
“நம் குழந்தைகள் நிம்மதியா வாழணும்னா கழுகுகளைப் பாதுகாக்கணும்!”
``ஒருநாள் நம்ம தெருக்களை துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம் செய்யாமவிட்டா என்னாகும்? குப்பை, தொற்றுநோய்னு ஊர் நாறிப்போயிடும்ல... அதேமாதிரிதான் காடும்! வயதாகியும் வேட்டைகள்ல காயமடைந்தும் சாகிற விலங்குகள், நாம கொண்டுபோய் காட்டுக்குள்ள வீசுற ஆடு மாடுகள்னு எல்லாத்தையும் துப்புரவு பண்ணி காட்டைச் சுத்தப்படுத்துறது கழுகுகள். அதை அபசகுனம்னு சொல்லிச் சொல்லியே இல்லாமப் பண்ணிட்டோம்...’’ அக்கறையும் வருத்தமுமாகப் பேசுகிறார் பாரதிதாசன்.
பாரதிதாசன், ‘பாறு’ என்று நம் சங்க இலக்கியங்களும் பழங்குடிகளும் போற்றிப் பாடுகிற கழுகுகளைக் காக்கப் போராடுகிறார். பத்து வார்த்தை பேசினால் எட்டு வார்த்தை பாறுக்களைப் பற்றியதாகவே இருக்கிறது. நடைப்பயணம், மோட்டார் சைக்கிள் ஊர்வலம், துண்டுப்பிரசுர விநியோகம், பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு என முழுநேரத்தையும் பாறுக் கழுகுகளுக்காகவே அர்ப்பணித்திருக்கிறார். தன் பணிக்காக இந்திய அளவில் பல்வேறு பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள பாரதிதாசனை, ‘பயோடை வர்சிட்டி ஹாட்ஸ் பாட் ஹீரோ' என்று கௌரவித்தி ருக்கிறது அமெரிக்கச் சூழலியல் அமைப்பு ஒன்று.

‘‘1958-ல நீலகண்டன்ங்கிற மலையாள எழுத்தாளர் ‘கேரளத்திண்டே பட்சிகள்'னு ஒரு நூல் எழுதியிருக்கார். அதுல, ‘குரோம் பேட்டையில காக்கைகளைவிட கழுகுகளின் எண்ணிக்கை அதிகம்'னு குறிப்பிட்டிருக்கார். நகருக்கு மத்தியில கூட்டம் கூட்டமா வாழ்ந்த கழுகுகளை இன்னைக்கு மொத்தமா இல்லாமப் பண்ணிட்டோம். 50 ஆண்டுகளுக்கு முன்னால இந்தியாவுல நான்கு கோடிக் கழுகுகள் இருந்தன. சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள்படி தமிழ்நாட்டுல 250-க்கும் குறைவான கழுகுகள்தான் இருக்கு. சிலவகைக் கழுகுகள் வெறும் பத்துக்குள்ள சுருங்கிருச்சு. உணவுச்சங்கிலிங்கிற வலுவான ஒரு பிணைப்புலதான் உலகம் இயங்கிக்கிட்டிருக்கு. அதுல கழுகுகள் முக்கியமான இடத்துல இருக்கு. அதை அழிச்சுட்டா விளைவுகள் ரொம்பவே மோசமாய் இருக்கும்...’’ கவலை தொனிக்கிறது பாரதிதாசனின் வார்த்தைகளில்.
பாரதிதாசன், திண்டுக்கல் அருகேயுள்ள கொளத்தூரைச் சேர்ந்தவர். முதல் தலைமுறையாக வறுமையை வென்று பள்ளிக்கூடம் தொட்டவர். அப்பாவும் அம்மாவும் கூலித்தொழிலாளிகள்.
‘‘ ‘எப்படியாவது அரசாங்க வேலையில சேந்திடுப்பா'ன்னு சொல்லிச் சொல்லித்தான் அப்பாவும் அம்மாவும் வளர்த்தாங்க. பி.எஸ்ஸி படிக்கிற வரைக்கும் எனக்கும் அதுதான் இலக்கா இருந்துச்சு. கல்லூரிக் காலத்துல அருள்னு ஒரு நண்பர் எனக்கு ரூம்மேட்டா அமைஞ்சார். அவர் தமிழ்நாட்டுல வர்ற அத்தனை சிற்றிதழ்களையும் வாங்குவார். அதுல சூழலியல் இதழ்கள் என் கவனத்தை ஈர்த்துச்சு. புவி வெப்பமாதல், கடல் மாசு, வனச்சுரண்டல் பத்தியெல்லாம் படிக்கும்போது எதிர்காலம் பத்தி பெரிய பயம் வந்துச்சு. நாம இலக்கு வைக்கவேண்டியது அரசுப்பணிக்கு இல்லைன்னு புரிஞ்சுச்சு. முதுகலைக்கு காந்தி கிராமம் பல்கலைக்கழகம் போயிட்டேன். படிப்பு சார்ந்து மேய்ச்சல் தொழில் செய்றவங்க, பழங்குடிகளையெல்லாம் சந்திச்சு காட்டைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். எங்க பேராசிரியர் டேவிட் ரவீந்திரன் எல்லாப் பயணங்கள்லயும் பறவைகள் பத்திப் பேசிக்கிட்டே இருப்பார்.

படிப்பு முடிஞ்சதும் திண்டுக்கல்ல இருந்து வெளிவரும் ஒரு சுற்றுச்சூழல் இதழ்ல வேலைக்குச் சேர்ந்தேன். அதற்கான வாசிப்பும் எழுத்தும் நிறைய கற்றுக்கொடுத்துச்சு. விதை, பறவை, ஆறுன்னு நாம செய்யவேண்டியது நிறைய இருக்குன்னு புரிஞ்சுச்சு...’’ உற்சாகம் தொனிக்கிறது பாரதிதாசன் பேச்சில்.
கல்லூரி நண்பர் அருளின் திடீர் மரணம், பாரதிதாசனின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொல்லிமலையைச் சேர்ந்த அருள், அங்கு கவனிப்பாரற்றுக் கிடக்கும் தாவரங்களையும் அழியும் நிலையில் உள்ள விலங்குகளையும் காப்பாற்றுவதற்காக நிறைய செயல்திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் காலம் அவரை சீக்கிரமே அரவணைத்துக்கொண்டது. ‘‘அருளோட கனவுகளை நிறைவேற்ற ‘அருளகம்'ன்னு அமைப்பு தொடங்கினோம். அருளின் நண்பர்கள் பலரும் எங்ககூட கைகோத்தாங்க. ஒரு நாற்றுப்பண்ணை ஆரம்பிச்சோம். பருப்பலா, ஆத்துவாரி, மருதம், ஆற்றுப்பூவரசுன்னு கிட்டத்தட்ட அழியுற நிலையில இருக்கிற 65 மரவகைகளோட விதைகளைச் சேகரித்து நாற்றுப்பண்ணையில வளர்த்து விநியோகிக்க ஆரம்பிச்சோம்.

அந்தத் தருணத்துல ‘பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி' சூழலியலாளர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பியிருந்துச்சு. ‘99% பிணம் தின்னிக் கழுகுகள் அழிஞ்சுபோச்சு. அந்த இனத்தைக் காப்பாற்ற வேண்டிய பெருங்கடமை சூழலியலாளர்களுக்கு இருக்கு'ன்னு அதுல சொல்லியிருந்தாங்க. எங்க சிறுமலைப் பகுதியில, சின்ன வயசுல நிறைய கழுகுகளைப் பார்த்திருக்கேன். சமீபகாலமா ஒரு கழுகைக்கூட பார்க்கலையேன்னு தோணுச்சு. கழுகுகளோட இயல்பைப் படிக்க ஆரம்பிச்சேன். போற இடங்கள்ல எல்லாம் கழுகுகளைத் தேடுவேன். பழங்குடி மக்கள்கிட்ட பேசுவேன்.
