குடி தந்தை, மகன் கொலை வழக்கை சர்வதேச அளவில் கொண்டுசென்றதில் தொடங்கி, ‘இந்தி தெரியாது போடா’ டி-ஷர்ட் அடித்தது வரை எல்லாமே தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி உருவாக்கிய ட்ரெண்ட்தான். இவ்வளவு கோடிகளைக் கொட்டிக் கொடுத்தும், வெறும் டேட்டாவை உருட்டிக்கொண்டிருக் கிறீர்கள். ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் காலாவதி ஆகிவிட்டது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமனம் இப்போதே எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. உருப்படியாக ஏதாவது யோசனை தந்திருக்கிறீர்களா?’ என்று ஐபேக் தரப்பிடம் ஸ்டாலின் கடுகடுத்துவிட்டாராம்.”

“முதல் போட்டவர் லாபம் எடுக்கத்தானே பார்ப்பார்... அவர் கஷ்டம் அவருக்கு!”

“புதுச்சேரி பண்ணை வீட்டில் ஓய்விலிருந்த டி.டி.வி.தினகரன், அடையாரிலுள்ள தனது இல்லத்துக்கு வந்துவிட்டார். அவர் வீட்டுக்குக் கறுப்புக் கண்ணாடி ஏற்றிய கார்கள் ரகசியமாக வந்துசெல்கின்றன. இந்த கார்கள் வரும் நேரத்தில், வீட்டு வாட்ச்மேனைக்கூட அனுப்பிவிட்டு, தினகரனும் அவரின் உதவியாளர் ஜனாவும் மட்டும் இருக்கிறார்களாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமைச்சர்கள் பத்து பேர் வந்து பார்த்ததாகச் சொல்கிறார்கள். வருபவர்களுக்கு கேசரி, வறுத்த முந்திரியுடன் டீ பார்ட்டி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் அ.தி.மு.க-வைக் கையகப்படுத்துவது குறித்து இவர்கள் தீவிரமாகப் பேசியிருக்கிறார்கள். தினகரனைச் சந்தித்த ஓ.பி.எஸ் முகாம் முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘அவரை நம்பி பிரயோஜனம் இல்லைங்க சார். சின்னம்மா வந்தவுடனே நீங்கதான் கட்சியை மீட்கணும்’ என்று புலம்பியிருக்கிறார்.”

“சசிகலா எப்போது விடுதலை ஆகிறாராம்?”

“தேதி இன்னும் உறுதியாகவில்லை. பத்து கோடி ரூபாய் அபராதம்தான் சிக்கலாக இருக்கிறது. அது வெள்ளைப்பணமாக இருக்க வேண்டும் என்பது பெரும் சிக்கல். கோவையிலுள்ள தொழிலதிபர் மூலமாக ஒரு ஃபைனான்ஸியரை அணுகியுள்ளனர். ஆரம்பத்தில் சம்மதித்தவர், ஓரிரு நாள்களுக்குப் பிறகு, ‘ஆளைவிடுங்க சாமி’ என்று கும்பிடு போட்டுவிட்டாராம். பயத்துக்குக் காரணம், ஆட்சி மேலிடம்தான் என்கிறார்கள். இந்தப் பயத்தின் காரணமாகப் பலரும் ‘கும்பிடு’ போடுவதால் தள்ளிக்கொண்டே போகிறதாம். என்றாலும் ‘கோடி’ தேடல் நீள்கிறது. செப்டம்பர் 22-ம் தேதிக்குப் பிறகே அவர் விடுதலையாகும் தேதி தெரியவரும். சசியைத் தடபுடலாக வரவேற்பதற்கு மாவட்ட வாரியாக இவ்வளவு வாகனங்கள் வர வேண்டுமென்று ஒரு பட்டியலும் தயாராகிறது.”

“நடக்கட்டும்... நடக்கட்டும். பா.ஜ.க செய்திகள் உண்டா?”

“ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும் மக்களிடம் ஒரு சர்வே எடுத்துள்ளது பா.ஜ.க. அதில், 7.6 சதவிகித மக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறதாம். குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர்கள், முத்தரையர்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு நிலவுகிறது என்று டெல்லிக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது.”

