மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 15 - அறிவியல் அறிவரசன்

அறிவரசன்
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவரசன்

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

``தொடக்கப்பள்ளியில கத்துக்கொடுக்கிற கல்வி, வாழ்நாளுக்குமானது. அங்கேயும் மனப்பாடம், மார்க்னு சொல்லி குழந்தைகளை வேற பாதைக்கு மாத்தி விட்டுடுறோம். கற்றல்ங்கிறது ருசியான விஷயமா இருக்கணும். முகத்துல இறுக்கத்தோட, பெரிய மனுஷனா நின்னு குழந்தைகளுக்குப் போதிக்க நினைச்சா அது வெறுப்பு கலந்த கல்வியாதான் இருக்கும். மூளைக்குள்ள ஏறவே ஏறாது. குழந்தைகளோட நிலைக்கு இறங்கி, சிரிச்சு, சிரிக்கவச்சு பிள்ளைகளைப் பாடத்துக்குள்ள கொண்டுவந்து சொல்லிக்கொடுக்கிற ஒவ்வொரு விஷயமும் வாழ்நாள் கல்வியா மாறும். இதை நான் மேம்போக்கா சொல்லல தோழர்... அனுபவத்துல கண்டடைஞ்சிருக்கேன்...’’

பார்க்க ஓங்குதாங்காக இருக்கிற அறிவரசனின் பேச்சிலும் சிரிப்பிலும் அப்படியொரு குழந்தைத்தனம். தோளில் ஒரு பெரிய பையை மாட்டிக்கொண்டு பள்ளிக் கூடத்துக்குள் நுழைகிற அறிவரசன், அடுத்த மூன்று மணி நேரத்தில் குழந்தைகளின் இதயம் கவர்ந்த அண்ணனாகி விடுகிறார். நியூட்டன் விதிகள் முதல் இதயத்தின் செயல்பாடுகள் வரை அனைத்தையும் குழந்தை களையே பாத்திரமாக்கி ஒரு நிகழ்த்துகலை போல அறிவியலைப் புரிய வைக்கிறார். குழந்தைகளையும் உள்ளிழுத்து உதாரணமாக்கி, இயற்கைச் செயல்பாடுகளை விவரிக்கிறார். தாடிக்குள்ளிருந்து வெளிப்படும் மலர்ந்த சிரிப்பும் உடல்மொழியும் குழந்தைகளுக்கு நெருக்கமாக்கிவிடுகிறது அறிவரசனை.

மாரத்தான் மனிதர்கள் - 15 - அறிவியல் அறிவரசன்
மாரத்தான் மனிதர்கள் - 15 - அறிவியல் அறிவரசன்

‘‘இது ரொம்ப உற்சாகமான வேலை தோழர். குழந்தைகள், அவங்க சிரிப்பு, உரையாடல்னு ஒவ்வொரு நாளுமே புதுசா இருக்கும். நாமதான் சொல்றோம், குழந்தைகளுக்குக் கத்துக்கொடுக்கிறோம்னு... உண்மையா குழந்தைகள் தினமும் நிறைய கத்துக்கொடுக்கிறாங்க... கத்துக்க அவ்ளோ விஷயம் இருக்கு அவங்ககிட்ட! என்ன சொல்லிக் கொடுக்கிறோம்ங்கிறதைத் தாண்டி எந்த அளவுக்குக் குழந்தையாக முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்வேன். ஆனா அது முழுசா நடந்ததே யில்லை. நான் பெரியவன்ங்கிற அகங்காரம் எங்காவது வந்திடுது...’’ உணர்வில் ஒருங்கிணைந்துவிடுகிற சிரிப்பு அறிவரசனுடையது.

அறிவரசன், ஆற்காட்டைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். இரண்டு சகோதரிகள். இருவருமே பெரும் படிப்பாளிகள். அப்பா இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை செய்தவர். நடுத்தரக் குடும்பம்.

‘‘நானும் நல்லாப் படிக்கிற மாணவன்தான். அண்ணா பல்கலைக்கழகத்தில லெதர் டெக்னாலஜி படிச்சேன். நல்லாப் படிக்கிற 60 பேரைத் தேர்வு செஞ்சு ஒரே சமயத்துல இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியும் படிக்கிற வாய்ப்பு கொடுத்தாங்க. காலையில எட்டரை டு நாலு, லெதர் டெக்னாலஜி, சாயங்காலம் அஞ்சு டு எட்டு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. ஒரே நேரத்துல ரெண்டு பட்டங்கள். படிப்பை முடிச்சதுமே ஒரு பெரிய கம்பெனியில பிளேஸ்மென்ட். ஒருவருஷம் வேலைக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை.

