மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 14 - நலம் செய்யும் ஐந்து பேர்!

கல்யாணி, லதா, கோபாலகிருஷ்ணன், அனுராதா, ராமராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாணி, லதா, கோபாலகிருஷ்ணன், அனுராதா, ராமராவ்

உண்மையைச் சொல்லணும்னா எங்க எல்லாருக்குமே குடும்பக் கடமைகள் பெரும்பாலும் முடிஞ்சிடுச்சு. ரொம்ப சாதாரணமான குடும்பத்துல இருந்து மத்திய அரசுப்பணிக்கு வந்தவங்க நாங்க.

ராமராவுக்கு 80 வயது. கோபாலகிருஷ்ணனுக்கு 77. அனுராதா, லதா, கல்யாணி மூவருக்கும் 61 வயது. சென்னை, பழவந்தாங்கலில் பாரதியார் முதல்தெருவில் உள்ள ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில்தான் இவர்களைச் சந்தித்தேன். ஐந்து பேரும், மத்திய அரசின் தந்தித்துறையில் பணியாற்றியவர்கள். பணிக்காலத்தில் தொழிற்சங்கப் பணிகளில் கரம் கோத்து இயங்கிவர்கள். இப்போதும் வேகம் குறையவில்லை.

மருத்துவம், கல்வி, விளையாட்டு, வாழ்வாதார உதவிகள் என இவர்களின் உதவிக்கரங்கள் பரந்து விரிகின்றன. பத்திரிகைகள் வழி மனதைப் பாதிப்பவர்கள், நண்பர்கள் வழி உதவி கோருபவர்கள், பார்வையில் படும் எளிய மனிதர்களென பலரது வாழ்க்கை இவர்களால் மாறியிருக்கிறது. ‘நலம் செய விரும்பு' என்ற அமைப்பைத் தொடங்கி, பல நல்லிதயங்களை ஒருங்கிணைத்து யாருக்கு உதவி தேவையோ அங்கு கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். தங்களது ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை ‘நலம் செய விரும்பு'க்கு ஒதுக்குவதோடு பள்ளி, கல்லூரி, அலுவலக நண்பர்களையும் நற்பணிகளில் இணைக்கிறார்கள்.

ராமராவ் நங்கநல்லூரில் இருக்கிறார். 2002-ல் பணி நிறைவு பெற்றவர். ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அனுராதா தாம்பரம். ஒரே மகனுக்கு மணமாகிவிட்டது. ஆதம்பாக்கத்தில் வசிக்கும் லதாவுக்கு ஒரு மகள். அவரும் திருமணம் முடிந்து செட்டிலாகிவிட்டார். கல்யாணி, அசோக் நகரில் வசிக்கிறார். ஒரு மகன், ஒரு மகள். மகனுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. கோபாலகிருஷ்ணன் மடிப்பாக்கம். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது.

மாரத்தான் மனிதர்கள் - 14 - நலம் செய்யும் ஐந்து பேர்!

‘‘உண்மையைச் சொல்லணும்னா எங்க எல்லாருக்குமே குடும்பக் கடமைகள் பெரும்பாலும் முடிஞ்சிடுச்சு. ரொம்ப சாதாரணமான குடும்பத்துல இருந்து மத்திய அரசுப்பணிக்கு வந்தவங்க நாங்க. அப்போ, இப்போ மாதிரியில்லை... படிப்பு மட்டும் இருந்தாலே வேலை கிடைச்சிடும். நாங்க அஞ்சு பேரும் ஒருங்கிணைஞ்சது தொழிற்சங்கத்துலதான். ராமராவும் கோபாலகிருஷ்ணனும் எங்களுக்கெல்லாம் வழிகாட்டிகள். ‘இங்கே யாருமே தனியா இல்லை... எல்லோரும் ஏதோவொரு இழையில இணைஞ்சுதான் இருக்கோம். மத்தவங்களைப் பிடித்து எழுப்பி விடத்தான் கரங்களை நமக்கு இயற்கை நீளமா படைச்சிருக்கு'ன்னு அடிக்கடி ராமராவ் சொல்லுவார்.

