மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 11 - ‘மனோபாவம் மாறாமல் பெண்களின் வாழ்க்கை மாறாது!’’

திலகவதி
பிரீமியம் ஸ்டோரி
News
திலகவதி

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

திலகவதிக்கு வயது 28தான். சமூகம், சட்டம், அரசியல் என பேச்சில் அப்படியொரு தெளிவு. பாலினப் பாகுபாடு, உருவக்கேலி, உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் களமாடும் வழக்கறிஞர். இந்தியா முழுவதும் பயணித்து, பெண்களின் உரிமைகள், சட்டங்கள், சுய பாதுகாப்பு பற்றிப் பயிற்சியளிக்கிறார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் அபலைப்பெண்களுக்காக வழக்காடுகிறார். உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார். நிகழ்த்துகிற போராட்டங்களும், சமூக ஊடகங்களில் அவர் பதிவிடுகிற செய்திகளும் பெரிதும் கவனம் ஈர்க்கின்றன. தினமும் சக பெண்களுக்காக நியாயம் கோரிப் பயணித்துக்கொண்டேயிருக்கிற ஆச்சர்ய மனுஷி.

காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த திலகவதி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், முதுநிலை சட்டம், உளவியல் எனப் படித்த படிப்புகளின் பட்டியல் நீளமானது. திலகவதி முன்னெடுக்கிற பணிகளும், மேற்கொள்கிற பயணங்களும் வியக்க வைக்கின்றன.

மாரத்தான் மனிதர்கள் - 11 - ‘மனோபாவம் மாறாமல் பெண்களின் வாழ்க்கை மாறாது!’’

‘‘சமூகநீதி, நாகரிகம், முன்னேற்றமெல்லாம் பேசுற நாம பாலினச் சமத்துவத்துல ஓரடிகூட இன்னும் முன்னெடுத்து வைக்கல சார். கல்வியும் காசும் இருந்துட்டா பெண்கள் முன்னேறிட்டாங்கன்னு ஒரு கற்பிதம் இருக்கு. உண்மையில குடும்ப வன்முறையில பாதிக்கப்பட்டு தற்கொலை செஞ்சுக்கிறவங்க அல்லது துயரத்தோட வாழ்ந்துட்டிருக்கிறவங்க 90% பேர் பணமும் கல்வியும் இருக்கிறவங்கதான். தலைமைப்பண்பு, முடிவெடுக்கிற திறன், தைரியம்... இதுதான் பெண்களுக்கு இன்னைக்கு அவசியமா இருக்கு. காலேஜ்ல படிக்கிற ஒரு பெண்கூட, ஆறாவது படிக்கிற ஒரு பையனை ‘அக்காகூட துணைக்குப் போடா'ன்னு அனுப்பி வைக்கிற அளவுக்குத்தான் பெண்களைப் பத்தின மதிப்பீடு இருக்கு. பெரியவங்களை மாத்த முடியாது. அதனாலதான் பள்ளி, கல்லூரின்னு அடுத்த தலைமுறையை இலக்கு வச்சு பயணம் செய்றேன்...’’ - பக்குவமாகப் பேசுகிறார் திலகவதி.

திலகவதியை வடிவமைத்தவர், அவரது அம்மா உமா மகேஸ்வரி. அரசுப்பள்ளி ஆசிரியை. அவரும் எட்டுக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்ற படிப்பாளி. ‘‘கூட்டுக்குடும்பம். தாத்தா கே.கே.வடிவேலு இடதுசாரி இயக்கத்துல குறிப்பிடத்தகுந்த தலைவரா இருந்தவர். அதனால குடும்பத்துல எல்லோரும் படிப்பாங்க. ஆனாலும் மரபுகளை முழுசா நம்புற குடும்பம்தான். இங்கே பொதுவா, பெண் சுதந்திரம்னா மரபுகளை உடைக்கிறது, பெரியவங்களுக்குப் பதற்றத்தை உருவாக்குறதுன்னு நினைக்கிறாங்க. அப்படியில்லை, பெண் தன் சக்தியைப் புரிஞ்சுக்கிறதுதான் பெண்ணியம். ஆண்களுக்கு இணையா தம் அடிக்கிறது, கால் மேல கால் போட்டு உக்கார்றது, விருப்பத்துக்கு உடைபோடுறதில்லை பெண்ணியம். நான் என்ன செய்யணும்ங்கிறதை நான் தீர்மானிக்கிறது, என் வசதிக்கு உடை போடுறது, என் வசதிப்படி அமர்றது... இதெல்லாம்தான்!

