
- நரேந்திரன்
‘`தமிழில் மருத்துவம் படித்த டாக்டர்கள் வர வேண்டும்!’’
மருத்துவர் நரேந்திரனுக்கு 79 வயது. 30 ஆண்டுகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியவர். பேராசிரியராகப் பல ஆயிரம் மருத்துவர்களை உருவாக்கியவர். ஓய்வுக்குப் பிறகு, தஞ்சைக் கீழவீதியில் அரண்மனைக்கு எதிரில் ஒரு சிறிய மருத்துவ ஆலோசனை மையம் நடத்துகிறார். எளிய மொழியில் நோய் பற்றியும் சிகிச்சை பற்றியும் பேசி, தன்னை நாடி வரும் மக்களை ஆற்றுப்படுத்தியனுப்பும் நரேந்திரனுக்கு ஒரு தீராக்கனவு இருக்கிறது. தமிழ்வழியில் மருத்துவப் படிப்பைக் கொண்டு வரவேண்டும். அதற்காகத் தன் வாழ்வின் 50 ஆண்டுகளை அர்ப்பணித்திருக்கிறார். எந்த வெளிச்சத்தையும் தன்மீது போர்த்திக்கொள்ளாமல் மருத்துவம் சார்ந்த துறை நூல்களைத் தமிழ்ப்படுத்துதல், மருத்துவக் கலைக்களஞ்சியம் உருவாக்குதல், தமிழ்வழிக் கல்விக்கான தடைகள் குறித்து ஆய்வு செய்தல், தீர்வு தேடுதல் என அவருடைய நாள்கள் தீர்க்கமான நோக்கத்தோடு வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றன.
நரேந்திரன் இதுவரை 20,000-த்துக்கும் மேற்பட்ட மருத்துவக் கலைச்சொற்களை வகைப்படுத்தித் தொகுத்திருக்கிறார். ‘செரிமானப் பாதை அறுவை மருத்துவம்', ‘பொது அறுவை மருத்துவம்' என இரண்டு தமிழ்வழி மருத்துவப் பாடநூல்களையும் எழுதியிருக்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சிக்கழகத்தோடு இணைந்து பல மருத்துவக் களஞ்சியங்களை உருவாக்கியிருக்கிறார். தவிர, எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் 30 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறார். தமிழ்வழிக் கல்விக்கான தடைகளை அரசியல் பின்புலத்தோடு அணுகி, அந்தப் பேரிலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளையும் முன்வைத்து அவர் எழுதிய ‘தமிழ் பயிற்றுமொழி கனவும் நனவும்' என்ற நூலும், ‘தமிழால் மருத்துவக் கல்வி முடியும்' என்ற நூலும் பெரிதும் நம்பிக்கை விதைத்தவை.
வரலாற்றுப் புரிதலோடும் அரசியல் தெளிவோடும் தமிழகக் கல்விப்புலத்தில் இயங்குபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நரேந்திரன் அவர்களில் ஓர் ஆளுமை.
‘‘எல்லா வளர்ந்த நாடுகளுமே கல்வியைத் தங்களோட தாய்மொழியிலதான் கொடுக்குது. ஜெர்மன்ல உயர் மருத்துவப் படிப்பு வரைக்கும் ஜெர்மன் மொழியிலதான் படிக்கிறாங்க. ஜப்பான்ல அவங்க மொழியிலதான் எல்லா உயர்படிப்புகளும் இருக்கு. இஸ்ரேல்ல அழிந்த மொழின்னு சொல்லப்படுற அவங்க தாய்மொழியான ஹீப்ருவை மீட்டெடுத்து பிஹெச்.டி வரைக்கும் படிக்கிறாங்க. மூத்தமொழி, செம்மொழின்னு சொல்ற தமிழ்ல மட்டும் ஏன் அது சாத்தியமாகலே... பின்னணியில பெரிய அரசியல் இருக்கு...’’ தீர்க்கமாகப் பேசுகிறார் நரேந்திரன்.
நரேந்திரனின் அப்பா பத்திரிகையாளராக இருந்தவர். அண்ணன் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த நரேந்திரன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் முடித்தார்.