பணிபுரிஞ்ச காலத்திலயே நிறைய வேலைகள் செஞ்சோம். பார்வைச்சவால் கொண்ட மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் செய்வோம். தொழில் செய்ய உதவுவோம். உதவும் கரங்கள் அமைப்புக்கு நிதி திரட்டித் தருவோம். சக ஊழியர்கள்கிட்ட நிதி திரட்டி கல்விக்கட்டணங்கள் கட்டுவோம். எங்க துறையில நிறைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருப்பாங்க. நிரந்தர வருமானம் இருக்காது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் சம்பளம் வரும். திடீர்னு யாராவது இறந்துட்டா நல்லடக்கம் செய்யக்கூட சிரமப்படுவாங்க. அவங்க பிள்ளைங்க கல்விச்செலவு, மருத்துவச் செலவுன்னு ஆனவரைக்கும் செய்வோம். ஆனா, இதெல்லாம் பிரதான வேலையா இல்லை. சின்னச்சின்னதா செய்தாலும் அதுல கிடைக்கிற மனநிறைவு பெருசா இருந்துச்சு. ஓய்வுக்குப் பிறகும் ஓய்வூதியர் சங்கத்துல நாங்க அஞ்சு பேரும் இணைஞ்சு வேலை செய்ற வாய்ப்பு அமைஞ்சுச்சு. வாழ்ற காலத்துக்குள்ள மத்தவங்களுக்காக ஏதாவது உருப்படியா செஞ்சுருவோமேன்னு பேசினோம். சரி, ஒரு இயக்க ஒழுங்கோட செயல்படுவோம் முடிவுபண்ணிதான் `நலம் செய விரும்பு'வை ஆரம்பிச்சோம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் லதா.

மாரத்தான் மனிதர்கள் - 14 - நலம் செய்யும் ஐந்து பேர்!

2002-ல் ராவும், 2005-ல் கோபாலகிருஷ்ணனும் ஓய்வுபெற்றார்கள். 2020-ல் பி.எஸ்.என்.எல்-லில் இருந்து 79,000 பேர் விருப்ப ஓய்வு பெற்ற தருணத்தில் லதா, அனு, கல்யாணி மூவரும் வெளியே வந்தார்கள்.

‘‘சரியா அந்த நேரம்தான் கொரோனா வந்துச்சு. லாக்டௌனால பலருக்கு வேலை இல்லை. தவிர, நோய் பாதிப்போட தன்மையும் தீவிரமாகிடுச்சு. ஆரம்பத்துல எங்க நட்பு வட்டத்துல இருந்து நிறைய பேர் உதவிகள் கேட்க ஆரம்பிச்சாங்க. தொடக்கத்துல என்ன செய்றது, எப்படிச் செய்றதுன்னு எங்களுக்குப் புரியல. இன்னொன்னு, பெரியவங்களே அதிகம் பாதிக்கப்பட்டதால வீட்டுலயும் ரொம்ப பயந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நம்பிக்கை கொடுத்துட்டு களத்துல இறங்கிட்டோம். ரெண்டு மாஸ்க் போட்டுக்குவோம். கையில சானிட்டைசர் பாட்டில் வச்சுக்குவோம்.

முதல்ல தேவையாயிருந்தது வாழ்வாதார உதவிகள். அஞ்சு பேருமே தனித்தனியா பள்ளி, கல்லூரி, பணிக்கால நண்பர்களை ஒருங்கிணைச்சு வாட்ஸப் குரூப் வச்சிருக்கோம். அதுல, ‘உங்க பகுதியில யாருக்கெல்லாம் உதவி தேவை, நீங்க யாரெல்லாம் உதவி செய்ய விரும்புறீங்க'ன்னு கேட்டோம். நிறைய நண்பர்கள் பங்களிப்பு செஞ்சாங்க. குடிசைப்பகுதிகள், செம்மஞ்சேரின்னு பெரிசா கவனம் பெறாத பகுதிகளுக்குப் போய் முதற்கட்ட வாழ்வாதார உதவிகள் செஞ்சோம். தொடர்ந்து அவங்ககூட தொடர்புல இருந்தோம். மாநகராட்சி உருவாக்கின தன்னார்வலர்கள் குழுவுலயும் அஞ்சு பேரும் இணைஞ்சுக்கிட்டோம்.

அந்த நேரம் எல்லோரோட கவனமும் கொரோனாவால பாதிக்கப்பட்டவங்க மேலதான் இருந்துச்சு. சர்க்கரை, இதயப் பிரச்னைகள் மாதிரி வாழ்வியல் நோய்களால பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருந்து எடுத்துக்க வேண்டிய, சிகிச்சை தேவைப்படுறவங்க ரொம்பவே தவிச்சுப்போய்ட்டாங்க. அதுமாதிரி மனிதர்களைத் தேடி அவங்களுக்கு மாத்திரைகள் வாங்கித் தந்தோம். இணையவழியா மருத்துவர்களை இணைச்சு ஆலோசனைகள் கொடுத்தோம்.