மாரத்தான் மனிதர்கள் - 11 - ‘மனோபாவம் மாறாமல் பெண்களின் வாழ்க்கை மாறாது!’’

பெண்ணாப் பிறந்த ஒரே காரணத்துக்காக புறக்கணிப்புகள், அவமானங்கள்... இதையெல்லாம் பள்ளிக்காலத்திலிருந்தே வெளிப்படையா எதிர்த்துதான் வளர்ந்தேன். கல்லூரியில ரெண்டாவது வருஷம் படிக்கும்போது தமிழ்வாணன் அறிமுகமானார். அப்போ பாகிஸ்தான்ல மலாலா சுடப்பட்ட சம்பவம் நடந்துச்சு. ரெண்டு பேரும் sound for gender equality-ங்கிற அமைப்பை நிறுவி கல்லூரிகள்ல போய்ப் பேச ஆரம்பிச்சோம். தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் பத்தி சுயமா முடிவெடுக்கிற உரிமையைப் பெண்களுக்குத் தரணும். ஆண்கள் அதைத் தீர்மானிக்கக் கூடாதுங்கிறதுதான் பேச்சோட உள்ளடக்கம்.

கள யதார்த்தம் ரெண்டு விஷயங்களை எனக்குத் தெளிவா உணர்த்துச்சு. நாம அடிமையா இருக்கோம்னு தெரிஞ்சாதான் விடுதலையடையணும்ங்கிற எண்ணம் வரும். முதல்ல பெண்களுக்கு அந்த உணர்வை உருவாக்கணும். அடுத்து, பெரியவங்களோட மண்டைக்குள்ள ஊறிப்போன மரபு மனோபாவத்தை மாத்தமுடியாது. அடுத்த தலைமுறையைத்தான் இலக்கு வைக்கணும்.

2015-ல இன்ஜினீயரிங் முடிச்சுட்டு சென்னைக்கு வந்தேன். பெரிய ஐ.டி நிறுவனத்துல வேலை. வேறு வேறு மாநிலப் பெண்களோட தங்கினேன். அது வேறு அனுபவத்தையும் படிப்பினையையும் தந்துச்சு. பெண்களோட பிரச்னைங்கிறது பொதுவானதில்லை. ஒவ்வொரு ஊருக்கும் வேறு வேறு மாதிரியிருக்கு. ஆனா தீர்வு ஒண்ணுதான். அது, பெண்களோட மனோபாவம். அவங்க உறுதியா நினைச்சா அவங்களை மீறி எதுவும் நடக்காது. நான் அந்த மனோபாவத்தை பலமா வளர்த்துக்க விரும்பினேன். பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன். காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தோட தொடர்பு கிடைச்சுச்சு. என் வாழ்க்கையை மக்கள் மன்றத் தொடர்புகள்தான் வடிவமைச்சுச்சு...’’ உற்சாகமாகப் பேசுகிறார் திலகவதி.

மாரத்தான் மனிதர்கள் - 11 - ‘மனோபாவம் மாறாமல் பெண்களின் வாழ்க்கை மாறாது!’’

மக்கள் மன்றம், பெண்களுக்கான தற்காப்புப் பயிற்சி ஒன்றை வழங்கியது. அந்தப் பயிற்சியை முடித்த திலகவதி, இன்று எங்கெல்லாம் பெண்களுக்குத் தீங்கிழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பயணித்து அந்தப் பயிற்சியை வழங்குகிறார். இந்தியாவில் பேருந்து நுழையாத பழங்குடி கிராமங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார்.

