
பளு தூக்குதலில் பலம் காட்டும் மாசிலாமணி
கோவை, குனியமுத்தூரில் உள்ள ஜிம். ஞாயிறு காலை 7 மணி. ஆண்களுக்கு நிகராக உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர் அம்மா - மகள் ஜோடியான மாசிலாமணி, தரணி. சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான பளு தூக்குதல் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில், 77.5 கிலோ தூக்கி அம்மா தங்கம் வெல்ல, இதே போட்டியில் 47 கிலோ எடை பிரிவில், 72.5 கிலோ தூக்கி வெண்கலம் அடித்துள்ளார் மகள்.
‘`நான் பண்ணினது சாதனையா தெரியாது. ஆனா, எங்கம்மா நிச்சயமா சாதனையாளர் தான். ஏன்னா, இந்த 40 வயசுல, ரெண்டு வீட்டுல வேலை பார்த்துட்டே வெயிட் லிஃப் டிங்ல தங்கம் வாங்குறது அசாதாரணமானது தானே?!’’ என்று அதிரடி அறிமுகம் கொடுக் கிறார் தரணி. பெருமையும் கூச்சமுமாகப் பேச ஆரம்பிக்கிறார் மாசிலாமணி.
“நான் பிறந்து, வளர்ந்தது காந்திபுரம். என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தது குனியமுத்தூர். வீட்டுக்காரர் ரமேஷ் தினக்கூலி வேலை செய்றாரு. நான் ரெண்டு வீட்டுல வீட்டுவேலை செஞ்சுட்டு இருக்கேன். எங்களுக்கு மூணு பொண்ணுங்க. மூத்தவ தர்ஷிணிக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ரெண் டாவது பொண்ணு தரணி, பதினோராவது படிக்கிறா; இவளும் என்கூட போட்டியில பதக்கம் ஜெயிச்சது அவ்ளோ பெருமை. மூணாவது பொண்ணு காவ்யா, பதினோராவது படிக்கிறா.

நான் ரொம்ப குண்டா இருந்தேன். எப்படி உடம்பை குறைக்கிறதுனு, நான் வேலைசெய்யுற வீட்டுப் பொண்ணுகிட்ட கேட்டேன். ஜிம்முக்கு போங்கனு சொன்னாங்க. அதுக் கெல்லாம் காசு கட்ட முடியாதேனு சொன்னப்போ, அவங்களே காசு கட்டி என்னை இங்க சேர்த்துவிட்டாங்க. இங்க உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சப்போ, சிவா மாஸ்டர் ஒரு பொண்ணுக்கு வெயிட் லிஃப் டிங் போட்டிக்குப் பயிற்சி கொடுத்துட்டு இருந்தாரு. `நானும் இதைத் தூக்கலாமா?’னு மாஸ்டர்கிட்ட கேட்டப்போ, `இங்க எல்லாமே எல்லாருக்கும் பொதுவானது, வந்து தூக் குங்க’னு சொன்னார். அப்புறம் அதுல என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, என்னைப் போட்டிக்குத் தயார் பண்ண ஆரம்பிச்சுட்டார். இப்படி, என் வெற்றிக்குப் பின்னால நிறைய நல்ல மனுஷங்க இருக்காங்க’’ என்றவர், சிவக்குமார் மாஸ்டரை அறிமுகம் செய்தார்.
``மாசிலாமணிக்கு, திறமையோடு கூடவே ஆர்வமும் இருக்குறதுதான் சிறப்பு. ‘40 வய சாச்சு, மூணு பொம்பளப் புள்ளைங்க இருக்குங்க, நானே வீட்டுவேலை பார்க்கி றேன், இதெல்லாம் தேவையா’னு எல்லாம் அவங்ககிட்ட எந்தத் தயக்கமும் இருக்காது. நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதை கெட்டியா பிடிச்சுக்கிட்டு சாதனை வரை போவோம்னு தயாரான அவங்க தன் முனைப்புதான் வியப்புக்குரியது. கஷ்டப் படுற குடும்பம். அதனால இப்போ அவங்க சாதாரண உணவுதான் சாப்பிடுறாங்க. போட்டியாளர்களுக்கான சத்துணவு சாப் பிட்டா, இன்னும் சாதனைகள் செய்வாங்க’’ என்று கூறும் மாஸ்டர், ஆசிய பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்றவர்.
தரணி, “அம்மாவைப் பார்த்து ஆசை வந்து தான் நானும் ஜிம், போட்டினு இவ்வளவு தூரம் வந்திருக்கேன். போட்டியில நானும் அம்மாவும் ஜெயிச்சதும், நிறைய பேர் பாராட் டினாங்க” என்றவர், “எங்க வீட்டுக்கு வாங்க, பக்கத்துலதான் இருக்கு. அப்போதான் எங்க நிலைமை புரியும் உங்களுக்கு. அந்த வீடு, எங்கம்மா முன்ன வேலை பார்த்தவங் களோடது. வாடகை இல்லாம தங்கிக்க சொல்லியிருக்காங்க’’ என்று சொல்லி அழைக்க, அவருடன் சென்றோம்.
இரண்டு சிறிய அறைகளைக் கொண்ட சிறிய வீடு. மூன்றாவது பெண் காவ்யா நம்மை வரவேற்க, “நானும் அம்மாவும் சாயங்காலம் 6 மணிக்கு வொர்க்அவுட் பண்ணப் போனா, உடம்புல இருக்குற மொத்த எனர்ஜியும் கரைஞ்சு போய் டயர்டாகி நைட் 9 மணிக்குத் தான் வந்து சேருவோம். காவ்யாதான் எங்களுக்காக சமைச்சு வெச்சு, வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சு வெச்சிருப்பா’’ என்று சொல்ல, அம்மா, சகோதரிகள் என வீட்டுப் பெண்கள் ஒருவரையொருவரை ஊக்கப்படுத்திக்கொள்ளும் அந்த அன்பு, அழகாக இருந்தது.

மாசிலாமணி தன் கணவர் பற்றி சொன்ன போது, “ஆரம்பத்துல, போட்டிக்குப் போறேன்னு சொன்னப்ப என் வீட்டுக்காரர் ஒப்புக்கல. அப்புறம், என்னை ஜிம்ல சேர்த்து விட்ட பொண்ணுதான் பேசி சம்மதிக்க வெச்சாங்க. ஆனா, இப்போ நிலைமை தலை கீழ். என் வீட்டுக்காரர் என்னை வீட்லயே இருக்க விடுறதில்ல, `ஜிம்க்கு போங்க’னு விரட் டிட்டே இருக்கார்’’ என்று சிரித்தவர்...
“நான் இதுக்கு முன்னாடி வெளியூருக்குக் கூட தனியா போனதில்ல. திருச்சியில போட்டியில கலந்துக்க போனப்போ, அந்தப் போட்டியாளர்களை எல்லாம் பார்த்துட்டு மிரண்டுட்டேன். ‘சரி ஜெயிக்கிறோமோ இல்லையோ, தைரியமா கலந்துப்போம்’னு என்னால முடிஞ்சளவு முயன்றேன். தங்க மெடலை கையில வாங்கினப்போ, என் முதல் குழந்தையைக் கையில வாங்கினப்போ எவ்ளோ சந்தோஷப்பட்டேனோ, அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு” - நெகிழ்ந்துபோகிறார் மாசிலாமணி.
``எனக்கு மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளம். அடுத்து, தேசிய அளவிலான போட்டி. ஆனா டிரஸ், பேண்ட் (Band), பெல்ட் இன்னும் வாங்கல. போக்குவரத்துக் குக்கூட காசு இல்ல. போன போட்டிக்கே, கூட பயிற்சி செய்யுற பொண்ணுங்க தந்த டிரஸ்ஸைதான் போட்டுக்கிட்டேன். இந்தப் போட்டிக்கு எனக்கு இல்லைன்னாலும், என் பொண்ணுக்குத் தேவையானதை வாங்கணும். சிலர் காசு கொடுத்து உதவியிருக்காங்க. இன் னும் கொஞ்சம் தேவைப்படுது. இதுவரை வந்திருக்கோம், இனியும் வழி கிடைக்கும்னு நம்புறோம். போட்டி முடிஞ்சு வந்த காலை யிலேயே, மெடலை சுவத்துல மாட்டிட்டு வீட்டு வேலைக்கு ஓடிட்டேன்’’ - வறுமை தன் புன்னகையை மாற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளும் மாசிலாமணி, இப்படிச் சொல்லி முடித்தார்...
“பொண்ணுங்களா... யாருமே வீட்டோட இருந்துடாதீங்க. வெளியே வாங்க, ஜெயிப்போம்!”