கல்யாணி, லதா, கோபாலகிருஷ்ணன், அனுராதா, ராமராவ்
கல்யாணி, லதா, கோபாலகிருஷ்ணன், அனுராதா, ராமராவ்

கொரோனா லாக்டௌன் கழுத்தை நெரிச்ச சூழல்ல, சென்னையை மழை வேற வஞ்சிக்க ஆரம்பிச்சுச்சு. தேவை பெரிசாச்சு. அந்தந்தப் பகுதியில இருக்கிற நண்பர்களுக்குத் தகவல் தந்து ஒருங்கிணைச்சோம். ஆட்டோ டிரைவர்கள், வீட்டு வேலை செய்றவங்க, தனியா வாழ்ற பெண்கள், பூ, பழம் விக்கிறவங்கன்னு பட்டியல் போட்டு ஸ்ட்ரீம்லைன் பண்ணி உதவிகள் செஞ்சோம். நாப்கின் தேவை அதிகமாயிருந்துச்சு. பகுதி பகுதியா கொண்டுபோய் சேர்த்தோம். ரெண்டாம் அலை இன்னும் கொடூரமா இருந்துச்சு. அப்போ நிறைய ஆக்சிஜன் கான்சன்ரேட்டர்கள் வாங்கித்தந்தோம். நண்பர்கள் சிலிண்டர்கள் வாங்கித்தந்தாங்க. அதை ஆம்புலன்ஸ்களுக்குத் தந்தோம். சில நண்பர்கள் ஆட்டோவையே ஆம்புலன்ஸா மாத்தினாங்க. அந்தப் பணிக்கும் பங்களிப்பு செஞ்சோம்.

எல்லாத்தையும் தாண்டி வாழ்க்கை மேல பெரிய அவநம்பிக்கை உருவான நேரம் அது. ஆறுதலும் நம்பிக்கையும் நிறைய தேவைப்பட்டுச்சு. எங்களால முடிஞ்ச அளவுக்கு நிறைய பேருக்கு அதைக் கொடுத்தோம்...’’ நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ராமராவ்.

கொரோனாத் தாக்கத்திலிருந்து சமூகம் சற்று மீண்டெழுந்தபிறகு, கல்வியில் கவனம் செலுத்தத்தொடங்கியது, நலம் செய விரும்பு. வளமாக இருந்த காலத்தில் தனியார் பள்ளியில் சேர்த்தவர்கள், பணியிழந்து தவித்து நின்றபோது கல்விக்கட்டணம் கட்டமுடியாமல் சிரமப்பட்டார்கள். அவர்களுக்குக் கைகொடுத்தார்கள். ஆன்லைன் கல்விக்காக மொபைல் போன் வாங்கித் தந்தார்கள். அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்குச் சிறப்புப்பாட நூல்கள், கதைப்புத்தகங்கள், செயற்பாட்டு நூல்கள் வாங்கி வழங்கினார்கள். சிறப்புப் பள்ளிகளுக்கு லேப்டாப்கள் வாங்கித்தந்தார்கள்.

‘‘இப்போ ஓரளவுக்கு கொரோனாவைக் கடந்திட்டோம். ஆனா அது உருவாக்கி வச்சிட்டுப் போன பாதிப்புகள் அடுத்த தலைமுறை வரைக்கும் நீடிக்கும்போல இருக்கு. குறிப்பா கல்வி. அந்த விஷயத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சோம். பத்திரிகைகள்ல படிச்ச அல்லது ஏதொவொரு வழியில நாங்க கண்டடையற பிள்ளைகளுக்குக் கல்விக்கட்டணம் கட்ட ஆரம்பிச்சோம். ஆடை, நோட்டுப் புத்தகங்கள்னு நாங்களே முழுமையா பொறுப்புகளை ஏத்துக்குவோம்.

பெரிய கரும்பூர்ங்கிற ஊர்ல இருளர் குடும்பங்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாம தவிக்கிறாங்கன்னு ஒரு செய்தி படிச்சோம். உடனே அந்தப்பகுதிக்குப் போய் அந்த மக்களோடு உரையாடினோம். அவங்களுக்கான வாழ்வாதார உதவிகள், ஆடைகள், குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் தந்தோம். காரைத்திட்டுன்னு ஒரு இருளர் குடியிருப்பு. அங்கே ஒரு அமைப்பு குழந்தைகளோட கல்விக்காக வேலை செய்றாங்க. அவங்களுக்கு லேப்டாப் வாங்கித்தந்தோம்.

நிறைய இருக்கு... யாரையும் காக்க வைக்கிறதில்லை. விசாரிப்போம்... உண்மைன்னு தெரிஞ்ச அடுத்த நிமிடம் அவங்க தேவையைத் தீர்த்திடுவோம். செஞ்சதை நாங்க போட்டோல்லாம் எடுத்து ஆவணப்படுத்துறது இல்லை. அடுத்து, அடுத்துன்னு ஓடிடுவோம். இந்த வயசிலும் நாங்க மகிழ்ச்சியா, ஆரோக்கியமா இருக்கோம்னா, அதுக்கு இந்தப் பணியில கிடைக்கிற நிம்மதிதான் காரணம்...’’ என்கிறார் அனுராதா.