‘‘தற்காப்புப் பயிற்சின்னா கராத்தே, குங்பூ மாதிரி சண்டைக்கலைகள் இல்லை. எந்தச் சூழல்ல எப்படி நடந்துக்கணும்னு கத்துக்கொடுப்போம். ஒரு பாடத்திட்டமே வச்சிருக்கோம். ஆண்களோட உடல்ல எதெல்லாம் வீக்கான ஏரியான்னு கத்துக்கொடுப்போம். எந்த இடத்துல தாக்கணும், எப்போ தாக்கணும்னு சொல்லிக்கொடுப்போம். வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்தணும், மனநிலையை எப்படி ஸ்ட்ராங்கா வச்சுக்கணும்னு விளக்குவோம். குடும்ப வன்முறையால பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னென்ன தீர்வுகள் இருக்குன்னு சொல்லிக் கொடுப்போம். சட்டம் பேசுவோம். பெப்பர் ஸ்ப்ரே கொண்டு போறதோ, கத்தி வச்சுக்கிறதோ பெண்களுக்குத் தீர்வில்லை. நிறைய சம்பவங்கள்ல பெண்கள் வச்சிருந்த ஆயுதங்களைப் பறிச்சே அவங்களைத் தாக்கியிருக்காங்க. உங்கள் உடல்தான் ஆயுதம்னு சொல்லுவோம். ராஜஸ்தான், பீகார், இமாச்சல்னு கிராமம் கிராமமாப் போய் பயிற்சி கொடுத்திருக்கேன்.

பெண்கள் சந்திக்கிற பிரச்னைகளை ஆராய்ஞ்சு பாத்தா சாதி, மதம், வர்க்கம்னு பல கிளைவேர்கள் இருக்கும். தலித் பெண்களுக்கு ஒருவிதப் பிரச்னைன்னா, மேல்தட்டுப் பெண்களுக்கு வேறுமாதிரி பிரச்னை. அவங்க பிரச்னையையும் பேசணும். பேசும்போது பெண்கள் உடைஞ்சு அழுவாங்க. சொந்த அப்பாவால பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண், காலம் முழுவதும் அவரோட அதே வீட்டில் வாழ நேர்ந்த நிலையைக்கூட பார்த்திருக்கேன். அந்த மாதிரிப் பெண்களைப் பார்த்தபிறகு கவுன்சலிங் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தேன்.

இங்கே ஆண்களுக்கும் நிறைய கற்பிக்க வேண்டியிருக்கு. பெண்களோட பிரச்னையை, உணர்வை அவங்களுக்குப் புரிய வைக்கணும். கடந்த 6 வருஷமா அதையும் செஞ்சுக்கிட்டிருக்கேன். பள்ளி, கல்லூரிப் பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள், ஐ.டி நிறுவன ஊழியர்கள்னு எல்லாத் தரப்பு ஆண்களுக்கும் பயிற்சி தந்திருக்கேன்.

பெண்களுக்காக இந்தியாவுல இருக்கிற அளவுக்கு வலுவான சட்டங்கள் வேறெந்த நாட்டிலேயும் இல்லை. ஆனா, 90 சதவிகிதம் பெண்களுக்கு அதுபத்தி விழிப்புணர்வு இல்லை. அதுபத்தி கிராமம் கிராமமாப் போய்ப் பேசவேண்டிய தேவை இருக்கு. நகரத்துக்குள்ள பூ விற்று, பழம் விற்றுப் பிழைத்த பெண்களைக் கண்ணகி நகர்ல அள்ளிக்கொட்டிட்டாங்க. அங்கே பெண்களுக்கு வீட்டுவேலை மட்டும்தான் கிடைக்குது. பாலியல் சீண்டல்கள், பாத்திரம் கழுவக் கூப்பிட்டுட்டு பாத்ரூம் கழுவ வைக்கிறதுன்னு நிறைய கொடுமைகள் நடக்குது. இப்போ கண்ணகி நகர் பெண்களுக்காக நிறைய வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். வழக்குகள் எடுக்குறேன். காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறேன். ‘எய்டு இந்தியா' அமைப்போடு சேர்ந்து இருளர் பெண்கள் மத்தியிலும் வேலை செய்றேன்...’’ என்கிறார் திலகவதி.

