அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: தடதடத்த ரெய்டுகள்... ஸ்கெட்ச் யாருக்கு?

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

கொங்கு ஏரியா அ.தி.மு.க பிரமுகர்களை தி.மு.க பக்கம் இழுப்பதற்கும் வேலுமணி தடையாக இருக்கிறார். இதையெல்லாம் வைத்துத்தான் அவரைக் குறிவைத்திருக்கிறார்கள்.

“சமூகநீதி பேசும் தி.மு.க., தனது முப்பெரும் விழா மேடையில் ஒரு பெண்ணுக்குக்கூட இடம் தரவில்லை’’ என்றவாறே என்ட்ரி கொடுத்தார் கழுகார். நாம் கொடுத்த மதுரை ஜிகர்தண்டாவை ருசித்துக் குடித்த கழுகார், “ஆனால், முதல்வரின் இந்தப் பயணம், அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பை அப்செட் ஆக்கியிருக்கிறது” என்றவாறே நேரடியாகச் செய்திக்குள் நுழைந்தார்.

“திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய குடியிருப்புகளை 14-ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அந்த நிகழ்ச்சி காலை 8:45 மணிக்கு மாற்றப்பட, சென்னையிலிருந்தே காணொளி வாயிலாகத் திறந்துவைத்துவிட்டார் முதல்வர். பிறகு ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, மதிய விமானத்தில் மதுரைக்கு வந்த முதல்வர் அங்கேயே ஓய்வெடுத் தார். திண்டுக்கல் நிகழ்ச்சியைத் தவிர்த்துவிட்டு, அதேநேரத்தில் பக்கத்து நகரான மதுரையில் அவர் ஓய்வெடுத்ததுதான் ஐ.பெரியசாமியின் அப்செட் டுக்குக் காரணமாம். ஏற்கெனவே, நல்ல துறை ஒதுக்கவில்லை என்ற கசப்பில் இருக்கும் ஐ.பெரியசாமி, தன்னைத் தலைமை ஒதுக்குவதாகக் கருதுகிறார். இப்போது இதுவும் சேர்ந்துகொள்ள, சோர்ந்து போயிருக்கிறார் அமைச்சர்.”

ராஜ் கவுண்டருடன் சபரீசன்
ராஜ் கவுண்டருடன் சபரீசன்

“சபரீசன் நேரடியாகக் களத்துக்கு வந்துவிட்டார் என்கிறார்களே...”

“விருதுநகர் முப்பெரும் விழாவில், ‘நாற்பதும் நமதே... நாடும் நமதே’ என்று முழங்கியிருக்கிறார் முதல்வர். அதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்ட முதல்வரின் மருமகன் சபரீசன், சாதி அமைப்புகள் மற்றும் சின்னச் சின்ன கட்சிகளையும் வளைக்க ஆரம்பித்துவிட்டார். முதற்கட்டமாக, சேலத்தில் ‘புதிய திராவிடர் கழகம்’ என்ற கட்சியின் தலைவரான ராஜ் கவுண்டரைச் சந்தித்திருக்கிறார் சபரீசன். இதுநாள்வரை கட்சி விவகாரங் களைப் பின்னணியிலிருந்து இயக்கியவர், தற்போது வெளிப் படையாகக் கட்சிப் பணியில் ஈடுபடத் தொடங்கியிருப்பதைப் பார்த்து சீனியர்கள் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.”

“அவர்களால் அதைத் தாண்டி என்ன செய்துவிட முடியும்?!”

“நக்கல்தான் உமக்கு. இதைக் கேளும்... மின்சாரத்துறையில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு ‘நோடல் ஆபீஸரை நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இவர்கள், அந்தந்தத் தொகுதி எம்.எல்.ஏ-க்களிடம், ‘உங்கள் தொகுதியில் மின்சாரத்துறைரீதியாக புகார் ஏதும் இருக்கிறதா... குறைகள் என்னென்ன?’ என விசாரிக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரித்திருக்கிறார்கள்.”

“இந்த திடீர் அக்கறைக்குக் காரணம்?”

“மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியினர் மத்தியிலும் அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. ‘இந்த எதிர்ப்பைச் சரிக்கட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகள்தான் உதவும். குறைகள் ஏதும் இருப்பதாக எம்.எல்.ஏ-க்கள் சொன்னால், அதை உடனடியாகச் சரிசெய்யுங்கள்’ என முதல்வர்தான் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறாராம்.”

“அதற்குள் ‘ஸ்பைடர்மேன்’ பறந்து பறந்து அடித்துவிட்டாரே?”

“ஆமாம். மின்கட்டண உயர்வைக் கண்டித்த கம்யூனிஸ்ட் தலைவர்களை ‘சிலந்தி’ என்ற பெயரில் ‘முரசொலி’யில் கடுமையாக விமர் சித்திருக்கிறார்கள். கூடவே, ‘கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் கேரளாவில் மின்கட்டணம் எவ்வளவு?’ என்றும் கேட்டிருந்தார்கள். பதிலுக்கு, ‘துணிவிருந்தால், கேரளாவில் இருக்கும் தனிநபர் வருமானம், மக்களின் வாங்கும் சக்தி, ஊழலற்ற நிர்வாகம் போன்றவற்றையும் ஒப்பிட வேண்டியதுதானே?’ என்று கம்யூனிஸ்ட்டுகளும் களமிறங்கி விட்டார்கள். ‘அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகிவிடக் கூடாது’ என்பதே கட்டுரைக்கு ‘முரசொலி’ கொடுத்திருந்த தலைப்பு. ஆனால், இந்தக் கட்டுரையே எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவலாகிவிட்டது. தி.மு.க-வின் கூட்டணி தர்மத்தை விமர்சித்து, அரைப்பக்கக் கட்டுரை போட்டிருக் கிறது ‘நமது அம்மா’ நாளிதழ்” என்ற கழுகாரிடம், வகை வகையாய் ஸ்நாக்ஸ் கொடுத்தோம். சட்டென ஏதோ நினைவு வந்தவராக ஆரம்பித்தார் கழுகார்...