“ஆனால், ரெளடிகளை அல்லவா கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்?”

“அதை ஏதோ பெரிய வியூகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் போலீஸார் தன்னைக் கைதுசெய்யக் காத்திருந்த தகவல் கேள்விப்பட்டு, கடைசி நிமிடத்தில் தப்பியோடிய ரெளடி நெற்குன்றம் சூர்யா, சாதி அமைப்பின் தலைவர் ஒருவர் மூலமாக டெல்லியிலுள்ள முக்கிய பா.ஜ.க பிரதிநிதியைச் சந்தித்தாராம். `கொஞ்ச நாள் பொறுங்கள். கட்சிக்குள் சேர்த்துக்கொள்கிறோம்’ என்று டெல்லி பிரதிநிதி உத்தரவாதம் கொடுத்துள்ளார். ரெளடிகளை பூத் கமிட்டிக்குள் கொண்டுவந்து, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ‘டஃப் பைட்’ கொடுக்க கமலாலயம் திட்டமிடுகிறது என்கிறார்கள். இதை முன்வைத்து சென்னை புறநகரில் வலம்வரும் 50 முக்கிய ரெளடிகளின் ‘பய’ டேட்டாகள் கட்சி அலுவலகத்தில் காத்திருக்கின்றன” என்று சிறகுகளைச் சிலுப்பிய கழுகார்,

“தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய வி.ஐ.பி ஒருவர் விரைவில் டெல்லி செல்கிறார். அங்கு அவர் பா.ஜ.க தலைவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டிருக்கிறார். பிரதமரிடமும் நேரம் கேட்டிருப்பதாகத் தகவல். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, தமிழக அரசியலில் அனல் பறக்கும் என்கிறார்கள்” என்றபடி காற்றில் எழும்பினார்.

ஜெகத் மீது ஃபெமா!

சி
ங்கப்பூரைச் சேர்ந்த ‘சில்வர் பார்க் இன்டர்நேஷனல்’ நிறுவனத்துடன் அரக்கோணம் தி.மு.க எம்.பி-யான ஜெகத்ரட்சகன், அவரின் மகன் சந்தீப் ஆனந்த் இருவருக்கும் உள்ள தொடர்புகளை அமலாக்கப் பிரிவு மோப்பம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்துக்குச் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து பணப்பரிமாற்றம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் முதலில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜெகத்துக்குக் கடந்த ஜூலை மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு ஜெகத்தை வரவழைத்து, ஆறு மணி நேரம் விசாரித்தார்கள். அப்போது சில ஆவணங்களைக் காட்டி விளக்கமும் பெறப்பட்டது. அதன் பிறகே ஜெகத்துக்குச் சொந்தமான 89.19 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, நிலம் உள்ளிட்டச் சொத்துகள் ‘ஃபெமா’ சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, குரோம் லெதர் கம்பெனி தொடர்பான சி.பி.சி.ஐ.டி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மத்திய அரசின் இந்த அதிரடி ஜெகத் முகாமை உலுக்கியுள்ளது.

மிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி! - ரகசியமாய் சந்தித்த 
10 அமைச்சர்கள்...

தமிழகத் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பணிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய அரசு சம்மதித்துவிட்டதாம். டெல்லி தமிழ்நாடு ஹவுஸ் தலைமை அதிகாரியான மக்வானா ஐ.ஏ.எஸ் இதன் பின்னணியில் இருக்கிறாராம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ-வுக்கு மட்டும் பாசிட்டிவ், நெகட்டிவ் என ரிசல்ட் மாறி மாறி வந்திருக்கிறது. “நீங்க தினமும் சரக்கு அடிக்கிறதாலத்தான் சரியான ரிசல்ட் வரல. சிகிச்சை முடியுற வரைக்கும் பாட்டிலைத் தொடாதீங்க” என்று மருத்துவமனை வட்டாரம் கெஞ்சியதாம். அதன்படி விரதம் அனுசரிக்கிறாராம் எம்.எல்.ஏ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism