அலசல்
சமூகம்
Published:Updated:

தாய்-சேய் நல விடுதி இடிப்பு... எடப்பாடி பழனிசாமி காரணமா? - சேலம் சர்ச்சை!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

கோயில் நிலத்தில், யாரும் அரசுக் கட்டடம் கட்ட மாட்டார்கள். அரசு நிலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த தாய்-சேய் நல விடுதி.

“புதிய கட்டடம் கட்டப்போவதாகச் சொல்லி, தாய் – சேய் நல விடுதியை இடித்துத் தள்ளிவிட்டு, இப்போது புதிய கட்டடம் கட்டவிடாமல் தடுக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இது எல்லாவற்றுக்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்” என்கிறார்கள் பெரியசோரகை கிராம மக்கள்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகை கிராமத்தில்தான் அந்தத் தாய் - சேய் நல விடுதி இருந்தது. சென்றாயபெருமாள் கோயில் அருகே கடந்த 45 ஆண்டுக்காலமாகச் செயல்பட்டுவந்த இந்த மருத்துவமனையை, புதிய கட்டடம் கட்ட நிதி வந்திருப்பதாகக் கூறி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இடித்திருக்கிறார்கள் அரசு அலுவலர்கள். பின்னர் அதே இடத்தில் வேலைகளைத் தொடங்கியபோது, அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த சிலர், “இங்கு கட்டடம் கட்டக் கூடாது. இது பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடம்” என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்துப் புகார்கள் வரவே, கள விசாரணைக்காகச் சென்றோம்.

தாய்-சேய் நல விடுதி இடிப்பு... எடப்பாடி பழனிசாமி காரணமா? - சேலம் சர்ச்சை!

பெரியசோரகை கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன் நம்மிடம், “நான் பிறந்ததே இந்த தாய் - சேய் நல விடுதியில்தான். நான் மட்டுமல்ல, இந்த ஊரில் இருக்கும் பாதிப்பேர் இந்த மருத்துவமனையில் பிறந்தவர்கள்தான். குறைந்தபட்சம் செவிலியர்களாவது 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்பதால், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள், பிரசவத்துக்காகவும், அது தொடர்பான சிகிச்சைக்காகவும் இங்கேதான் வருவார்கள்.

இதை இடிக்கப்போவதாக அரசு அலுவலர்கள் சொன்னபோது வருத்தமாக இருந்தது. `உடனே கட்டடப் பணிகளைத் தொடங்கிவிடுவோம்’ என்று உறுதிகொடுத்துவிட்டுத்தான் இடித்தார்கள். அதன்படி, ஒரே மாதத்தில் கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான கார்த்திகேயன், அவரின் அண்ணன் வெங்கடாசலம் மற்றும் சிலர், ‘இங்க தாய்-சேய் நல விடுதி கட்டக் கூடாது. இது கோயில் இடம்’ என்று சொல்லி பிரச்னை செய்தார்கள். இதற்குப் பின்னால், பெரிய அரசியலே இருக்கிறது.

தாய்-சேய் நல விடுதி இடிப்பு... எடப்பாடி பழனிசாமி காரணமா? - சேலம் சர்ச்சை!

அதாவது, இந்த ஊரில் இருக்கும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான சென்றாயபெருமாள் கோயில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இஷ்ட தெய்வம். அடிக்கடி கோயிலுக்கு வரும் அவர், தன் சொந்த முயற்சியால் கோயிலை விரிவாக்கம் செய்ததோடு, கும்பாபிஷேகத்தையும் நடத்திவைத்தார். அதிலிருந்து மேட்டூர் வரும்போதெல்லாம் இந்தக் கோயிலுக்குச் செல்வதையும், தேர்தல் பிரசாரத்தை இந்தக் கோயிலில் வழிபட்டுவிட்டுத் தொடங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் அவர். எனவே, இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டதற்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. உள்ளூர் அ.தி.மு.க-வினரோ அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், புதிய கட்டடம் கட்டுவதை எதிர்க்கிறார்கள். இந்த மருத்துவமனை கட்டப்படவில்லை என்றால், சுற்றுவட்டார மக்கள் பிரசவத்துக்காக மேட்டூர், சேலம் அரசு மருத்துவமனைகளுக்குத்தான் போக வேண்டியிருக்கும்” என்றார் வருத்தத்துடன்.