மிஸ்டர் கழுகு: தடதடத்த ரெய்டுகள்... ஸ்கெட்ச் யாருக்கு?
மிஸ்டர் கழுகு: தடதடத்த ரெய்டுகள்... ஸ்கெட்ச் யாருக்கு?

“வேலுமணியை மிரட்டிப் பார்க்கத்தான் இந்த ரெய்டு என்கிறார்கள். அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களை ஒத்திவைத்துவிட்டு, மின்கட்டண உயர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க அறிவித்ததற்கு, வேலுமணிதான் காரணமாம். கூடவே, கொங்கு ஏரியா அ.தி.மு.க பிரமுகர்களை தி.மு.க பக்கம் இழுப்பதற்கும் வேலுமணி தடையாக இருக்கிறார். இதையெல்லாம் வைத்துத்தான் அவரைக் குறிவைத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், ‘முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடத்தப் பட்ட ரெய்டு அவரைக் குறிவைத்து அல்ல’ என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை உயரதிகாரிகள்.”

“அப்படியானால், யார் டார்கெட்டாம்?”

“வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ்தான் டார்கெட்டாம். திருவள்ளூரிலிருக்கும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில்தான் இந்த ரெய்டு நடந்திருக்கிறது. இந்தப் புகாரில் விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள் ளது. மேலிட குடும்பப் பிரமுகர் ஒருவர், ஐசரி கணேஷ் மீது கொண்டிருந்த கோபத்தின் விளைவாகத்தான் இந்த ரெய்டு தடதடத்ததாகவும் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: தடதடத்த ரெய்டுகள்... ஸ்கெட்ச் யாருக்கு?
மிஸ்டர் கழுகு: தடதடத்த ரெய்டுகள்... ஸ்கெட்ச் யாருக்கு?

“ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவராகத் தானே ஐசரி கணேஷ் தன்னைக் காட்டிக் கொண்டார்?”

“இருக்கலாம்... ஆனால், பழைய சம்பவத்தைச் சொல்லி, அவருக்கு எதிராக ஆட்சி மேலிடத்தை நகர்த்தியது விஷால் அணிதானாம். 2019-ல் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக ஐசரி கணேஷ் அணி களமிறங்கியது. வழக்குகள் காரணமாக கடந்த மார்ச் மாதம்தான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. விஷால் அணி வெற்றிபெற்றது. ‘அப்போதைய அ.தி.மு.க ஆட்சியாளர்களின் துணையுடன் நீதிமன்றத்தை நாடி, தேர்தல் முடிவுகள் வெளியாகாமல் சட்டரீதியாகத் தடை வாங்கிவிட்டார் ஐசரி கணேஷ். தேர்தல் முடிவு கள் வெளியானவுடன், ‘பதவியேற்றவர்களின் காலம் மூன்று மாதங்கள் மட்டுமே’ என ஐசரி சொன்னதை விஷால் அணியினர் ரசிக்கவில்லை. அவர்கள்தான் மேலிட குடும்பப் பிரமுகரிடம் போட்டுக் கொடுத்து, ஐசரி கணேஷ்-க்கு எதிராக ரெய்டு நடத்த வைத்துவிட்டனர்’ என்ற பேச்சு சினிமா வட்டாரங்களில் பலமாக அடிபடுகிறது. தன்மீது எஃப்.ஐ.ஆர் பதிவானதை ஐசரியும் எதிர்பார்க்கவில்லையாம். சமீபத்தில்தான், அவருக்குச் சொந்தமான 8.94 கோடி ரூபாய் சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது. அடுத்த அடியாக இந்த ரெய்டு நடந்திருப்பதால், ஆடிப்போயிருக்கிறார் ஐசரி” என்ற கழுகார்....

“கனிமவளத்துறை உயரதிகாரி சுரேஷ் என்பவரின் வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி ரெய்டு நடந்திருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில், அப்போதைய கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர்தான் இந்த சுரேஷ். அந்தச் சமயத்தில், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஏரியாக்களின் ‘வரவு செலவு’ கணக்கை இவர் கவனித்துக்கொண்டாராம். தவிர, சொந்தமாக ஆறு குவாரிகளை இவர் நடத்தினாராம். இவர் வாயிலாக சண்முகத்துக்கு செக் வைக்கவே இந்த ரெய்டு என்கிறார்கள்” என்றபடி சிறகை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* தி.மு.க பொதுக்குழு வரும் அக்டோபர் 6, 7-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்கான பொறுப்பை அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் வசம் ஒப்படைத்திருக்கிறதாம் தலைமை.

* தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ஃபைபர்நெட் மூலம் இணைய வசதி செய்து கொடுக்கும் ‘பாரத்நெட்’ திட்டத்துக்காக ரூ.1,627.83 கோடி ஒதுக்கியிருந்தது மத்திய அரசு. இந்தத் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் தொடங்கிவைத்தார் முதல்வர். ஆனால், இந்தத் திட்டத்துக்கான நிதியை, வேறு நலத்திட்டங்களுக்குச் செலவிட இப்போது முடிவெடுத்திருக்கிறதாம் அரசு.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 மாதங்களில் ஐந்து எஸ்.பி-க்கள் மாறியிருக்கிறார்கள். தற்போதைய எஸ்.பி சுகுணாசிங்கும் மேற்படிப்புக்காக லண்டனுக்குப் போகிறார். இதனால், ராசியில்லாத இடமென்று அந்த இடத்துக்கு வர காவல்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.