சிறு வயதிலிருந்தே பெரிசா இலக்குகள் இல்லாம வளர்ந்தவன் நான். தினம் தினம் வாழ்ந்து பார்க்கணும்னு நினைப்பேன். பிடிச்சதைச் செய்வேன். அந்த ஒரு வருடக் காத்திருப்புல யு.பி.எஸ்.சி தேர்வு எழுதணும்னு தோணுச்சு. அதுக்கான முயற்சியில இறங்கினேன். அந்த நேரத்துலதான் பசுபதி சாரைப் பத்தி என் நண்பன் கௌதம் சொன்னான். பசுபதி சார், ஓர் உணவியல் விஞ்ஞானி. அறிவியலை எளிமையா அரசுப்பள்ளிப் பிள்ளைகள்கிட்ட சேர்க்கிறதுக்காக நிறைய வேலைகள் செஞ்சுக்கிட்டிருந்தார். ‘பரிக் ஷன்'ன்னு ஒரு அமைப்பை நடத்தினார். நினைச்சதைச் செஞ்சுக்கிட்டு, மனசுக்குத் தோணினதைப் பேசிக்கிட்டுத் திரிஞ்ச என்னை ஒரு இலக்கு நோக்கித் திருப்பிவிட்டது பசுபதி சார்தான். ஒரே சந்திப்புல நடந்தது அது. ஒரு வேன் நிறைய அறிவியலை எளிமையா புரியவைக்கிற மாதிரி கருவிகளை வாங்கித்தந்து அனுப்பிவச்சார். ‘இதுதான் நான் செய்ய வேண்டிய வேலை’ன்னு முடிவு செஞ்சேன். அப்போ ஆரம்பிச்ச பயணம்... இதுவரைக்கும் 3,500 பள்ளிகள்ல 12.5 லட்சம் குழந்தைகளைச் சென்றடைஞ்சிருக்கோம்...’’ உற்சாகமாகிறார் அறிவரசன்.

மாரத்தான் மனிதர்கள் - 15 - அறிவியல் அறிவரசன்
மாரத்தான் மனிதர்கள் - 15 - அறிவியல் அறிவரசன்

பள்ளிக்குள் நுழைந்ததும் முதலில் வகுப்பறையின் இறுக்கத்தைத் தளர்த்துகிறார் அறிவரசன். பையில் இருக்கும் ரசாயனங்கள், குடுவைகள், கருவிகளையெல்லாம் எடுத்து ஒரு டேபிளில் அடுக்குகிறார். கதை, பாடல், நாடகம் என குழந்தைகளுக்கு நெருக்கமான வழிகளில் பெரிய பெரிய அறிவியல் நிகழ்வுகளை விளக்குகிறார். பல எக்ஸ்ப்ரிமென்ட்களை குழந்தைகளையே செய்யவைக்கிறார். ஒரு கட்டத்தில் கடைசி வரிசைக் குழந்தை வரை இமைக்க மறந்து, நிகழ்வில் ஒன்றிவிடுகின்றனர்.

‘‘குழந்தைகளை ஈர்க்கிறது ரொம்ப எளிது. அவங்களைப் பேச விடணும். கேள்விகள் கேட்க விடணும். சிரிக்க வைக்கணும். நம் ஆசிரியர்கள் உண்மையிலேயே பெரிய நிபுணத்துவம் கொண்டவங்க. அவங்களால என்னைவிட சிறப்பா குழந்தைகளுக்கு இதைக் கத்துத்தர முடியும். ஆனா, அவங்களுக்கான பணிச்சுமை அதிகம். பாடத்திட்டம், பதிவுகள், பயிற்சிகள்னு பெருஞ்சுமை அவங்களுக்கு...

இன்னைக்குப் பட்டப்படிப்புகள் முடிக்கிற பெரும்பாலான மாணவர்கள் உரிய திறனோடு வர்றதில்லைன்னு ஒரு ஆய்வு முடிவு இருக்கு. குறிப்பா பொறியியல். அறிவியலை வெறும் தியரியா, சூத்திரமா மட்டும் படிச்சு மனப்பாடம் பண்ணி மார்க் எடுத்து பாஸ் பன்றதுதான் அதுக்குக் காரணம். இயற்பியல், வேதியியல் விதிகளை ஒரு கதைபோல குழந்தைகளுக்குப் பதிய வச்சுட்டா வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டாங்க.

