மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

‘உழுது உண் சுந்தர்'
பிரீமியம் ஸ்டோரி
News
‘உழுது உண் சுந்தர்'

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

‘‘கறிவேப்பிலை எவ்வளவு வாசனையான மூலிகை தோழர்... தலைவாசல்லயோ, மேட்டூர்லயோ கறிவேப்பிலைத் தோட்டங்களுக்குள்ள போனா, கறிவேப்பிலை வாசனை வராது, ரசாயன நாற்றம்தான் அடிக்கும். மற்ற செடிகள் முளைக்காம இருக்க, களைக்கொல்லிகள்ங்கிற பேர்ல ஏகப்பட்ட ரசாயனங்களைக் கொட்டுறாங்க. உடம்புக்கு நல்லதுன்னு நாம விரும்பிச் சாப்பிடுற கீரையை, அறுவடைக்கு மூணு நாளைக்கு முன்னாலகூட பூச்சிக்கொல்லி அடிச்சுதான் பறிக்குறாங்க. பூச்சி அரிக்குதோ இல்லையோ, சம்பிரதாயமா ரசாயனங்களைக் கொட்டப் பழகிட்டாங்க விவசாயிகள். நெல் சாகுபடியைவிட காய்கறிச் சாகுபடி ஆபத்தானதா மாறிக்கிட்டிருக்கு...’’

கவலை ததும்பப் பேசுகிறார் சண்முகசுந்தரம். ‘உழுது உண் சுந்தர்' என்றால் பலருக்குத் தெரியும். பாண்டிச்சேரி அருகேயுள்ள ஏம்பலத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 25 வயதுதான் ஆகிறது. வேளாண்மையில் அவ்வளவு ஞானம். இந்தச் சின்ன வயதில் இந்தியா முழுவதும் சுற்றி 500-க்கும் மேற்பட்ட பூர்வீக காய்கறி விதைகளைச் சேகரித்து, பரவலாக்கியிருக்கிறார். தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 450 மரபு விவசாயிகளை ஒருங்கிணைத்து விதை சேகரிப்புப் பணியை இயக்கமாகவே மாற்றியிருக்கிறார்.

‘‘இன்னைக்கு வேளாண்மையில நாம சந்திக்கிற எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படை, விதைகளை நாம இழந்ததுதான் தோழர். விதைக்காக நிறைய செலவு செய்றது ஒரு பக்கம்... அந்த விதைகளால நிலத்துலயும் விவசாயி வாழ்க்கையிலயும் ஏற்படுற பாதிப்புகள் பெரிசா இருக்கு.

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

எல்லா விதைகள்லயும் வீரிய ரகங்கள் வந்தாச்சு. இப்போ மரபணு மாற்றப்பட்ட விதைகளும் நிறைய வரப்போகுது. உணவை எப்படி பொதுமைப்படுத்த முடியாதோ அதுமாதிரி விதைகளையும் பொதுமைப்படுத்த முடியாது. மண், நீர், தட்பவெப்பத்துக்குத் தகுந்தமாதிரி ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. கடலூருக்கும் பாண்டிக்கும் இடையில நாணமேடுன்னு ஒரு ஊர். கடலோர மணற்பகுதி. அங்கே கிடைக்கிற உப்புத்தண்ணியில விளையுற கத்தரிக்கு நாணமேடு கத்தரின்னு பேரு. ஒரு காய் அரைக்கிலோவுக்கு மேல இருக்கும். பூச்சித் தொந்தரவே இருக்காது. சுவைக்கு இணையே இல்லை தோழர். கடந்த அஞ்சு வருஷமா 50 கிராம், 100 கிராம்னு காயெல்லாம் சுருங்கிப்போச்சு. பூச்சிகளால ஏகப்பட்ட பாதிப்பு. ஏன் இந்தத் திடீர் மாற்றம்னு ஒரு ஆய்வு செஞ்சோம். 90% விவசாயிகள் போர் போட்டு நல்ல தண்ணியெடுத்து செடிக்குப் பாய்ச்சுறாங்க. அந்த ரகத்தோட மரபே உப்பு கலந்த தண்ணியில விளையுறதுதான். நல்ல தண்ணி அதுக்கு ஆகலே. ரசாயனங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொட்டி அந்த ரகத்தையே நாசமாக்கிட்டாங்க...’’ அனலாகவே வருகின்றன வார்த்தைகள்.

