வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராகோவின் இக்ரேன் (Ighrane) மாகாணத்தில் நிகழந்திருக்கிற இந்தச் சம்பவத்திற்கு, தமிழ்நாட்டில் ஒரு முன் உதாரணம் உண்டு. திருச்சி மணப்பாறையில் சுஜித் என்கிற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை நாம் மறந்திருக்க முடியாது. அதேபோலான சம்பவம்தான் மொரோக்கா நாட்டில் நடந்திருக்கிறது. ரயான் அவ்ரம் (Rayan Awram) என்கிற 5 வயது சிறுவன், 32 மீட்டர், அதாவது 105 அடி ஆழமுள்ள துளை கிணற்றில் தவறி விழுந்தான். அந்தக் கிணறு சீரமைப்புக்காகத் திறக்கப்பட்டிருந்தது.
ஐந்து நாள்கள் கடும் போராட்டம் தொடர்ந்தது. நெகிழக் கூடிய நிலப்பரப்பு என்பதால் வேலை துரிதமாக நிறைவடையவில்லை. துளைக்கு அருகே இயந்திரங்களைக் கொண்டு இன்னொரு துளை அமைத்து பக்கவாட்டில் குழந்தையை மீட்கும் பணி ராப்பகலாக தொடர்ந்து நடந்து வந்தது.
#SaveRayan என்கிற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாக, பல தரப்பிலிருந்தும் பிரார்த்தனைகள் குவியத் தொடங்கின. கடைசி 20 மணிநேரத்திற்கு Bwa Sahraoui என்கிற தொழிலாளி வெறும் கைகளைக் கொண்டே மண்ணைத் தோண்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ரயானுக்கு அனுப்பப்பட்ட குடிநீர், உணவு போன்றவை முறையாக அவனைச் சென்று சேர முடியாமல் போய்விடவே துரதிர்ஷ்டமாக சிறுவன் இறந்த நிலையில்தான் மீட்கப்பட்டான்.

மொரோக்கோ அரசர் முஹம்மது VI தன்னுடைய இரங்கலை ரயானின் குடும்பத்திற்குத் தெரிவித்தார். பிரான்ஸ் குடியரசு தலைவர் இமானுவேல் மக்ரூன் அந்தக் கிராம மக்களுக்கும் பெற்றோருக்கும் தன்னுடைய ஆறுதலைப் பதிவு செய்தார்.
மூன்று நாள்களுக்கு மேலாக தன்னை மீட்பு பணியில் ஈடுபடுத்திக் கொண்ட Bwa Sahraoui என்கிற தொழிலாளியின் வீடியோவும் படங்களும் பகிரப்பட்டு அவருக்கு தங்களுடைய நன்றியை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.