சின்னச்சின்ன விஷயங்கள்ல குழந்தைகளை வசீகரிச்சுடலாம். ஒரு சின்ன பலூன் கிளாஸ் எடுத்து, அதுல கொஞ்சம் தண்ணி ஊத்திக்குவேன். அந்தத் தண்ணிய ஒரு விரல்ல தொட்டு பேண்ட்ல நல்லாத் தொடச்சுட்டு கிளாஸோட மேல் வரம்பை அந்த விரலால தேய்ச்சா ஒரு புல்லாங்குழல்ல இருந்து வர்றமாதிரி இசை வரும். ஆனா, குழந்தைகள் செய்தால் வராது. எப்படிச் செய்யணும்னு அவங்களுக்குச் சொல்லிக்கொடுப்பேன். அந்த ஒரு செயல்ல, உராய்வு, அழுத்தம், ஒலியோட வேகம்னு எல்லாத்தையும் புரிய வைக்கமுடியும். இப்போ இந்த பலூன் கிளாஸ்ல உரசும்போது வர்ற சத்தம் உன் காதுக்கு எப்படி வந்துச்சுன்னு கேப்பேன். காத்துல ஒரு நொடிக்கு 340 மீட்டர்ங்கிற வேகத்துல ஒலி பரவும்னு சொல்வேன். அதைப் புரியவைக்க, உசேன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.5 நொடியில கடந்து வந்து ஜெயிக்கிறார். 300 மீட்டரைக் கடக்க அவருக்கு 28.5 நொடி தேவை. ஆனா, ஒலி ஒரே நொடியில கடந்திடும்னு சொல்வேன். சிதைவுறுதல் வினை, எரிதல் வினைன்னு அடுத்த பத்து வருஷத்துக்கு மட்டுமல்லாம, வாழ்க்கை முழுவதுமே உடன் போறமாதிரி உதாரணங்கள் சொல்வேன். பிள்ளைகள் கட்டுண்டு கிடப்பாங்க. நாம சொல்றது அப்படியே அவங்க நினைவுல பதிஞ்சிடும்’’ என்கிறார் அறிவரசன்.

மாரத்தான் மனிதர்கள் - 15 - அறிவியல் அறிவரசன்
மாரத்தான் மனிதர்கள் - 15 - அறிவியல் அறிவரசன்

14 ஆண்டுகளாகிறது அறிவரசன் இந்தப்பணியைக் கையில் எடுத்து. இப்போது இதுவே முழுநேர வாழ்க்கை. மூன்று பிரிவுகளாகப் பயிற்சியை வகுத்திருக்கிறார்.

‘‘1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு அறிவியல்மேல ஆர்வத்தை உருவாக்குற மாதிரி சொல்லித் தருவேன். கிட்டத்தட்ட மேஜிக் மாதிரியிருக்கும். 6-ம் வகுப்புல இருந்து 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு அடிப்படையான அறிவியலைப் புரிஞ்சுக்கிற மாதிரி சில விஷயங்கள் செஞ்சு காமிப்பேன். 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் முழுமையா அறிவியல் கான்செப்ட்களைப் புரிஞ்சுக்கணும். அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் உள்ளடக்கமா போகும். அதிகபட்சம் 12 எக்ஸ்ப்ரிமென்ட்ஸ் இருக்கும். எங்கள் இலக்கு அரசுப்பள்ளிகள்... அதுவும் கிராமப்புறங்கள்ல இருக்கிற அரசுப்பள்ளிகள். அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் போறதுண்டு. எல்லாருமே குழந்தைகள்தானே... ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தருவோம். கல்லூரிகளுக்கும் போவோம். அங்கே இன்னும் கொஞ்சம் விரிவாப் பேசுவோம்.

