
‘`ஆக்கிரமிப்பு செய்யறதுல கட்சிப்பாகுபாடெல்லாம் இல்ல!’’
“நான் சாதாரண மனுஷன் சார்... எந்தப் பின்புலமும் கிடையாது. தன் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது எல்லா மனுஷனுக்கும் ஒரு ஆவேசம் வருமில்லையா... அதுதான் எனக்கும் வந்துச்சு. 20 வருஷம் முன்னாடி இந்த வீட்டைக் கட்டினப்போ ஊரைச்சுத்தி 27 குளங்கள் இருந்துச்சு. மழை பெய்தா துளித்தண்ணி இங்கே நிக்காது. இப்போ 23 குளங்களை ஆக்கிரமிச்சு வீடுகளா மாத்திட்டாங்க. லேசா மழை விழுந்தாவே முழங்கால் அளவுக்குத் தண்ணி நிக்குது... மிச்சமிருக்கிற குளங்களையாவது காப்பாத்தலேன்னா குடிக்கக்கூட தண்ணி கிடைக்காது. அதுக்காகத்தான் போராடுறேன்...” தாக்குதல்களால் ஏற்பட்ட காயத் தழும்புகளைக் காட்டியபடி பேசுகிறார் பொன்.தங்கவேல்.
தங்கவேல் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. மிரட்டல், அச்சுறுத்தல்கள், பேரங்கள் எதற்கும் காது கொடுக்காமல் மனுக்கள், வழக்குகள், போராட்டங்கள் என நடந்துகொண்டேயிருக்கிறார். அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது அரசு எந்திரம்.
தங்கவேலின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டம், எம்.சூரக்குடி. இப்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசிக்கிறார். ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர் வட்டாரங்களில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க அமைப்பொன்றையும் நடத்துகிறார்.

“இதே வேகத்துல போனா அடுத்த பத்து வருஷத்துல சென்னையில இருக்கிற எல்லா நீர்நிலைகளையும் அழிச்சிடுவாங்க. அரசியல் செல்வாக்கும் பணபலமும் இருந்துட்டா எதையும் செய்யலாம்னு நிறைய பேர் நினைக்குறாங்க. மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் அஞ்சி ஜனங்க வாயை மூடிக்கிட்டுப் போயிடுறாங்க. எல்லாரும் அப்படிப் போயிட்டா என்னாகுறது? கேள்வி கேட்டா மிரட்டுவாங்க. 20 வருஷத்துல எல்லாத்தையும் பாத்துட்டேன். என் மனைவியும் மாமியாரும் ரோட்டுல நடந்து போகும்போது காரைக் கொண்டு மோதினாங்க. படுகாயத்தோட உயிர் தப்பிச்சாங்க. எங்க தெருவுல ஒரு நிகழ்ச்சி நடத்தினப்போ கரண்டை கட் பண்ணிட்டு உள்ளே புகுந்து அடிச்சாங்க. ஒரு குளத்தை சுத்தம் செய்தப்போ திடீர்னு அம்பதுபேர் உள்ளே இறங்கித் தாக்கினாங்க. சாய்நாத்னு எங்க அமைப்புல இருந்த மூத்த உறுப்பினர். அவர் பைக்ல வரும்போது இடைமறிச்சு அடிச்சு கையை முறிச்சுட்டாங்க. இது எதுவுமே வழக்காகப் பதிவு செய்யப்படலே.
ஒருத்தன் பொதுப் பிரச்னைக்காக வந்து நிக்கிறானேன்னு போலீசும் நினைக்கிறதில்லை, அதிகாரிகளும் நினைக்கிறதில்லை. ‘இவன் இடைஞ்சல்’னு தான் நினைக்கிறாங்க...” வருத்தம் தொனிக்கிறது அவர் வார்த்தைகளில்.
தங்கவேலின் அப்பா பர்மாவில் வேலை பார்த்தவர். அம்மா சத்துணவு ஆயாவாக இருந்தார். மூன்று சகோதரர்கள். பத்தாம் வகுப்பு வரை படித்த தங்கவேல் பீடாக்கடை வைத்திருந்த அண்ணனுக்கு உதவுவதற்காகச் சென்னை வந்திருக்கிறார்.

