கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

அவலம் தீர்க்கும் புதுமை வாகனம்!

வி.கே. ராஜமாணிக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
வி.கே. ராஜமாணிக்கம்

மக்களுக்குக் குறைந்த செலவில், இந்த சேவையை வழங்குவதே எங்களுடைய நோக்கம். பொதுவாக உடலை எரிக்க ரூபாய் பத்தாயிரத்திற்கும் மேல் செலவாகும்.

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, ஈரோட்டில், நடமாடும் நவீன மின் மயானம் அறிமுகமாகியுள்ளது. ஒரு ஆம்புலன்ஸ் வண்டிக்குள் பொருந்தக்கூடிய இந்தத் தகனமேடையை தொலைதூர கிராமங்களுக்கும் கொண்டு சென்று இறந்தவரின் உடலை எரியூட்ட முடியும்.

ரோட்டரி சங்கத்தினரால் வழங்கப்பட்ட நன்கொடையைக் கொண்டு ஈரோட்டு மாநகராட்சியுடன் இணைந்து, நடமாடும் நவீன மின் மயான வாகனத்தை, இங்கு 14 ஆண்டுகளாக இயங்கிவரும் ஆத்மா அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்த தகவல்களை ஆத்மா அறக்கட்டளையின் தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் பகிர்கிறார்.

அவலம் தீர்க்கும் புதுமை வாகனம்!

“கொரோனா சமயத்தில், கேரளாவில் இதுபோன்ற ஒரு நவீன மின் மயான இயந்திரம் இயங்கிவந்தது. அதை நேரில் சென்று பார்த்து, நம்ம மக்களுக்குப் பயன்படும் வகையில் பல மாற்றங்கள் செய்து அதைவிட நவீன இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இது கிராமப்புற மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப் பட்டது. ஒரு ஆம்புலன்ஸில் இந்த இயந்திரத்துடன், கேஸ் சிலிண்டர், ஜெனரேட்டர், போகஸ் லைட் போன்ற உபகரணங்களுடன் கிராமப்புறங்களை நோக்கி இந்த நடமாடும் மின் மயானம் பயணிக்கும்.

கிராமப்புறங்களில் குடியிருப்புக்கு வெளியே இருக்கும் மயானத்திலோ அல்லது அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்திலோ, ஆம்புலன்சில் இருக்கும் தகன மேடை இறக்கப்படும். பின்னர் அந்த ஆம்புலன்ஸ், இறந்தவரின் வீட்டுக்குச் சென்று, உடலை ஏற்றிக்கொண்டு வரும். அந்த உடல் தகன மேடையில் வைக்கப்பட்டு அனைத்து மரியாதைகளுடனும் எரியூட்டப்படும்” என்கிறார்.

அவலம் தீர்க்கும் புதுமை வாகனம்!

மயானங்களே இல்லாத, மயானத்துக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கும் கிராமங்களில் இந்த நடமாடும் மின் மயானம் பயனுள்ளதாக இருக்கும்.

“மக்களுக்குக் குறைந்த செலவில், இந்த சேவையை வழங்குவதே எங்களுடைய நோக்கம். பொதுவாக உடலை எரிக்க ரூபாய் பத்தாயிரத்திற்கும் மேல் செலவாகும். ஆனால் நாங்கள் 7,500 கட்டணத்தில் அதே சேவையை வழங்குகிறோம். கேஸ் கொண்டு உடல்கள் எரியூட்டப்படுவதால், ஒரு மணி நேரத்தில் அஸ்தி கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு. வண்டியில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.

தற்போது ஒரு வாகனம் மட்டுமே அறிமுகப்படுத்தி, அதை சோதனைமுறையில் இயக்கிவருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில், தேவையான மாற்றங்களும் வசதிகளும் செய்யப்பட்டு அதற்கேற்ப விலையையும் நிர்ணயித்து கூடுதலாக ஐந்து வாகனங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்கிறார் ராஜமாணிக்கம்.

வேலூர், வாணியம்பாடியில் ஆதிக்க சாதியினர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது உடல் தங்கள் பாதை வழியாகச் செல்லக் கூடாது என்று மறுத்ததால், இருபது அடி உயர பாலத்திலிருந்து கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு, பின் இடுகாட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அதேபோல, மழை வெள்ளத்தால் ஆறு நிரம்பியதன் விளைவாக, கழுத்து வரை தண்ணீரில் இறந்தவரின் உடலைச் சுமந்து சென்ற செய்தியும் புகைப்படமும், பார்ப்பவர் மனதைப் பதைபதைக்க வைத்தன.

வி.கே. ராஜமாணிக்கம்
வி.கே. ராஜமாணிக்கம்

இப்படி பல ஊர்களில், சாலை வசதி இல்லாதது, ஆதிக்க சாதியினர் பட்டியலின மக்களைத் தங்கள் வீடுகள் இருக்கும் சாலை வழியாக உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்காதது, சுடுகாட்டில் உடலைத் தகனம் செய்யவிடாமல் எதிர்ப்பது போன்ற பல இன்னல்கள் கடந்து தகனம் செய்யும் அவல நிலை இன்றும் நிலவிவருகிறது. அந்தக் குறையைத் தீர்க்கும்விதமாகவே இந்த நடமாடும் மயானம் வந்துள்ளது.

மரணத்துக்குப் பிறகும் கண்ணியம் காக்கப்பட, தமிழகம் முழுவதும் நடமாடும் மின் மயானம் தேவைப்படலாம். இதற்காக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கவும் ஆத்மா அறக்கட்டளை தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.