‘‘நானறிஞ்சு தமிழகத்துலதான் தாய்மொழியே படிக்காம ஒருத்தர் மருத்துவராவோ, பொறியாளராவோ, தொழில்நுட்ப வல்லுநராவோ ஆயிட முடியும். வேறெந்த நாட்டுலயும் இது சாத்தியமேயில்லை. அறிவியலைத் தாய்மொழியில படிச்சாதான் மாணவர்களால முழுமையா தெளிவா உள்வாங்க முடியும். கிராமப்புறத்துல இருந்து மருத்துவப்படிப்புல சேர்ந்த ஒரு மாணவனா இதை நான் அந்தக்காலத்திலேயே உணர்ந்தேன்.
மருத்துவப் பணிங்கிறது மக்களோட மனசுக்கு நெருக்கமா நின்னு செய்ய வேண்டிய பணி. ஆனா, மருத்துவம் படிச்சவுடனே ஒரு கம்பீரம் வந்திடுது. மக்கள்கிட்ட அந்நியமாகிடுறாங்க. அந்த இடத்துலதான் நான் தனிச்சு நின்னேன். மற்றவர்களைக் காட்டிலும் மருத்துவர்களுக்குத்தான் சமூகத்துல அதிக பொறுப்பு இருக்குன்னு நம்புறவன் நான். மருத்துவரோட வேலை வெறுமனே சிகிச்சை தர்றது மட்டுமல்ல... நோயோட வர்றவருக்கு வாழ்ற நம்பிக்கையை ஊட்டுறதும்தான். பத்திரிகைகள்ல நிறைய மருத்துவக் கட்டுரைகள் எழுதினேன். வானொலியில ‘மருத்துவ நேரம்' பகுதியில தொடர்ந்து மக்களோடு உரையாடினேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தோட துணைவேந்தரா வந்த வ.அய்.சுப்பிரமணியன் தமிழ்ச் சமூகத்தோட சொத்து. அவர் நினைச்ச மாதிரி எல்லாம் நடந்திருந்தா இன்னைக்குத் தமிழ்நாட்டுல தமிழ்வழிக் கல்வி சாத்தியமாகியிருக்கும். மருத்துவரா அவருக்கு அறிமுகமானவன் நான். அவரோட உரையாடல்கள் வழியாத்தான் தமிழ்வழிக் கல்விக்கான தேவையை உணர்ந்தேன்.
உலகத்தோட மிகத்தொன்மையான மொழின்னு நாமெல்லாம் பெருமையாப் பேசிக்கிட்டிருக்கிற தமிழ்ல துறைசார்ந்த பாடநூல்கள் இல்லேங்கிறது எவ்வளவு பெரிய அவலம்? சுதந்திரத்துக்குப் பிறகு 75 ஆண்டுகள்ல அது இப்போதான் சாத்தியமாகிருக்கு. 1932-ல ராஜாஜி தமிழ்வழிக்கல்வியை அறிவிச்சார். அதுக்குப்பிறகு ராஜாஜி ஆங்கிலம்தான் வேணும்னு பேசினது வேற அரசியல். ஆனா 1945 வரைக்கும் எஸ்.எஸ்.எல்.சி வரை தமிழ்வழியிலதான் இருந்துச்சு. 1950-ல 5வது முதல் ஆங்கிலப் பாடம் தொடங்கும்னும், பட்டப்படிப்புகள் தமிழ்வழியில தரப்படும்னும் அறிவிச்சார் சி.சுப்பிரமணியம். காமராஜர் ஆட்சியில கல்வியமைச்சரா வந்த பக்தவச்சலம் 3-ம் வகுப்பு முதலே குழந்தைகளை ஆங்கிலம் படிக்க வச்சுட்டார். மொழிப்போராட்டத்துலயும் இந்திக்கு எதிரா ஆங்கிலத்தையே முன்வச்சாங்க. அண்ணா முதல்வரான பிறகு, 5 ஆண்டுகள்ல முழுமையா தமிழைப் பயிற்றுமொழி ஆக்குவோம்னு அறிவிச்சார். 