கல்வி, விவசாயம், வணிகம், வாழ்வாதாரம் என மக்கள் கடனுதவி பெற நேரடியாகச் சென்றோ, இதற்கென ஒதுக்கப்பட்ட தனித் தனியான இணையதளங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து வந்த நிலையில், இனி கல்வி, விவசாயம், வணிகம், வாழ்வாதாரம் என அனைத்துக்கும் ஒரே இணையதளத்தின் மூலம் விண்ணப் பிக்கலாம் எனத் தனி இணையதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லி விஞ்ஞான் பவனில் கடந்த திங்களன்று நடைபெற்ற மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் குறித்து அமைச்சகத்தின் சார்பில், ஐகானிக் வார கால கொண்டாட்ட நிகழ்வுகள் தொடங்கின. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட மோடி, அதைத் தொடர்ந்து https://www.jansamarth.in/home என்ற இணையதள பக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளம் 7 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் கல்விக் கடன், வேளாண்மை உள்கட்டமைப்பு கடன், வணிகக் கடன், வாழ்வாதாரக் கடன் என நான்கு பெரும் கடன் அமைப்புகளின் கீழ் மத்திய அரசு செயல்படுத்தும் 13 திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதோடு 125-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் கடன் வழங்குபவர்கள் இதில் உள்ளனர். எனவே, மக்கள் தங்கள் கடன் உதவிக்கான தேவைகளை இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் பட்சத்தில், மத்திய அரசின் மானியத்துடன் உடனடியாகக் கடன் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இணையத்திலேயே செய்து முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.