இது குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் பேசியபோது, “இந்த ஊரின் ஊராட்சித் தலைவராக இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இந்தக் கட்டடம் அமைந்திருப்பது பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்தான். அந்த இடத்துக்கான ஆவணங்கள்கூட கோயில் நிர்வாகத்திடம்தான் இருக்கிறது. ‘இந்த ஊருக்கு தாய்-சேய் நல விடுதியே வேண்டாம்’ என்று நாங்கள் சொல்லவில்லை. இந்த இடத்தில் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். காரணம், சேலத்தின் முக்கியக் கோயிலாக சென்றாயபெருமாள் கோயில் திகழ்கிறது. முன்னாள் முதல்வர் இ.பி.எஸ் உட்பட பெரிய பெரிய வி.ஐ.பி-க்களெல்லாம் கோயிலுக்கு வந்து போகிறார்கள். பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, திருவிழாக் காலங்களில் பக்தர்கள் நிற்பதற்குக்கூட இடம் இருப்பதில்லை. எனவேதான், கோயில் இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் மருத்துவமனை கட்டச் சொல்கிறோம்” என்றார்.

அறநிலையத்துறை நிலத்தில் தாய்-சேய் நல விடுதி இருந்ததாகச் சொல்லப்படுவது பற்றி மேட்டூர் தாசில்தார் முத்துராஜிடம் கேட்டோம். “கோயில் நிலத்தில், யாரும் அரசுக் கட்டடம் கட்ட மாட்டார்கள். அரசு நிலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த தாய்-சேய் நல விடுதி. இது எங்களது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்துவரும் இடம். எனவே, கூடிய விரைவில் அதே இடத்தில் தாய்-சேய் நல விடுதி கட்டப்படும்” என்றார்.

சடையப்பன், புனிதராஜ்
சடையப்பன், புனிதராஜ்

இடம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு, சென்றாயபெருமாள் கோயிலின் செயல் அலுவலர் புனிதராஜிடம் பேசினோம். “ஆமாம். கோயில் இடத்தில்தான் இத்தனை காலமாக தாய்-சேய் நல விடுதி இயங்கிவந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் அறநிலைத்துறையிடம் இருக்கின்றன. தற்போது இந்த இடம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் வருவதாக அதிகாரிகள் கூறியதன்பேரில், நான் எங்களது துறை மேலதிகாரிகளுக்குத் தகவல் அளித்திருக்கிறேன். அவர்கள் விசாரணை செய்த பின்னர் இந்த இடத்தில் கட்டடம் கட்டலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படும்” என்றார்.

பழைய கட்டடத்தை முன்னின்று இடித்ததாகக் கூறப்படும் நங்கவள்ளி வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெகதீசனிடம் பேசினோம். “புதிய கட்டடம் கட்டுவதற்காக 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதே இடத்தில் கட்டுவதற்கு அந்த ஊர் பொதுமக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். கட்டடம் அமையப்போகும் இடத்துக்கு அருகிலுள்ள சில குடும்பத்தினர் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மற்றொருபுறம் கோயில் நிர்வாகத்தினர், இடம் தங்களுடையது என்கின்றனர். ஆகையால் வருவாய்த்துறையினரிடம், நிலத்தை மீட்டுத்தரக் கோரி மனு அளித்திருக்கிறேன்” என்றார்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியனும், சேகர் பாபுவும் உடனே தலையிட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால், மதவாதிகளும் உள்ளே புகுந்துவிடுவார்கள் என்பதே ஊர் மக்களின் கவலையாக இருக்கிறது!