சண்முகசுந்தரம் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்திருக்கிறார். படிப்பு தொடர்பான ஒரு ஆவணப்படத்துக்காகத் தலைப்பு தேடப்போய், ஒரு பத்திரிகை செய்தியில் வந்த இயற்கை வேளாண்மை என்ற வார்த்தையைக் கண்டடைந்தார்.

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

‘‘அங்கிருந்துதான் தோழர் என் பயணம் ஆரம்பமாச்சு. அப்போ இரண்டாமாண்டு படிச்சுக்கிட்டிருந்தேன். 19 வயசு. பாரம்பர்ய வேளாண்மை பத்தி ஆவணப்படம் எடுக்கலாம்னு தேட ஆரம்பிச்சேன். கரிகாலன்னு ஒரு விவசாயி காட்டுயானம் நெல் போட்டிருந்தார். ஏழடிக்கு மேல பயிர் வளர்ந்திருச்சு. ‘ரசாயனமே தேவையில்லை. விதைச்சாலே போதும்... மாட்டுக்கும் நல்ல வைக்கோல் கிடைக்கும். நமக்கும் நல்ல விளைச்சல் கிடைக்கும்'னார். எங்க அப்பா, வீரிய ரகங்களை நட்டு ஒண்ணுக்குப்பாதியா விளைச்சல் எடுத்துக்கிட்டிருக்கார். முழங்காலுக்கு மேல அந்தப் பயிர் வளரவே வளராது. காட்டுயானம் நல்லாருக்கேன்னு தோணுச்சு. தொடர்ந்து தேடி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், பாமயன்னு போய் திரும்பவும் எங்க ஊருக்குப் பக்கத்துல இயற்கை வேளாண்மை செஞ்சுக்கிட்டிருந்த நெல் கிருஷ்ணமூர்த்தியை வந்தடைஞ்சேன். ‘எனக்கு இந்தத் தொழில்நுட்பத்தைக் கத்துக்கொடுங்க'ன்னு போய் நின்னேன். விதைக்கிறதுல இருந்து, அறுக்குறது வரைக்கும் பக்கத்துல வச்சுக்கிட்டு கத்துத் தந்தார் கிருஷ்ணமூர்த்தி அய்யா.

இந்தச் சூழல்ல அப்பா புற்றுநோயால காலமாகிட்டார். எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர். புற்றுநோய் பற்றிப் படிக்கும்போது நம் உணவு அதுக்கு முக்கியக்காரணம்னு புரிஞ்சுச்சு. கிருஷ்ணமூர்த்தி அய்யாவும் வேளாண்மைக்குப் பின்னாடி இருக்கிற அரசியல் பத்தி நிறைய பேசுவார். அப்பாவோட மரணம், உணவுபத்தி நிறைய சிந்தனையை உருவாக்குச்சு. சுபாஷ் பாலேக்கரோட அஞ்சடுக்கு விவசாய முறைகளைக் கத்துக்கிட்டேன். நிறைய விவசாயிகளைத் தேடிப்போய் சந்திச்சேன். இறுதியா நான் சென்றடைஞ்ச இடம், விழுப்புரம் பாண்டியன். காய்கறி விவசாயம் பண்ணிக்கிட்டி ருந்தார். ‘பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாக்கக்கூட சிலபேர் வந்துட்டாங்க. காய்கறி விதைகளைக் காப்பாத்ததான் யாருமில்லை'ங்கிற உண்மை புரிஞ்சுச்சு. அங்கிருந்து கிளம்பி இன்னைக்கு வரைக்கும் சுத்திக்கிட் டேயிருக்கேன்...’’ சிரிக்கிறார் சுந்தர்.

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’
மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

அந்தக் காலகட்டத்தில் சுந்தருக்கு குடும்பத்துக்குப் பங்களிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. மூன்றரை சென்ட் விவசாயத்தை மட்டுமே நம்பிய குடும்பம். விதைத்தேடலுக்கு மத்தியில் வீடியோக்கள் எடுப்பது, ஆவணப்படுத்தித் தருவதென வருமானத்துக்கு வழி செய்து கொண்டார். கூடவே தங்கியிருக்கும் விவசாயிகள் வீட்டில் ஒரு வேளாண் தொழிலாளி யாக மாறி வேலையும் செய்வார். அவர்கள் தருகிற கூலியும் வாழ்வாதாரமாக இருந்தது.

