அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

வலிக்குது அம்மா..! - விநோத நோயால் துடிக்கும் மகன்... பரிதவிக்கும் தாய்... உதவி கேட்கும் குடும்பம்

வளர்மதி, சரண்சங்கீத்
பிரீமியம் ஸ்டோரி
News
வளர்மதி, சரண்சங்கீத்

என் பையன் இப்போ வரைக்கும் ஒரு கைக்குழந்தை மாதிரிதான். பிறப்பிலிருந்தே அவனுக்கு மனவளர்ச்சி பாதிப்பு இருக்கு

‘பசிக்குது அம்மா... வலிக்குது அம்மா...’ இந்த வார்த்தைகளை மட்டுமே மழலை மொழியில் சதா உச்சரித்துக்கொண்டிருக்கும் தன் மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக, பல தரப்பிலும் உதவி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார் ஏழைத் தாய் வளர்மதி!

வேலூர் அருகேயுள்ள அரியூர், ஜெகஜீவன்ராம் தெருவில் வசிக்கும் வளர்மதியின் வீட்டுக்குள் அன்பும் அரவணைப்பும் நிறைந்திருக்கின்றன. ஆனால் நோய்மையும் வறுமையும் வீட்டின் சந்தோஷத்தை மொத்தமாகக் குதறிப் போட்டிருக்கின்றன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 19 வயது மகனை வைத்துப் போராடிக்கொண்டிருக்கும் இந்தத் தாயின் நிலையையும் துயரத்தையும் அறிந்தால் கல்லும் கரைந்துவிடும்.

உடல் மற்றும் மனநிலைக் குறைபாட்டால் போராடும் மகன் சரண்சங்கீத், பள்ளிக்குச் செல்லும் 11 வயது மகள் ரதிகேஷரி ஆகியோரோடு வாழ்க்கையை ஒரு போராட்டம்போல வாழ்ந்து கொண்டிருக்கும் வளர்மதியின் துயரத்தைக் கேள்வியுற்று, அவரது வீட்டுக்குச் சென்றோம்.

வலிக்குது அம்மா..! - விநோத நோயால் துடிக்கும் மகன்... பரிதவிக்கும் தாய்... உதவி கேட்கும் குடும்பம்

பல விரிசல்களைக் கொண்ட அந்தப் பழைய வீட்டின் சுவர்களில் செடிகள் முளைத்துக் கொண்டிருக் கின்றன. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இரண்டு கண்களும் வெடிக்கும் நிலையிலான பாதிப்பில் சுருண்டு கிடக்கிறான் அவர் மகன் சரண்சங்கீத்.

தன் வலியை, நோயின் தீவிரத்தை வாய்விட்டுச் சொல்லத் தெரியாத அந்தச் சிறுவன், தன் தாய் மடியிலேயே சாய்ந்துகிடக்கிறான்.

‘‘எம் பிள்ளைகளை நினைச்சு அழுது அழுது என் கண்ணீரும் வத்திப்போச்சுங்க’’ என்றபடியே பேசத் தொடங்கினார் வளர்மதி. ‘‘என் பையன் இப்போ வரைக்கும் ஒரு கைக்குழந்தை மாதிரிதான். பிறப்பிலிருந்தே அவனுக்கு மனவளர்ச்சி பாதிப்பு இருக்கு. ‘அம்மா’ன்ற வார்த்தையைத் தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரியாது. ஆயிரம் பேர் தொட்டாலும், என் கைபட்டவுடனே மட்டும் ‘அம்மா’னு சொல்லுவான். என் குரல் கேட்கக் கொஞ்சம் நேரமானாலும் துடிதுடிச்சுப் போயிருவான். அவனோட உடலுக்குத்தான் 19 வயதாகுது. அவன் மூளைக்கும் மனசுக்கும் வயசே கெடையாது; வளர்ச்சியும் கெடையாது. சாப்பாடு ஊட்டுறது, துணிமணி மாட்டிவிடுறதுனு ஒரு குழந்தையைப்போலத்தான் அவனை இப்போவும் கவனிச்சுக்கிட்டிருக்கேன்.

என்னோட வீட்டுக்காரர் ஸ்ரீதர்பாபு செக்யூரிட்டி வேலைக்குப் போய்க்கிட்டிருந்தார். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவருக்கு திடீர்னு கிட்னி பாதிப்பு ஏற்பட்டுச்சு. டயாலிசிஸ் பண்ணிக்கிட்டிருந்தோம். திடீர்னு ஒருநாள் அவரும் என்னைத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டார். அப்போதான் என் பையனோட பார்வையும் திடீர்னு பறிபோச்சு. அவனோட ரெண்டு கருவிழிகளிலும் பெரிய கட்டி வளர்ந்துக்கிட்டிருக்கு. அது என்ன நோய்னே தெரியலை. ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகவும் கையில காசு இல்லை. நாங்க இருக்கிற இந்த வீட்டுக்கு 500 ரூபாய் வாடகை. அதையே என்னால கொடுக்க முடியலை. மாசம் எனக்கு விதவை பென்ஷன் 1,000 ரூபாயும், பையனுக்கு மாற்றுத்திறனாளி பென்ஷன் 1,000 ரூபாயும்தான் கிடைக்குது. இந்த 2,000 ரூபாயைத் தவிர வேறு வருமானம் கிடையாது.

மாமனார், மாமியாரும் காலமாகிட்டாங்க. என் அப்பாவும் இறந்துட்டார். ஆதரவுக்கு வேற யாரும் கிடையாது. எங்கே போய், யார்கிட்ட உதவி கேட்குறதுன்னும் தெரியலை. அதுவுமில்லாம இப்போல்லாம் என் பையனுக்கு அடிக்கடி வலிப்பும் வருது. அதுக்கும் மருந்து கொடுத்துக்கிட்டிருந்தேன். இப்போ, வலிப்பு மருந்து வாங்கவும் காசு இல்லாம விட்டுட்டேன். கிடைக்கிற பென்ஷன் பணம், சாப்பாட்டுக்குக்கூட பத்த மாட்டேங்குது. என் பொண்ணு பக்கத்துல இருக்குற கவர்மென்ட் ஸ்கூல்ல ஆறாம் வகுப்பு படிக்கிறா. காலையில வீட்ல சாப்பாடு இருந்தா சாப்பிடுவா. அவ ஸ்கூலுக்குப் போறதே முதல்ல சாப்பாட்டுக்காகத்தான். என்னோட குடும்ப நிலையை முதலமைச்சர் ஐயா கவனத்துக்குக் கொண்டுபோய் உதவி பண்ணுங்கய்யா...’’ என்று கண்கலங்கினார்.

அவர் சொல்லச் சொல்ல நம் கண்களும் கலங்கின. ‘விரைவில் உதவி கிடைக்கும்’ என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு நாம் அங்கிருந்து புறப்பட்டோம்.

இந்தத் தாய்க்கு அரசு உதவ வேண்டும்!