“ரொம்ப ஏழ்மையான குடும்பம். தம்மாத்துண்டு பீடாக்கடையில போதிய வருவாய் இல்லை. 17 வயசுல சிங்கப்பூருக்குப் போயிட்டேன். அங்கே ஒரு தியேட்டர்ல ஆபரேட்டரா இருந்தேன். ஓரளவு சம்பாதிச்சு சேத்துக்கிட்டு ஊருக்கு வந்தேன். அண்ணன், தம்பியெல்லாம் சென்னையிலயே செட்டில் ஆகியிருந்தாங்க. நாமும் இங்கேயே இருந்திடலாம்னுதான் ஈஞ்சம்பாக்கத்துல இடம் வாங்கினேன். 2002-ல இந்த வீட்டைக் கட்டினேன்.
வீட்டுக்குக் கடைக்கால் போட்டதுல இருந்து ஒரே பிரச்னை. குடிநீர் இணைப்புக்கு 25,000, மின்சார இணைப்புக்கு 30,000... ஆளாளுக்கு வந்து நிப்பாங்க. அக்கம் பக்கத்துல விசாரிச்சா, பணம் கொடுக்கலேன்னா வேலை நடக்காதுன்னாங்க. அப்போ எங்க ஏரியாவுல 13 வீடுகள் இருந்துச்சு. அவங்ககிட்ட எல்லாம் போய்ப் பேசினேன். நாமெல்லாம் ஒருங்கிணைஞ்சு நின்னா இப்படி ஆளாளுக்கு லஞ்சம் கேட்டு வரமாட்டாங்க. இனிமே வீடு கட்டுறவங்களாவது நிம்மதியா கட்டலாம்னேன். எல்லோரும் சம்மதிச்சாங்க. ‘ராஜன் நகர், செல்வா நகர் பொதுநல சங்கம்’ அமைப்பை ஆரம்பிச்சோம்.

அப்போ ஈஞ்சம்பாக்கம் கிராமப் பஞ்சாயத்தா இருந்துச்சு. புதுசா வீடு கட்டுறவங்களைப் போய்ப் பார்த்து யாருக்கும் எதுக்கும் லஞ்சம் கொடுக்காதீங்கன்னு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பணம் கேக்குற அதிகாரிகள் பத்தி மேலதிகாரிகளுக்குப் புகார் எழுதினோம். அலைய விடுற அதிகாரிகளுக்கு எதிரா போராட்டம் நடத்தினோம். லஞ்சப் பிரச்னை கொஞ்சம் ஓஞ்சுச்சு.
ஈஞ்சம்பாக்கம் நீர்நிலைகளுக்குப் பேர்போன ஊரு. நல்ல தண்ணி கிடைக்கும்னுதான் சென்னைக்கு வெளியே இருந்தாலும் இந்த ஊரைத் தேடிவந்து வீடு கட்டுறாங்க. ஆனா எல்லா இடங்கள்லயும் ஆக்கிரமிப்பு. மழை பேஞ்சா பெரும் துயரம். ஈஞ்சம்பாக்கம் - வெட்டுவாங்கேணி இணைப்புச்சாலையை ஆக்கிரமிச்சு சிலபேர் வீடுகள் கட்டியிருந்தாங்க. 40 அடிசாலை 12 அடியா சுருங்கிப்போச்சு. போக்குவரத்துக்கு சிரமமா இருந்துச்சு. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றணும்னு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தோம். நடவடிக்கை இல்லை. 2007-ல நீதிமன்றத்துக்குப் போனோம். ‘உடனடியா ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க’ன்னு உத்தரவு வந்துச்சு. ஆனா ஏதேதோ காரணம் காட்டித் தவிர்த்துட்டாங்க. 2011-ல திரும்பவும் நீதிமன்றத்துக்குப் போனோம். அப்பவும் ஆக்கிரமிப்புகளை அகற்றணும்னு உத்தரவு வந்துச்சு. அப்பவும் செய்யலே. திரும்ப 2013-ல உயர்நீதிமன்றத்துக்குப் போனோம். 2 மாதத்துல ஆக்கிரமிப்புகளை அகற்றிட்டுப் புகைப்படத்தோடு அறிக்கை தாக்கல் செய்யணும்னு உத்தரவு வந்துச்சு. அப்போ சென்னை மாநகராட்சி ‘சாலையை அகலப்படுத்தும்போதோ, கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும்போதோ ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுகிறோம். இதற்குமேல் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் பாத்துக்கிறோம்’ன்னு மாநகராட்சியில இருந்து பிராமணப் பத்திரம் கொடுத்தாங்க. நீதிமன்றமும் ஏத்துக்குச்சு. ஆனா இப்பவரைக்கும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலை. 13 வீடு 17 வீடாயிடுச்சு. கூரைக் கட்டடங்கள் காங்கிரீட் கட்டங்களாயிடுச்சு. திரும்பவும் இப்போ நீதிமன்றத்துக்குப் போயிருக்கோம்...” என்கிறார் தங்கவேல்.
ஈஞ்சம்பாக்கத்துக்கே தண்ணீர் தருவது வையாபுரி விநாயகர் குளம். இந்தக் குளத்தையொட்டிப் போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்துதான் குடிநீர் சப்ளையாகிறது. இந்தக் குளத்தைக் காப்பாற்ற தங்கவேலும் அவரது அமைப்பினரும் நடத்தும் போராட்டம் இன்னும் தீவிரமானது.