கழுகுகள் அழிஞ்சதுக்கான காரணங்கள் புலப்பட ஆரம்பிச்சுச்சு. ஒருவகை மலேரியா தாக்குதல், விண்ட் மில்கள்ல சிறகுகள் மாட்டி இறக்குறது, தொற்றுநோய், கட்டுப்பாடில்லாமப் பயன்படுத்துற உரங்கள்னு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், டைக்ளோபெனாக் மருந்து. கால்நடைகளைத் தாக்குற மடிவீக்கம் மாதிரி பல நோய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்துவாங்க. அந்த மாடுகள் இறந்ததும் காட்டுக்குள்ளயோ, புதர்களுக்குள்ளேயோ வீசிருவாங்க. அந்த உடல்களைச் சாப்பிட்டுதான் நிறைய கழுகுகள் இறக்குதுன்னு கண்டுபிடிச்சாங்க. அதனால 2006-ல அந்த மருந்தையே தடை செஞ்சாங்க. ஆனா, ஒரு உற்பத்தி நிறுவனம் நீதிமன்றத்தில் அதுக்குத் தடையாணை வாங்கிடுச்சு.

வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செம்முகப் பாறு, திருக்கழுக்குன்ற பாறுன்னு நாலுவிதமான கழுகுகள் தமிழ்நாட்டுல இருக்கு. எல்லாமே சொற்ப எண்ணிக்கைக்குள்ள சுருங்கிருச்சு. பெரும்பாலும் நீர்நிலைகளை ஒட்டித்தான் விலங்குகள் உயிரிழக்கும். இறந்து போன ஒரு உடலை நுண்ணுயிர்கள் தின்று செரிக்கப் பல மாதங்கள் ஆகும். ஆனா ஒரு கழுகுக்கூட்டம் ஒரு யானையை 2 நாள்கள்ல தின்று தீர்த்திடும். மிஞ்சுற எலும்புகளை கழுதைப்புலிகள் வந்து சாப்பிடும். அந்த இடம் தூய்மையாயிடும். இல்லேன்னா அந்த உடல்ல இருக்கிற பாக்டீரியாக்கள் தண்ணியில கலக்கும். அதைக் குடிக்கிற விலங்குகள் பாதிக்கப்படும். வனத்தோட சூழல் கெடும்.
கொரோனா மாதிரியான நோய்கள் விலங்குகள்கிட்ட இருந்து மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியாச்சு. நாம கழுகு மாதிரியான அரண்களைப் பாதுகாக்கலைன்னா எதிர்காலத்துல பல விபரீதங்கள் வரலாம்’’ என எச்சரிக்கிறார் பாரதிதாசன்.
பாரதிதாசன் பலவிதங்களில் இயங்குகிறார். கால்நடை மருத்துவர்கள், மருந்தக உரிமையாளர்கள், மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்களைச் சந்தித்து டைக்ளோபெனாக் மருந்துகளை விற்கவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறார். அதையேற்று கழுகுகளுக்கு அச்சுறுத்தல் தரும் இரண்டு மருந்துகளை தமிழகக் கால்நடைத்துறை கைவிட்டுள்ளது. வனத்தோரம் வாழும் மக்கள், அச்சுறுத்தும் காட்டுவிலங்குகளைக் கொல்ல விஷம் தடவிய இறைச்சிகளை வனத்துக்குள் போடுகிறார்கள். அதைச் சாப்பிடும் கழுகுகள் இறக்கின்றன. கழுகுகளை அபசகுனமாகக் கருதி, தோட்டங்களில் கட்டும் கூடுகளைக் கலைத்துவிடுகிறார்கள். சில கழுகுகள் பாறை முகடுகளில் கூடுகட்டும். குவாரிகளால் அதுவும் பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னைகளுக்காகவும் களமாடுகிறார் பாரதிதாசன்.
‘‘அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் அரசுப்பணிக்குப் போகலயேன்னு வருத்தம் இருக்கு. அதைவிட மனசுக்கு நிறைவான வேலையைச் செய்யறேன். நம் குழந்தைகள் நிம்மதியா இந்த உலகத்துல வாழணும்னா மிஞ்சியிருக்கிற கழுகுகளையாவது பாதுகாக்கணும்.’’ கைகுலுக்கி விடை தருகிறார் பாரதிதாசன். காற்று குளிர்ந்து மெல்லிய தூறல் பூமியை நனைக்கிறது!