திலகவதி தன்னை ஒரு ‘நடமாடும் பிரசாரம்' என்று வகைப்படுத்திக்கொள்கிறார். தன் அனுபவங்கள், எதிர்கொண்ட பிரச்னைகள் அனைத்தையும் சமூக ஊடகங்களில் எழுதி மிகப்பெரிய உரையாடல் வெளியை உருவாக்குகிறார்.

‘‘இதுவரைக்கும் நான் 10 முறைக்கு மேல பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியிருக்கேன். ஆனா ஒருமுறைகூட நான் அமைதியா இருந்ததில்லை. அந்தச் சூழல்ல என்ன செய்யமுடியுமோ அதைச் செஞ்சிருக்கேன். கல்லூரியில ரெண்டாவது வருஷம் படிக்கும்போது குடும்பத்தோடு ஊட்டி போயிருந்தோம். பின்னால உக்காந்திருந்த ஒருத்தன் கையை விட்டு தொந்தரவு செஞ்சான். எதுவும் யோசிக்காம எழுந்து அறைஞ்சேன். இன்னொருமுறை டிரெயின்ல ஒருத்தன் அவன் மொபைல்ல ‘உன் போன் நம்பர் கொடு'ன்னு டைப் பண்ணி என்கிட்ட காமிச்சான். நான் சத்தமா ‘ஆம்பிளைன்னா பெரிய மயிறா... பாக்குற பொண்ணுங்ககிட்ட போன் நம்பர் கேப்பியா'ன்னு கேட்டேன். ஒரு சின்னப்பையன் ‘எப்படி ஆம்பிளைகளைப் பத்தித் தப்பாப் பேசுவே... நீ பத்தினியா இருந்தா லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல வரவேண்டியதுதானே'ன்னு துள்ளிக்கிட்டு வந்தான். அவனுக்கு ஜெனரல் கம்பார்ட்மென்ட்ங்கிறது எல்லாப் பாலினத்தவர்களும் பயணிக்கிற பெட்டின்னுகூட தெரியலே. போன் நம்பர் கேட்டவனைவிட என் கேரக்டரைத் தப்பாப் பேசின அந்தப் பையன்தான் தப்பானவனாத் தெரிஞ்சான். ஓங்கி அவனுக்கு ஒரு அறைவிட்டேன்.

மாரத்தான் மனிதர்கள் - 11 - ‘மனோபாவம் மாறாமல் பெண்களின் வாழ்க்கை மாறாது!’’

இந்த எல்லாத்தையுமே நான் சோசியல் மீடியாவுல எழுதுவேன். அதைப் பார்த்து வேற ஒரு பெண் தைரியமா வேற ஒரு யுத்தியைக் கையாளலாம். எல்லாத்தையும் என் அம்மா பாத்துக்கிட்டிருக்காங்க. அம்மாவுக்கு நம்பிக்கையான பெண்ணா இருக்கேன். பிடிச்சதைச் செய்றேன். எனக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு பெண்ணுக்கு ஏற்படலாம். பெண்கள் சூழலுக்குத் தகுந்தமாதிரி செயல்படணும். அவங்க சக்தியை உணரணும். அதுக்காக தொடர்ந்து வேலை செய்வேன்...’’

திலகவதியின் வார்த்தைகளில் உறுதியும் புன்னகையும் ததும்புகிறது!‘

- வருவார்கள்...