“ஐ.டி-யில வேலை செய்ற நிறைய பேர் ஈஞ்சம்பாக்கத்துல நிலம் வாங்கி வீடு கட்டுறாங்க. அவங்களை மிரட்டினா நிறைய பணம் கிடைக்கும்னு உள்ளூர் அரசியல்வாதிங்களுக்கு நம்பிக்கை. 2011-ல ஈஞ்சம்பாக்கம் சென்னை மாநகராட்சியோட இணைஞ்சுச்சு. தேர்தல்ல ஜெயிச்சு வந்த கவுன்சிலர், ஆரம்பத்திலேயே, புதுசா வீடு கட்டுறவங்க, தண்ணி கனெக்ஷனுக்கு 25,000, வீட்டு வரிக்கு 25,000 தரணும்னு பிக்ஸ் பண்ணிட்டார். குளங்களை ஆக்கிரமிக்கிறதையும் ஊக்கப்படுத்தினார். நாங்க தடுத்ததும் விரோதம் வளர்ந்துச்சு.
2016-ல ‘23 குளங்களைக் காணோம்’னு நீதிமன்றத்துல வழக்கு போட்டோம். உடனடியாக மாநகராட்சிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புச்சு. பெரிய டீமைப் போட்டு ஈஞ்சம்பாக்கம் முழுவதும் சர்வே பண்ணினாங்க. நீர்நிலைகள்ல 840 ஆக்கிரமிப்புகள் இருக்குன்னு கண்டுபிடிச்சு நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்தாங்க. தலைமைச் செயலாளர், நில நிர்வாக ஆணையர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் நாலு பேரும் அடங்கின குழு அமைச்சு, ஆக்கிரமிப்புகளை அகற்றிட்டு ரிப்போர்ட் கொடுங்கன்னு தீர்ப்பு சொன்னாங்க. 2019-ல வந்த தீர்ப்பு... இன்னைக்கு வரைக்கும் குழுவே அமைக்கல. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படல. இந்த இடைப்பட்ட காலத்துக்குள்ள குளத்துக்குள்ள ஏகப்பட்ட வீடுகள் முளைச்சிடுச்சு. 2020-ல மாநகராட்சியே குளங்களுக்குள்ள சிமென்ட் ரோடு போட்டு பெயர்ப்பலகை வச்சுக் கொடுத்திருக்கு’’ - வேதனையோடு சொல்கிறார் தங்கவேல்.

தங்கவேல் போட்ட ஒரு வழக்கில், கவுன்சிலர் ஒருவரின் சொத்துகளை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயிராபத்து ஏற்படும் சூழல் நிலவ, நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டார் தங்கவேல்.
“நீதிமன்றம் உடனடியாக கன்மேன் பாதுகாப்பு கொடுக்கணுன்னு சொல்லியும் உள்ளூர் போலீஸ் கொடுக்கல. திரும்பவும் நீதிமன்றத்துல முறையிட்டேன். கமிஷனரையே ஆஜராகச் சொல்லிடுச்சு நீதிமன்றம். அதுக்கப்புறம்தான் துப்பாக்கியோட ரெண்டு போலீஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாங்க. கொரோனா நேரத்துல அந்தப் பாதுகாப்பையும் வாபஸ் வாங்கிட்டாங்க.
ஆக்கிரமிப்பு செய்யறதுல கட்சிப்பாகுபாடெல்லாம் இல்ல. எல்லாரும் கைகோத்துதான் செய்வாங்க. அதைத் தட்டிக்கேக்குறவங்களுக்கு அதிகாரிகளோ போலீஸோ கைகொடுக்காது. நீங்க புகார் கொடுத்தீங்கன்னா, அவங்ககிட்ட போய் ‘எனக்குப் பிரச்னையில்லைப்பா... இன்னாருதான் புகார் கொடுத்தாங்க’ன்னு தகவலும் சொல்லிட்டு வருவாங்க. இது என் பட்டனுபவம். அதிகாரிங்க துணையில்லாம எந்த முறைகேடும் செய்ய முடியாது. 20 வருஷமாப் போராடுறோம். நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை எடுங்கன்னு பலமுறை சொன்னபிறகும் இன்னும் ஒரு செங்கல்லைக்கூட அசைக்க முடியலே. அந்த அளவுக்கு அவங்க உறவு உறுதியாயிருக்கு.


இப்பவும் நிறைய மிரட்டல்கள் வரும். பேரமும் பேசுவாங்க. எதையும் காதுல போட்டுக்கிறதில்லை. முன்னால தனி ஒருத்தனா போராடினேன். இப்போ 350 பேரு கூட இருக்காங்க. செலவுகளை எல்லாரும் பகிர்ந்துக்கிறாங்க. என் மனைவி மகளிர் விடுதி நடத்துறாங்க. அதுல எங்க குடும்பத்துக்குத் தேவையான வருமானம் கிடைக்குது. ஆரம்பத்துல இதெல்லாம் நமக்குத் தேவையான்னு கேட்டாங்க. இப்போ அவங்களும் தோளுக்குத் தோளா நிக்குறாங்க. எனக்குத் தெரியும், இந்தப்பாதை எங்கே போகும்னு. அதிகபட்சம் உயிர் போகும். நடக்கும்போது இடறி விழுந்தாலும் சாவு வரும்தானே... பாத்துக்கலாம்!”
மலர்ந்து சிரித்து விடை தருகிறார் தங்கவேல்.
- வருவார்கள்...