சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“மயானத்துக்கு வெளியேதான் பயம்!”

சீதா
பிரீமியம் ஸ்டோரி
News
சீதா

அதுக்கப்புறம் அப்பாவை பாக்கவே பிடிக்கலே. அக்காவோட போயிட்டேன். மாமாவும் அக்காவும் பெத்த புள்ள மாதிரி பாத்துக்கிட்டாக.

கருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது சேலம் டி.வி.எஸ். மயானம். சிறிதும் பெரிதுமாக சமாதிகள், உடலைச் சுமந்துகொண்டிருக்கிற மண் திட்டுகள்... ஒரு மூலையில், கழுத்தளவு ஆழத்துக்குக் கீழே குழி வெட்டிக்கொண்டிருக்கிற சீதா நிமிர்ந்து பார்த்து, “வாங்கண்ணா...” என்று முகம் மலர சிரித்து வரவேற்கிறார்.
“மயானத்துக்கு வெளியேதான் பயம்!”

“திடீர் திடீர்னு உடலைத் தூக்கிட்டு வாராங்கண்ணா... அதான் சும்மா இருக்கும்போது குழி வெட்டி வச்சுக்கிட்டா வந்தவங்கள காக்க வைக்காம அனுப்பலாம்ல...” - 32 வயதாகும் சீதாவின் முகத்தில் கனிவும் கருணையும் நிறைந்திருக்கிறது. பத்து வயதில் மயானத்துக்குள் வந்தவர். 20 ஆண்டுகளில் பத்தாயிரம் உடல்களுக்கு மேல் அடக்கம் செய்திருக்கிறார்.

எல்லா இடங்களிலும் உடல்கள் புதைந்திருக்கிற அந்த வெளியில் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இயல்பாக இருக்கிறார் சீதா. அவ்வளவு பக்குவமாகப் பேசுகிறார். ஈரம் காயாத சிறிய புதைவிடம் ஒன்றில் மஞ்சளும் பூவும் நிறம் மங்காமல் கிடக்கின்றன. ஊதுவத்தி புகைந்துகொண்டிருக்கிறது.

சீதா
சீதா

“நேத்து ஒருத்தர் ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிட்டு வந்தார்ண்ணா.... அவ்வளவு ஆசையா வளர்த்திருக்கார். திடீர்ன்னு இறந்துபோச்சு. புள்ளையை ஏந்திக்கிட்டு வர்றது மாதிரி கொண்டு வந்தார். வாங்கி இந்த இடத்துலதான் புதைச்சேன். காலையிலதான் பால் தெளிச்சு கற்பூரம் ஏத்தினேன்...” மெல்லிய சிரிப்பில் சோகம் படிகிறது.

பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சீதா. இந்தத் தொழிலோடு அவரது குடும்பத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை. காலம் சீதாவை இங்கே நடத்திக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகளோடு பிறந்தவர். அப்பாவுக்குக் கூலி வேலை. மிகவும் சிரமமான ஜீவனம்.

“மயானத்துக்கு வெளியேதான் பயம்!”

“அப்பா ரொம்பக் குடிப்பார்ண்ணா... வேலைக்குப் போகமாட்டார். அம்மாதான் எங்களுக்காகக் கெடந்து கஷ்டப்பட்டுச்சு. நாங்கெல்லாம் சின்ன வயசுலயே அம்மாவோட கஷ்டத்தை உணர்ந்து வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டோம். பாக்கு உரிக்கிறது, களை வெட்டுறதுன்னு கிடைக்கிற வேலைக்குப் போவோம். வாரம் முழுதும் வேலை செஞ்சு கூலி வாங்கிட்டு வந்தா, அப்பா பறிச்சுக்கிட்டுப் போய் குடிச்சு அழிச்சிட்டு வந்திருவாரு. அதுமட்டுமில்லை... போதையில அம்மாவப் போட்டு அடிப்பாரு. அடி, உதை, பட்டினின்னு அம்மா ரொம்ப சிரமப்பட்டுப்போச்சு.

கடனைவுடனை வாங்கி அக்காக்களுக் கெல்லாம் கல்யாணம் முடிச்சி வச்சிருச்சு. அப்போ எனக்கு எட்டு வயசு. மறுநாள் ஆடி ஒண்ணு. ஏழெட்டுத் தேங்காய்களை வாங்கிட்டு வந்து வச்சுட்டு, ‘நாளைக்கு அக்காக்களுக்கு தேங்காய் சுட்டுக் கொடுக்கணும்டி’ன்னு சொல்லிட்டுப் படுத்துச்சு. அப்போ பார்த்து அப்பா வீட்டுக்கு வர, ஏதோ ஒரு சண்டை... கோபத்துல அம்மா நெருப்பை வச்சுக்குச்சு. உடம்பெல்லாம் வெந்துபோச்சு.

என்னைய வீட்டுல விட்டுட்டு அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. மறுநாள் எந்த ஆஸ்பத்திரின்னுகூட தெரியாம ‘எங்க அம்மாவைக் கொண்டு வந்தாங்களா’, ‘அம்மாவைக் கொண்டு வந்தாங்களா’ன்னு ஒவ்வொண்ணா ஏறி ஏறி இறங்கினேன். கடைசியா கண்டுபிடிச்சு அம்மாவைப் போய் பாத்தா முகமெல்லாம் வீங்கிப்போய் கிடந்துச்சு. எங்கையைப் புடிச்சுக்கிட்டு, ‘என்னைய சாக விட்றாத புள்ள... உனக்குக் கல்யாணமெல்லாம் பண்ணிப் பாக்கணும்... எப்படியாவது காப்பாத்திப்புடு’ன்னு சொன்னுச்சு...” கண்கள் அரும்ப, உதடு மடக்கி அழுகையைக் கட்டுப்படுத்துகிறார் சீதா.

“மயானத்துக்கு வெளியேதான் பயம்!”

‘‘ஒரு மாசம் ஆஸ்பத்திரியிலயே கிடந்துச்சு. எங்க அக்காவை ஒரு மலை கிராமத்துல கட்டிக் கொடுத்திருக்கோம்ணா. அந்த ஊருக்கு காலையில ஒரு பஸ்ஸு, சாயங்காலம் ஒரு பஸ்ஸுதான். ஒருநாள், ‘அக்காவக் கூட்டிக்கிட்டு வந்து அம்மாவுக்குப் பக்கத்துல வச்சுக்கலாம்’னு அந்த ஊருக்குக் கிளம்பிப் போயிட்டேன். இங்கே அம்மா இறந்துபோச்சு. ‘தீப்பிடிச்சுக் கெடந்த உடம்பு... உடனே அடக்கம் பண்ணிடணும்’னு டாக்டருங்க சொன்னதால, நாங்க வந்து பாக்குறதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சுட்டாங்க. மகளா இருந்து ஒரு பிடி மண்ணள்ளிப் போட முடியலே அம்மாவுக்கு...” - கலங்கும் சீதாவை சம்பிரதாயமான வார்த்தைகளால் ஆறுதல்படுத்த முயல்கிறேன்.

“அதுக்கப்புறம் அப்பாவை பாக்கவே பிடிக்கலே. அக்காவோட போயிட்டேன். மாமாவும் அக்காவும் பெத்த புள்ள மாதிரி பாத்துக்கிட்டாக. சேலத்துக்கே குடி வந்துட்டோம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவை அடக்கம் செஞ்ச எடத்துக்குப் போயி மஞ்சள் போட்டு பாலூத்தி பூ சாத்திட்டு வருவேன். எங்க அக்கா வீட்டுக்காரர் கட்டடங்கள் கட்டுறவர். அப்பப்போ அவர்கூடப் போய் சில உதவிகள் செய்வேன். அப்படிப் போனபோதுதான் ராஜம்மா பாட்டி அறிமுகமானாங்க. அவங்களுக்குப் பிள்ளைகள், பேரன் பேத்திகளெல்லாம் இருக்காங்க. என்னைப் பாத்த வுடனே பேத்தி மாதிரி அரவணைச்சுக்கிட்டாங்க. எனக்கும் அம்மா இல்லாத குறை மறைஞ்சுபோச்சு. ‘என்கூடவே வந்திடுறியா சீதா’ன்னு கேட்டாங்க. நானும் ‘வறேன்’னு சொல்லிட்டேன். அப்போ எனக்குப் பத்து வயசு... இன்னைக்கும் அன்பும் அரவணைப்பும் குறையாம அவங்க குடும்பத்தில உள்ள எல்லாரும் என்னைப் பாத்துக்கிறாங்க” நெகிழ்ந்து சொல்கிறார் சீதா.

ராஜம்மா பாட்டியின் கணவர்தான் சேலம் டிவிஎஸ் மயானத்தின் பொறுப்பாளர். அவர் இறந்தபிறகு ராஜம்மா பாட்டி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். பாட்டியின் கைபிடித்துக்கொண்டு மயானத்துக்கு வந்த பத்து வயது சீதா குழி வெட்ட, சுத்தம் செய்ய என சின்னச் சின்ன வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.

“தொடக்கத்துல ராஜாம்மா ஆயா என்னை எந்த வேலையும் செய்ய விடலே. ‘எல்லாத்துக்கும் ஆளிருக்காங்க... நீ சும்மா உக்காந்து வேடிக்கை பாரு’ன்னுதான் சொன்னாங்க. எனக்கு இந்த வேலை பிடிச்சிருந்துச்சு. பெத்த அம்மாவுக்கு மண்ணள்ளிப்போட்டு செய்ய வேண்டிய கடமையைக்கூடச் செய்ய வாய்க்கலே எனக்கு. இங்கே வர்ற அம்மா, அண்ணன், தம்பி, அக்கான்னு எல்லாருக்கும் உறவா இருந்து இறுதிக்காரியம் செய்ய முடியுதே... படிப்படியா எல்லா வேலைகளையும் கத்துக்கிட்டேன். தொடக்கத்துல என் அக்காவும்கூட இதெல்லாம் வேணாண்டின்னு சொன்னாங்க. எனக்கு இது ஏதோ முன்ஜென்மத் தொடர்பு மாதிரி தெரியுது...” சிரிக்கிறார்.

பொதுவாக மயானங்களில் வேலை செய்பவர்களுக்கு மனம் மரத்துப்போய்விடும். பிணங்களையும் அழுகையையும் கண்டு கண்டு இயல்பாகிவிடுவார்கள். சீதாவிடம் தாய்மை மிகுந்திருக்கிறது. உறவுகளோடு உறவாக நின்று கண்கலங்குகிற மனம் அவருக்கு வாய்த்திருக்கிறது.

“கொஞ்சநாள் முன்னாடி ஒரு உடல் வந்துச்சு. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் போல இருக்கு. நல்ல நாளுக்குக் கறி வாங்கிச் சமைக்கலாம்னு அந்த அம்மா தன் புருஷன்கிட்ட அம்பது ரூபா காசைக் குடுத்து விட்டிருக்கு. அதையும் மனுஷன் குடிச்சுட்டு வந்துட்டான். அந்தக் கோபத்துல உடம்புல நெருப்பு பத்த வச்சுக்குச்சு. பக்கத்துல இருந்த மகளும் அவங்களைக் கட்டிப்பிடிச்சுட்டா... ரெண்டு பேருமே இறந்துபோயிட்டாங்க. அந்தத் தாயோட உடலைப் பாக்கும்போது எங்க அம்மாவைப் பாத்தமாதிரியே இருந்துச்சு. கட்டிப் பிடிச்சு அழுதேன். எங்க அம்மாவுக்கு செய்யமுடியாத இறுதிக்காரியத்தை அந்த அம்மாவுக்குச் செஞ்சேன்.

எங்கோ ஆந்திரா பக்கமிருந்து கரும்பு வெட்ட வந்திருக்கு ஒரு குடும்பம். புதுசா கல்யாணமாகியிருக்கு. புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்து மருந்தைக் குடிச்சுச் செத்துப்போச்சு அந்தப் பொண்ணு. வயசு இருபதுக்குள்ளதான் இருக்கும். எங்கோ பெறந்து மொழி தெரியாத ஒரு ஊருக்கு வந்து... இதோ இங்கேதான் வச்சேன். இன்னைக்கும் அந்த இடத்தைக் கடக்கும்போது மனசுக்குள்ள வலிக்கும். இந்த மாதிரி நிறைய நடக்கும். நாலஞ்சு நாளைக்குத் தூக்கம் வராது...” சீதாவின் வார்த்தைகள் சிலிர்க்க வைக்கின்றன.

“இந்த இடம் எனக்குத் தாய்வீடு மாதிரி ஆயிடுச்சுங்கண்ணா... மனசுக்குள்ள என்ன கஷ்டமா இருந்தாலும் இங்கே வந்து உக்காந்தா காணாமப்போயிடும். குழி வெட்டுறதுல இருந்து மண் மேடு கட்டுற வரைக்கும் எல்லா வேலையும் செய்வேன். வேலையே இல்லேன்னா இங்கே கிடக்கிற செடி செத்தைகளை வெட்டுவேன். அழுக்கடைஞ்சு கெடக்கிற கல்லறைகளை சுத்தம் செய்வேன். காலையில 6 மணிக்கு வந்திடுவேன். ஆயா இருந்தா அவங்களும் வந்திருவாங்க. பண்டிகை நேரத்துல நள்ளிரவெல்லாம் ‘அடக்கம் பண்ணணும் தாயி’ன்னு போன் பண்ணுவாங்க. சைக்கிள் எடுத்துக்கிட்டு வந்திருவேன். ஒரு டூவீலர் வாங்கினா வசதியா இருக்கும்... அதுக்குத்தான் கொஞ்சம் கொஞ்சமா காசு சேத்துக்கிட்டிருக்கேன்” என்ற சீதாவிடம் இரண்டு கேள்விகள் கேட்டேன்.

“நீங்க ஏன் திருமணம் செஞ்சுக்கலே?”

‘‘அனுபவங்கள் அப்படிண்ணா... அம்மாவுக்குக் கெடச்ச மாதிரி எனக்கும் வாழ்க்கை அமைஞ்சுட்டா? எத்தனை அம்மாக்கள், அக்கா, தங்கச்சிகள் வாழவேண்டிய வயசுல வாழ்க்கையை முடிச்சுக்கிட்டு இங்கே வாராங்க தெரியுமா? குடி, சந்தேகம்னு பல குடும்பங்கள் நிலைகுலைஞ்சு கெடக்கு. எனக்குத் திருமணம் செஞ்சுக்கணும்னு தோணவேயில்லேங்கண்ணா... ஆயா, அப்பா, அம்மா, சகோதரிகளோட பிள்ளைகள்னு நிறைய உறவுகள் இருக்காங்க... அதுபோதும்.”

“ராத்திரி, பகல்னு இதுக்குள்ளேயே இருக்கீங்க... உங்களுக்கு பயமில்லையா?”

“பேய், பிசாசுன்னு என்னென்னவோ கதையெல்லாம் சொல்றாங்கண்ணா... இதுமாதிரி நிம்மதி தர்ற எடம் எதுவும் இல்லே... இருபது வருஷத்துக்கு மேல இதுக்குள்ள கெடக்குறேன்... பயமே வந்ததில்லை... சின்னப்பிள்ளைங்களை அடக்கம் செஞ்சா ரெண்டு நாளைக்குத் தூக்கம் வராது... அதுங்க நினைப்பாவே இருக்கும்... பயமெல்லாம் இந்த காம்பவுண்டுக்கு வெளியிலதாங்கண்ணா. ரோட்டுல வரும்போதும் போகும்போதும் சிலபேரு பாக்குற பார்வை, பேசுற பேச்சு... இதெல்லாம்தான் பயமுறுத்தும்...”

ஓர் உடலைச் சுமந்துகொண்டு மயானத்தின் முகப்பில் வந்து நிற்கிறது ஆம்புலன்ஸ். உரையாடல் முற்றுப்பெறுகிறது. அந்த ஒரு மணி நேர உரையாடலில் மனசுக்குள் நிறைந்து நிற்கிறார் சீதா.