Published:Updated:

இளைஞர்களின் வேலைவாய்ப்புடன் விளையாடாதீர்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

இளைஞர்களின் வேலைவாய்ப்புடன் விளையாடாதீர்கள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் சமீபத்தில் வெளியிட்ட இரு அறிவிப்புகள், கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ‘‘அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மத்திய அரசில் 10 லட்சம் இளைஞர்கள் புதிதாக வேலைக்கு நியமிக்கப்படுவார்கள்’’ என்பது பிரதமரின் அறிவிப்பு. ‘‘அக்னிபத் என்கிற திட்டத்தின்மூலம் ராணுவப் பணியில் நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்’’ என்பது பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.

ராணுவத்தில் நீண்ட காலம் பணிபுரிவதற்கான வாய்ப்பை ஒழித்துக்கட்டும் முயற்சிதான் இந்த ‘அக்னிபத்’ அறிவிப்பு என உ.பி, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை தொடர்பான பிரச்னை என்பதால், அவர்கள் வன்முறையில் இறங்கி, ரயில்களைத் தீவைத்துக்கொளுத்தும் அளவுக்குப் போயிருக்கிறார்கள். இளைஞர்களின் இந்த எதிர்ப்பு பிற மாநிலங் களுக்கும் பரவினால், அது மத்திய அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிவிப்பு இப்படி எனில், பிரதமர் மோடியின் அறிவிப்பு, பல்வேறு கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது. ‘மத்திய அரசுப் பணியில் 10 லட்சம் பேரைப் புதிதாக வேலைக்குச் சேர்க்க வேண்டும் என்கிற அறிவிப்பை பிரதமர் இப்போது வெளியிட என்ன காரணம்? நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வந்தபின் அரசுப் பணிகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற சூழலில், மீண்டும் இத்தனை லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு எங்கே இருக்கிறது? ஒரு லட்சம் பேரை வேலைக்கு எடுப்பதற்குள்ளாகப் படாதபாடுபட்டது ரயில்வே துறை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளில் 10 லட்சம் பேரை எந்த அமைப்பின் மூலம் வேலைக்கு எடுக்க முடியும்? புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு சம்பளம் தருகிற அளவுக்கு மத்திய அரசிடம் போதுமான நிதி வசதி இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில்கள் கிடைக்காத வரையில், ‘தேர்தலை மனதில் வைத்தே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன’ என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் முன்வைக்கும் விமர்சனங்கள் உயிர்ப்புடன் தானே இருக்கும்!

வேலைவாய்ப்பு என்பது, எப்போதுமே இளைஞர்களின் உயிர்மூச்சு. ஆண்டு தோறும் கல்வி நிலையங்களிலிருந்து பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வரும் சூழலில், உரிய வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு செய்துதரா விட்டால், விரக்தி நிலைக்கு ஆளாகி, அழிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விடுவார்கள். அரசாங்க வேலையோ... தனியார் வேலையோ... உண்மையிலேயே இளைஞர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். அதைவிடுத்து, வாக்கு வங்கி அரசியலுக்காக ஏமாற்றும் அறிவிப்புகளை ஒருபோதும் வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால், நாமெல்லாம் கனவு காணும் நாளைய இந்தியா... கடைசிவரை கனவாகவேதான் இருக்கும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism