
மனித உயிர்களுக்கும் உணர்வு களுக்கும் மரியாதை கொடுக் கணும்ங்கிற அப்பாவோட ஃபார்முலாவை தான் இப்போ நானும் கையில எடுத்திருக்கேன்.
கொரோனாவும் அதைத் தொடர்ந்த ஊரடங் கும் எத்தனையோ மனிதர்களின் எதிர்காலத்தை சூன்யமாக்கி யிருக்கிறது. அடையாளம் முதல் ஆதாரம்வரை அனைத்தையும் இழந்து இன்னும்கூட மீள முடியாத துயரில் இருப்போர் ஏராளம். அதே ஊரடங்கில் அத்தனை சிக்கல்கள், சவால்களையும் கடந்து, சரியவிருந்த சாம்ராஜ்யத்தைத் தூக்கி நிறுத்தி யிருக்கிறார் ஸ்ரீலட்சுமி ஸ்ரீதரன். திருவள்ளூர், பாலவேட்டில் செங்கல் சூளை ஒன்றை நிர்வகிக்கும் ஸ்ரீலட்சுமிக்கு வயது 26.
கபடமற்ற பெரும்புன்னகை ஸ்ரீலட்சுமியின் அடையாளம். ஆனால், அந்தப் புன்னகை மறைத்து வைத்திருக்கும் சோகமும் அதன் வலியும் அவர் மட்டுமே அறிந்தவை.
``எனக்கு மட்டுமல்ல, வீட்டுல எல்லாருக்கும் எங்கப்பா ரொம்ப ஸ்பெஷல். அவரை எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். இழந்துடு வோம்னு நினைச்சுக்கூடப் பார்க்காத அப்பாவை இழந்து நின்னபோது, வாழ்க்கையில இனிமே இதைவிடவா பெரிய துயரம் வரப்போகுதுங்கிற மனநிலைக்கு வந்துட்டோம்... அப்பா இல்லாத இந்த ஒரு வருஷம் வாழ்க்கைப் பாடத்தைக் கத்துக் கொடுத்திருக்கு’’ - அதே புன்னகை யுடன் கடந்த காலத்துக்குள் செல்கிறார் ஸ்ரீலட்சுமி.
``அப்பா ஸ்ரீதரன் பத்தாவதுதான் படிச்சிருந்தார். ஆனாலும் பொண் ணுங்க ரெண்டு பேரையும் தைரியமா, சுயசிந்தனை உள்ளவங்களா வளர்த்தார். பாலவேட்டுல 40 வருஷங் களுக்கும் மேலா செங்கல்சூளை வெச்சு பிசினஸ் பண்ணிட்டிருந்தார். என்னையும் அக்கா ஸ்ரீதேவியையும் பிசினஸுக்குள்ள கொண்டுவர்றதுல அவருக்குப் பெரிய தயக்கம் இருந்தது. பாமர மக்களையும், கரடு முரடான பணியிட சூழலையும் சமாளிக்கிறது சிரமம்னு ‘உங்களுக்கு இந்தப் பொழப்பு வேணாம் ராஜா’ன்னு சொல்வார். அக்காவுக்கும் எனக்கும் ஏழு வயசு வித்தியாசம். அக்கா நேச்சுரோபதி மருத்துவமும் நான் ஆர்கிடெக்சரும் படிச்சோம். படிப்பை முடிச்சிட்டு ரெண்டு பேரும் அவங்கவங்க துறைகள்ல பிஸியா இருந்தோம். அம்மாவும் அப்பாவும் ரொம்பவே அந்நியோன்யமான தம்பதி. பிசினஸ்ல ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் எதுவும் எங்க வீட்டுக்குள்ள நுழைய அப்பா அனுமதிச்ச தில்லை. இப்படி சந்தோஷமா போயிட்டிருந்த குடும்பம்... யார் கண் பட்டுச்சோ’’ - காத்திருக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்துகிறார் ஸ்ரீலட்சுமி. தொடர்கிறார் அவரின் அக்கா ஸ்ரீதேவி.
``அப்பா நிறைய டிராவல் பண்ணுவார். போன வருஷம் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு அவர் ஃபிரெண்ட்ஸ்கூட கார்ல கிளம்பினார். அப்பாவோட ஃபிரெண்டு பையன்தான் காரை ஓட்டிட்டிருந்தார். ஆக்ஸிடென்ட்... பின்னாடி உட்கார்ந்திருந்த ஒரு தாத்தா ஸ்பாட்லயே இறந்துட்டாரு. அப்பாவுக்கு மல்டிபுள் ஃபிராக்ச்சர். ஆக்ஸிடென்ட் ஆன மூணாவது நாள் அப்பாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்து கோமாவுக்குப் போயிட்டார். திருச்சியில அட்மிட் பண்ணியிருந்தோம். பத்து நாள் ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு, சென்னைக்கு கூட்டிட்டு வந்தோம். கிட்டத்தட்ட 40 நாள்கள் அவர் படுக்கையில இருந்தார். எந்த ட்ரீட் மென்ட்டும் உதவலை. அவர் பிழைக்க மாட்டார்னு எங்களுக்குப் புரிஞ்சிடுச்சு. அந்த 40 நாள்கள், அவர் இல்லாம வாழ எங்களைப் பழக்கிடுச்சுனுதான் சொல்லணும்’’ - ஸ்ரீதேவியின் பார்வை சூன்யத்தை வெறிக்கிறது.
``தெரிஞ்சவங்க பலரும் அப்பாவுடைய கண்டிஷனைப் பார்த்துட்டு பிசினஸை குளோஸ் பண்ணிடுங்கன்னு சொன்னாங்க. எங்களால அதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டா அப்பா கட்டி வெச்ச சாம்ராஜ்ஜியம் அது. அதை அப்படியே விட்டுடக் கூடாதுனு தோணுச்சு. அப்பாவுக்கு சுய நினைவு இல்லைன்னாலும் நாங்க ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கிட்ட சொல்லிட்டுதான் இருந்தோம். போன வருஷம் பிப்ரவரி மாசம் அந்த முடிவெடுத்தேன். ‘அப்பா நான் சேம்பருக்கு போறேன். பிசினஸை பார்த்துக்கப் போறேன்’னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். அந்த வார்த்தையைக் கேட்ட தும் அப்பாகிட்ட ஒரு வைப்ரேஷ னைப் பார்த்தோம். அதையே எனக்கான பாசிட்டிவ் சிக்னலா எடுத்துக்கிட்டேன்’’ - அப்பாவின் அசைவையே ஆசீர்வாதமாகக் கொண்டு பிசினஸில் அடி யெடுத்து வைத்த ஸ்ரீலட்சுமிக்கு ஆத்மார்த்தமான ஆதரவு தருபவர் அக்கா ஸ்ரீதேவி.
``போன வருஷம் மார்ச் 4-ம் தேதி அப்பா நிரந்தரமா எங்களை விட்டுட்டுப் போயிட்டாரு. அதுலேருந்து மீள்றதுக்குள்ளேயே கொரோனா, லாக்டௌன்... இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள்... பிசினஸுக்குள்ள நுழைஞ்சபோது எனக்கு எதுவுமே தெரியாது. அப்பா இருந்தபோது போன்ல பேசறதைக் கவனிச்சிருக்கேன். வேலையாட்கள்கிட்ட எப்படி நடந்துப்பாருனு பார்த்திருக்கேன்.ஆர்கிடெக்ட் என்பதால புரொடக்ஷன் எப்படி நடக்கும்னு மட்டும் எனக்குத் தெரியும். செங்கல் செய்யறதுக்கான மூலப்பொருள்களை வெளியி லிருந்து வரவழைக்கிறது, வேலை யாட்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துக் கூட்டிட்டு வர்றது, அவங்களை வேலை வாங்குறது, செங்கல் தயாரிச்சு, அறுவடை பண்றது, கடைசியா லோடு பண்றதுவரை எல்லா வேலைகளையும் ஒவ்வொண்ணா தெரிஞ்சுகிட்டேன். கடன்களை அடைக்க அதிரடியா சில முடிவுகள் எடுத்தேன். வேலையாட்கள், போட்டியாளர்கள் உட்பட பலரும் ஆரம்பத்துல ‘பிசினஸ் பத்தி இதுக்கென்ன தெரியும்’னுதான் பார்த்தாங்க. முதல் ஒரு வாரம் அமைதியா இருந்து எல்லாத்தையும் கவனிச்சேன். அடுத்து வேலை யாட்களை அண்ணா, அக்கானு உறவு சொல்லிக் கூப்பிட்டு அன்பா வேலை வாங்கப் பழகினேன். அது வொர்க் அவுட் ஆச்சு. தப்பு பண்ணினா கண்டிக்கவும் தவறினதில்லை. ஆனா, அதையும் அமைதியா சொல்லிப் புரிய வெச்சிருக்கேன். பொம்பளைப் புள்ளைங்களுக்கு இதெல்லாம் தேவையானு கேட்டவங்க முன்னாடி சாதிச்சுக் காட்டணும்ங்கிறது மட்டும்தான் இப்போ எனக்கு முன்னாடி இருக்கும் இலக்கு.
அப்பா உயிரோட இருந்தபோது ஒருமுறை செங்கல் சூளையில பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுச்சு. உள்ளே ஜேசிபி உட்பட ஏகப்பட்ட வண்டிகள் நின்னுட்டிருந்தன. வேலையாட்களும் இருந்தாங்க. அப்பாவுக்குத் தகவல் வந்தது. அந்த நிலைமையில வேற யார் இருந்திருந்தாலும் பதறிப்போய் டென்ஷனாகியிருப்பாங்க. ஆனா, அப்பா கொஞ்சம்கூட பதறலை. முதல்ல உள்ளே இருக்கிறவங்களை வெளியே கொண்டு வரச் சொன்னார். அப்புறம் ‘முடிஞ்சா வண்டிகளை வெளியில எடுக்கப் பாருங்க. ஒருவேளை நெருப்பு பிடிச்சு வண்டிகள் உருக ஆரம்பிச்சிட்டா, விட்ருங்க. ரிஸ்க் எடுக்கா தீங்க. உயிர்ச் சேதமில்லாம பார்த்துக்கோங்க'னு சொன்னார்.
அந்த விபத்துல ஓவர் நைட்டுல ஒரு கோடி ரூபாய் நஷ்டமாச்சு. விபத்துக்கு காரணமானவங்களோடு நடந்த பேச்சுவார்த்தையில அப்பாவோட அமைதியான அணுகு முறையைப் பார்த்துட்டு, நஷ்டத்தை ஈடுகட்ட புது ஜேசிபி கொடுத்தாங்க. அதுதான் அவர் கேரக்டர். மனித உயிர்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக் கணும்ங்கிற அவரோட ஃபார்முலாவைதான் இப்போ நானும் கையில எடுத்திருக்கேன்.
ஒருவேளை நான் துணிஞ்சு பிசினஸை கையில எடுக்க லைனா கம்பெனி வேற யார்கிட்டயோ போயிருக்கலாம். அப்பா கட்டிவெச்ச சாம்ராஜ்ஜியமே சரிஞ்சு போயிருக்கலாம். அல்லது நாங்க யாருக்கோ அடிமைகளா வேலை பார்க்க வேண்டி வந்திருக்கலாம். அதுக்கெல்லாம் இடம்கொடுத் துடாம, சரியான நேரத்துல சரியான முடிவுதான் எடுத்திருக் கேன்ற திருப்தியோடு ஒவ்வொண்ணா கத்துக்கிட்டிருக்கேன். இந்த பிசினஸை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போறதும், சூழலுக்கு உகந்த விஷயங்களை அறிமுகப்படுத்தறதும்தான் அடுத்த திட்டங்கள். அப்பாவோட ஆன்மா அதை நிச்சயம் செய்ய வைக்கும்’’ என்கிறார் உறுதிகொண்ட நெஞ்சினாளாக.
அப்பாவின் கனவுகள் சுமக்கும் மகளுக்கு அத்தனையும் நனவாகட்டும்.