‘‘மண்ணுக்கும் தண்ணிக்கும் ஏத்த விதைகளுக்கு ஊக்கிகள் தேவையே இல்லை. தானா முளைக்கும், காய்க்கும். அந்தத் தட்பவெப்பத்துக்கு பூச்சிகளும் பெரிசா வராது. இயற்கை எல்லாத்தையும் அவ்வளவு கட்டுசெட்டா உருவாக்கி வச்சிருக்கு. அந்த விதைகளைக் கொண்டு போய் வேறெந்த மண்ணுல விதைச்சாலும் பெரிசா விளைச்சல் தராது. வீரிய விதைகள் எல்லா மண்ணுலயும் தட்பவெப்பத்துலயும் முளைக்கும். ஆனா பூச்சிகள் வரும். உர ஊக்கிகள் தேவை. நெல்லாவது பரவாயில்லை. குறிப்பிட்ட ரசாயனங்கள்தான் போடுவாங்க. காய்கறிகள்ல ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு வகை.

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

கத்தரியில மட்டும் நம் மண்ணுக்கேத்த 600 ரகங்கள் இருந்ததா மூத்த விவசாயிகள் சொல்றாங்க. இன்னைக்கு நாலைஞ்சு ரகங்கள்தான் சந்தைக்கு வருது. அதுவும் வீரிய ரகங்கள். சென்னையில பட்டாபிராம் கத்தரின்னு ஒரு ரகம். இன்னைக்கு அது இல்லாமலே போச்சு. ‘உஜாலா'ங்கிற வீரிய கத்தரியைத்தான் இன்னைக்கு பட்டாபிராம் கத்தரின்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. மரவெண்டைன்னு ஒண்ணு இருந்துச்சு. 15 அடி வளரும். 2 வருஷம் நின்னு காய்க்கும். தண்டுகளை வெட்டி வச்சா அதுலயும் வேர்பிடிச்சு வளரும். அதேமாதிரி சிவப்பு வெண்டைச்செடியும் 6 அடிக்கு வளரும். காய் நல்ல இனிப்பா இருக்கும். இதெல்லாம் இன்னைக்கு வழக்கொழிஞ்சுபோச்சு தோழர். சிறகு அவரை, ஒரு குடும்பத்துக்கு மூணு போதும். அவ்வளவு பெரிசாக் காய்க்கும். கிழங்குகள்ல மட்டும் ராசவல்லிக்கிழங்கு, ஆலவல்லிக்கிழங்கு, கரைவெட்டிக்கிழங்குன்னு 60 வகை இருந்திருக்கு. இன்னைக்கு அஞ்சாறு வகைதான் புழக்கத்துல இருக்கு.

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’
மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

இதெல்லாம் கேள்விப்பட கேள்விப்பட ரொம்ப மன வருத்தமாப்போச்சு. பைக்கை எடுத்துக்கிட்டு தமிழ்நாடு முழுவதும் சுத்தினேன். பஸ் ஸ்டாண்ட்ல, மரநிழல்கள்ல தூங்குவேன். விவசாயி வீடுகள்ல கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன். ஊர் ஊராப் போய் உரையாடுவேன். விதைகள் கேட்டு வாங்குவேன். அந்த 6 மாதப்பயணத்துல 200 காய்கறிகள், கிழங்குகளின் பூர்வீக ரகங்களோட விதைகளைச் சேகரிச்சேன். அந்த விதைகளை எங்க தோட்டத்துல போட்டு விளைவிச்சு, சாப்பிட்டுப் பார்த்தேன். அதன் தன்மைகளை முழுசாப் புரிஞ்சுக்கிட்டு மற்ற விவசாயிகளுக்குத் தர ஆரம்பிச்சேன். பெரிய நெட்வொர்க்கா அது விரிவடைஞ்சுச்சு.