70கள்ல முதல்வரான கலைஞர், தமிழ்வழிக்கல்வியை விரிவுபடுத்தித் திட்டங்களை அறிவிச்சப்போ காமராஜரெல்லாம்கூட ஆங்கிலம் கண்டிப்பா வேணும்னு போராட்டம் நடத்தினாங்க. தமிழண்ணல் தலைமையில கல்வியில் ஆங்கிலக் கலப்பைத் தடுக்கணும்னு வள்ளுவர் கோட்டத்துல சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த சூழல்ல, நீதிபதி மோகன் தலைமையில ஒரு குழுவை அமைச்சார் கலைஞர். அந்தக் குழுவோட அறிக்கை அடிப்படையில 1 முதல் 5-ம் வகுப்பு வரை கட்டாயத் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவந்தார். அதை எதிர்த்து மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தைச் சேர்ந்த ஒருத்தர் நீதிமன்றத்துக்குப் போனார். நீதிமன்றம் அரசோட அறிவிப்புக்குத் தடை போட்டுச்சு. அப்போ நான் திருச்சியில இருந்தேன். ரயில் நிலையத்துக்குப் போற வழியில, வழக்குப்போட்டுத் தமிழ்வழிக் கல்வியைத் தடுத்த அவருக்கு மிகப்பெரிய போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. அதைப் பார்த்ததும் எனக்கு அழுகையும் ஆத்திரமுமா வந்துச்சு. தமிழ்நாட்டுல சொந்த மொழியில படிக்கச் சொன்னதை எதிர்க்கிறவரைக் கொண்டாடுற இந்தச் சமூகம் என்னாகப் போகுதுன்னு கலங்கினேன்.
மற்றவர்களைவிட அதிகம் தாய்மொழியை நேசிக்கிறவங்க தமிழர்கள். ஏன் இங்கே தாய்மொழி வழிக்கல்விக்கு மரியாதை இல்லாமப் போச்சுன்னு தெரிஞ்சுக்க தீவிரமா வாசிக்க ஆரம்பிச்சேன். காரணங்களையும் தீர்வுகளையும் அலசி, ‘தமிழ்வழிக்கல்வி கானல் நீரா?'ன்னு ஒரு புத்தகத்தை எழுதினேன். அன்னைக்கு ஆரம்பிச்ச பணி இன்னும் இன்னும்னு தீவிரமா போய்க்கிட்டே இருக்கு...’’ என்கிறார் நரேந்திரன்.
1983-ல் தமிழ்ப் பல்கலைக்கழகம் துறைசார் நூல்களைத் தமிழில் தயாரிக்கும் பணியைக் கையில் எடுத்தது. ராதா செல்லப்பன், டாக்டர் ராமசுந்தரம் போன்றோர் அந்தப் பணிக்கென நியமிக்கப்பட்டார்கள். மருத்துவம், பொறியியல் துறைகளுக்கான கலைச்சொல்லாக்கப்பணிகள், உயர்கல்விப் பாடத்திட்ட உருவாக்கங்கள் தீவிரமாகின.
‘‘நம் பக்கத்துல இருக்கிற ஈழத்துல 1847-லயே தமிழ்வழி மருத்துவக் கல்வி இருந்திருக்கு. சாமுவெல் பீஸ்கிரீன்ங்கிற அமெரிக்கர் ஈழத்துக்கு வந்து அங்கிருந்தவர்களுக்கு மருத்துவம் சொல்லிக் கொடுத்து பாடநூல்களையும் உருவாக்கியிருக்கார். அங்காதிபாதம், உடற்பாவனம், கெமிஸ்தம், வைத்தியா கிரகம்னு 11 தமிழ்ப் பாடல்நூல்கள் அங்கே இருந்திருக்கு. இனப்போராட்டத்துல எல்லாம் அழிஞ்சுபோயிடுச்சு. தமிழ்நாட்டுல அதற்கான பணிகள் 1980-கள்லதான் தொடங்குச்சு. குறிப்பா, டாக்டர் ராமசுந்தரத்தோட பங்களிப்பு ரொம்பவே முக்கியமானது. அவர் போட்டுவச்ச அடித்தளத்தால பெருமளவு முன்னேறி வந்துட்டோம். பெரும்பாலும் எல்லாத் துறைகளுக்குமே தமிழ்ப்பாடங்கள் உருவாக்கப்பட்டாச்சு. சட்டப்படிப்புக்கு 200 புத்தகங்களுக்கு மேல தயாரா இருக்கு. 2 கோடி ரூபாய் செலவுல தமிழ்நாடு பாடநூல் கழகம் 100 துறைசார் பாடநூல்களை விரைவில் வெளியிடப் போகுது. வேளாண் பல்கலைக்கழகத்துல ஒரு வகுப்பு சோதனை முயற்சியா தமிழ்ல நடந்துக்கிட்டிருக்கு. பாலிடெக்னிக் பாடங்கள் கூட தமிழ்ல வந்தாச்சு.