எல்லா எக்ஸ்ப்ரிமென்ட்லயும் மாணவர்கள் இருப்பாங்க. இதயத்தோட செயல்பாட்டை விளக்க ஒரு தியேட்டரிக்கல் கான்செப்ட் வச்சிருக்கேன். ‘நீதான் வலது ஆட்ரியம், நீதான் இடது ஆட்ரியம், நீதான் ஈரிதழ் வால்வு'ன்னு பத்து மாணவர்களை உள்ளே இழுத்து நிக்க வச்சிருவேன். ஆக்சிஜன் இல்லாத அசுத்த ரத்தம் எப்படி உள்ளே போய் சுத்த ரத்தமா மாறுதுங்கிறதை பசங்களை உறுப்பு களா நிக்கவச்சு சொல்லிருவேன். எம்.பி.பி.எஸ் மாணவர்களே புரிஞ்சுக்கத் திணறுகிற அந்த அறிவியலை குழந்தைகள் வெகு எளிதா புரிஞ்சுக்குவாங்க.

தமிழகம் முழுவதும் எங்க விஞ்ஞான ரதம் போகும். ஒரு மாவட்டத்துக்குப் போனா அந்தப்பகுதியில இருக்கிற பள்ளிகளை முழுமையா முடிச்சுட்டு அடுத்த ஏரியாவுக்குப் போகும். ஒவ்வொரு வாகனத்துலயும் 800 எக்ஸ்ப்ரி மென்ட்ஸ் பண்ணுற அளவுக்கு சாதனங்கள் இருக்கும். 2 அறிவியல் ஆசிரியர்கள் வாகனத்துல இருப்பாங்க. நான் செல்லமுடியாத நேரத்துல அவங்க களத்துல இறங்குவாங்க. தண்ணீர் பாதுகாப்புப் பத்தி, இயற்கை விவசாயம் பத்தி நுண்ணறிவியல் பத்தியும்கூட பிள்ளைகள்கிட்ட பேசுவோம். மூணு மணி நேரம் அறிவியல்ல குழந்தைகளைத் திளைக்க வச்சிருவோம்.’’ - உற்சாகமாகப் பேசுகிறார் அறிவரசன்.

ஒற்றை நிகழ்ச்சியோடு முடிக்காமல் தொடர்ந்து அந்த மாணவர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள் அறிவரசனும் அவரது டீமும். ஒருமாதம் கழித்து ஒரு நிகழ்வையும் 6 மாதம் கழித்து மற்றொரு நிகழ்வையும் அதே பள்ளியில் நடத்துகிறார்கள். கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளைத் திரட்டியும் நிகழ்த்துகிறார்கள். தவிர, அரசின் கற்பித்தல் திட்டங்களிலும் பங்களிப்பு செய்கிறார் அறிவரசன்.

‘‘அறிவியலை மட்டும் கத்துக்கொடுக்கிறதில்லை. வகுப்புகள்ல எப்படிக் கவனிக்கணும், எப்போ பேசணும், எப்போ பேசக் கூடாது, எந்தமாதிரி கேள்விகள் கேட்கணும், கத்துக்கிற அறிவியலை எப்படி வாழ்க்கையோட பொருத்திப் பாக்குறதுன்னும் கத்துத்தருவோம்.

இப்பவும் சிலபேர் என்னைப் பார்த்து, ‘என்னப்பா, ரெண்டு பி.இ. டிகிரி வாங்கியிருக்கே... படிச்சதுக்கான வேலையைப் பாக்காம இருக்கியே'ன்னு கேட்பாங்க. எனக்கு சிரிப்புதான் வரும். நான் மிகச்சரியா என்ன படிச் சேனோ அந்த வேலையைத் தான் பாக்குறேன். பொறியியல்ங்கிறது, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம்தானே... அதைத்தான் என் பிள்ளைகளுக்குக் கத்துத்தர்றேன். இதுதான் நான் படிச்சதுக்கான உண்மையான பொருள்.

பசுபதி
பசுபதி

என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு ‘இதுதான் உன்பாதை’ன்னு காமிச்ச பசுபதி சாரை நன்றியோடு நினைவுகூரணும். அரசுப் பள்ளிகள்ல லட்சக்கணக்கான பிள்ளைகள் படிக்கிறாங்க. நாங்க எட்டிப் பிடிச்சிருக்கிறது ஒரு துளிதான். 38 மாவட்டத்துக்கும் 38 வேன் வாங்கணும். ஒவ்வொரு ஊரா, ஒவ்வொரு பள்ளியாப் போய் அறிவியலைக் கத்துத்தரணும். வாழ்நாளுக்குள்ள அது நடக்கணும்...’’

அறிவரசனின் கனவுகள் வான்போல் விரிந்து நீள்கின்றன. நல்ல மனிதர்களின் நல்ல கனவுகள் நிச்சயம் நிறைவேறும்!

- வருவார்கள்...