சேகரிச்ச பூர்வீக விதைகளை, அதோட தன்மை, சாகுபடி முறை, சமைக்கும் முறை எல்லாத்தையும் சேர்த்து ஆவணப்படுத்துற முயற்சியிலும் இறங்கினேன். இன்னொரு பக்கம் சேகரிச்ச விதைகளை, கேட்கிறவங்களுக்குத் தந்து இன்னொரு மடங்கு திருப்பித் தரணும்னு கேப்பேன். விதைக்காக யார்கிட்டயும் ஒரு பைசா வாங்கமாட்டேன். எலவம்பாடி முள்ளுக்கத்தரி, குலசைக் கத்தரி, குறுக்குசாலக் கத்தரின்னு நூற்றுக்கும் மேற்பட்ட கத்தரி ரகங்களை மீட்டெடுத்து இன்னைக்கு பரவலா விளைச்சலுக்குக் கொண்டு வந்துட்டோம். அவரைக்காய்ல 45 ரகங்களை மீட்டாச்சு. வெண்டைக்காய்ல 30 ரகங்கள், தக்காளியில 20 ரகங்கள், மிளகாய்ல 50 ரகங்கள், கிழங்குல 60 வகைகள், சோளத்துல 8 ரகங்கள், கீரைல 30 வகைகள், சுரைக்காய்ல 60 ரகங்கள்னு மிகப்பெரிய சேமிப்பு இப்போ எங்க கையில இருக்கு. இன்னைக்கு பருத்தின்னாவே பி.டி பருத்தின்னு ஆகிப்போச்சு. அது விளைஞ்ச நிலத்துல வேறெதுவும் விளையாது. நாங்க எட்டு விதமான நாட்டுப்பருத்தி விதைகளைக் கண்டெடுத்துட்டோம். 30 வகையான நாட்டுப் பூக்களோட விதைகளையும் பெருக்கி விவசாயிகளுக்குத் தந்திருக்கோம்...’’ தன் பரந்துபட்ட பயணத்தை விவரிக்கிறார் சுந்தர்.

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’
மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

சுந்தர் தொடங்கிய விதைதேடும் பயணத்தில் இளைஞர்கள் பெருவாரியாக இணையத் தொடங்கினார்கள். வாட்ஸ் அப் குரூப்கள், சமூக ஊடகங்கள் இளம் தலைமுறைக்கு விதையின் தேவையை உணர்த்த, பெரும் மாற்றம் துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது. ‘உனக்கான உணவை நீயே உழுது உண்' என்று உணர்த்தும் பொருட்டு ‘உழுது உண்' என்றே தன் அமைப்புக்குப் பெயர் சூட்டி இயங்கும் சுந்தர், இயற்கை வேளாண் பயிற்சிகளை நடத்துகிறார். இயற்கை வேளாண்மையும் செய்கிறார். வைகாசி தொடங்கி ஆடி மாதம் வரை மாவட்ட வாரியாக, விதைப்பகிர்வுக் கூடல்களை நடத்துகிறார். தோட்டங்கள், ஏரிக்கரைகள், கோயில்களில் நடக்கும் இந்தக் கூடல்களில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

‘‘இந்தியா முழுவதும் விதைத்தேடல் பயணத்தைத் தொடங்கப்போறேன். நமக்கான ஆயுதம், அரண் எல்லாம் விதைகள்தான். நாலு வருஷத்துல 500 விதைகள் சேகரிக்க முடிஞ்சிருக்கு. அடுத்த நாலு வருஷத்துல இந்தியா முழுவதும் 5,000 ரகங்களோட விதைகளைச் சேகரிக்கணும். விதை பெருக்கிப் பகிரணும். ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு சமுதாய விதை வங்கி உருவாக்கணும். முதற்கட்டமா மாவட்டத்துக்கு ஒரு வங்கி உருவாக்கிக்கிட்டு வர்றோம். நம் வேளாண்மையைத் தக்கவைக்க ஒரே வழி, விதைத் தன்னிறைவு மட்டும்தான்...’’ கனவுகளை விரித்து மலர்ந்து புன்னகைக்கிறார் சுந்தர்.

வெயில் மௌனித்து மெல்லிய பூந்தூறல் விசிறுகிறது வானம்!

- வருவார்கள்...