தாய்மொழி வழிக்கல்விக்கான அடிப்படையே கலைச்சொல்லாக்கம்தான். அதுதான் மொழியை வளப்படுத்தும். என் வாழ்நாள்ல பெரும்பகுதியைக் கலைச்சொல்லாக்கத்துக்காகச் செலவு பண்ணியிருக்கேன். அதுல பெரிய நிறைவு இருக்கு’’ - பெருமிதமாகச் சொல்கிறார் நரேந்திரன்.

நரேந்திரன் தன் எழுத்துப் பங்களிப்புக்காகவும் மருத்துவ ஆய்வுக்காகவும் ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார். 2014-ல் அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதை மத்திய அரசு வழங்கியது. இங்கிலாந்தில் உள்ள, ராயல் காலேஜ் ஆப் சயின்ஸ் அமைப்பின் பெருமைமிகு விருதையும் பெற்றிருக்கிறார். அறிவியல் தமிழ்ப்பணிக்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
‘‘ஏற்கெனவே பொறியியல்ல தமிழ்வழிக் கல்வி கொண்டு வந்தாங்க. போதிய வரவேற்பு கிடைக்கலேன்னு பல இடங்கள்ல மூடிட்டாங்க. உண்மையில் அதைத் தீவிரமா முன்னெடுத்துக்கிட்டுப் போகலே. மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கையூட்டல. முழுமையா பாடநூல்களைத் தமிழ்வழிப்படுத்தி மாணவர்களுக்குத் தரலே. ஆங்கிலமும் தமிழுமா மிரட்சியூட்டிட்டாங்க. அதல்ல தமிழ்வழிக்கல்வி. ஆசிரியர்களுக்கும் போதிய பயிற்சி கொடுக்கணும். திறந்த மனதோட இதுல அரசு செயல்படணும். தமிழ்நாட்டுல ரெண்டுவிதமான மனநிலை இருக்கு. ஒன்னு கல்வியை கௌரவமா கருதுறது, இன்னொன்னு வாழ்வாதாரமா நினைக்கிறது. கௌரவமா கருதுற உயர்தட்டு மக்கள் தாய்மொழி வழிக்கல்வியை எதிர்க்கிறாங்க. கல்வியை வாழ்வாதாரமா நினைக்கற ஏழை வீட்டுப் பிள்ளைகள் தங்களுக்குச் சமமா படிச்சு முன்னேறுவதை அவங்க விரும்புறதில்லை. அவங்கதான் எல்லாத் தருணங்களிலும் தாய்மொழி வழிக்கல்விக்கு எதிரா நின்னு தடுக்குறாங்க.
தாய்மொழி வழிக்கல்வி சார்ந்து இன்னொரு மூடநம்பிக்கையும் இருக்கு. தாய்மொழி வழியில படிச்சா ஆராய்ச்சி செய்ய முடியாதுன்னு நினைக்கிறாங்க. உலகளவுல வர்ற ஆராய்ச்சி இதழ்கள்ல வெறும் 35%தான் ஆங்கில இதழ்கள். மற்றதெல்லாம் அந்தந்த வட்டார மொழிகள்ல வர்ற இதழ்கள். இன்னைக்கிருக்கிற சூழல்ல வெகுவிரைவிலேயே உயர்கல்வி வரைக்கும் தமிழ்வழிக்கல்வி வரும்னு நம்புறேன். என் காலத்துக்குள்ள அது சாத்தியமாகணும். அடுத்த தலைமுறை, கல்வியை விருப்பத்துக்குரியதா ரசித்துப் படிக்கணும். ஆங்கிலம்ங்கிறது வெறும் மொழி. அதை மட்டுமல்ல, பிரெஞ்சு, இந்தின்னு எல்லா மொழிகளையும் தேவைப்படுற நேரத்துல நம் குழந்தைகள் கத்துக்கட்டும்...’’
உறுதி தொனிக்கச் சொல்கிறார் நரேந்திரன்.
- வருவார்கள்