ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரா பிரசாத் பாஹினிபதி, மேடையிலேயே தன் மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநில ஜேப்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரா பிரசாத் பாஹினிபதி, பொதுநிகழ்ச்சி ஒன்றில் தன் மனைவி மினாகி பாஹினிபதியுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரையும் கௌரவிக்க மாலைகள் வழங்கப்பட்டன. ஒருவருக்கொருவர் மாலைகளை மாற்றி அணிவித்துக் கொண்டனர்.

தன் மனைவிக்கு மாலை அணிவித்த தாரா பிரசாத் பாஹினிபதி, அதனைச் சரிசெய்ய முயன்றார். பொது மேடையில் கூச்சமாகவும் சங்கடமாகவும் உணர்ந்த மனைவி அதை தடுக்க, அவரின் விருப்பமின்மையை பொருட்படுத்தாமல் தன் மனைவியின் கையைப் பிடிக்க எம்.எல்.ஏ முயல்கையில், கை தர மறுத்து ஒரு வணக்கம் வைக்கிறார் அவரின் மனைவி.
அப்போதும் விடாமல் வலுக்கட்டாயமாக தன் மனைவியின் கையைப் பிடித்துக் குலுக்கும் எம்.எல்.ஏ தொடர்ந்து ஃப்ளையிங் கிஸ் கொடுக்கிறார். அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல, தொடர்ச்சியாக நான்கு முறை தன் மனைவிக்கு மேடையிலேயே ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வண்ணம் உள்ளார். இதை முறைத்தபடியே அவர் மனைவி பார்த்துக் கொண்டிருக்க, அதைக் கண்டுகொள்ளாமல் சிரித்தவாறே உள்ளார்.
சமூக வலைதளத்தில் தாரா பிரசாத் பாஹினிபதியின் இந்த வீடியோ வெளியாகி பேசுபொருளாகி உள்ளது. இவரின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
பாஹினிபதி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து அனைவரின் கவனத்தையும் பெறுவது இது முதல்முறையல்ல. முன்னதாக, ஒடிசா சட்டமன்ற சபாநாயகர் எஸ்.என் பட்ரோவுக்கு இவர் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது பேசுபொருளானது.