Published:Updated:

`மாணவி இறப்புக்குப் பள்ளியில் இருந்த கொசுதான் காரணம்!’- ரூ.1 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்

நட்சத்திரா
News
நட்சத்திரா

வேலூரில், டெங்கு காய்ச்சலால் மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக, அவர் படித்த தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருக்கிறார்கள், அதிகாரிகள்.

Published:Updated:

`மாணவி இறப்புக்குப் பள்ளியில் இருந்த கொசுதான் காரணம்!’- ரூ.1 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்

வேலூரில், டெங்கு காய்ச்சலால் மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக, அவர் படித்த தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருக்கிறார்கள், அதிகாரிகள்.

நட்சத்திரா
News
நட்சத்திரா

வேலூரை அடுத்த பள்ளிகொண்டா வெட்டுவாணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், ஐட்ரஸ் என்கிற சரண்ராஜ். இவரது நான்கு வயது மகள் நட்சத்திரா, அங்கிருக்கும் ‘சிக்ஷா கேந்திரா’ தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி படித்துவந்தார். கடந்த 15 நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சி.எம்.சி மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். 

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ``மாணவியின் இறப்புக்கு அவள் படித்த பள்ளியில் இருந்த கொசுக்கள்தான் காரணம். எனவே, அந்தப் பள்ளி நிர்வாகம் ரூ.1 லட்சம் அபராதம் கட்டவேண்டும்’’ என்று பள்ளிகொண்டா தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கையில், ‘‘கலெக்டர் சண்முக சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில், சிக்ஷா கேந்திரா பள்ளியில் ஆய்வுசெய்தோம். 

பள்ளியின் சுற்றுப்புறத்திலும், கட்டடங்களின் மேற்பகுதியிலும் நீர் தேங்கும் நிலையில் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகளில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். இதனால் டெங்கு காய்ச்சல், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் வியாதிகளும் வரக்கூடும். மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது.

கொசு
கொசு

தவிர, பொதுச்சுகாதார விதிகளின்படி ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருக்கிறோம். கடிதம் கிடைக்கப்பெற்ற 24 மணிநேரத்துக்குள் பள்ளியை முழுமையாகச் சுத்தம் செய்து அபராதத் தொகையைச் செலுத்தவேண்டும். தவறினால், பள்ளி நிர்வாகிகள் மீது துறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக, சிக்ஷா கேந்திரா பள்ளி தாளாளரிடம் பேசினோம். ``கடந்த மாதம் 20-ந் தேதி தேர்வுகள் முடிந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டன. அக்டோபர் 3-ம் தேதிதான் பள்ளியைத் திறந்தோம். அக்டோபர் 1-ம் தேதியே மாணவி நட்சத்திராவுக்கு காய்ச்சல் இருந்ததாகப் பெற்றோர் எங்களிடம் சொல்லியிருக்கிறார்கள். விடுமுறைக்கு இடைப்பட்ட நாள்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை. மாணவிக்குக் காய்ச்சல் குறையாததால் தனியார் கிளினிக்கில் பார்த்துள்ளனர். 

நட்சத்திரா
நட்சத்திரா

பல்வேறு மருத்துவமனைகளில் மாறிமாறி சிகிச்சை எடுத்துக்கொண்டதில் மட்டும் 12 நாள்களை எடுத்துக்கொண்டுள்ளனர். குழந்தையின் தரப்பிலிருந்து யாரும் எங்களிடம் விளக்கம் கேட்டு வரவில்லை. அதிகாரிகள் சில காரணங்களுக்காக எங்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். அரசை எதிர்த்து எங்களால் எதுவும் செய்யமுடியாது. பசுமை நிறைந்த சூழலில்தான் பள்ளி அமைந்திருக்கிறது. 

நிலவேம்பு கசாயம், சுடு தண்ணீரை மாணவர்களுக்கு வழங்குகிறோம். அனைத்துக் குழந்தைகளையும் கவனமாகத்தான் பார்த்துக்கொள்கிறோம். மாணவி நட்சத்திராவின் இறப்பு தாங்கிக்கொள்ள முடியாத இழப்புதான். அவரது இறுதிச்சடங்கில் நாங்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினோம். பள்ளிகொண்டா பேரூராட்சியின் மொத்தக் குப்பையையும் எங்கள் பள்ளியிலிருந்து 500 மீட்டர் தூரத்தில்தான் கொட்டுகிறார்கள். 

பள்ளி அருகில் குப்பை
பள்ளி அருகில் குப்பை

இதை நாங்கள் பலமுறை புகாராகச் சொல்லிவிட்டோம். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. குப்பையை இன்னமும் கொட்டுகிறார்கள். பள்ளியைச் சுத்தமாகத்தான் வைத்திருக்கிறோம்’’ என்றார். ‘‘பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளாத அதிகாரிகள், ஏதாவது ஒரு காரணம் கூறி அபராதம் வசூலிப்பதில் மட்டும் குறியாக இருப்பதாக’’ சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.