பிற சூழலியல் அமைப்புகளோடு சேர்ந்து நீர்நிலைப் பாதுகாப்பு, ஏரி குளங்களைச் சுத்தப்படுத்தும் பணிகளிலும் இணைந்து செயல்படுகிறார்கள். ஆதரவற்ற பிள்ளைகளை மீட்டு சட்டபூர்வமாக இல்லங்களில் சேர்ப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத்தருவது, சிறப்புக் குழந்தைகளை அவர்களுக்கான பள்ளிகளில் இணைப்பதென்று எங்கெல்லாம் தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் நிற்கிறது, நலம் செய விரும்பு.

‘‘எனக்கு, அனுவுக்கு, கல்யாணிக்கு மாதம் 32,000 ஓய்வூதியம் வருது. ராமராவுக்கு 46,000. கோபாலகிருஷ்ணனுக்கு 45,000. எங்களுக்கு வர்ற பணத்தைப் பிள்ளைகளுக்குத் தரவேண்டிய நிலை இல்லை. பெரும்பாலும் எங்க வேலைகள் இதுக்குள்ள இருந்துதான் நடக்கும். தேவை பெரிசான மத்தவங்களை நாடுவோம். பிறந்தநாள், திருமண நாள்னு எந்த விழாக்களையும் நாங்க பெரிசா கொண்டாடுறதில்லை. அதுக்காக ஒரு தொகையை எடுத்து செயல்பாடுகளுக்கு ஒதுக்கிருவோம். எங்க பிள்ளைகளும் அப்படித்தான். எங்க வாட்ஸப் குரூப்ல இருக்கிற முக்கால்வாசிப்பேர், இதை ஃபாலோ பன்றாங்க. எங்கிருந்தாவது உதவிக்கான கோரிக்கைகள் வர்றப்போ வாட்ஸப் குரூப்ல போட்டு யார் உதவ விரும்புறீங்கன்னு கேப்போம். அடுத்த அஞ்சு நிமிஷத்துல யாரோ ஒருத்தர் அதைச் செய்து கொடுத்துடுவாங்க.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் 4,000 பேர் வந்து போறாங்க. பலபேர் திடீர்னு உடம்பு சரியில்லைன்னு வந்து உள்நோயாளியா சேர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். மாற்று உடைகூட எடுத்துட்டு வந்திருக்க மட்டாங்க. அவங்களுக்காக ‘அன்புச்சுவர்’னு ஒன்னு உருவாக்கி அத்தியாவசியப் பொருள்களை அதுல வச்சிருப்பாங்க. இதுபத்தி பேப்பர்ல படிச்சதும் மருத்துவமனை டீனைப் பார்த்து ‘நாங்க முழுமையா சப்போர்ட் பன்றோம்’னு சொன்னோம். நைட்டி, சேலைகள், டி-ஷர்ட், துண்டு, பேஸ்ட், பிரஷ், சோப்பு, எண்ணெய்னு மொத்தம் மொத்தமா வாங்கி வச்சிடுவோம். அதைக் கேள்விப்பட்டு தாம்பரம் சானிட்டோரியத்துல கேட்டாங்க. நாங்களே இப்போ அந்த அன்புச்சுவரை முழுசா பாத்துக்கிறோம்.

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை பத்தி ஒரு கட்டுரை படிச்சுட்டு, போய்ப் பார்த்தோம். கிட்டத்தட்ட கோயில் மாதிரியிருக்கு அந்த இடம். முடிதிருத்தம் செய்ய ட்ரிம்மர் தேவைன்னாங்க. கூடவே நிறைய ஆடைகள் வாங்கிக்கொண்டுபோய் கொடுத்தோம். குணமடைந்தவங்க, சிகிச்சையில இருக்கிறவங்களுக்குத் தொழிற்பயிற்சிகள் கொடுக்க முடிவெடுத்திருக்கோம். அதுக்கான வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு...’’ என்கிறார் லதா.

‘‘இந்த வயதில் நேரம் நிறைய கிடைக்குது. அதை மத்தவங்களுக்குப் பயன்படுற மாதிரி செலவழிக்கலாமேன்னுதான் இதை ஆரம்பிச்சோம். இன்னைக்கு அது பெரிசா விரிஞ்சுக்கிட்டே போகுது. இதுக்குத்தான்னு இல்லாம, யார் உதவின்னு கேட்டாலும் முன்னே போய் நிப்போம். எங்களால முடிஞ்சதைச் செய்வோம். முடியலேன்னா மத்தவங்ககிட்ட கையேந்தி செய்வோம்...’’ ஒரே குரலில் சொல்கிறார்கள் ஐவரும்.

எந்த நோய் நொடியுமில்லாமல் நூறாண்டு வாழவைக்கும் காலம் உங்களை!

- வருவார்கள்